சிறப்புக்கட்டுரைகள்

இரண்டாவது தலைநகர்: தொடங்கிய விவாதம்!

தமிழினி

நமது அந்திமழை ஜூன் மாத இதழில், ‘‘திருச்சி இரண்டாவது தலைநகரமா?'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டோம்.

தலைநகர் சென்னை, மாநிலத்தின் ஒரு மூலையில் இருப்பதால் மக்கள் சென்று வர அதிக நேரம் செலவாவது, சென்னையில் ஏற்படும் மக்கள் நெருக்கடி, குடிநீர் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசு... போன்றவற்றை குறைக்க, 1983ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், திட்டமிட்டார். இதன் அடிப்படையில்தான், திருச்சியை இரண்டாவது தலைநகராக உருவாக்கும் முயற்சி நடந்தது.

தலைமைச் செயலகம் அமைக்கவும், எம்.ஜி.ஆர். தங்குவதற்கும் இடம் மற்றும் வீடு பார்க்கப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது கொரோனா காலத்தில், ‘‘சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதாலேயே நோய்த் தொற்று விரைவாக பரவுகிறது'' என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், ‘‘திருச்சி: இரண்டாவது தலைநகர்?‘‘ என்ற கட்டுரையை வெளியிட்டோம்.

இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் இது குறித்து செய்திகளை வெளியிட, இது பெரும் விவாதப் பொருள் ஆகிவிட்டது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இது குறித்து கருத்து கூற ஆரம்பித்துள்ளனர்.

‘‘திருச்சியை இரண்டாவது தலைநகர் ஆக்க வேண்டும்!'' என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் முழங்க, ‘‘மதுரையைத்தான் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்!'' என தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க. பிரமுகர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர், ‘‘கோவையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

தற்போது சமூகவலைதளங்களில் இந்த விசயம்தான் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

‘‘திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் என்று அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும்!'' என தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஜாதிச் சங்கங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டக் குழு அமைக்கப்படும் என்ற அளவுக்கு திருச்சியில் நிலவரம் சூடாகியிருக்கிறது.

அதே போல, மதுரை பிரமுகர்களும், மக்களும், ‘‘உண்மையிலேயே தமிழகத்தின் நடுப்பகுதியில் உள்ளது எங்கள் ஊர்தான். அனைத்து ஊர்களுக்கும் செல்ல சாலை, ரயில் போக்குவரத்து இருக்கிறது. தண்ணீர் வசதிக்கு குறைவில்லை. புதிய கட்டிடங்கள் கட்ட ஏராளமான நிலங்கள் இருக்கின்றன!'' என்று பட்டியலிடுகிறார்கள்.

இதில் உச்சமாக, ‘‘மதுரையை தலைநகராக்கா விட்டால், மாநிலத்தைப் பிரிக்கும்படி கோருவோம்!'' என்ற முழக்கங்களும் கேட்கின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இரண்டாவது தலைநகரம் என்பது குறித்த பரிசீலனை ஏதும் மாநில அரசிடம் இல்லை. அமைச்சர் உள்ளிட்டோர் பேசுவது அவரவர் சொந்தக் கருத்து!'' என்று கூறி உள்ளார்.

இருப்பினும் இணைய வசதிகள் அதிகரித்துள்ள இந்த காலச் சூழ்நிலையில் எல்லா அரசு தலைமையகங்களையும் ஒரே இடத்தில் குவித்துவைத்து நெருக்கடியை ஏற்படுத்தித்தான் ஆகவேண்டுமா? என்ற கேள்வி அர்த்தமுள்ளதாகவே படுகிறது.

செப்டெம்பர், 2020.