சிறப்புக்கட்டுரைகள்

இலங்கையில் நடந்த அளவுக்கு கொடுமை எந்தப் போரிலும் நடக்கவில்லை'' - கெலம் மாக்ரே

அசோகன்

லண்டனிலுள்ள சானல் 4 தொலைக்காட்சிக்காக நோ ஃபையர் சோன் என்ற பெயரில்  ஈழப்போரின் கடைசிக் கட்டம் பற்றிய புலனாய்வு ஆவணப்படத்தை எடுத்திருப்பவர் இயக்குநர் கெலம் மாக்ரே. அவர் வெளியிட்ட காட்சிகள் சிங்கள ராணுவம் செய்த போர்க்குற்றங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டி உலகையே அதிர வைத்துள்ளன. அவர் எடுத்துள்ள மூன்றாவது ஆவணப்படத்தில் பிரபாகரனின் பச்சிளம் மகன் பாலச்சந்திரன் பதுங்குகுழியில் ராணுவத்தினரின் பிடியில் இருக்கும் படங்கள் இடம்பெற்று பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் காட்சி வெளியாகி தமிழர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்திமழைக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

இலங்கைத் தமிழர்கள் பற்றிய டாகுமெண்டரி எடுக்கவேண்டுமென எப்படித் தோன்றியது?

பல விஷயங்கள் பற்றி நான் ஆவணப்படங்கள் எடுத்துள்ளேன். சொல்ல வருத்தமான விஷயமாக இருப்பினும் போர்க்குற்ற விசாரணைகள், போரின் போது நடக்கும் மற்ற குற்றங்கள் ஆகியவை பற்றிய பல படங்கள் எடுத்துள்ளேன். ஈராக்கில் கூட்டுப் படைகளின் மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றிய மூன்று புலனாய்வுகளும் இதில் அடங்கும். போரின் போதும் அதற்குப் பின்னரும் சானல் 4 செய்த ஆரம்ப கட்ட ஆய்வைத் தொடர்ந்த முயற்சியே இலங்கைப் போர் பற்றிய படங்கள். இலங்கையில் நடந்த அதிகமான போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை பற்றி உலகுக்குத் தெரியவே இல்லை. எனவே இது பற்றி நாம் மேலும் ஆராய வேண்டியுள்ளது. இது புலனாய்வு ஜர்னலிசம் நடவடிக்கை. இது என்னுடைய பணி.

அங்கு நேரில் சென்றிருக்கிறீர்களா?

முதல் படம் இயக்கும் போது மட்டுமே என்னால் இலங்கைக்கு ஒரு முறை செல்ல முடிந்தது. சிலரை அங்கு சந்தித்தேன். இப்போது நான் சந்திப்பவர்கள் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குத் தப்பி வந்தவர்கள். பலரும் தங்கள் அனுபவங்களால் காயப்பட்டிருந்தார்கள். வெளிப்படையாக பேசவே அஞ்சுகிறார்கள். இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களின் பாதுகாப்பு பற்றிய அச்சம்.

இந்த படத்துக்காக நிறைய காட்சிகள், படங்கள் உங்களிடம் வந்திருக்கும். அதில் எது உண்மையானது என்று எப்படிக் கண்டுகொள்கிறீர்கள்?

படுகொலைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் ஆகியவற்றைக் காட்டும் காட்சிகள், படங்களை பாரன்சிக் டிஜிட்டல் இமேஜ் நிபுணர்கள், மற்றும் ஒரு முன்னணி தடயவியல் மருத்துவர் ஆகியோரை வைத்து நன்கு ஆராய்கிறோம். டிஜிட்டல் நிபுணர்கள் ஒவ்வொரு பிரேமையும் ஆய்வு செய்கிறார்கள். அதில் எடிட் செய்யப்பட்டுள்ளதா, மாறுதல் உள்ளதா என்று பார்க்கிறார்கள். ஒளியின் திசை, பிம்பத்தில் குளறுபடி ஏதும் உள்ளதா என்று பார்க்கிறார்கள்.அதில் எந்த ஏமாற்று வேலையும் செய்ததற்கு ஆதாரம் இல்லை. இடங்கள், தேதி, காட்சிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டும் பார்த்துக் கொண்டோம்.

உங்கள் அணுகுமுறை தொழில்ரீதியானது. இருப்பினும் உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்த காட்சிகள் ஏதேனும் உண்டா?

மனதை விட்டு அகலாத பல காட்சிகள் உள்ளன. சிலவற்றை படத்தில் காட்டவே முடியாது. தங்கள் தாய் குண்டடி பட்டு விழுந்த நிலையில் அவரைப் போய் தூக்க தங்கள் பதுங்குகுழிகளை விட்டு வெளியே வரமுடியாத இளம் பெண்கள்... வெளியே வந்தால் மேலும் ஷெல்கள் விழும். இந்த காட்சிகளைப் பார்ப்பதே கடினம். இதைப் பார்ப்பதே கடினமாக இருக்கையில் இந்த சூழலுக்கு உள்ளானவர்கள் நிலை எப்படி இருந்திருக்கும்? தப்பிப் பிழைத்த அந்த இளம் உள்ளங்கள் எந்த அளவுக்குக் காயபட்டிருக்கும்? இறந்து போனவர்களை விட வாழ்பவர்களைக் காண்பதுதான் மிகத் துயரமான அனுபவமாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே.. அது மிகக்கொடுமையானது.

வியட்நாம் போரில் ஒரே படம் உலகையே உலுக்கியது. இங்கே அப்படி எதுவும் நிகழவில்லை. உலகத்தின் மனச்சாட்சி இறுகிவிட்டதா?

உலகத்தின் மனச்சாட்சி இறுகிவிடவில்லை என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் நம்பிக்கை மிச்சம் உள்ளது.

இறுதிக்கட்டத்தில் என்ன நிகழ்ந்தது? இன்னும் உறுதியாகத் விடை-தெரியாத கேள்விக்கு உங்கள் படத்தில் விடை உண்டா?

போரின் கடைசிக் கட்டத்தில் நடந்தது என்ன என்று இன்னமும் முழுவதும் தெரியவில்லை. சில சர்வதேச சுதந்தரமான விசாரணைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பதில்களைத் தேடுகின்றோம். ஆனால் பத்திரிகையாளர்கள் உண்மையைத் தேடும் பணியைத் தொடங்கவே முடியும். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது.

இந்த போரை எதனுடன் ஒப்பிடுவீர்கள்?

எல்லா போர்களும் மோசமானவை. ஆனால் இந்த அளவுக்கு கொடுமைகள் எதிலும் நடக்கவில்லை. நான் பல போர்கள் பற்றி செய்தி சேகரித்துள்ளேன். சில பொதுவான அம்சங்கள் இருக்கும்தான். ஆனால் ஒப்பிடுவதால் எந்த பயனும் இருக்காது என்று நினைக்கிறேன்.

இலங்கை அரசு இந்த ஆதாரங்களை மறுக்கிறதே?

ஆதாரங்கள் இருப்பினும் அவை எல்லாவற்றையும் அரசு மறுக்கும் என்று நான் நினைக்கிறேன். போர் முடிந்தபின்னால் சாதாரண மக்கள் யாருமே சாகவில்லை என்றார்கள். இப்போது பல்லாயிரம் பேர் இறந்தார்கள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். மெதுவாக உண்மை அவர்களைச் சுற்றி வளைக்கும். எங்கள் ஆதாரங்களை நாங்கள் பரிசோதித்துள்ளோம். உண்மையில்லாத எதையும் எங்கள் படத்தில் சேர்க்கவில்லை. மறுப்பதை நிறுத்திவிட்டு உண்மையை அரசு எதிர்கொள்ளவேண்டும்.

வரலாறு இந்தப் போரை எப்படிப் பார்க்கும்?

இது பயங்கரமான போர். அதிலும் கடைசி சில மாதங்கள் மிகக் கொடுமையானவை. இருதரப்புமே குற்றங்கள் செய்தார்கள். அமைதியும் சமாதானமும் திரும்பவேண்டுமானாலும் உண்மையும் நீதியும் தேவை. சர்வதே சமூகம் ஒரு பாடத்தை நிச்சயம் கற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறேன். ஐ.நாவும் சர்வதேச சமூகமும் இப்போரைத் தடுத்து நிறுத்த தவறிவிட்டன. ஐ.நாவின் ஒவ்வொரு உறுப்பு நாடும் ஏற்றுக்கொண்ட அடிப்படைக் கடமை ‘பாதுகாக்கும் பொறுப்பு’. அதை செயல்படுத்துவதில் அனைவரும் தவறிவிட்டனர். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தவிர்க்க வேண்டுமென்பதை உலக சமூகம் உணரவேண்டிய நேரமாக இது இருக்கும் என்று நாம் நம்பலாம்.

மார்ச், 2013.