சிறப்புக்கட்டுரைகள்

இவ்வளவு வலி, வேதனை, தோல்விகளைப் பார்த்திராவிட்டால் வெற்றியை நான் சுவைத்திருக்கவே மாட்டேன்!

தமிழ் ஆலன்சோ

நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாடு தொழிலதிபர்களால் நிறைந்திருந்தது. அந்த நிலை மாறி இன்று நாம் வேலைக்கு ஆட்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். தொழில்முனைவோர்கள் நிறைந்த அந்த பழைய பொற்காலம் திரும்பி வரும்” என்கிறார் 41 வயதாகும் சுரேந்திரன் ஜெயசேகர் என்கிற சென்னையைச்

சேர்ந்த தொழிலதிபர். ஏழைக்குடும்பத்தில் பிறந்து பள்ளியில் பணம் கட்ட முடியாமல் தவித்து, விரும்பிய படிப்பை படிக்க முடியாமல், சின்னவயதிலேயே வேலைக்குப் போன இளைஞர் இன்று இந்தியாவுக்கே தன்னம்பிக்கையையும் மன உறுதியை விதைத்துக் கொண்டு இருக்கிறார்.

சக்சஸ் கியான்- என்பது அவரது நிறுவனம். வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர்களை அழைத்துவந்து சுயமுன்னேற்ற வகுப்புகளை நடத்துகிறது இந்நிறுவனம். இவரது வெற்றிக்கதை மிகவும் நெகிழ்வானது. அவரே சொல்லக்கேட்போம்:

“அருணா பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திய குடும்பத்தில் பிறந்தவர் என் அப்பா. சின்ன வயதில் மிக வசதியாக வாழ்ந்தவர். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு 25 வயதாக இருந்தபோது எங்கள் தாத்தா திடீரென இறந்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் பாட்டியும் இறந்துவிட்டார். இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களையும் பணத்தையும் கரைத்துவிட்டனர். முப்பது வயதுக்குப் பின் சொந்தத்தில் பெண் தேடி என் தாயை மணந்துகொண்டார். அதன் பின்னர் பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்து தோல்வியே கண்டார் என் தந்தை. சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தார். கடைசியாக ஒரு பெரிய பங்களா மட்டும் மிச்சம் இருந்தது. அதில்தான் நான் பிறந்தேன். எனக்கொரு தம்பியும் உண்டு. இந்த பங்களாவும் பின்னர் போய்விட்டது. சிறிய வாடகை வீட்டில் குடியேறினோம். அப்பா குடிக்கு அடிமை ஆனார். தினந்தோறும் குடித்துவிட்டு வரும் அப்பா, என் தாயுடன் சண்டை போடுவதே என் இளவயது நினைவாக மிச்சம் இருக்கிறது.

என் அப்பா குடிக்கு அடிமையான நிலையில் நானும் என் தம்பியும் ஒரு முடிவுக்கு வந்தோம். அது எங்கள் அப்பாவைப் போல் நாங்கள் என்றைக்கும் இருக்கமாட்டோம் என்பதே. அதுவொரு சொல்லப்படாத புரிந்துகொள்ளல் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த உலகத்துக்கும் எங்கள் உறவினர்களுக்கும் நாங்கள் சாதனையாளர்கள் என்று உரக்க அறிவிக்கவேண்டும் என்ற வெறி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக எங்கள் இருவரையும் எங்கள் பெற்றோர் சிந்தி மாடல் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். நல்ல பள்ளி அது. பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாமல் பல நாட்கள் வெளியே நின்ற அவலமும் நடந்தது. கட்டணம் செலுத்த என் பெற்றோருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதற்கிடையில் எனக்கு பதினோரு வயதான போது அப்பாவுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கை ஆனார். அம்மா டியூஷன் எடுத்து சம்பாதித்தார். அதைத்தவிர வேறு வருமானம் இல்லை. நான் நன்றாகப் படிக்ககூடியவன் என்பதால் பள்ளியில் எனக்கு உதவித்தொகை கிடைத்தது. அதை வைத்துத்தான் படித்தேன். இதற்காக என் பள்ளிக்கு என்றென்றும் கடன் பட்டிருப்பேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஐஐடியில் பிடெக் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் குடும்பத்தின் நிலையைப் பார்த்தவுடன் வேலைக்குப் போகவேண்டும் என்று முடிவெடுத்தேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் யாரிடமும் சொல்லாமல் முருகப்பா பாலிடெக்னிக்கில் விண்ணப்பம் வாங்கி சேர்ந்துவிட்டேன். வீட்டில் வருத்தப்பட்டார்கள், ஆனால் என்ன மூன்று ஆண்டில் படிப்பு முடிந்துவிடும், வேலைக்குப் போய்விடலாம் அல்லவா?

மூன்றாம் ஆண்டு படிக்கும்போது என் அப்பாவுக்கு காலில் தீராத புண் ஏற்பட்டு அது முற்றிவிட்டது.அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். காலை அகற்றவேண்டும் என்று கூறிவிட்டனர். அதற்காக அறுவை சிகிச்சை நடந்து அவர் மலர்ச்சியான முகத்துடன் வெளியே வந்தார். மறுநாள் நான் கல்லூரிக்குப் போனேன். மதியம் கல்லூரிக்கு போன் வந்தது. அப்பாவுக்கு உடல்நிலை கொஞ்சம்  சரியில்லை. வருகிறாயா? என்று ஒரு உறவினர் அழைத்தார். மருத்துவமனை போனேன். தந்தை காலையில் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தார். அவரது உடலைக் கண்டு எனக்கு அழுகை வரவில்லை. பக்கத்து அறையில் என் அம்மா அமர்ந்திருந்தார். துக்கத்தில் கதறிக்கொண்டிருந்தார். நான் நொறுங்கிப்போனேன். அவருக்கு 37 வயதுதான். அது வரை அவர் துயரையே பார்த்திருந்தார். அவரருகே ஒரு சபதம் எடுத்தேன். தாயே உன்னை ராணியாக வாழவைப்பேன்!

அன்றைய தினத்தை என்னால் மறக்க முடியாது. இன்றும் தொழிலில் வெற்றியோ தோல்வியோ, அந்த தினத்தை நினைத்துக்கொள்வேன்.

பத்தொன்பது வயதில் ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு வேலைக்குப் போனேன். எங்கள் கடனோ 24 லட்சங்கள் இருந்தது. அங்கு வாங்கிய ஊதியம் போதவில்லை. பணம் சம்பாதிக்க வேறு வழிகள் தேடினேன். ஸ்கைசெல் கம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கலெக்‌ஷன் ஏஜென்சி தான் நான் முதலில் ஆரம்பித்த தொழில். இரண்டு ஆண்டுகள் இதைசெய்தேன். லாபமும் நஷ்டமும் மாறிமாறி ஏற்பட்டன.ஆனால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். பின்னர் ஒரு நண்பர் மூலமாக நெட்வொர்க் மார்க்ட்டிங் அறிமுகம் ஆனது. அதில் நன்றாக சம்பாதித்தேன். என் முதல் ஒரு  கோடி ரூபாயை இதில்தான் பெற்றேன். ஆனால் இதே துறையில் நான் சம்பாதித்த பணம் அனைத்தும்  இழக்கவும் செய்தேன். ஆனால் எனக்கு வருத்தம் இல்லை. அது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அனுபவம். தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சி வெற்றிக்கு மிக அவசியம் என்று எனக்கு அது சொல்லித்தந்தது. என் தொழில்துறை வளர்ச்சிக்கான அனுபவம் இதில் கிடைத்ததே.

இப்படி இழப்புகளுடன் போராடியபோது எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு இடி காத்திருந்தது. ஆறு ஆண்டுகளாக நான் காதலித்துவந்த பெண்ணுடன் காதல் முறிவு ஏற்பட்டது. என்னால் இந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை. இது நடந்தது ஜனவரி 2006-ல். மிகவும் நொறுங்கிப்போயிருந்த சமயத்தில் ஒரு நண்பர் என்னைப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் பிரையன் ட்ரேசியின் ஒருநாள் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைத்தார். எனக்கு விருப்பமே இல்லை. ஆனாலும் சும்மா போனேன். அந்த தினம் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. அது 2006 மார்ச், 5.  அந்த வகுப்பில் 20-வது வரிசையில் மற்ற பங்கேற்பாளர்களைப் போல உட்கார்ந்து இருந்தேன்.  ஆனால் திடீரென்று அவர் சொன்ன விஷயங்கள் எனக்காகவே சொன்னதுபோல் இருந்தன. நான் நிமிர்ந்து அமர்ந்தேன். அடுத்தகணமே நான் என்ன தவறுகளைச் செய்துகொண்டிருக்கிறேன் என்று புரிந்துபோனது. பிரையன் சொன்ன விஷயங்களைச் செய்தால் என் வாழ்க்கையே மாறும் என்ற முடிவுக்கு வந்தேன். என் வாழ்க்கையை அந்த தினத்துக்கு முந்தைய வாழ்க்கை; பிந்தைய வாழ்க்கை என்று  இரண்டாகப் பிரிக்கலாம். அன்றைய தினம் நான் புதிதாகப் பிறந்தேன்.

வீட்டுக்கு திரும்பியதும் நான் ஒருமுடிவு எடுத்தேன். ப்ரையன் சொன்னதுபோல் என் வாழ்க்கை மாறியதும் அவரைச் சென்னைக்குக் கூட்டிவந்து என் நண்பர்கள், உறவினர்களுக்கு வகுப்பு எடுக்கச் சொல்லவேண்டும். கடகடவென்று ப்ரையன் சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்த ஆரம்பித்தேன். வாழ்க்கை மாறிவிட்டது. வெற்றிகள் குவிந்தன, அடுத்த ஆண்டு ஷைனியை சந்தித்தேன். அவர் என் இனிய மனைவி ஆனார். நான் ஒரு டெலிகாம் நிறுவனம் தொடங்கினேன்.செல்போன்கள்  சீனாவில் இருந்து வாங்கி விற்றோம். நல்ல வெற்றி கிடைத்தது. 2011-ல் பிரையனை அழைத்துவரும் நேரம் நெருங்கிவிட்டது என்று அறிந்தேன். சக்சஸ் க்யான் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதன் முதல் நிகழ்ச்சி

சென்னை ஹயாத் ஹோட்டலில் பிப்ரவரி 2012-ல் நடந்தது. சிறப்புப் பேச்சாளர் பிரையன் டிரேசி என்பதைச் சொல்லவும் வேண்டுமா? என் உறவினர்கள் நண்பர்கள் என்று 400 பேர் அவர் வகுப்பில் கலந்துகொண்டனர். ‘இதுபோல் நிறையபேரைக் கூட்டி வந்து வகுப்பு நடத்தச் செய்யுங்கள். இது மிகவும் உத்வேக மூட்டுவதாக அமைந்திருக்கிறது’ என்று அவர்கள் சொன்னார்கள். இந்தியாவுக்கு இதுபோன்ற கல்விதான் தேவையாக இருக்கிறது என்று எனக்கும் தோன்றியது. எனவே உலகப் புகழ்பெற்ற பயிற்சியாளர்களை அழைத்துவந்து இந்தியா முழுக்க பேசச்செய்வதை சக்சஸ் க்யானின் பணியாக ஆக்கினேன்.

ஆரம்பத்தில் பயிற்சி வகுப்புக்கு கட்டணம் அதிகமாக இருந்தது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து அழைத்து வருபவர்களுக்கு அமெரிக்க டாலரில் அதிகமாக செலவு செய்யவேண்டி இருந்தது. கட்டணம் அதிகமாக இருந்ததால் நிறையபேர் கலந்துகொள்ள தயங்கினார்கள். அதனால் மூன்றாவது ஆண்டு அணுகுமுறையை மாற்றினோம்.கட்டணத்தைக் குறைத்தோம். ஆயிரக்கணக்கானவர்களை அமரவைத்து மிகச்சிறந்த பயிற்சியை அளித்தோம். அவர்களிடம் தொடர்ச்சியான அடுத்த கட்ட வகுப்புகளை - ஆனால் அவற்றுக்கு கட்டணம் அதிகம் - அறிமுகம் செய்தோம். முதல் வகுப்பின் மதிப்பை உணர்ந்தவர்கள் அடுத்த வகுப்புகளில் சேர்வார்க்ள் என்பது திட்டம். இது  சிறப்பாக வேலை செய்தது. நாடு முழுக்க இதையே கடைபிடிக்கிறோம்.”

சுரேந்தர் சக்சஸ் க்யானையும் சேர்த்து ஆறு தொழில் நிறுவனங்கள் நடத்துகிறார். அதில் டெலிகாம் நிறுவனமும் அடங்கும். ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்கிறார். அதில் ஒன்று 5.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக ஏழே மாதங்களில் வளர்ந்துள்ளது. பிரபலங்கள் கலந்துகொள்ளும் பேட்மிண்டன் லீக்கிலும் அவர் முதலீடு செய்துள்ளார். ரியல் எஸ்டேட், டிஜிட்டல் அட்வர்டைசிங் ஆகியவற்றிலும் கால் பதித்துள்ளார்.

இவ்வளவு பிசியாக இருந்தாலும் நேரத்தை குடும்பத்துக்காக செலவிடுவதில் கவனம் காட்டுகிறார். ஆண்டுக்கு சில முறை குடும்பத்துடன் சிறிய விடுமுறைச் சுற்றுலா செல்வது இவர் வழக்கம். சினிமா பார்ப்பதில் இவருக்கு பெரு விருப்பம். வாரத்துக்கு ஆறேழு படமாவது பார்த்துவிடுவாராம். “நேரம் இல்லை என்று சொல்வதே தவறு. நமக்கு விருப்பமான மனிதர்கள் செயல்களுக்காக நேரம் எப்போதும் உள்ளது. அதை நாம் சரியாக ஒழுங்கு படுத்தினால் அது கட்டாயம் கிடைக்கும்” என்கிறார் இவர்.

“வாழ்க்கையில் கீழே விழுவது தோல்வி அல்ல. எழுந்திருக்காமல் இருப்பதுதான் தோல்வி. வெற்றியை தலைக்கும் தோல்வியை இதயத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடாது. நமது வாழ்க்கை நமது தேர்வுகள் மற்றும் முயற்சிகளின் கூட்டாக அமைவது என்கிற வாசகத்தை சில ஆண்டுகள் முன்பு உருவாக்கினேன். இந்த வாசகத்தை நான் நம்புகிறேன். இவ்வளவு வலி, வேதனை, தோல்விகளைப் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வளவு வெற்றிகரமாக இருந்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்” முடிக்கிறார் சுரேந்திரன்.

மார்ச், 2017.