சிறப்புக்கட்டுரைகள்

உனக்கோ பொழுது போகணும்!

தொலைக்காட்சி தொடர்கள்

வெற்றிவேல் சந்திரசேகர்

தன் மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற அந்தப் பெண் ஒவ்வொரு வீட்டுக்கும் அரைமணி நேரம் செலவிட்டார். அரைமணி நேரம் முடிந்தால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அடுத்த வீட்டுக்குச் சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அந்த அரைமணி நேரம் அந்த வீட்டிலேயே அமைதியாக அமர்ந்து விடுவார். அதென்ன அரைமணி நேரம் கணக்கு என்று, மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.. மெகா சீரியல்களை தவறவிட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சீரியல் என்று முறை வைத்துப் பார்த்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

இந்தத் தகவலை நான் கேள்விப்பட்டபோது, முன்னணி தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான ஒரு சீரியலுக்கு உரை-யாடல் எழுதிக் கொண்டிருந்தேன். கடந்த நான்கு ஆண்டு-களில் நான்கு மெகா சீரியல்களுக்கு உரையாடல் எழுதியிருக்கிறேன்.

மெகா சீரியல்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவும், பெண்கள் (ஏன் ஆண்களும்தான்) இடையில் அவை பெற்றிருக்கும் முக்கியத்துவமும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. மெகா சீரியல் வழியாக சொல்லப்படும் தத்துவங்களை(!) புறந்தள்ளி விட முடியாது. அதனுடன் பயணித்தவன் என்கிற முறையில் அதில் உள்ள அபத்தங்களை பேசுவதற்கான தகுதி எனக்குண்டு.

இன்றைய நிலவரப்படி, சன் தொலைக்காட்சி தொடங்கி முன்னணி சேனல்களில் தினமும் குறைந்தபட்சம் ஐம்பது மெகா சீரியல்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கின்றன. மெகா சீரியல் ரசிகைகள் ஒருநாளைக்கு சற்றொப்ப பத்து சீரியலாவது பார்க்கிறார்கள். இவர்களை திருப்திப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் சீரியல் கதாசிரியர்களின் கடமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

ஒரு மெகா சீரியலுக்கான கதையை தயாரிப்பு நிறுவனத்தில் (சினிமாவுக்குக் கதை சொல்-வது போல்) “ரொம்ப வித்தியாசமான கதை  சார்” என்று சொல்லத் தொடங்கினால், “தம்பி கிளம்பு” என்று வழியனுப்பி விடுவார்கள். மெகா சீரியலுக்கான கதை எப்போதும் புத்தம் புதுசாக இருக்கக் கூடாது, ஆனால் அதுவரைக்கும் ஒளிப்பரப்பான சீரியலில் இருந்து மாறுபட்டு புதுசாக இருக்க வேண்டும். தலை சுற்றுகிறதா?

“சார் மனதில் உறுதி வேண்டும் படத்தில வர்ற சுகாசினி மாதிரி ஒரு கேரக்டர். அந்த கேரக்டருக்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில வர்ற ரகுவரன் மாதிரி ஒரு புருஷன். அந்தப் பொண்ணோட மாமியார், மாப்பிள்ளை படத்தில வர்ற ஸ்ரீவித்யா மாதிரி திமிர் பிடிச்சவ” இப்படி சொன்னால் அந்தக் கதை மிக எளிதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

உற்றுக் கவனித்தால் இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கும் மெகா சீரியல்களின் மையக்கரு ஏதாவது ஒரு வெற்றிப் படத்தில் இருந்து ‘சுட்டதாகத்தான்’ இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற வெற்றிப் படத்தைத் தழுவிய ஒரு மெகா சீரியல் பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் கொடி நாட்டியது. சினிமா இயக்குநர்களுக்கு ஆங்கிலப்பட டிவிடிகள் என்றால் மெகா சீரியலுக்கு பழைய தமிழ்ப்பட டிவிடிக்கள்!

இப்படி உருவாகும் ‘வழக்கமான’ கதைக்கு திரைக்கதை அமைப்பதில் தான் இருக்கிறது சாமர்த்தியம். அடுத்த மாதத்துக்கு சொல்லப் போகும் கதையை இந்த மாதம் அமர்ந்து பேசுவார்கள். பேசுவார்கள். பேசிக் கொண்டே இருப்பார்கள்.

கவனித்துப் பார்த்தால் ஒரு சீரியல் தொடங்கிய போது சொன்ன கதைக்கும் அதன்பின்பு அது பயணித்துக் கொண்டிருக்கும் கதைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கும். ஆரம்பத்தில் சொன்னது, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன ‘கதை’யாக மாறிவிடும்.

பெண்களால் விழுந்து விழுந்து பார்க்கப்படும் சீரியல்களின் மேக்கிங்கை நினைத்தால் தலைசுற்றும். நான்கு ஆண்டுகளாக குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர், ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் கேட்டு, கடுப்பு அடிக்கிறார்  என்றால், அடுத்த எபிசோட்டில் அவர் போட்டோவுக்கு மாலை மாட்டிவிடுவர்கள். இது ஒரு வகை கல்தா என்றால் இன்னொன்றும் இருக்கிறது. ‘இனிமேல் இவருக்குப் பதில் இவர்’ என்று டைட்டில் கார்டு போட்டு, ஆளையே மாற்றி உலவ விடுவார்கள்.

நான் பணியாற்றிய ஒரு சீரியலில் கூடுதல் சம்பளம் கேட்கிறார் என்று நாலைந்து ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்த கதாநாயகியை மாற்றி விட்டார்கள். கொஞ்ச நாளில் அந்த நடிகையுடன் சமரசம் ஏற்பட திரும்பவும் ‘திரும்பவும் இவருக்குப் பதில் இவர்’ என்று கார்டு போட்டு மீண்டும் நடிக்க வைத்தார்கள். (என்ன கொடுமை சார் இது?)

சினிமாவில் ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று இயக்குநரை சொல்வார்கள். சீரியலில் திரைக்கதை ஆசிரியர் தான் கேப்டன். என் நண்பர் ஒரு சீரியலுக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார்.

அதில் ‘வீட்டில் கவிதாவும் சுலோச்சனாவும் தனிமையில் இருக்கும் போது அங்கு வந்த ரௌடிகள் கவிதாவைக் கட்டிப் போட்டுவிட்டு சுலோச்சனாவை கற்பழித்து விட்டார்கள்’ என்று காட்சியை விவரித்து எழுதி, ஸ்பாட்டுக்கு அனுப்பி விட்டார். இயக்குநரும் இந்தக் காட்சியில் நடிகர்களை நடிக்க வைத்து ஷூட் பண்ணிவிட்டார். அந்த நண்பர் எழுதியதில் ‘சின்ன’(!) தவறு நேர்ந்து விட்டது. சுலோச்சனாவை கட்டிப் போட்டுவிட்டு கவிதாவைக் கற்பழித்தார்கள் என்றுதான் எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் சுலோச்சனாவும் கவிதாவும் கதைப்படி அம்மாவும், மகளும்.

கதாசிரியர் தவறாக எழுத, அவர் எழுதியதை மறு கேள்வி இல்லாமல், வீட்டுக்கு வந்த ரௌடிகள் 20 வயதுப் பெண்ணைக் கட்டிப் போட்டு, 60 வயது மூதாட்டியை விரட்டி விரட்டி கற்பழிப்பதாக படம் எடுத்திருக்கிறார், இயக்குநர்! அதன்பின்பே தவறு கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த முறை ரௌடிகள் சரியான ஆளை கற்பழித்தார்கள்! இப்போதும் நேரம் கிடைக்கும் போது தவறுதலாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவைப் போட்டுப் பார்த்து அந்த நண்பர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்.

பகல் நேர சீரியல்களில் கள்ள உறவுகள்  அதிகமாக இருக்கும். இரவு நேர சீரியல்களில் பெரும்பாலும் கள்ள உறவுகள் தவிர்க்கப்படும். பகலில் வீட்டிலிருக்கும் பெண்கள் தனிமையில் டிவி பார்க்கிறார்கள். அதனால் கள்ள உறவுகளை சங்கடம் இல்லாமல் பார்க்க முடிகிறது. சீரியல்களில் கதாநாயகியின் குழந்தை நிச்சயம் கடத்தப்படும். அந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் நிச்சயம் ஒரு பெண் (அதாங்க  வில்லி!) இருப்பாள். தற்போது  ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் மூன்று வெவ்வேறு மெகா சீரியல்களில் குழந்தை கடத்தல் தான் போய்க் கொண்டிருக்கிறது.

குழந்தைக் கடத்தல் கும்பல் ஐந்து கோடி ரூபாய் கேட்க, “எனக்குக் குழந்தைதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை. நீ கேட்ட பணத்தை உடனே தந்திடறேன்” என்று சொல்லுவாள். பத்துக்குப் பத்து அறையில் ஆபிஸ் நடத்தும் கதாநாயகியிடம் பலகோடி ரூபாய் புரளும் அதிசயம் குறித்து பார்வையாளனுக்கு கேள்வியே இருக்காது!

மெகா சீரியல் நாயகியின் ஊறுகாய் கம்பெனி முதல் பில்டிங்  கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி வரை

தொடங்கிய சில வாரங்களில் பல கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யத் தொடங்கியிருக்கும். ஆனால் அந்த நாயகி ஏனோ கடைசி வரைக்கும் ஆட்டோவிலேயே பயணித்துக் கொண்டிருப்பாள். மெகா சீரியல் நாயகி நிச்சயமாக கணவனைப் பிரிந்திருக்க வேண்டும். மனைவியைப் புரிந்து கொள்ளாத அந்தக்கணவன் அவளுக்குப் போட்டியாக பிசினஸ் செய்து கொண்டிருப்பான். கணவனின் பிசினஸ் பார்ட்னராக கதாநாயகியின் எதிரி (வில்லி) நிச்சயம் இருப்பாள். பார்ட்னராக இல்லை என்றால், பார்ட் டைமாகவாவது அந்தக் கம்பெனிக்கு வேலைக்கு போய்க் கொண்டிருப்பாள்!!

கிரிக்கெட் மேட்ச், பண்டிகைகள் என்று வந்து பார்வையாளர்-களின் கவனம் சிதறும்போது, அவர்களைத் தக்க-வைத்துக் கொள்ள கதையில் சில ‘டிவிஸ்ட்களை’  புகுத்துவார்கள். டிவிஸ்ட்கள் என்றால், ஒரு கொலை நடக்கும். கொலையாளி பிணத்தை எங்காவது மறைத்து வைத்திருப்பான்(ள்). போலீஸ் வரும். விசாரிக்கும். இதுதான் அந்த டிவிஸ்ட்!

இதுதவிர, இன்னொன்றும் இருக்கிறது. கணவனின் துரோகம், மாமியாரின் வஞ்சம், குடும்பத்தில் குழப்பம் என தவிக்கும் கதாநாயகிக்கு பக்கத்து வீட்டு பெண் அல்லது வேலைக்காரி வேளச்சேரியில் இருக்கும் ஒரு சாமியாரின் மகிமையைப் பற்றி சொல்லுவாள். அடுத்த காட்சியிலேயே சாமியாரை சந்திக்கும் கதாநாயகி, சாமியாரின் அருள் வாக்கின்படி தீ மிதிப்பாள், அங்கபிரதட்ணம் செய்வாள், தீச்சட்டி ஏந்துவாள், விரதம் இருப்பாள்.

வெள்ளிக்கிழமை எபிசோடுகளில் மரணங்கள் எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் தங்கள் வீட்டில் அமங்களம் நடந்து விட்டதாக நினைத்து வருந்துவார்களாம். (எப்பூடி?)

இது தவிர, சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு யூனிபார்மில் வருவார். போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் போட்டிருப்பார். கோர்ட் நடவடிக்கைகள் கோமாளித்தனமாக இருக்கும். போர்டு மீட்டிங்கில் உடம்புக்குப் பொருந்தாத ‘கோட்’டைப் போட்டுக் கொண்டு ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் அமர்ந்திருப்பது உச்சக்கட்ட பரிதாபம்!!

கரும்பு ஜூஸ் பிழிவதைப் பார்த்திருப்போம். முதலில் கரும்பை இரண்டாக உடைத்து மிஷினுக்குள் விடுவார்கள். அது சக்கையாகி வெளியே வரும். அந்த சக்கையில் எலுமிச்சம்பழம், இஞ்சி வைத்து மிஷினுக்குள் விடுவார்-கள். இப்போது அது பஞ்சு மாதிரி வெளியே வரும். அப்போதும் விடமாட்டார்கள். திரும்பவும் மிஷினுக்குள் தள்ளுவார்கள். வெளியே வரும். இப்போது தூள் தூளாக ஆகியிருக்கும். விட்டு விடுவார்கள் என்று நினைத்தால், அதை அப்படியே சுருட்டி உருட்டி மீண்டும் மிஷினுக்குள் விடுவார்களே அப்படித்தான், மெகா சீரியலின் கதையை பல ஆண்டுகளுக்கு உருட்டி சுருட்டி ஒப்பேத்துகிறார்கள்!

சீரியல்களில் பெண்கள் தன்னிச்சையாக முடிவெடுக்-கிறார்-கள். நினைத்ததை எல்லாம் (சில நேரம் நினைக்காததையும்) செய்கிறார்கள். ஆண்களை அடி-யாட்களாக வைத்திருக்கிறார்கள். ஆண்களை கை நீட்டி அடிக்கிறார்கள். கொலை செய்கிறார்கள். கோயில் தூணில் சாய்ந்து கொண்டு கழிவிரக்கத்தில் கண் கலங்கிக் கொண்டிருக்கிறார்கள். புருஷனை தூக்கி வீசிவிட்டு சொந்தமாக தொழில் செய்து முன்னேறுகிறார்கள்.

வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் காலம் காலமாக அடக்கி வைத்திருந்த உணர்வுகளுக்கு இவை வடிகாலாக இருக்கலாம். ஆனால் அபத்தங்களை கற்பனையாகப் புனைந்து பதைபதைப்புடன் பார்வையாளர்களை பார்க்க வைக்கும் உத்தியால் இங்கே குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன.

பெண்கள் பார்க்கும், பெண்கள் அதிகமாக நடிக்கும், பெண்கள் பிரச்சனைகளை அலசும் இந்த சீரியல்களின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஆண்களே. திரையுலகைப் போல இங்கேயும் பெண் படைப்பாளிகள் அரிதாகவே இருக்கிறார்கள்.

ஒரு மெகா சீரியலின் கதாநாயகிக்கு அடுத்த வரப் போகும் அந்த சீரியலின் திரைக்கதையை சொல்வதற்காக நேரில் சென்றிருந்தோம். அப்போது அவரது ஐந்து வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். என்னுடன் வந்திருந்த திரைக்கதை ஆசிரியர் அந்த சிறுவனைப் பார்த்துக் கொண்டே, “இந்தப் பையன் அந்தம்மா வயித்துல இருக்கும் போது இந்த சீரியல் கதையை சொல்ல வந்தேன். இப்போ இவன் பிறந்து வளந்து ஸ்கூலுக்குக் கூட போயிட்டு இருக்கான். இன்னும் இந்தக் கதை ‘நான்-ஸ்டாப்பா’ போயிட்டே இருக்கு. ஏதோ நம்ம பொழப்பு நடக்குது. அது வரைக்கும் சரி..” என்றாரே பார்க்கலாம்!

ஜனவரி, 2013.