சிறப்புக்கட்டுரைகள்

"உடலில் உயிர் இருக்கிற வரை ஓடிக் கொண்டிருப்பேன்!''

ஆளுமை

முத்துமாறன்

சமீபகாலமாக எங்கு மாரத்தான் நடந்தாலும் அதில் தவறாது  ஓடுபவர்களில் ஒருவராக மா.சுப்ரமணியம் இருக்கிறார். சென்னையின் முன்னாள் மேயரும்  சைதாப்பேட்டையின் இப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியத்துக்கு 57 வயது. இந்த வயதில் 50க்கும் மேற்பட்ட மாரத்தான்களில் கலந்துகொண்டு ஓடியிருக்கிறார். இதற்காக சாதனை புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 மாரத்தான்கள் என்ற இலக்கை வைத்திருக்கிறார். தொப்பையும் ரத்த அழுத்தமும் என்று திரியும் அரசியல்வாதிகள் மத்தியில்  ‘சூப்பர் ஃபிட்’ ஆக இருக்கும் மா.சு.வை சந்தித்தோம்.

“ 2004-ல் திருச்சி அருகே ஒரு விபத்து. அதில் என் கால் முட்டி அடிபட்டு நொறுங்கிவிட்டது. என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் இனி நடப்பதே மிகவும் சிரமமான காரியம் என்றார்கள். நான் மனம் தளரவில்லை. யோகா செய்யத்தொடங்கி, தொடர்ந்த பயிற்சிக்குப் பின்னால், என்னால் நடக்கவே முடியாது என்று சொன்ன மருத்துவர் முன்னால் பத்மாசனத்தில் அமர்ந்து காட்டினேன். அதிலிருந்து உடலைப் பேணுவதில் கவனம் செலுத்தினேன். 2014-ல் மாரத்தான் ஓட்டப் பயிற்சிகள் மேற்கொண்டு, மாரத்தான் ஓட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.  நான் எப்போதும் 21 கிமீ ஓடும் அரை மாரத்தான் ஓட்டத்தில்தான் பங்கேற்பேன். இந்தியாவில் பல நகரங்களில் கலந்துகொண்டு ஓடியிருக்கிறேன். மும்பை,டெல்லி, புனே, சிம்லா, ரிஷிகேஷ், கொல்கத்தா, ஹைதராபாத்,கோவை, திருச்சி, திருவனந்தபுரம், தமிழ்நாட்டில் மேலும் பல நகரங்களில் நடக்கும் மாரத்தான்களில் ஓடுகிறேன். வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா, இத்தாலி, கத்தார், ஜெர்மனி போன்ற இடங்களில் ஓடி உள்ளேன். சமீபத்தில் கார்கிலில் நடந்த மாரத்தானில் ஓடினேன்.  ஸ்ரீநகரிலிருந்து 240 கிமீ மேலே செல்லவேண்டும். ட்ராஸ் வழியாக கார்கில் பயணம் செய்தோம். மக்கள் வசிக்கும் அதிக குளிரான இடங்களில் ட்ராஸுக்கு உலகிலேயே இரண்டாவது இடம் என்று சொல்கிறார்கள். வழியில் பாகிஸ்தானுடன் கடும்போர் நடந்த புலிக்குன்றைப்பார்த்துவிட்டு மேலே கார்கில் சென்றடைந்தோம். எங்களுடன் காவல்துறை டிஐஜி ஒருவரும் ஓடினார். கடினமான மலைப்பாதையில்     2 மணி நேரம் 45 நிமிடத்தில் 21 கிமீ ஓடி முடித்தேன். காஷ்மீர் சட்டமன்ற சபாநாயகரும் நிகழ்வில் கலந்துகொண்டு என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். நிகழ்வு முடிந்ததும் இப்படி தமிழகத்து அரசியல்வாதி ஒருவர் இங்கே வந்து கலந்துகொண்டுள்ளார் என்று பாராட்டினார்கள்” என்கிற மா.சு., இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்,  ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றதுடன் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளதாக நம்மிடம் கூறுகிறார்.

“மலைகளில் ஓட சரியான பயிற்சி எடுக்கவேண்டும். அதற்காக சென்னையில் பரங்கிமலையில் ஓடுவோம். அதற்காக என்னுடன் ஓட கிண்டி ரன்னர்ஸ் கிளப் என்கிற மாரத்தான் நண்பர்கள் குழு இருக்கிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் பத்து கிமீ தூரம் ஓடிப் பயிற்சி எடுப்போம். தினமும் காலையில் ஐந்துமணிக்கே எழுந்து ஓட ஆரம்பிப்பேன். எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. அது இதனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எந்த வித உணவுக் கட்டுப்பாடும் எனக்கு இல்லை. அசைவம் தினமும் எடுத்துக்கொள்கிறேன். ஓடுவதற்கு முன்பாக எனக்குத் தொப்பை இருந்தது. அது தானாகவே கரைந்துவிட்டது,” என்கிற மா.சு. ஆண்டுக்கு இரண்டு வெளிநாட்டு மாரத்தான்கள் ஓடுவது இவரது வழக்கம்.

“ எனக்குக் கொஞ்சதூரம் ஓடின உடனே கடுமையா வியர்க்க ஆரம்பிக்கும். சீதள உடம்பு என்னுது. மா.சு. ஓடிவந்த பாதையை எளிதாக கண்டுபிடிச்சிரலாம். தண்ணி லாரி மாதிரி வியர்வை சொட்டியிருக்கும்னு நண்பர்கள் கிண்டலாச் சொல்வாங்க. மாரத்தான் ஓடத் தொடர்பயிற்சி வேணும். ஓட ஓடத்தான் கால்கள் வலுவாகும். ஓடும்போது முதலில் எங்காவது பிடிச்சுக்கும், வலிக்க ஆரம்பிக்கும். அய்யோ வலிக்குதுன்னு நின்னுட்டா ஓட முடியாது. தொடர்ந்து ஓடுனா அது சரியாப்போயிடும். வலியைப் பார்க்கக்கூடாது. இதில் நிறைய விஷயங்கள் இருக்குது. விடாமல் ஓடினால்தான் இதைச் செய்யமுடியும். எதையும் சாதிக்கறதுக்காக நான் ஓடலை. சர்க்கரை வியாதிக்காரன் ஓடக்கூடாதும்பாங்க. ஓடித்தான் பார்ப்பமேன்னு ஓடினேன். அவ்வளவுதான்,” என்கிறார்.

  “ அரை மாரத்தானை இரண்டு மணி நேரம் ஒன்பது நிமிடத்தில் ஓடிக்கடந்தது என்னோட சிறந்த டைமிங். இந்த ஆண்டு இரண்டு மணிநேரத்துக்குள் ஓடி முடிக்கணும்னு திட்டமிட்டிருக்கிறேன். ஏதாவது சிறப்பு நோக்கத்துக்காகத்தான் ஒவ்வொரு மாரத்தானும் நடத்தறாங்க. நான் ஓடியிருக்கும் 54 மாரத்தான்களும் அப்படித்தான். ஒவ்வொரு மாரத்தானையும் நான் ஓடுறது இளைஞர்களிடம் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டும்தான் என்று என் சமூக வலைதளக் கணக்குகளில் நான் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கு ஓடினாலும் உங்களைப் பார்த்துத்தான் நாங்க ஓடுறோம் என்று பத்துபேராவது வந்து சொல்லுவாங்க. பெங்களூர், டெல்லி போன்ற நகரங்களில் ஓடும்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் பலர் என்னிடம் வந்து உங்களைப் பார்த்துத்தான் நாங்களும் ஓடணும்னு தோன்றியது என்று சொல்லி இருக்கிறார்கள். அரசியல்வாதின்னாலே ஒழுக்கக்குறைவாக இருப்பாங்கன்னும் ஒரு கருத்து இருக்கறப்ப அது இல்லைன்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இதை நான் பயன்படுத்திக்கிறேன்.” என்கிற மா.சு. 

“ என்னுடைய உடலில் உயிர் இருக்கிற வரை ஓடிக்கொண்டிருப்பேன்,” என்று முடிக்கிறார்.

ஆகஸ்ட், 2017.