சிறப்புக்கட்டுரைகள்

உடல் என்னும் மருத்துவர்

அக்கு ஹீலிங்

ஹீலர் உமர் பாரூக்

நாம் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருமே டெங்கு போன்ற பல சீசன் தொந்தரவுகளை கடந்து வந்தவர்கள் தான்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கொசுக்களால் பரப்பப் படுகிறது என்பது இப்போதுதான்

சொல்லப்படும் விஷயம் அல்ல. 1790 களிலேயே கொசுக்களால் பலவிதமான தொந்தரவுகள் உருவாகின்றன என்று அறிவிக்கப்பட்டது. கொசு ஒழிப்பை அப்போதே துவங்கிவிட்டன இருநூறுக்கும் அதிகமான உலக நாடுகள்.

ஆனால் இவற்றை ஒழிக்க  நாம் பயன்படுத்தும் விஷங்களைச் செரித்து, உயிர் வாழும் அளவுக்கு கொசுக்களின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து விட்டது.

சரி, அப்படியென்றால்  என்னதான் தீர்வு?

நாம் பரபரப்பையும், பயத்தையும் கைவிட்டு விட்டு அறிவியல் ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் சிந்தித்து முடிவெடுப்பதே சரியானது. நிரந்தரத் தீர்வு குறித்துப்  பேசும் முன் இன்றைய பாரம்பரிய மருத்துவ ஆய்வுகளுக்கும், நவீன ஆய்வுகளுக்குமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலுக்கு கால்சியம் என்ற சத்து தேவையானால், கால்சியம் உள்ள உணவுகளையோ அல்லது மருந்துகளையோ பரிந்துரைப்பது நவீன மருத்துவம். இதற்காகப் பரிந்துரைக்கப்படும் பொருட்களை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்ய முடியும். அதனைப் பகுத்துப் பார்த்து உட்பொருளாக கால்சியம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். இது முதல் நிலை ஆய்வு. அடுத்த கட்ட ஆய்வில், விலங்குகளுக்கு மருந்தினை கொடுத்து எட்டு ஆண்டுகளும், பிறகு மனிதர்களுக்கு அதே மருந்தினைக் கொடுத்து எட்டு ஆண்டுகளும் பயன்பாட்டு ஆய்வுகள் நடக்கும். ஆக, ஒரு மருந்தினை நாம் பயன்படுத்தும் முன்பு இந்த இரண்டுவிதமான ஆய்வுகளையும் செய்ய வேண்டும். இதுதான் நவீன மருத்துவத்தின் ஆய்வு நெறிமுறை.

பாரம்பரிய மருத்துவத்தில் பச்சிளம் குழந்தைகளின் அஜீரணக் கோளாறுக்காக வசம்பு எனும் பொருளை பயன்படுத்துவார்கள். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம். இந்த வசம்பினை எடுத்து, ஆய்வக பரிசோதனைக்க்கு உட்படுத்தினால் அதிலுள்ள விஷத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். நாம் காலம் காலமாக பயன்படுத்தும் வசம்பு ஓர் விஷப் பொருள்தான். அதனை பல நவீன ஆய்வு நிறுவனங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. ஆனால், நடைமுறையில் வசம்பை குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் போது அதன் விஷத்தன்மை குழந்தைகளை பாதிப்பதில்லை. அப்படியானால், ஆய்வுக்கூட முடிவு தவறா... ?

இங்கேதான் மிக முக்கியமான முரண்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வசம்பு எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது? என்பது மிக முக்கியமானது. வசம்பு அதன் ஈரத்தன்மை காயும் வரை உலர்த்தப்படுகிறது. உலர்ந்த வசம்பு நெருப்பினால் சுடப்படுகிறது. சுடப்பட்ட வசம்பிலிருந்து பெறப்படும் கரிய வசம்புத் தூள் நீரில் கலக்கப்பட்டு, பயன்படுத்தப் படுகிறது. இப்படி பயன்படுத்தப்படும் நிலையிலுள்ள பொருளை ஆய்வு செய்யாமல், மூலக்கூறினை ஆய்வு செய்தால் இப்படித்தான் அச்சத்தை பரப்ப முடியும்.

இதே போல் தான் இன்று நடக்கும் நிலவேம்பு கஷாயத்திற்கு எதிரான பிரச்சாரங்களும் அமைந்துள்ளன. ஒரு பாரம்பரிய மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் கஷாயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது சரியானது. அதே நேரம், நவீன ஆய்வுக்கூட நடைமுறையில் நிரூபிக்க வேண்டும் என்ற பார்வை தவறானது.

நம் நவீன ஆய்வுக்கூடங்கள் கீரைகளையும், புல்லையும் பரிசோதித்துவிட்டு, அதில் கால்சியம் இல்லை, எனவே அதனைப் பயன்படுத்தாதீர்கள் என்று அலறுவது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தமானதுதான் சித்த மருந்துவ மருந்துகளை நவீன ஆய்வுக் கூடங்களில் பரிசோதிப்பது.

அப்படியானால், எப்படித்தான் இதனை நிரூபண அறிவியலாக மாற்றுவது?

நவீன அறிவியலின் படி இரண்டாம் நிலைப் பரிசோதனையான பயன்பாட்டுப் பரிசோதனை மட்டும்தான் மரபுவழி மருத்துவங்களின் மீது செய்ய முடியும். அதைத்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பல தேசிய ஆய்வு மையங்களும், பல்கலைக்கழகங்களும் பயன்பாட்டு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அப்படித்தான் நிலவேம்பு கஷாயத்திற்கான ஆய்வுகளும் நடந்தன.

எல்லா மருத்துவங்களையும் மதிப்பிடுவதற்கான பொது அளவு கோல் என்பது ஆய்வுக்கூடங்கள் அல்ல. மாறாக, பயன்பாடே. எனவே பயன்பாட்டு ஆய்வுகள் மட்டுமே மரபு வழி மருத்துவங்களுக்குப் பொருந்தும்.

சரி, டெங்கு மற்றும் பிற கிருமிகளால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?

எல்லா உடல் தொந்தரவுகளுக்கும் உடனடியாக மருந்துகளைத் தயாரிக்கும் ஒருவர் இருக்கிறார். எந்த விதமான பாதிப்பாக இருந்தாலும் அவர் அதிவேகத்தில் மருந்துகளைத் தயாரித்து நமக்கு கொடுத்து விடுவார். அவர் தயாரித்த மருந்துகளைப் பார்த்துத்தான் நம் நவீன விஞ்ஞானிகள் செயற்கையான பல மருந்துகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.

அவர் யார் தெரிகிறதா? அவர்தான் நம் உடல் என்னும் மருத்துவர். எதிர்ப்பு சக்தி எனும் மருத்துவர்.

கிருமியால் பரவுவதாகச் சொல்லப்படும் எல்லாவிதமான நோய்களும் எல்லா மனிதர்களையும் பாதிப்பதில்லை. எதிர்ப்பு சக்தி வலிமையாகவும், முழு ஆரோக்கியத்தோடும் இருக்கிற நபர்களை எந்த வைரஸ் நோயும் தாக்குவதில்லை என்பது அறிவியல் உண்மை. அது போலவே டெங்கு என்று சொல்லப்படும் காய்ச்சலும் எல்லா நபர்களுக்கும் வருவதில்லை. எனவே முதலில் டெங்கு பரவி மனித குலத்தை அழித்துவிடும் என்ற பயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் சிக்க வேண்டிய அவசியமில்லை. எப்படி எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவது..?

நம்முடைய வாழ்க்கை முறை ஒழுங்குதான் வலுவான எதிர்ப்பு சக்தியை வழங்கும். வாழ்க்கை முறை ஒழுங்கு என்பது பசிக்கும் போது சாப்பிடுவது, அளவோடு சாப்பிடுவது, நிதானமாகச் சாப்பிடுவது. அதே போல, முன்னிரவில் தூங்கச் செல்வது, முழுமையான தூக்கத்தை உடலிற்கு கொடுப்பது. ஆரோக்கிய வாழ்வியலின் அடிப்படையே இந்த இரண்டுதான்.

- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக், முதல்வர், கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்

நவம்பர், 2017.