சிறப்புக்கட்டுரைகள்

இளைஞர்கள் மழை

Staff Writer

யோசித்துப் பாருங்கள். குழந்தைகளைக் கவனித்தல், சமையல், வீட்டு நிர்வாகம், அலுவலகப் பணி- என்று இன்றைக்கு வேலைக்குப் போகும் எல்லா பெண்களுமே ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கிறார்கள். உலகின் சிறந்த மல்டி டாஸ்க்கர்கள் பெண்கள்தான். அடுக்களையில்தான் மல்டி டாஸ்கிங் தொடங்குகிறது. சொந்தமாக தொழில் தொடங்கும் எல்லோரும் கிட்டத்தட்ட  பலரின் வேலைகளையும் சேர்த்து செய்யவேண்டியிருக்கும். மல்டிடாஸ்கிங் எனப்படும் இந்த போக்கு இன்றைய உலகில் பலரும் கடைபிடிக்கும் வழியாக உள்ளது. சிலர் ஒரு வேலையில் இருந்துகொண்டு தங்கள் மனதுக்குப் பிடித்த இன்னொரு வேலையையும் செய்கிறார்கள். வேறு சிலர் மனதுக்குப் பிடிக்காமலேயே பல வேலைகளைச் செய்கிறார்கள். எதுவாயினும் இந்த மல்டி டாஸ்கிங்கில் வெல்லவேண்டும் என்றால் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். வேலைகளை அவற்றின் முன்னுரிமை வரிசைப்படித் திட்டமிட்டுச் செய்யத் தெரிந்திருக்கவேண்டும்.

பெங்களூருவில் ஏர்பஸ் நிறுவனத்தில் பொறியாளராக இருக்கும் லலிதாராம் தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்தவர். பின் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் மேற்படிப்பு படித்து இங்கே திரும்பியவர். தான் செய்யும் வேலையோடு சேர்த்து மனசுக்குப் பிடித்த இன்னொரு வேலையிலும் ஆர்வத்துடன் இயங்குகிறார் இவர். அது இசை. இவர் ‘இசை உலக இளவரசர்’ என்ற ஜி.என்.பியைப் பற்றிய நூல், மிருதங்க வித்வான் சுப்ரமணியப் பிள்ளையைப் பற்றிய ‘துருவ நட்சத்திரம்’  நூல் ஆகியவற்றின் ஆசிரியர்.  “சின்ன வயதிலிருந்தே இசை மீதான ஆர்வம் என் தாத்தாவிடமிருந்து எனக்கு ஒட்டிக் கொண்டது. கல்லூரி போனதும் அது பெரிதாக வளர்ந்தது. கேசட்டுகளாக போட்டுக் கேட்டுக்கொண்டே இருப்பேன். சென்னை டிசம்பர் கச்சேரிகளுக்குச் சென்று எனக்குப் பிடித்த ஆளுமைகளின் கச்சேரிகளை நேரடியாகக் கேட்பேன். அதைத் தொடர்ந்து அந்த கச்சேரிகளைப் பற்றி என் விமர்சனங்களை இணையத்தில் எழுத ஆரம்பித்தேன். அப்படிக் கிடைத்ததுதான் என் முதல் நூல் எழுதும் வாய்ப்பு” என்கிற இவர் இன்றைக்கு சுவாரசியமாக இசை பற்றி விமர்சனம் எழுதக் கூடிய வெகு சிலரில் ஒருவர். ஜி.என்.பி நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் பற்றி காந்தனின் இயக்கத்தில் வெளியான ஆவணப்படத்துக்குப் பங்களித்தவர் இசை, ஓவிய வல்லுநரான ராஜம் பற்றிய ஆவணப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இப்போது நாதனும் நாதமும் என்ற பெயரில் நாகஸ்வரங்கள் சைவ ஆலயங்களில் இசைக்கப் படும் முறைமை பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறார். 33 வயதாகும் லலிதாராம்,“வாழ்வாதாரத்துக் காக ஒரு வேலை செய்கிறேன். அதனுடன் எனக்குப் பிடித்த இன்னொரு வேலையாக இசை கேட்பது, அது பற்றி எழுதுவது என்று இருக்கிறேன். இரண்டாவது வேலையை என் விருப்பப்படி, என் நேரத்துக்கு உகந்த படி செய்ய முடிகிறது. அழுத்தங்கள் ஏதுமில்லை” என்கிறார்.

திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தகக் கடை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதை நடத்துபவர்கள் ஐடி துறையில் வேலை பார்க்கும் மூன்று இளைஞர்கள். அமுதரசன், முகுந்தன், சரவணன்.  அவர்கள் வாழை என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில் பல தன்னார்வலர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுகிறார்கள். அத்துடன் தடாகம் என்ற பெயரில் நூல்களை வெளியிடும் பதிப்பகம் வைத்துள்ளனர். ஆன்லைனிலும் நூல்களை விற்கிறார்கள். ஒன்பதாண்டுகளுக்கு முன்பு  சென்னையில் அமுதரசன் ஐடி துறையில் வேலைக்கு  சேர்ந்த போது தொடங்கியதுதான் வாழை. சுமார் 100க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இதில் உள்ளனர். அதில்தான் முகுந்தனும் சரவணனும் இணைந்தனர். “இப்போது வாழைக்கு நாங்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதில் நிறைய தன்னார்வலர்கள் பணிபுரிகிறார்கள். அது ஒரு இயக்கம்” என்கிறார் அமுதரசன். “சனி ஞாயிறுகளில்தான் நாங்கள் இந்தவேலைகளில் ஈடுபட முடியும். எங்களுக்குள் வேலைகளைப் பிரித்துக்கொள்வோம். ஒருவர் கடைக்கு வந்தால் மற்றவர்கள் வாழை தொடர்பான வேலைகளைக் கவனிப்போம். கடையை பரிசல் செந்தில்நாதன் மேலாளராக இருந்து கவனித்துக் கொள்கிறார்.” என்று தகவல் சொல்கிறார் முகுந்தன். வேலைகளை சரியாகத் திட்டமிட்டு ஒதுக்கிக்கொள்வதுதான் இவர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்யவைக்கிறது.

நேரம் ஒதுக்கி, நம்மால் முடியும் என்கிற விஷயங்களை மட்டும் தெளிவாகச் செய்தால் நம்மால் பல வேலைகளைக் கவனிக்க முடியும் என்கிறார் காயத்ரி.  தொலைக்காட்சி தொகுப்பாளராக, நடிகையாக இருக்கும் இவர் பல தனியார் பொதுநிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக இருக்கிறார். அத்துடன் ‘லெட்ஸ் டூ’ என்ற பெயரில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தையும் நடத்துகிறார். விஜய் தொலைக்காட்சியில் கனாக்காணும் காலங்கள் தொடரில் வந்த இவர் இப்போது மூன்று திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம். மதுரைப்பெண்ணான இவர் சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்திருக்கிறார். ஆரம்பத்தில் இமயம் தொலைக்காட்சியில் அறிமுகம். இடையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து மீண்டும் தொலைக்காட்சிகளுக்கே வந்துவிட்டார். “எனக்கு ஷூட்டிங் இல்லாத நேரங்களில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் தொடர்பான வேலைகளைப் பார்ப்பேன். குடும்பத்தினரின் ஆதரவும் இருப்பதால் நன்றாகச் செயல்படமுடிகிறது” என்கிறார் 22 வயதான காயத்ரி.

இலக்கியக் கூட்டங்களுக்குப் போகிறவராக நீங்கள் இருந்தால் அங்கே மொட்டைத் தலை, குளிர் கண்ணாடி சகிதம் ஜீன்ஸ் அணிந்த ஓர் இளைஞர் கூர்மையான கவனிப்புடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர் பத்திரிகையாளர் அதிஷா. புதிய தலைமுறை இதழில் சுறுசுறுப்பாக பணியாற்றும் அதிஷாவின் இயற்பெயர் வினோத்குமார். கோவைக்காரர். படித்தபின்னர் பல நிறுவனங்களில் மார்க்கெட்டிங் வேலை பார்த்து பல பொருட்களை விற்றிருக்கிறார். மாலை வீட்டுக்கு வந்ததும் கணினியைத் திறப்பார். அங்கே அவருக்குள் இருந்து இன்னொருவன் புறப்படுவான். அவன் எல்லாவற்றையும் நக்கலடித்து சுவாரசியமாக எழுதக் கூடிய எழுத்தாளன். அதிஷா ஆன்லைன் என்ற அவரது வலைப்பூ மிகவும் பிரபலம். 2007-ல் ஆரம்பித்து விடாது எழுதி வருகிறார். அதில் அவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் பெருமளவு வாசிக்கப் படுகின்றன. “முன்பு என்னுடைய திருப்திக்காக ப்ளாக் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது பத்திரிகையில் எழுதுவதற்கான எழுத்துப் பயிற்சியாக ப்ளாக் எழுதுகின்றேன். இரவில் இதற்காக நேரம் ஒதுக்கினால் ஆய்வு செய்து தரமான கட்டுரைகளை எழுதமுடியும்” என்கிறார். முகநூலில் இவர் ஒரு பெருமாள் படத்தைப் பகிர்ந்து அவரை ஷேர் செய்தால் அதிஷ்டம் வரும் என்று பதிவிட்டிருந்தார். இதுவரை இல்லாத சாதனையாக அந்த பெருமாளை ஒரு லட்சம் பேர் பகிர்ந்திருந்தார்கள். உங்களுக்கு ஏதாவது அதிர்ஷ்டம் அடித்ததா என்ற கேள்வியை முன் வைத்தோம். “ ஓ.. விகடனில் என் பெயர் வந்துச்சே..” என்று அப்பாவி போல் சிரிக்கிறார் அதிஷா.

அமெரிக்க வாழ்க்கை; மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் அல்லது வேலையை விட்டுவிட்டு சென்னையில் சினிமாவுடன் வாழ்வது என்று இரு வாய்ப்புகள் கடந்த ஆண்டு அருண் முன்னால் இருந்தன. அவர் தேர்ந்தெடுத்தது பின்னதை. தமிழ் ஸ்டூடியோ என்ற அமைப்பை நிறுவி நல்ல திரைப்படங்களுக்கான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறார் அருண். படிமை என்ற பெயரில் திரைப்படப் பயிற்சியும் இளைஞர்களுக்கு நடத்துகிறார். தமிழ் ஸ்டூடியோ தமிழ்நாடு முழுக்க மாற்றுத் திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் திரையிட்டு வருகிறது. கணிதத்தில் இளங்கலையும் எம்சிஏவும் படித்த அவர் லண்டன் நிறுவனம் ஒன்றில் திரைப்பட இயக்கத்துக்கான படிப்பையும் முடித்தார். அதைத் தொடர்ந்து அவர் காக்னிசண்ட் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே தன் 23-வது வயதில் தமிழ்  ஸ்டூடியோ அமைப்பையும் தொடங்கினார். “உலக அளவிலான காட்சி ரீதியில் சிறந்த படங்களை பார்த்திருந்தபடியால் தற்கால தமிழ் சினிமா மீது எனக்கு விமர்சனம் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே ஒரு குறும்படம் எடுக்க முயற்சி செய்தேன். அதில் கிடைத்த மோசமான அனுபவங்களும் எனக்குப் படிப்பினையைத் தந்தன. இப்போதைக்கு படிமை என்கிற ஓர் அமைப்பின் மூலம் சினிமா ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அவர்களிடம் சரியான சினிமா பற்றிய பார்வையை வளர்க்கிறோம்.” என்கிறார். இத்துடன் இவர் செய்யும் இன்னொரு வேலை விதை என்ற பெயரில் இயற்கை விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்துவது.

“ இரண்டு விஷயங்களிலும் தொடர்ந்து இயங்குவது நன்கு திட்டமிடுதலால் சாத்தியமாகிறது. தூக்கத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் நிறைய நேரம் கிடைக்கிறது.” என்று அருண் சொல்கிறார். அவருக்குத் திரைப்படம் எடுக்கும் திட்டம் உண்டா? “நிச்சயம். ஆனால் ஒரே படத்துடன் வரமாட்டேன். ஒரு அலையாக வருவோம். ” என்கிறார் 29 வயதாகும் இந்த இளைஞர். 

நவம்பர் 2013