சிறப்புக்கட்டுரைகள்

உறங்கும் மிருகம்

ஓவிய குமாரன்

2002 -ல் ஒரு மங்கலான, ரகசியமாக எடுக்கப் பட்ட வீடியோ. அரசியலில் ஊழலை அதுவரை இல்லாத அளவுக்கு மிகத்துல்லியமாக அம்பலப்படுத்தியது. தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருக்கையில் நடந்த ஆயுதபேர ஊழல் சம்பந்தப்பட்டது அது. பாஜக தலைவர் பங்காரு லட்சுமண் கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்ட காட்சி அது. அக்காட்சி வெளியானதும் அதுவரை அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்த தெஹல்கா என்ற இணையதளம் உலகப்புகழ் பெற்றது. அதன் ஆசிரியர் தருண் தேஜ்பால் இந்திய பத்திரிகை உலகப் பிதாமகராகப் பெரும்பெயர் பெற்றார்.

  அதன் பின்னர் பத்திரிகைகளில் எவ்வளவோ ரகசிய காமிரா ஒளிப்பதிவுகள் வெளியாகி பலர் முகத்திரை கிழிவதற்கு முன்னோடியாக அமைந்தது அந்த வீடியோதான். அதன் பிறகு அச்சு ஊடகத்திலும் தெஹல்கா வெளிவந்து மரியாதைக்குரிய, அச்சத் துக்குரிய பத்திரிகையாக நிமிர்ந்து நின்றது. நேர்மையான, ஒழுக்கமான, அச்சமற்ற,சமரசமற்ற பத்திரிகை விழுமியங்களுக்கு எடுத்துக்காட்டாக தன்னை முன்னிலைப்படுத்தி பெருமளவில் வளர்ந்தது தெஹல்கா.

இந்திய பத்திரிகை உலகில் திடீரென தருண் உதயமாகிவிடவில்லை.1993-ல் இந்தியா டுடே ஆசிரியர் குழுவிலிருந்து விலகியவுடன் அப்போதுதான் புதியதாக தொடங்கப்பட்ட அவுட் லுக் இதழில் தன்னை இணைத்துக் கொண்டார். 1997-ல் அருந்ததி ராயின் முதல் நாவலான ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ஐ பதிப்பித்தார். பிறகு அது புக்கர் பரிசு பெற்றது. 2000 ல் துடிப்பான இளம் பத்திரிகையாளர்களைக் கொண்டு தெஹல்காவை தொடங்கி மேற்சொன்ன ஸ்டிங் ஆபரேசனில் பிரபலமடைந்தார். இளம் பத்திரிகையாளர்களுக்கு தன்னைப்போல் ஆக வேண்டும் என்ற கனவை விதைத்த தருண் இன்று தெஹல்காவை மட்டுமல்ல இவர்களையும் சேர்த்துதான் நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்.

 தருண் தேஜ்பால் தன்னுடைய பத்தாண்டு புகழ் இவ்வளவு சீக்கிரம் சரிந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இருபதுநாட்களுக்கு முன்னால் கோவாவில் தெஹல்கா சார்பாக நடத்திய ‘திங்க் பெஸ்ட்’ நிகழ்வின்போது லிப்டில் வைத்து தன்மகள் வயதே உடைய இளம் பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக குற்றம்

சாட்டப்பட்டார். ஒருமுறை அல்ல. இரண்டுமுறை. இதை அடுத்து அப்பெண் தெஹல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் புகார் கொடுக்க அதன் பின் நடந்ததுதான் வேடிக்கை. தருண் தேஜ்பால் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டார். ஆறுமாதங்கள் தெஹல்கா ஆசிரியர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார். ஷோமா சவுத்ரியும் இந்த பாலியல் அத்துமீறல் ‘ஒரு விரும்பத்தகாத சம்பவம்’ என்று சாதாரணமாகச் சொல்ல, பிரச்னை பெரிதானது. இதை விமர்சித்து சமூக ஊடகத்தினர் பொங்கி எழுந்தார்கள். எல்லா ஊடகங்களிலும் இது பெரிய செய்தியானபின்னர் கோவா போலீஸ் இதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. தருண் தேஜ்பால் எவ்வளவு நல்லவர்? தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொண்டார் என்று நீங்கள் நினைக்கலாம். கோவா நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்புக் காமிராக்களில் தப்பிக்கமுடியாத படிக்கு தான் சிக்கி இருப்போம் என்பது நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்கும்.

---

பனீஷ் மூர்த்தி ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் பட்டம் பெற்ற புத்திசாலி. 1990-ல் இன்போசிஸில் அவர் தலைமை விற்பனை அதிகாரியாக சேர்ந்தபோது ஆண்டிற்கு இன்போஸிஸ் சாப்ட்வேர் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 1.2 கோடி அளவே. 2002-ல் இன்போஸிஸிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட போது அது 3270 கோடியாக உயர்ந்திருந்தது. இதனை சாதித்துக் காட்டியவர் மூர்த்திதான் என்பதை நன்கு அறிந்த கம்பெனியே அவரை வெளியேறச் சொன்னது. காரணம்... பாலியல் குற்றச்சாட்டு. இவர் மீது விழுந்த முதல் கறை 2001-ல் இன்போஸிஸ் அமெரிக்க அலுவலகத்தில் வேலை பார்த்த ரேகா மேக்ஸிமோவிச் அளித்த பாலியல் புகார். மூர்த்தி அதை மறுத்தார். பிறகு ஒரு வழியாக 2003 ல் 18 கோடி ரூபாயில் கோர்ட்டுக்கு போகாமல் செட்டில் செய்தார். திரும்பவும் அதே ஆண்டு ஜெனிபர் கிரிபித் என்ற முன்னாள் இன்போஸிஸ்காரர் கொடுத்த பாலியல் புகாரில் சிக்கி 4.8 கோடி அவருக்கு கொடுத்து செட்டில் செய்தார். கடைசியாக 2010-ல் ஐகேட் நிறுவனத்திலிருந்து பனீஷ் மூர்த்தி வெளியேற்றப்பட்டதற்கு காரணம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஆர்செலி ரோச் கொடுத்த பாலியல் புகாரே காரணம். வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே சுவைத்தவர். புகை,மது கிடையாது.. ஏன் அசைவ உணவு கூட சாப்பிட மாட்டார். வீழ்ச்சிக்கு ஒரே காரணம்  பெண் புகார்கள் மட்டுமே.

 வசீகரமான பில் கிளிண்டனுக்கு அறிமுகம் தேவையில்லை. 46 வயதிலேயே அமெரிக்க அதிபர் ஆனவர். கிளிண்டன் பேரை சொல்லும்போதே நமக்கு அடுத்து நினைவுக்கு வரும் பெயர் மோனிகா லெவின்ஸ்க்கி. அமெரிக்க வெள்ளை மாளிகையில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கிய மோனிகா, 1998-ல் கிளிண்டனின் அந்தரங்க காரியதரிசியாக இருந்தபோது வெடித்தது இந்த பாலியல் குற்றச்சாட்டு.வழக்கமான பிரபலங்களைப் போல முதலில் மறுத்தாலும் மரபணு சோதனையில் மாட்டிக்கொண்டார் கிளிண்டன்.  பின் அவரே மன்னிப்புக் கேட்க வேண்டி வந்தது. பதவி இழக்கவேண்டிய பெரும் சிக்கலையும் சந்தித்து தப்பிப்பிழைத்தார். சர்வதே அளவில் பெரும் நகைப்புக்குரிய மனிதர் ஆனார் அவர்.

புகழ்பெற்ற பெங்குயின் பதிப்பக நிறுவத்தின் சர்வதேசத் தலைவராக இருந்தவர் டேவிட் டேவிதார்.

சிறந்த எழுத்தாளரும் கூட. பெங்குயின் நிறுவனம் தங்கள் நூல்களைப் பதிப்பிக்காதா என்று காத்துக் கிடந்தவர்கள் எவ்வளவோ பேர். ஆனால் அவருக்கும் ஓர் ஆப்பு காத்திருந்தது. அவர் மீது பெங்குயினில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள். அவர் அனுப்பிய மின்னஞ்சல்களை வெளியிட்டார்கள். அவருடைய வெற்றிகரமான பிம்பம் நொறுங்கியது.

டொமினிக் ஸ்ட்ராஸ் கான். ப்ரான்ஸ் நாட்டு அடுத்த அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்தவர். இரு ஆண்டுகளுக்கு முன்னால் விடுதி அறை ஒன்றில் பணிப்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தி, செல்போனை அறையில் விட்டுவிட்டு தப்பி ஓடி விமானநிலையத்தில் கைதானார்.

இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனியின் கதை எல்லோருக்கும் தெரியும். இளம் பெண்களுடன் கும்மாளம் போட்டு பெரும் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். மேஜராகாத பெண்ணுடன் அவர் உறவு கொண்டதாக பாலியல் வன்முறை வழக்கு அவர் மீது தொடரப்பட்டுள்ளது.

ஏன் சக்திவாய்ந்த மனிதர்கள் இப்படி பாலியல் ரீதியில் வேட்டையாடும் ஓநாய்களாக, மனைவிக்குத் துரோகம் இழைப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி சரித்திரத்தில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அத்துடன் யோசித்துப் பார்த்தால் இவர்கள் அனைவருமே அரைநூற்றாண்டைக் கடந்துவிட்ட வயதுடன் இருப்பவர்கள். தங்கள் பாலியல் தகுதியை நிரூபிக்கவேண்டிய ஆதி உணர்வு ஆண்களின் மரபணுக்களில் இருக்கிறதா?

பெரும்சாதனைகளை, செயல்களை தங்கள் துறைகளில் செய்யும்  இவர்கள் மீது உடன் இருக்கும் ஜுனியர் சகாக்கள் பெரும் வியப்பும் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். இந்த அதிகப்படியான மதிப்புணர்வு இவர்கள் மீது பாலியல் ஆதிக்க நடவடிக்கைகளில் இறங்க இந்த பெரிய மனிதர்களைத் தூண்டிவிடக்கூடும் என்று மனித உணர்வு ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

நிறைய பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தன் மகளைவிட வயதில் சிறிய மாணவிக்கு காதல் கடிதமோ, பாலியல் சீண்டலோ செய்யும் பேராசிரியர்கள் இருப்பது கிசுகிசுக் கப்படும். சிலசமயங்களில் போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. பள்ளிக்குழந்தைகளிடம் சீண்டலில் இறங்கி மாதந்தோறும் ஆசிரியர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டே இருக்கும் செய்திகளை வாசிக் கிறோம்.

சாமானிய மனிதனாக இருப்பவனும்கூட அதிகாரம் படைத்தவனாக இருக்கையில் பாலியல் ஆதிக்கம் செலுத்த தயாராகிறான். மண் மற்றும் பொன்னைப் போன்று பெண்ணையும் ஆதிக்கத்தால் வெல்லக்கூடிய போகப்பொருளாகவே நினைக்கிறான். அதுவே அவனின் புகழுக்கு சாவு மணியும் அடிக்கிறது. இந்த வரிசையில் சமீபத்திய வரவு தருண் தேஜ்பால்.

டிசம்பர், 2013