சிறப்புக்கட்டுரைகள்

இளைஞர்களின் தலைவர் - கலாம்

அசோகன்

புதுடெல்லியில் உள்ள குடியரசு மாளிகை சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்களுக்கு நெருங்கிய இடமாக இருந்தது. வாராவாரம் யாராவது அங்கே போய்வந்து கொண்டிருந்தார்கள். நம் அரசியலில் பழக்கப்பட்டமாதிரி அங்கே அவர்களின் எந்த ரத்த சொந்தமும் வசிக்கவில்லை! அவற்றையெல்லாம் கடந்த ஒரு காந்த மனிதன் அவர்களை இழுத்துக்கொண்டிருந்தார்.

நள்ளிரவிலும் பகலிலும் அவர் ஓயாமல் மனிதர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். இந்தியாவின் ராக்கெட் மனிதர் அப்துல்கலாம் மிகச்சிறந்த தகவல் தொடர்பாளராக இருந்தார்.

அவர் இந்திய குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னால் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் தங்கி இருந்தார். பாரதரத்னா பெற்று அவர் அன்றைக்கே மிகப்பெரிய பிரபலமாக விளங்கினார். அவரைச் சந்திக்க ஒரு பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த செய்தியாளரும் போனார்கள். அவர்கள் எதிர்பார்த்துப்போனது ஒரு மெத்தப் படித்த விஞ்ஞானியை. ஆனால் அங்கே நரைத்த தலையுடன் கூடிய குழந்தை அவர்களை எதிர்கொண்டது. பேட்டிக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறீர்கள்? முதலில் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம் என்றது அந்த குழந்தை! இவர்கள் சவாலை எதிர்கொண்டார்கள்.

உலகிலேயே மிகச் சிறந்த விஞ்ஞானி யார்? கலாம் கேட்டுவிட்டு இவர்களைக் குறுகுறு என்று பார்த்தார். இருவரும் விழித்துவிட்டு ஐன்ஸ்டீன், நியூட்டன் என்று பலபெயர்களைச் சொன்னார்கள்.

கலாம் சொன்னார்: ‘உலகிலேயே மிகச்சிறந்த விஞ்ஞானி குழந்தை தான்! அதுதான் தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் ஆராய்கிறது! புதிதாகக் கண்டுபிடிக்கிறது!’.

அதனால்தானோ என்னவோ அப்துல்கலாம் இளையசமூகத்தின் பேரில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்களைச் சந்தித்தார். வளமான பாதுகாப்பான பெருமைமிகு இந்தியாவில் வாழவேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் பேசிக் கொண்டிருந்தார். இளைஞர்களுக்கு கலாமின் வாழ்க்கையே பெரும் செய்தி. எந்த பின்னணியும் அற்ற கடைக்கோடி கிராமத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் தலைமகனான வெற்றிச் செய்தி.

குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றிருப்பவர் களுக்குத் தெரியும் அது எவ்வளவு இறுக்கமான இடம் என்பது! சடங்குகளையும் சம்பிரதாயக் கெடுபிடிகளையும் தாண்டியே குடியரசுத் தலைவரைப் பார்க்கமுடியும். இத்தனைக் கெடுபிடிகளையும் தாண்டினால் அங்கே ஒரு சாமானியன் உட்கார்ந்துகொண்டு உங்களை பார்த்து சிரிக்கும் அற்புதம் நிச்சயமாக அப்துல்கலாம் குடியரசு மாளிகையில் இருந்தபோதுதான் நிகழ்ந்தது.

அவரது பதவிக்காலத்தில் மிகமுக்கியமான  அரசியல்சாசனச் சட்ட நெருக்கடி ஒன்று வந்தது. அதில் முடிவெடுக்க ஆலோசனை சொல்ல நாட்டின் மிக அனுபவம் வாய்ந்த சட்டமூளைகளில் ஒன்றை அழைத்திருந்தார் கலாம்! போய்விட்டு திரும்பிய கையுடன் அந்த சட்ட அறிஞரைப் பார்க்க நேர்ந்தது.  சட்டப் பிரச்னையை விட கலாமின் ஆளுமையே அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது! “டேய் எவ்ளோ பெரிய ஆளு.. இறங்கி வந்து என் கையைப் பிடிச்சுட்டார்..” நெகிழ்ந்துபோய் சொன்னார் அந்த சட்டமூளைக்காரர். இத்தனைக்கும் அவர் காணாத அதிகார மேல்மட்டம் இல்லை!

குடியரசுத்தலைவராக இருக்கும்போது பதினேழாயிரம் அடி உயரமான சியாச்சின் பனிமலைக்குச் சென்றது, சிந்துராக்‌ஷக் நீர்மூழ்கியில் பயணம், சுகாய் -30 போர்விமானத்தில் பறந்தது ஆகியவை அவரது வயதுக்கு பெரும் சாதனைகளே.

மாணவர்களை அடுத்து அவர் பெரிதும் ஆர்வம் காட்டியது விவசாயி களிடம். மாற்று எரிசக்தி, கிராமப்புறத் தன்னிறைவு, தகவல் தொடர்பு ஆகியவற்றிலும் தீர்வுகளைத்தரும் கருத்துகளை அவர் வைத்திருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவி ஓர் அலங்காரப் பதவியாக இருக்கலாம். ஆனால் கலாம் ஒருபோதும் பொம்மையாக இருந்திருக்கவில்லை. அவரது பணி பள்ளி வளாகங்களிலும் உயர்கல்வி நிலையங்களிலும் இருந்தது. இளம் மனங்களில் நம்பிக்கையை விதைப்பதில் அவர் மரணம் அடையும் கணம் வரை ஈடுபட்டிருந்தார். ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களிடம் பேசுகையில் மரண மடைந்ததின் மூலம் தன் மரணத்திலும் அவர் ஒரு செய்தியை நாட்டுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தியா 2020 என்பது அவர் குறித்துக் கொடுத்த வளர்ச்சிக்கான வரைபடம். அதை அவர் தெளிவான சொற்களில் கூறமுடிந்தது.

1.கிராமப்புற, நகர்புற இடைவெளி மிகவும் குறைந்த நாடு.

2. எரிசக்தியும் தரமான குடிநீரும் எல்லோருக்கும் போதுமான அளவு கிடைத்தல்.

3. விவசாயம், தொழில் துறை, சேவைத்துறை மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

4. தரமான மாணவர்களுக்கு விழுமியங்களுடன் கூடிய கல்வி மறுக்கப்படாத நாடு.

5. திறமையான அறிஞர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்கள் நாடி வரக்கூடிய சிறந்த தேசம்.

6. சிறந்த மருத்துவவசதி அனைவருக்கும் கிடைக்கும் தேசம்.

7. செயல்படக்கூடிய, வெளிப்படையான, ஊழலற்ற நாடு.

8. வறுமையும் கல்லாமையும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் களையப்பட்ட நாடு.

9. நீடிக்கக்கூடிய வளர்ச்சிப்பாதையில் செல்லும் வளமிக்க அமைதியான தேசம்.

10) தன் தலைமைத்துவத்தை எண்ணி பெருமை கொள்ளக்கூடிய, வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கக்கூடிய தேசம்.

இதை அவர் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார். 2015-ல் அவர் மறைந்திருக்கும் இத்தருணத்தில் இவற்றை நினைவில் கொள்வதே அவருக்குச் செய்யும் அஞ்சலி!

ஆகஸ்ட், 2015.