சிறப்புக்கட்டுரைகள்

உடைக்க முடியாதது ஒன்றுண்டு

குமரகுருபரன்

நிறைய எழுதலாம் மாஞ்சி என்கிற மலையக மனிதனைப் பற்றி. கேதன் மேத்தா என்னும் நேர்த்தியான ஒரு படைப்பாளியின் படைப்பு அது.

எனினும்,மிகுந்த குற்ற உணர்ச்சியுடனே இதை எழுத ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

எண்ணிப் பதினைந்து நொடிகளில் அது வெறும் சினிமா அல்ல என்பதை உணர முடிந்தது.அது முடிந்த போது அது வெறும் சினிமா ஆக அணுக முடியாதது என்பதும் புரிந்தது.

உச்சகட்ட தொழில்நுட்ப சினிமாவின் காலத்தில்,ஒரு வரி கூட அதன் தொழில் நுட்ப அபாரங்களை எழுத மனம் வராத தருணம் அது.

சத்தமற்ற சுய விசுவாசம் என்ன சாதிக்கும் என்பதை இரைச்சலினூடே அறிந்த தருணம் மாஞ்சியைத் தரிசித்த தருணம்.

என்னுடைய தலைமுறை என்று பின் வந்த ஒரு தலைமுறைக்கு சொல்லிக் கொள்ள வேண்டுமெனில், நான் தொண்ணூறுகளில் யோசிக்க ஆரம்பித்தவன் என சொல்லிக் கொள்ளலாம். அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இழந்தவன்,எதிர்க் குரல்களின்பால் அதனாலேயே ஈர்க்கப்பட்டவன். சே, பிரபாகரன், சுபாஷ் சந்திர போஸ், ஜெயகாந்தன், ஆத்மாநாம், பாப் மார்லே இப்படி ஒரு ஈர்ப்பு.

மாஞ்சியும் எதிர்க் குரலே. எனினும், அது அறுபதுகளின் தலைமுறைக் குரல். முன்னெடுக்க யாரையும் முன் வைத்திராத, உதாரண புருஷர்களின் அருகாமை அற்ற, தொழில் நுட்பம் நிலக்கரி மாதிரி மட்கிக் கிடந்த, தொடர்பு எல்லைக்கு வெளியே எட்டிக் கூடப் பார்க்காத சீரழிவின் அடிவேரைக் கிள்ளியெறிய முயன்ற தனிக் குரல். யாரையும் துணைக்கு நாடாத குரல். யார் மீதும் பொறுப்பைச் சுமத்தாத குரல். மிக முக்கியமாக, நூறு முறை சொல்லி அலுக்காது, நூற்றியோராவது முறையும் நம்பிக்கையோடு மறுபடியும் ஒலிக்கிற குரல்.

ஆம், அப்படி ஒரு தலைமுறை இருந்தது. அது நமது பாட்டனார்களின் காலம்.

தசரத் பீகாரின் பாட்டன்.

தி மௌன்டைன் மேன். மாஞ்சி (Manjhi & The Mountain Man)

தசரத் மாஞ்சி செய்தது நாம் நினைத்து பார்க்க முடியாத கனவு. சுய நம்பிக்கை. நம்பிக்கை இழக்காமல் இருத்தலின் உச்சம். உடைக்க முடியாதது. மேலும் மேலும் மோதிப் பார்த்த திராணி. எழுபத்து மூன்று வயதில் தசரத் இறக்கும் முன், அவர் 360 அடி நீளத்திற்கு மலையை அகழ்ந்திருந்தார், சில இடங்களில் அவை இருபத்தைந்து அடி ஆழம், முப்பது அடி அகலம்.

அது ஒரு பாதை. ஆம், ஒரு பாதை.

ஆனால், அதற்கு முன் அது ஒரு மலை. அம்மலையடிவார கிராமத்திற்கு அதற்கு முன் வரைக்கும் சாவு எட்டிப் பார்க்க சில நொடிகள் போதும். சாவிலிருந்து ஒரு உயிரைக் காப்பாற்ற நாற்பது கிலோமீட்டர்கள், அறுபதுகளில். அம்மலையைச் சுற்றும் முன் ஆண்டவனே விளக்கேற்றி விடுவான்.

தசரத் மாஞ்சி ரஜினி அல்ல,அமிதாப் அல்ல, அஜித், விஜய், சல்மான், அல்ல. அரசியல்வாதியும் அல்ல.

தோழரும் அல்ல.

அவர் ஒரு சாதாரண மனிதன். அவர் பிறப்பு தலித் என்ற சுமையை அவர் மீது ஏற்றியிருந்தது. எனினும், ஜாதியற்றே அப்படம் ஆரம்பிக்கிறது. அவர் போராடுவது பீகாரின் ஒரு மலையிடம்.

“ஏங்கிட்டயா வச்சுக்கிற, நல்லா கேட்டுக்கோ. நான் விடறதா இல்ல உன்ன...” என்கிற உரையாடல்களில் ஆரம்பிக்கிறது தசரத்தின் உடைப்பு.

நமக்கு அவர் பைத்தியமோ எனத் தோணுகிறது. தசரத்தின் அப்பாவும் அதையே சொல்கிறார். அவ்வூர் மக்கள் அதை வழிமொழிகிறார்கள்.

அவர் உண்மையில் பைத்தியம்தான்.

நவாஸூதின் சித்திக் இந்திய சினிமாவின் வரம் பெற்ற தற்கால நடிப்புப் பொக்கிஷங்களில் ஒருவர். ராதிகா ஆப்தே மாதிரி என்றால் புரியும். அவரும் இருக்கிறார் மாஞ்சியில். சித்திக் தான் பைத்தியம்.

அவ்வளவு பெரிய மலை. லாங் ஷாட்டில் ஒரே ஒரு மனிதன். இப்படித் தான் ஆரம்பிக்கிறது மாஞ்சி.

தசரத் மாஞ்சி என்கிற protagonist எதிர்கொண்டிருக்கும் அந்த மலைக்குப் பின்னால் நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். அவரது பிறப்பு, அவரது ஜாதி குறித்த ஆண்ட பரம்பரைக் கட்டுப்பாடுகள், அவரது குடிகாரத் தந்தை, அவரது மனைவி பிறர் ஒருவருக்கு மனைவி ஆகி விடக்கூடிய சந்தர்ப்பம், அவரது மனைவியுமே கூட, தீண்டாமை கனலும் செங்கல் சூளைக்கு  மனித உயிரை பலி அளிக்கும்  உயர் ஜாதி இந்துக்கள், மனைவி இழந்த நண்பர்கள், துப்பாக்கி ஏந்திய போராளியாக மாறும் அவரது நண்பர், மற்றும் நண்பர்கள், இந்திராகாந்தி, காங்கிரஸ்காரர்கள், ஏப்பமிடும் அதிகாரிகள், இயற்கை, இப்படி நீளும் மாஞ்சியில் கேதன் மேத்தா செய்திருப்பது கலைக்கும் வணிகத்திற்கும் இடையேயான மலையை உடைத்திருப்பதுதான்.

அதன் சில காட்சிகள், குறிப்பாக காதல் காட்சிகள் பாரதிராஜாவை ஞாபகப்படுத்துகின்றன. வேதம் புதிது பாரதிராஜா எடுத்த காதல்காவியம் அல்லவே. பல காட்சிகள் தண்ணீர் தண்ணீர் படத்தில் ஒரு கதாநாயகி தனி ஒருவள் ஆக எதிர்கொள்ளும் சூழல்களை ஞாபகப்படுத்துகின்றன. பாலசந்தர் அதானே.

நீண்ட காட்சிகள் பா.ரஞ்சித் மெட்ராஸ் படத்தில் மேற்கொண்ட பரிசோதனை உத்திகளை ஞாபகப்படுத்துகின்றன. மகேந்திரன் அவரது எல்லாப் படங்களிலும் அதைத்தானே செய்தார்?

நமது சினிமாவில் கூட, நாம் இன்னமும் போன தலைமுறையையே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. போனதும் வருவதும் அறியா மானுடன் மாஞ்சி. 

நமது தலைமுறை சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தை ஓநாயின் ஓலம் என்பதாக வெளிக் கொணர்ந்திருப்பதில் கேதன் மேத்தா உலக சினிமாவைத் தாண்டியிருக்கிறார் மாஞ்சியின் மூலம்.

கோனார் நோட்ஸ் மாதிரி எழுதி விளக்குவதற்கு அல்ல,மாஞ்சி. நீங்கள் போய்ப் பாருங்கள்.

உண்மையில் ஒரு தற்கொலை செய்து கொள்வதற்கான எண்ணம் உங்களிடம் இருந்தால், வெளியே வந்தவுடன் ஒரு சிகரெட் பற்ற வைப்பீர்கள்.

ஏனெனில் நீங்கள் பார்த்திருப்பது மலையை உடைத்த ஒரு மனிதனின் கதையை. ஆயிரம் ஐரோப்பிய தன்னம்பிக்கை நூல்கள் தர முடியாத கனல் அது.

உங்கள் சிகரட் நுனியில், இருளில் ஒளிரும் அந்த கனல்தான் மாஞ்சி. ஒரு துளி அக்கினி.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை உங்களிடத்தில் வைத்தேன்.

சுயநம்பிக்கை என்பது உயிரல்லவோ?

செப்டெம்பர், 2015.