கடந்த ஆண்டு சென்னைவாசிகள் சந்தித்த கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை மறந்திருக்க மாட்டார்கள். ரூ 750 -1500 வரை கொடுத்து வாங்கிய லாரி தண்ணீர் 5000 ருபாய் கொடுத்தாலும் கிடைக்கவில்லை.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்கள் மாதம் 2500 ரூபாய் வரை செலவழித்து தண்ணீர் பெற்று அன்றாடத் தேவைகளான குளியல், துணி துவைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தினார்கள். குடிநீருக்கான தண்ணீர்கேன்கள் வாங்கிய செலவு தனி.
‘‘பொது இடங்களில் பாதுகாப்பான குடிநீர் இலவசமாகக் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டிய அரசே இன்று குடிநீரை விற்பனை செய்கிறது. இயற்கையில் கிடைக்கும் அனைவருக்கும் பொதுவான அதே நேரத்தில் யாரும் சொந்தம் கொண்டாட இயலாத ஒரு வளத்தை விற்பனைப்பண்டமாக்கி அரசே விலைநிர்ணயித்து விற்பனை செய்வது துரதிர்ஷ்டவசமானது,'' என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின்.
‘‘இந்தத் தண்ணீர் வணிகம் வளிம்புநிலை மக்களையே அதிலும் குறிப்பாகப் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் பெண்கள் தினமும் தண்ணீருக்காக சராசரிப் 6 கிலோமீட்டர் தொலைவு நடக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன,'' என்று சொல்கிறார் அவர்.
எப்படிப்பார்த்தாலும் அரசின் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் கிடைக்காத இடங்களில் வீடுகள் ஒரு மாதத்துக்கு மட்டும் சுமார் 15 கேன்கள் வரை நீரை வாங்கி குடிப்பதற்காகவும் சமைப்பதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். குறைந்தது 300 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை மாதம் தோறும் செலவாகிறது. ஆண்டுக்கு சராசரியாக 3600 ரூபாய் முதல் 5400 ரூபாய் வரை இந்த செலவு.
ஏழை எளிய மக்களுக்கு இந்த தொகை என்பது பெரிய தொகையே. குடிநீருக்கான இந்த செலவு நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை அதிகரித்தே செல்கிறது.
சென்னை போன்ற நகரங்களில் பகுதிக்கு ஏற்ப குடிநீருக்கான கட்டணங்களை மாநகராட்சியும் அதிகமாகவே வசூலிக்கிறது. சுமார் 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை சராசரியாக கட்டணம் செலுத்தவேண்டி உள்ளது. இந்த இணைப்பு இல்லாத குடியிருப்புகள் கூட, தண்ணீரே வராத குடியிருப்புகள் கூட இந்தகட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டி உள்ளது.
அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வொன்று அங்குள்ள நகரங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் தண்ணீருக்கான கட்டணம் எண்பது சதவீதம் உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் இந்த கட்டணம் வேறு அவர்களுக்குப் பெரும் சுமையாக அமைந்துள்ளது என்று கார்டியன் கட்டுரை கூறுகிறது. உதாரணத்துக்கு ஆஸ்டின் நகரில் மட்டும் 2010ல் சராசரி ஆண்டு குடிநீர் கட்டணம், 566 டாலர்களாக இருந்தது, 2018ல் 1435 டாலர்களாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு அமெரிக்கருக்கும் குடிநீரை அளிப்பதற்கான அரசு செலவீனமோ குறைந்துகொண்டே வருகிறது. ஏழை, நடுத்தர அமெரிக்கர்கள் இக்கட்டணத்தைக் கட்ட இயலாமல் சிரமப்படுகிறார்கள் என்கிறது அக்கட்டுரை.
இங்கும் அந்நிலை வந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது!
ஜூலை, 2020.