சிறப்புக்கட்டுரைகள்

உண்மையான அன்பைக் கொடுங்கள்!

Staff Writer

ஆண் பெண் உறவுக்கு இடையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கணவன் - மனைவிக்குள் இருக்க வேண்டும். பெண்ணுக்கு ஏற்ற மாதிரியான வாழ்க்கையை ஆண் அமைத்துக் கொடுத்தால் உறவில் எந்த முரண்பாடும் இருக்காது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால், ஒருநாள் முழுக்க செய்ய வேண்டிய வேலைகளை இரண்டு மணிநேரத்தில் முடித்து விட்டு வேலைக்குச் செல்கின்றனர். இந்த வேலை பளுவை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டு வேலை, அலுவலக வேலை செய்யும் பெண்கள் குறித்து அவர்களுடைய கணவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பெண்களை இயந்திரமாகத்தான் ஆண்கள் நினைக்கிறார்களே தவிர உயிருள்ள ஒரு மனுஷியாக கூட நினைப்பதில்லை.

உண்மையான அன்பை ஆண் பெண்ணுக்கு அளிக்க வேண்டும். ஒரு பிரச்சனை வருகிறதென்றால் பெண்ணுக்கு ஏற்றார் போல் தான் ஆண் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள்  நடந்துகொள்வதில்லை என்பது தான் பிரச்சனை.

 -எஸ்தர் சாந்தி

பார்வையற்றவர்கள்

சாவித்திரி கண்ணன்

பெண்களை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? ஏன் இவ்வளவு  ஆண்  பெண் உறவு முரண்கள்?

என்னால் மட்டுமல்ல, பெண்களை நன்கு புரிந்த ஒருவரையேனும் நான் என் வாழ்நாளில் சந்தித்ததில்லை.  நம் முன்னோர்களிலும் அப்படி பெண்களை நன்கு புரிந்து கொண்டவர்களை நான் அறிந்தவரை, படித்தவரை தெரியாது!

பெண்களின் சுதந்திரத்திற்காக பாடிய பாரதியார், வசிட் டருக்கும் இராமருக்கும் பின்னொரு வள்ளுவருக்கும், வாய்த்திட்ட மாதர் போல் பசித்தொறாயிரம் ஆண்டு தவஞ் செய்து  பார்க்கினும் பெறல் சால வரிது காண்! எனப் பாடியுள்ளார்!

பாரதியார் கூறியுள்ள வசிட்டரின் மனைவி அருந்ததியும், ராமன் மனைவி சீதையும், வள்ளுவர் மனைவி வாசுகியும் உருவகப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களே! உண்மையல்ல!

தெய்வீக அவதாரங்கள் கூட பெண்களைப் புரிந்து கொண்டதில்லை!

பன்னெடுங்காலமாக பெண்களை அடிமையாக அழுத்தி வைத்தே நாம் பழகியதன் விளைவாய் கூட அவர்கள் இயல்பற்றவர்களாக அல்லது

இன்செக்யூரிட்டி உணர்வுள்ளவர்களாக உள்ளனர்!  மனித குல வரலாற்றில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல! பல வால்யூம்களாக எழுதினாலும்

சொல்லி மாளாதவை அவை!

நாட்டின் பிரதமராக, முதல்வராக மிகப் பெரும் ஆளுமையாக அடையாளம் காணப்படும் பெண்களும் இப்படித்தான் எப்போதும் இன்செக்கியூரிட்டியுள்ளவர்களாக இருக்கிறார்கள்! இவர்களின் இல்லற வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்ததில்லை.

மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார்..என பலரின் வாழ்வையும் ஊன்றி கவனித்ததிலும் அவர்களும் மனைவி உடனான இந்த சிக்கலை அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளது தெரிய வருகிறது!

பெண்கள் விஷயத்தில் எல்லா ஆண்களுமே பார்வையற்றவன் யானையைத் தடவிப் பார்த்து தடவிப்பார்த்து

சொன்ன கதை தான்! புரிந்து கொண்டதைக் கொண்டு, புரியாதவற்றை புறம் தள்ளி மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்!

உதவியா இருக்கோணுமுங்கோ!

யாழ்மொழி

ஏனுங்கோ படக்குன்னு கூப்பிட்டு இந்தப் பொம்பளைங்க ஆம்பளைங்க கிட்ட அப்படி என்ன தான் எதிர் பாக்குறீங்கன்னு கொஞ்சோ சொல்ல முடியுங்களான்னு கேட்டா....இப்பிடியொரு வாய்ப்பு  கிடைச்சா ...பொங்கீறமாட்டமுங்களா''

இதுக கிட்ட குப்பை கொட்டோணுமேன்னு நெனைக்காம குடும்ப குத்துவிளக்கா இருக்கிறது பாக்கியமா? இல்ல படாத பாடான்னு

சொல்லவைக்கிறது அவுகவுகீகளுக்கு வாச்சவீகோ கையிலதேனுங் இருக்குங்கிறதை கொஞ்சம் பெருமையாவே சொல்லிக்கிறனுங். ..

இது என்ன பெரீசா எதிர்பார்க்கிறாங்க .சித்த நேரமாவது பக்கத்தில் இருக்கணும், பதவிசா அன்பா பேசறத காது கொடுத்து கேக்கோனும் . ஆயிரம் விசயத்துக்கு நொட்ட சொல்றமாதிரி.நல்லது  ஏதாவதுது தப்பித்தவறி செஞ்சு போட்டம்னா மனசு விட்டு பாராட்டோணும். வாய்க்கு மனசுக்கு பிடிச்சது என்னன்னு புரிஞ்சி வெச்சிருக்கோணும். அப்புறம் இந்த புள்ள குட்டி வளக்கறதுக்கு  உதவியா இருக்கோணும். தனக்கு புடிச்சாலும் புடிக்கலினாலும் அங்க இங்க கூட்டிட்டு போகோணும்.

திட்டமிட்ட பயணத்தை திடீர்திருப்பம் பண்ணாம ஒட்டி உரசி பயணம் செய்யோணும். அட  சண்டை சச்சரவுந்தே போடோணும். சகட்டுமேனிக்கு பேசிக்கிட்டாலும் பொழுதுகுள்ள ராசியாகிக்கணும்!

மனசுக்கும் மாஸ்க்

ப.தெய்வீகன்

பெண்களைப் புரிந்துகொள்வதென்பது ஒரு புனைவுபோல அதுவாக நிகழவேண்டும். அதற்காகப் பிரத்தியேக முயற்சிகளையெல்லாம் முதலீடு செய்கின்றபோதுதான் பலரது நிலை பிக் பொஸ் வீடுபோலாகிவிடுகிறது. பெண்கள் தங்களைப் புரிந்துகொள்வதற்குத் தாங்களே உவந்து தருகின்ற வெளி, அதிக விளக்கங்களை பரஸ்பரம் அளிக்கிறது. ஆனால், அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, வெளிகளை வலிந்து உருவாக்கும்போது, அதனை அவர்கள் தங்களுக்கான வலைகளாக அஞ்சி உஷாராகிவிடுகிறார்கள். ஆனால், பெண் எனப்படுகிறவள், மனசுக்கும் சேர்ந்து மாஸ்க்கோடு சிருஷ்டிக்கப்படுகின்ற உயிரி என்பதுதான் உண்மை. இன்னொருவகையில் கூறினால், பெண் என்பவள் எவ்வாறு ஆண்களோடு ஒப்பிடுகின்றபோது பிரத்தியேக உடலமைப்பு கொண்டவளாக காணப்படுகிறாளோ, அதுபோல மன அமைப்பும் வித்தியாசமாகக் கொண்டவள். அவளிடம் இருக்கின்ற இரசியம் என்ற அகவயமான ‘அணு ஆயுதம்' அவளுக்கு இயல்பாக அமைந்த ஒன்று. அதன்வழி, அவளைப் புரிந்துகொள்வது என்பது ஆண்களுக்கு மாத்திரமல்ல, சில பெண்களுக்கும்கூட கோணங்கி எழுத்துத்தான்.

இந்த காலகட்டத்தில் பெண்ணுக்கு என்ன தேவை?

சுமதிஸ்ரீ

இன்றைய சூழலில் ஒரு பெண்ணுக்கு அதிகம் தேவை, ஏளனங்களை,கேலி, கிண்டல்களை, அவதூறுகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணிக்கிற மன உறுதி தான். எல்லாவற்றையுமே ஏளனம் செய்கிற மனநிலை இன்று அதிகரித்திருக்கிறது.

கல்லூரி காலத்தில்,  பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் போது, பேச ஆரம்பிக்கும் போதே, மாணவர்கள் பேச விடாமல் கத்துவார்கள். அதனாலேயே நிறைய மாணவிகள் இரண்டு வரி கூட பேசாமல், மேடையிலிருந்து இறங்கி விடுவார்கள். ஆனால் நான், நீ எவ்ளோ வேணா கத்து...நான் பேசிட்டு தான் மேடையிலிருந்து இறங்குவேன் என ,தைரியமாக பேசுவேன். முதல் பரிசு வாங்க மேடையேறும் போதும், அந்த கூட்டம் கத்தும். ஆனால் பரிசு வாங்கும் போது எனக்கென எழும் கை தட்டல் ஓசையில் அந்த கேலி சத்தம் அடங்கிப் போய் விடும். இதுதான் சுமதிஸ்ரீ பேச்சுத் துறையில் வெற்றி பெற்றதற்கு காரணம்.

திறமை என்பது இரண்டாவது தான் கேலி செய்து பேச விடாமல் கத்திய குரல்களை பொருட்படுத்தாமல் புறக்கணித்தது தான் நான் பேச்சாளராக வெற்றி பெற முதல் காரணம். இன்றும் அந்த ஏளன குரல்கள் என்னை வெவ்வெறு விதங்களில் துரத்திக் கொண்டு தான் இருக்கின்றன.  என் பேச்சை ஏளனம் செய்பவர் ஏராளம்....யாருக்கும் எந்த விளக்கமும் கொடுப்பதில்லை... 

அவதூறுகள், ஏளனங்கள், கேலி, கிண்டல்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து பயணிக்கிற மன உறுதியே மிக மிக அவசியம்.

நவம்பர், 2021.