சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து அந்த படத்தைப் பற்றி சினிமா எக்ஸ்பிரஸிற்கு நான் எழுதி வந்தேன். என் நண்பர்தான் அந்தப் படத்திற்கு மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ). படம் தொடர்பான விஷயங்களுக்காக அடிக்கடி சந்தித்தபோது, படத்தின் பிரிவியூ போடும்போது எனக்கு ஒரு டிக்கெட் வேண்டுமென்று கேட்டிருந்தேன். அவரும் தலையாட்டினார். அதன்படி படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியின்போது நானும் போனேன். போலீஸ்காரங்கள வச்சி அடிச்சி துரத்திட்டாங்க. அன்னைக்குத்தான் நாம் ஏன் பிஆர்ஓ ஆகக்கூடாதுன்னு யோசிச்சேன். அன்னைக்கு அவமானப்பட்டதால இன்னைக்கு இங்க இருக்கேன்” என்கிறார் தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி பிஆர்ஓ நிகில்.
ரஜினி, கமல், மணிரத்னம், ஷங்கர், பாலா என்று அத்தனை முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என்று அனைவருக்கும் பிஆர்ஓவாக இருக்கிறார் நிகில் முருகன்.
சினிமா துறைக்கு வந்தது எப்படி?
வழக்கமாக எல்லோரும் சொல்வது மாதிரி ஒரு ஆக்ஸிடெண்ட்தான். சினிமாதான் வாழ்க்கைன்னு முடிவு செய்தபோது, வழக்கமாக எல்லோரும் தேர்ந்தெடுக்கும் நடிப்புத்துறை வேண்டாம் என்று முடிவெடுத்தேன். நம்முடைய முகத்தை நம்மைவிட அடுத்தவர்கள் அதிக நேரம் பார்க்க வேண்டியிருக்கும். அதற்கான பர்சனாலிட்டி எனக்கு இல்லை. அடுத்து, இயக்குநர். படத்தை டைரக்ட் செய்வதென்பது கிரியேட்டிவான விஷயம். அது எனக்கு இருக்கா இல்லையான்னு தெரியல. அதனால அதையும் வேண்டாம்னு முடிவெடுத்தாச்சு. தாத்தா டி.எஸ்.
சொக்கலிங்கம், தினமணியோட முதல் ஆசிரியர். அவரைப் போல பத்திரிகைக்கு வரணும்னு ஆசை. அதனால ஜர்னலிசத்துல டிப்ளமோ முடிச்சேன்.
தாத்தா வேலை செய்த பத்திரிகைங்கிறதால முதல்ல தினமணில எழுத ஆரம்பிச்சேன். பிறகு பல பத்திரிகைகள்ல எழுதினேன். முதல்ல சொன்ன சம்பவம் என்னை சினிமா பிஆர்ஓவாக மாற்றியது. கஷ்டப்பட்டா மட்டும் ஜெயிக்க முடியாது, அவமானப்பட்டாத்தான் ஜெயிக்க முடியுங்கிறதை அனுபவத்துல தெரிஞ்சுகிட்டேன்.
சினிமா பிஆர்ஓவாக எடுத்த முயற்சிகள், முதல் படம்?
சினி நியூஸ் செல்வம் அவர்களிடம் ஐந்து வருடம் அசிஸ்டெண்டாக இருந்தேன். ஏபிசிஎல் கார்ப்பரேஷனோட ‘உல்லாசம்’ படத்தில்தான் நான் பிஆர்ஓ ஆனேன். ஜேடி ஜெர்ரியோட சீரியல்கள்ல வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள்தான் என்னை அறிமுகப்படுத்தியவர்கள். அப்போது சினிமா ஸ்டில்ஸ் எல்லாமே பிரிண்டாகத்தான் பத்திரிகைக்கு போகும். வழக்கமா எல்லா பிஆர்ஓவும் என்ன செய்யறாங்களோ அதை நாம் செய்யக்கூடாதுன்னு முடிவு செய்தேன். மாலை பத்திரிகைக்கு 11 மணிக்குள்ள படங்களும், செய்தியும் குடுத்தாகணும். மாலை மலர், மாலை முரசு, மக்கள் குரல், நியூஸ் டுடே நான்கு மாலை பத்திரிகைகள். மக்கள் குரலும், நியூஸ் டுடேவும் கோடம்பாக்கம். மாலை மலர் வேப்பேரி, தினத்தந்தி காம்பௌண்ட். மாலை முரசு மௌண்ட் ரோடு. மாலை மலருக்கு படம் கொடுத்துவிட்டு அதே காம்பௌண்டில் இருக்கும் தந்திக்கு கொடுக்க மாட்டேன். மாலைப் பத்திரிகைக்கு கொடுத்து முடித்துவிட்டு திரும்ப வருவேன். பத்து நிமிடம் என்றாலும் முக்கியம். நம்மால் சினிமா செய்திகள் எதுவும் தாமதமாகிவிடக்கூடாது என்று நினைத்தேன். அதேபோல சினிமா நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை மற்ற பிஆர்ஓக்கள் அடுத்த நாள் தருவது வழக்கம். நான் அன்றைக்கு இரவே பத்திரிகைக்கு சேர்த்து விடுவேன். இரவு நேரங்களில் டிராஃபிக் இருக்காது. இரவு இரண்டு மணிவரை எல்லா பத்திரிகைக்கும் சென்று கொடுத்துவிடுவேன். இப்படி திட்டமிட்டு வேலை செய்ததால சீக்கிரமா அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்தேன்.
பிஆர்ஓ துறையில் செய்த மாற்றங்கள்..
நானா எந்த டெக்னாலஜியையும் கண்டுபிடிக்கல. பிரிண்ட் போட்டோவை கையால் கொண்டுபோய் கொடுத்துக் கொண்டிருந்தோம். சிடி டெக்னாலஜி வந்தது. நாலு படம் கொடுக்கிற இடத்துல
சிடியில் இருபது படம் கொடுக்க முடிந்தது. அடுத்து மெயில் வந்தது. அடுத்த நிமிடத்துல அத்தனை செய்திகளையும், படத்தையும் அனுப்ப முடியுது. அதேமாதிரி சில பிஆர்ஓக்கள் பெரிய பத்திரிகைக்கு மட்டும் படம் கொடுப்பாங்க. அவங்கள மட்டும்தான் பிரிவியூவுக்கும் கூப்பிடுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கு நம்முடைய படத்தைப் பற்றிய செய்திகள் எல்லா பத்திரிகைலயும் வரணும். அப்பதான் எல்லா தரப்பு மக்களையும் சென்று சேர முடியும்.
உல்லாசத்துக்கு பிறகு நாசரோட தேவதை, பிறகு சரணுடன் காதல் மன்னன் படத்தில் வேலை பார்த்தேன். அப்போதெல்லாம் பாடல்கள் கேசட் மூலம்தான் வரும். பாடல்களை பிரபலப்படுத்த முக்கியமான இடங்களிலுள்ள டீக்கடைகளுக்கு நம்முடைய படப் பாடல் கேசட் இரண்டை இலவசமாக கொடுப்போம்னு இயக்குநர் சரணிடம் சொன்னேன். சரி கொடுக்கலாம், எதற்கு இரண்டுன்னார். ஒன்னு கொடுத்தா வீட்டுக்கு கொண்டு போய்டுவாங்க. கடைல போடமாட்டங்கன்னு சொன்னேன். சரணுக்கு என்னை ரொம்ப பிடித்துபோக இயக்குநர் பாலசந்தரிடம் அறிமுகம் செய்தார்.
ரஜினி, கமல், ஷங்கர்..
பாட்ஷா விஷயத்துக்கப்புறம் ரஜினி படத்துல வேலை பார்க்கணும்னு ஆர்வமா இருந்தேன். பாபா படத்திற்கு நான்தான் பிஆர்ஓ ஆனேன். நண்பர் தங்கவேலு மூலமா தயாரிப்பாளர் மாதேஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அவரே இயக்குநர் ஷங்கரிடம் அழைத்து சென்றார். முதல் சந்திப்பிலேயே ஷங்கர் சில விஷயங்கள் சொல்ல நான் பாக்கெட் நோட் எடுத்து குறிப்பெடுத்துக் கொண்டேன். அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்தது. என்னோட தயாரிப்பில் முதல் படம், நல்லா செய்யுங்கன்னு சொன்னார். “இத செஞ்சா இது கிடைக்கும்னு எதையும் செய்யாதீங்க. உங்களோட வேலையை சரியா செஞ்சீங்கன்னா நீங்க விரும்பியது எல்லாம் கிடைக்கும்’னு ஷங்கர் சொன்னார். இன்னைக்கும் அது எனக்கு வேதவாக்கு.
கமலஹாசன் எப்பவும் சொல்வார், எந்த விஷயத்தையும் முயற்சி செய்து பார்க்காமலேயே முடியாதுன்னு சொல்லக் கூடாது. முயற்சி செய்து பார்க்கலாம், பிறகு முடியலன்னா விட்டுரலாம்ணு. உண்மைக்கு ஞாபக சக்தி தேவையில்லை. பொய் சொன்னாத்தான் அதை சரியா ஞாபகம் வைத்திருக்கணும். பிஆர்ஓ-வோட வேலை பிரஸ் ஷோ போடறதும், அறிக்கை வெளியிடறதும் மட்டுமில்லை. பின் விளைவுகளைப் பற்றி யோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதும்தான்.
அடுத்த கட்ட திட்டம்?
ஏற்கெனவே என்னுடைய காரை நான் மொபைல் ஆபிஸாகத்தான் பயன்படுத்துகிறேன். அடுத்த கட்டமாக ஆர்ட்டிஸ்டோட இண்டர்வியூ வேணும்னு சொல்லும்போது வெப்கேம் மூலமாகவே அதை ஏற்பாடு செய்ய இருக்கிறேன். ஸ்டில்ஸ் கேட்கும் பத்திரிகை நண்பர்களுக்கென்று ஒரு இணைய தளம். இதில் ஒவ்வொருவருக்கும் தனியாக ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து விடுவேன். இதனால் நான் பதிவேற்றம் செய்யும் அத்தனை படங்களையும் அவர்கள் உடனடியாக இறக்கம் செய்து கொள்ளலாம். இதையும் விரைவில் தொடங்க இருக்கிறேன்.”
ஏறக்குறைய 22 வருடங்களில் 270 படங்களுக்கு மேல் வேலை பார்த்திருக்கும் நிகிலுக்கு ஒரு பத்திரிகை ‘மக்கள் தொடர்பு நாயகன்’ என்று பட்டம் கொடுத்துள்ளது.
அக்டோபர், 2014.