இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952-ல் நடந்தபோது ஆன செலவு 10.45 கோடிதான். இப்போது 16வது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கு ஆகப்போகும் செலவு 3500 கோடி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அல்லாமல் காவல்துறை பாதுகாப்பு, அரசு எந்திர வேலைகள் என்று மொத்தமாக 8000 கோடி வரும் என்பது எதிர்பார்ப்பு!
தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடிய தொகையின் வரம்பையும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அரசு தாராளமாக உயர்த்தி உள்ளது. பெரிய தொகுதிகளில் 70 லட்ச ரூபாய். சிறிய தொகுதிகளில் 54 லட்சரூபாய்.
ஆனால் வேட்பாளர்கள் பொதுவாக இந்த தொகையைவிட அதிகம் செலவழிக்கிறார்கள் என்பது உண்மை.
சி.எம்.எஸ். என்ற ஊடக ஆய்வு நிறுவனம் இந்த தேர்தலின்போது 30,000 கோடிரூபாய் செலவாகும். இதில் அரசு, தேர்தல் ஆணையம், கட்சிகள், வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகையும் அடங்கும் என்கிறது. இதில் பாதி கள்ளப்பணமாகத் தான் இருக்கும். (அமெரிக்கத் தேர்தலுக்கு ஆகும் செலவு 42,000 கோடியாம்) ஆக ஒரு எம்பியைத் தேர்வு செய்ய சராசரியாக 60 கோடி செலவாகும் என்று அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. கோடீஸ்வரர்கள், காண்டிராக்டர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோர் செலவழிக்கும் தொகை இதுவாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக திமுக இருகட்சிகளும் பெரிய அளவில் செலவழிக்க இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் ஒவ்வொரு பெரிய கட்சிகளின் வேட்பாளரும் எவ்வளவு செலவு செய்கிறார்கள்? எப்படிச் செலவு செய்கிறார்கள்? எவ்வளவு ரூபாய் ஆகும்? ஒரு அரசியல் அனுபவஸ்தரிடம் கேட்டோம். அவர் சின்னதாய் எல்லாவற்றையும் மிகக்குறைவாய் வைத்து ஒரு கணக்குப் போட்டார். அதில் வந்த தொகை 23 கோடியே 24 லட்சரூபாய். இதை 24 கோடி என்று வைத்துக்கொள்வோம். (ஆனால் 30 கோடி வரை ஆகுமாம்)இதுமாதிரிவலிமையான இரண்டு வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் நின்றால் 48கோடி பணம் செலவுசெய்யப்படுகிறது. கண்ணுக்குத் தெரிந்து 40 தொகுதிகளிலும் 1920 கோடி. மீதி சின்னச்சின்ன கட்சிகளின் வேட்பாளர்கள் செலவையும் சேர்த்து சுமார் 2000 கோடி ஆவதாக வைத்துக் கொள்ளலாம்! அந்த செலவுக்கணக்கு:
தினப்படி பிரச்சாரம் -(40 நாட்கள்): 15 இடங்களில் ஒரு இடத்துக்கு ஆகும் செலவு 3000 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு மொத்த செலவு 4,50,000. 40 நாளுக்கும் சேர்த்து- 18 லட்சம் வாகனச் செலவு (40 நாட்கள்)- 200 வாகனங்கள், தலா 2000 ரூபாய் வீதம் தினமும் 2 லட்சரூபாய் ஆகிறது. 40 நாட்களுக்கு 16 லட்சம ரூபாய்!
கொடி, பாட்ஜ், நோட்டீஸ், போஸ்டர் இத்யாதி: 500 இடங்களில் ஒரு இடத்துக்கு 500 ரூபாய் வீதம் தினமும் 25,000 ரூபாய். 40 நாளைக்கு 1 லட்சம் சரக்கு, நொறுக்கு: தினமும் 500 இடங்களில் 3000 ரூபாய் வீதம் தினமும் 1.5 லட்சரூபாய், 40 நாட்களுக்கு ஆறு லட்சம்!
பொதுக்கூட்டங்கள்: தினமும் ஆறுகூட்டம், ஒரு கூட்டத்துக்கு மேடை, பேச்சாளர், ஆட்டம், ஒலிபெருக்கி இத்யாதி செலவுகள் 1 லட்சம். மொத்தம் 18 லட்ச ரூபாய்!
பூத் கமிட்டி: இது மூன்று நாட்களுக்கு மட்டுமே. ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 600 வாக்குப் பதிவு மையங்கள் என்று வைத்துக்கொண்டு சுமாராக ஒரு மையத்துக்கு 100 பேர் என்று போட்டு ஒவ்வொரு மையத்துக்கும் தினமும் 1000 ரூபாய் என்ற வீதம் செலவு செய்தால் வருவது 18, லட்சருபாய்!
ஓட்டுக்குத் துட்டு: பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது பணம் கொடுக்கவேண்டி வரும். அதுதான் வழக்கமாக உருவாகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த கணக்குப் படி ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள் எனப்பார்த்தால் 15 கோடி ரூபாய்!
கள்ள ஓட்டு கசமுசா: இப்பவும் இப்படி சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவும் வேலைகளும் நடக்கிறது. ஒரு பூத்துக்கு 40 ஓட்டு கள்ள ஓட்டு என்று சராசரியாக வைத்துக் கொண்டால் 1200 பூத்துகளுக்குமாக செலவு தலா 1000 ரூபாய் வீதம் 48 லட்சம்!
ஆக மொத்தம் 23 கோடியே 24 லட்சம்!
குறிப்பு: இவ்வளவு செலவு செய்தாலும் கடைசியில் தேர்தல் ஆணையத்துக்குக் கணக்குக் காட்டும்போது உச்சகட்ட செலவு வரம்பான 70 லட்சத்தில் பாதியைத் தான் கணக்கு காட்டுவார்கள். 2010-ல்தான் செலவைக் கண்காணிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள்ளும் அரசியல் கட்சிகள் 75 நாட்களுக்குள்ளும் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும். செலவுகள் வரம்புக்கு மீறி இருந்தால் மூன்றாண்டுக்கு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யமுடியும். ஆனால் இதைப் பற்றி கட்சிகள் கவலைப்படுவதே இல்லை. ஓராண்டு கழித்துத்தான் பலகட்சிகள் செலவுக் கணக்கையே தாக்கல் செய்கின்றன. வெளிநாடு அல்லது உள்நாட்டில் பதிவான வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற இயலாது. ஆனால் காங்கிரஸும் பாஜகவும் இப்படி நிதி பெற்றே வந்துள்ளன என்கிறது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு(ADR).
கட்சிகள் இப்படி விதிமுறைகளை மீறுவதற்குக் காரணம் இது உச்சநீதிமன்றத்தின் ஆணை என்ற அளவில் நீடிப்பதுதான். இன்னும் சட்டம் ஆகவில்லை. கட்சிகள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி சட்டம் வராமல் பார்த்துக் கொள்கின்றன!
ஏப்ரல், 2014.