எம். ஜே. ராதாகிருஷ்ணன் 
சிறப்புக்கட்டுரைகள்

இயற்கையின் ஒளியில்...

சுகுமாரன்

பணியாற்றிய ஏழு படங்களுக்கு அரசு விருதுகள், சில படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம், மாற்றுச் சினிமா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் ராகி இவை எல்லாவற்றுக்கும் உடைமையாளராக இருந்தபோதும் பெருந்திரளான திரைப்பட ரசிகர்களுக்கு அறியப் படாதவராகவே, அல்லது அறியப்பட விரும்பாதவராகவே எம். ஜே. ராதாகிருஷ்ணன் இருந்தார். 

'பேசப்படவேண்டியவன் நான் அல்ல; நான் ஒளிப்பதிவு மேற்கொண்ட படங்கள் தாம்' என்று ஒதுங்கி விடுவது அவர் இயல்பு.

சினிமா மீதுள்ள காதலால் ஸ்டில் போட்டோகிராஃபராக நுழைந்தார். புகழ் பெற்ற கலைப்பட இயக்குநரான அரவிந்தனின் பெரும்பான்மையான படங்களுக்கு ஷாஜி என். கருண் தான் ஒளிப்பதிவாளர். ஷாஜி இயக்குநராக மாறிய கட்டத்தில் எம். ஜே. ராதாகிருஷ்ணன் இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். ஆனால் ஷாஜியின் இயக்கத்தில் வெளிவந்த எந்தப் படத்துக்கும் எம். ஜே. ஒளிப்பதிவாளர் அல்ல. களரியில் கற்றவித்தையை வெளியில் தனித்துப் பெயர்படுத்தவே விரும்பினார். மாமலைக்கு அப்பால் (1988) படத்தின் மூலம் மலையாளக் கலை சினிமாவுக்கு புதிய ஒளி இலக்கணம் அவர் மூலம் உருவானது.

ஏறத்தாழ எழுபத்தைந்து படங்களுக்கு எம். ஜே. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். அந்தப் படங்கள் பலவும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. அந்தப் படங்களின் இயக்குநர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து மாறுபட்டவர்கள். நுண் தகவல்களைக்கூட அழுத்தமாக வெளிப்படுத்தும் அடூர் கோபாலகிருஷ்ணன், உணர்ச்சிகரமான கதைத் தருணங்களை உருவாக்கும் ஜெயராஜ். தர்க்க பூர்வமான காட்சிகளை முன்னிறுத்தும் டாக்டர். பிஜூ ஆகிய இயக்குநர்களின் படங்களில் அவரது ஒளிப்பதிவின் வகைகளைக் காணலாம். அதை விட முக்கியம் ஒருவருக்கொருவர் 'கலைப் போட்டி'யில் மோதிக் கொள்ளும் இந்த இயக்குநர்கள் அனைவருக்கும் இதமான ஒளிப்பதிவாளராக இவர் இருந்தார் என்பது. தன் திறமை மீது அசையாத நம்பிக்கை கொண்ட கலைஞனின் இயல்பு அது என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஒளிப்பதிவில் தன்னுடைய பாணி என்று ஒன்றை எம்.ஜே. உருவாக்க விரும்பவில்லை. ஆனால், அப்படி ஒரு பாணி மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவில் இயல்பாகவே உருவானது. அது அவருடைய மகத்தான திரைப் பங்களிப்பு. இயற்கையாகக் கிடைக்கும் வெளிச்சத்தையே தனது ஒளிப்பதிவின் ஆதாரமாக நிறுவியவர் எம்.ஜே. சூரிய, சந்திர ஒளியின் உதவியால் மட்டுமே காட்சிகளைப் படமாக்கினார். கதை சொல்லும் காட்சிகளை உணர்வு மயமாக்க அது உதவியது. முற்றிலும் சுற்றுப்புற ஒளியை வைத்தே படமாக்கப்பட்ட
'தேசாடனம்' (1996 இயக்கம் ஜெயராஜ்) அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதிகபட்சமாக அவர் நாடிய ஒளி ஆதாரங்கள் குத்துவிளக்கின் வெளிச்சமும் மெழுகுவர்த்தியின் வெளிச்சமும்தான். கண்ணாடிகள் வழியாகப் பிரதிபலிக்கும் வெளிச்சத்-தைத் திறம்படக் கையாண்டு காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டியவர் எம்.ஜே. வணிகப்படங்களில் பணியாற்றும் பிரபல ஒளிப்பதிவாளர்கள் விளையாட்டாகவும் வினையாகவும் அவரை விமர்சித்திருக்கிறார்கள் ''நாம் பல லட்சக்-கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள விளக்குகளையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காமிராவையும் வைத்துப் படமெடுக்கிறோம். ஆனால் இந்த ஆசாமி ஒரே ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைத்துப் படம்பிடித்து விருதுகளையும் தட்டிச் சென்று விடுகிறார்.''

இணைய அங்காடி ஒன்றின் விளம்பரப் படம். அதில் ஒட்டு மீசை வைத்த சிறுவன் பெரிய மனிதத் தோரணையில் அலட்சியமாகச் சொல்கிறான். அது மாதிரி நல்ல 'பேட்' இருந்தால், நானும் கூட நிறைய ரன் எடுப்பேன். கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு முதிர்ந்த பொடிசு பதில் சொல்கிறது. 'ரன் எடுக்க நல்ல 'பேட்'டல்ல, பேட்ஸ்மேன் தான் முக்கியம்.' இந்தப் படத்தைப் பார்த்தபோது எம்.ஜே. ராதாகிருஷ்ணன் நினைவு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை!

ஆகஸ்ட், 2019.