சிறப்புக்கட்டுரைகள்

உமா சேச்சி வந்திருந்தார்!

கே. வி. ஷைலஜா

இன்று காலை வந்த அந்த தொலைபேசி அழைப்பு என்னை அப்படி புரட்டிப் போடும்  என்று நான் நினைக்கவில்லை. இதுவரை என்னுள் படிந்திருந்த பெண்களைப் பற்றிய பார்வையை அது மாற்றுகிறது. எல்லாவற்றிலிருந்தும் எரிமலை குழம்புபோல வெடித்து சிதறி பொங்கத் தோன்றுகிறது. அடுத்த நிமிடமே அமைதியாய் அடங்கி ஏதாவது செய்ய மனம் ஏங்குகிறது.

தான் கடந்துபோன பாதையெங்கும் கரடுமுரடுகளும் முட்களுமாக இருப்பினும் அது குறித்த எந்தவிதமான கழிவிரக்கத்தையும் கோராத அந்த குரல் எல்லோரையும் தன்னோடு சேர்த்து கொள்கிறது. புறந்தள்ளலும் உதாசீனமும் நம்பிக்கை துரோகத்தையும் மட்டுமே ஏற்று வளர்ந்த அந்தப் பெண் எப்படி தன்னை ஒரு அன்பின் கூடாரமாக மாற்றிக் கொண்டாள் என்பது இயற்கையின் எதிர்மறைதான்.

கோயம்புத்தூரின் உள்ளடங்கிய  கிராமம் ஒன்றின் எளிய வாழ்க்கையாய் அம்மா, அப்பா, தம்பி என கச்சிதமான குடும்பத்தில் ஆரம்பித்ததுதான் அவள் வாழ்க்கை. கேரளக் குடும்பமானாலும் தமிழ்நாட்டிலும் அம்மக்களிடமும் அப்பா கொண்டிருந்த ஈடுபாடும் அவரின் சேவையையும் பார்த்து அப்பாவையே தன் முன்மாதிரியாகக் கொண்டு சின்ன வயது பெண்ணாய் தன்னை தகவமைத்துக் கொண்டவள் அவள்.

வாழ்வு தெளிந்த நீரோடையாய் போய்க்கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலை கீழாய் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.

எட்டு வயதான அவளையும் தம்பியையும்  அவளுக்காகவே வாழ்ந்த அப்பாவையும் விட்டு விட்டு அம்மா தனக்குப் பிடித்த ஒருவனோடு போய் விடுகிறாள். ஒரு புலர் காலை இவர்களுக்கு மட்டும் இருளாய் மாறிவிட்ட துக்க நாள் அது. அம்மா அவனோடு ரயிலேறிப் போய் விட்டதைப் பார்த்ததாக பலர் சொல்கிறார்கள். அக்காவாய் அம்மாவாய் தம்பியோடு வாழப்பழகின நாட்களில் உறவுகளின் நிர்பந்தத்தில்  இரண்டாவதாக கல்யாணம் பண்ணச் சொல்லி பட்டினி கிடந்து, அழுது புலம்பி எதிர் வரப்போகும் தீமை அறியாமல் அப்பாவை சம்மதிக்க வைக்கிறாள். புதிதாக வந்த சித்தி ஏனோ தம்பியிடம் ஒன்றிப்போய், இவளைத் தனித்துவிட, சிறு வயதிலிருந்தே முறைப்பையனாய் அறியப்பட்டவனும் உதாசீனப்படுத்துகிறான். வாழ்வு தள்ளாட்டத்தின் உச்சத்திற்கு போகிறது. ஆனாலும் பள்ளியில் மிகச் சிறந்த மாணவி, பேச்சுபோட்டி, பட்டிமன்றங்கள், பாரதியின் கண்ணம்மாவென அது குதூகலமாய் இருக்கிறது. அதன் நீட்சியாக முதல்முறையாய் கண்ணூரிலிருந்து குருவாயூருக்கு சுற்றுலா செல்கிறார்கள். கோவில் வாசல் கடையில் பொருள் வாங்கியபடி நின்றிருந்தபோது கடைக்காரர் தன்னை உற்று பார்ப்பதைக்கண்டு கவனம் சிதற, அவரோ, இங்கு உன்னைப்போலவே ஒரு அம்மா இருக்காங்க அதான் பார்த்தேன் என்கிறார். நிஜமாகவே அற்புதத்தில் ஆழும் அந்த பதின் பருவப்பெண் அவரிடம் முகவரி வாங்கி அந்த அம்மாவைத் தேடத் துவங்குகிறாள். சுற்றுலாப் பயணத்தில் கண்டுபிடிக்க முடியாத அப்பெண்ணின் முகவரியுடன் ஒரு கடிதம் புகைப்படத்துடன் வீட்டிற்கு வருகிறது.. அது அவளுடைய அம்மா. பத்து வருடத்திறகு முன்பு தன் சுகம் மட்டும் போதும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன அம்மா, எவ்வளவு கேவலப்பட்டாலும் தனக்குப் பிடித்த வாழ்வை வாழ்ந்தாக வேண்டுமென தீர்மானித்த அம்மா...

தனக்கு வரும் காதல் கடிதத்தைக்கூட அப்பாவிடம் காட்டி சிரிக்கும் அவள், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அவள் ஏனோ இதை மட்டும் அவரிடம் மறைக்கிறாள். அது மிகுந்த மன இடைவெளியை அவருக்குத் தருகிறது. எவ்வளவு சொல்லியும் அப்பாவைச் சமாதானப்படுத்த முடியாத ஒரு துர்சகுனத்தில் அம்மா அவளைத் தேடி கோயம்புத்தூர் வருகிறாள். தன் மகளை தன்னிடம் அனுப்பக் கோரி பிடிவாதம் பிடிக்கிறாள்.

அதுவரை தன் மனதில் ஹீரோவாக நிலைத்திருந்த அப்பா சாதாரண மனிதனாக மாறி பத்து வருடத்திற்கு முன்பு பிரிந்துபோன மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். வாழ்வின் புரியாத  புதிர்களில் ஒன்றாக இத்தனை வருடங்கள் கழித்து விவாகரத்து கிடைக்கிறது. மகள் 17 வயதும் ஆறு மாதமுமாக இருப்பதால் அவள் அம்மாவிடமோ அப்பாவிடமோ போகலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவள் இரண்டு பேரையும் மறுத்து விடுதிக்கு செல்கிறாள். ஆறு மாதம் முடியக்காத்திருந்த அம்மா வந்து நல்ல வேலையும் வாழ்வும் அமைத்துத் தருவதாகச் சொல்ல அதுவரை  தாயின் செட்டைக்குள் அடைபடும் சூட்டிற்காக ஏங்கிய மனது அம்மாவின் பின்னால் செல்கிறது.

ஒரு வருடமாக அன்பொழுகப் பேசிப்பேசி தன்னுடன் கூட்டிக்கொண்டுபோன அம்மா, ஆம் அப்படியும் அந்த உறவைச் சொல்லலாம், அந்த அம்மா தன் வருங்கால வசதியான, ஒய்யாரமான வெளிநாட்டு வாழ்க்கைக்காய் ஒரு காரியம் செய்கிறாள். இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்த தன் மகளை, இந்த உலகம் ஒரு பெரிய மனிதனாய் அங்கீகரித்த ஒருவனுக்கு பணத்திற்கு விற்று, இத்தனை நாட்களாய் தான் காண்பித்த போலிப் பிரியத்தை முடித்து கொள்கிறாள். தனக்கு ஏதோ நல்லது செய்கிறாள் அம்மா என்று நம்பிய மனதை சுக்கு நூறாக்கி தன்னை விட இருபத்தி ஐந்து வயது பெரியவனான இந்த மனிதன் வேலை வாங்கித் தருவதற்கு பதிலாக எதற்கு மருத்துவமனைக்கெல்லாம் அழைத்து செல்கிறான் என்று அவளுக்குப் புரியாத நாட்கள் அவை. இருபத்திநாலு மணி நேர குடிகாரனான, காசநோய்க்கு ஆளான, தன் தந்தையை விட பெரியவனான ஒரு ஆளுடன் கேள்விகளும் புலம்பல்களும் விவாதங்களுமாய் ஒரு வாழ்வை ஆறு வருடங்கள் வாழ்ந்து தீர்க்கிறாள்.

பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்று எப்போதும் தன் கைகளை அலங்கரித்த கோப்பைகளும் கழுத்தில் விழுந்த மெடல்களுமாய் பாரதியின் கவிதையாய்  வாழ்ந்த வாழ்வை இழந்து எவனோ ஒருவனுக்கு வெறும் ஹோம் நர்ஸாக கடத்திய நாட்கள் அவை. இவளுடைய அழகும் பிரியமும் அந்த வயதான மனிதனை பாடாய் படுத்த, பலமுறை நாம் ஒன்றாய் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட வற்புறுத்தியிருக்கிறார். தனக்கு பின்னால் யாரையும் அவள் திருமணம்செய்து கொள்ளக்கூடாதென்று சத்தியம் வாங்கியிருக்கிறார். ஆனால் எந்த சூழலிலும் இந்த வாழ்வை முடித்துக் கொள்ள அவளுக்கு தோன்றியதில்லை. ஏதோ தான் செய்யவேண்டியது மீதமிருப்பதாய் உணர்ந்த நிமிடங்களில் அவள் வாழ்வை நங்கூரமிட்டு நிறுத்திக் கொள்கிறாள்.

பெற்ற அம்மாவால் விற்கப்பட்டு  வாழ்வின் சூட்சுமங்கள் ஒன்றுமே தெரியாத வயதில்  கூட்டிக்கொண்டுபோன மனிதன் இறந்த மூன்றாம் நாள் முதல் மூன்று மனைவிகளும் அவர்களின் பிள்ளைகளுமாய் இவளை விரட்டப்பார்க்க கணவனின் நண்பர்களின் உதவியுடன் வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து பார்க்கிறார்கள். அதில் அதுவரை தனக்கு தெரியாமலிருந்த பல ரகசியங்கள்  ஒவ்வொன்றாய் விடுபடுகின்றன. தன்னை நான்காவது மனைவியாய் கூட்டிக்கொண்டு வந்தாலும் மொத்த சொத்தையும் இவள் பெயருக்கே உயில் எழுதி வைத்திருப்பதும், தன் பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ள சொல்லியும் இருந்தது இவளை ஆச்சரியப்படுத்துகிறது. தன்னை இந்த மனிதன் எவ்வளவு நேசித்தான் என்பதும், அவள் சாதாரணப் பெண்ணில்லை என்பதை அவன் உணர்ந்ததாகவும் நண்பர்களிடம் சொல்லியிருப்பதும் புரிய வருகிறது.. அந்த நிமிடங்கள் அவள் வாழ்வில் ஏற்படுத்தின மாற்றங்களை சொல்ல என் வார்த்தைகளுக்கு உரமில்லை.

தான் அதுவரை சந்தித்த பல நம்பிக்கை துரோகங்களுக்கு மத்தியில் தன் கணவனாய் ஆறு வருடங்கள் மட்டும் வாழ்ந்தவர் அவளுக்கு கருணையும் ஈரமுமுள்ள மனிதனாய் மாறிப்போகிறார். அன்றிலிருந்து அவரின் மூன்று மனைவிகளையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு மட்டுமே நின்றிருந்தால் அவள் லட்சக்கணக்கான பெண்களில் ஒருத்தியாக மாறிப்போயிருப்பாள். ஆனால் உயில் தந்த சொத்துக் களுடன் உடல்நலமற்ற மனிதர்களின் பக்கத்தில் நின்று அவர்களின் மறுபக்கமாய் நிற்கிறாள். உறுப்பு தானம், சிறுநீரக அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் என தன் வாழ்வை விசாலமாக்குகிறாள். மிக முக்கியமாக மலை வாழ் பெண்களுக்கு அரணாய், அம்மாவாயிருக்கிறாள். தன் ஒரு சிறுநீரகத்தை பெயர் தெரியாத யாரோ ஒருவருக்கு தானமாக கொடுத்து  அவளொரு சமூக மனுஷியாக மாறிப் போகிறாள்.

இன்று பல விருதுகளும் பாரட்டுகளும் பெற்று புகழின் வெளிச்சத்திலிருக்கும் அவள் பெயர் உமா ப்ரேமன்,  கேரள மக்களின் பிரியமான உமாசேச்சி, மலை வாழ் மக்களால் தன் குடும்பத்தில் ஒருத்தியாய் நேசிக்கிற உமா, கேரள அரசும் அமைச்சர்களும் பார்த்து வியக்கிற உமா மேடம், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் முக்கிய பங்காளி. இந்த அதீத வெளிச்சம் கண் கூச வைத்தாலும் அது தனக்கு தேவையேயில்லையென கடந்து போக தெரிந்திருந்த உமா ப்ரேமனை எல்லாவற்றிலும் உச்சமாய் இந்தியாவின் சிறந்த நூறு பெண்களில் ஒருத்தியென  ஜனாதிபதி இந்த வருடக் குடியரசு தினத்தன்று சந்தித்திருக்கிறார். 

Shanthi Medical Information Centre என்ற அமைப்பை ஆரம்பித்து மருத்துவ  உதவிகளை செய்யும் உமா ப்ரேமனை ஈரத்தின் எந்த பிசுபிசுப்புமின்றி விற்றுவிட்டு போன அம்மா லண்டனிலிருந்து எப்படி எப்படியோ  இப்போது தொடர்பு கொள்கிறாள், நான் உன்னிடம் வர ஆசைப்படுகிறேன், கடைசி காலத்தில் என்னை உன்னிடம் வைத்துக் கொள் என்று வயோதிகத்தின் வாசலில் நின்று யாருமற்ற தனிமை நெருப்பு வாட்ட மன்றாடுகிறாள். உமா ஈரம் உள்ளவள், கருணை மிக்கவள், அதனால் சொல்கிறாள், “ தாராளமாக இங்கு நான் நடத்தும் மருத்துவமனையில் ஒருத்தியாக  நீங்களும் வந்து தங்கிக் கொள்ளலாம், நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம், ஆனால் ஒருபோதும்  என் அம்மாவாய் அல்ல, ஒரு பாவப்பட்ட நோயாளியாய் மட்டுமே இங்கே இருக்க முடியும்”

உமாப்ரேமனின் வாழ்வு புதிரானது. அவருக்கு இந்த வாழ்வின் மீதோ சொந்தங்களின் மீதோ முகம் தெரியாத ஆட்களின் மீதோ எந்த புகாரும்  இல்லை. நான் எந்த கழிவிரக்கத்தையும் யாரிடமிருந்தும் கோரவில்லை என்ற உமாவின் வாழ்வனுபவங்களை நான் என் மொழியில் எழுதப் போகிறேன்.

இரண்டு நாட்கள் முன்புதான் எனக்கு உமாவைத்தெரியும், ஆனால் இன்று இதோ என் வீட்டில் என்னோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட என்னிடம், “ பேசின உடனே பாக்கணும்னு தோணிச்சு, அதை ஏன் தள்ளிப் போடணும்,கிளம்பி வந்திட்டேன். தூங்கும்போது எந்த கனவையும் காண நான் விரும்புவதில்லை. நினைத்ததை உடனே செஞ்சிடுவேன் ஷைலஜா ” என்று சொல்லும் உமாவின் அற்புதமான கண்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

(கட்டுரையாளர் ஒரு மொழிபெயர்ப்பாளர்)

ஏப்ரல், 2016.