டி. இமான் உடன் திருமூர்த்தி 
சிறப்புக்கட்டுரைகள்

இமான் தந்த வாய்ப்பு!

கண்ணான கண்ணே...!

வசந்தன்

சென்னை மாற்றுத்திறனாளி என்று சொல்லாதீர்கள்...  நல்ல பாடகன் என்று சொல்லுங்கள். இந்த அடையாளம் தான் எனக்கு வேண்டும்'' என்கிற திருமூர்த்திக்கு 21 வயது. சமீபத்தில் சமூகவலைதளங்களில் திருமூர்த்தியின் குரலில் ஒலித்த கண்ணான கண்ணே பாடலை கேட்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. அவரது பாடல்கள் தமிழகமெங்கும் எதிரொலித்ததைத் தொடர்ந்து தனக்கு பிடித்த
டி. இமான் இசையில் இப்போது ஒரு பாடலையே பாடிவிட்டார் திருமூர்த்தி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டி எனும் கிராமத்தில் இசையுடன் வாழ்ந்துகொண்டிருந்த திருமூர்த்தியை வலை தளங்கள் சென்னை வரை அழைத்து வந்திருக்கின்றன.

''நான் பிறந்த ஆறு மாதங்களுக்கு பிறகுதான் எனக்கு பார்வைத் திறன் இல்லை என்பதே என் பெற்றோருக்கு தெரிந்தது. குடும்ப சூழல், உடல்நலம் காரணமாக மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தேன். ஆனால், சிறிய வயதிலிருந்தே பாடல்களை கேட்பதிலும், பாடுவதிலும் எனக்கு அதிக ஆர்வமிருந்தது,'' என்று தன் கதையைச் சொல்கிறார் திருமூர்த்தி.

''திரையரங்கம் சென்று படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு அதிகமாக இருந்தது. பார்க்கும் வழக்கம் அல்ல. கேட்கும் வழக்கம். எனக்குத்தான் பார்வை இல்லையே.. ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த நடிகர். ஒலியை வைத்து திரைப்படத்தை புரிந்துக்கொள்வேன். எல்லா சப்தங்களையும் கவனமாக கேட்பேன். இதன்மூலம் தான் பின்னணி இசை, பாடல்களை நான் ஆழமாக உள்வாங்கினேன்.  

வளர்ந்த பிறகு நான் நன்றாக பாடுவதாக, பறை இசைக்கருவியை வாசிப்பதாக எல்லோரும் சொல்வார்கள். எனவே, இந்த திறனை வெளிப்படுத்த பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு தேடினேன். என் பெரியப்பா பிள்ளைகளான சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனினும் அப்போதெல்லாம் நான் எதிர்பார்த்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

இதற்கிடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது அம்மா பின்பு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மறைந்தார். அவரது இறப்பு என்னை மிகவும் பாதித்தது.

 விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் எனக்கு மிகப்பிடித்திருந்தது. அதைப் பாடியபோது உறவினரான மதன் அண்ணா அதை எதார்த்தமாக பதிவு செய்து முகநூலில் பதிவேற்றினார். என் பாடல் அஜித் ரசிகர்களையும், நெட்டீசன்களையும் கவர்ந்ததால் பலரும் நான் பாடும் காணொளியை பகிர்ந்துக்கொண்டே இருந்தனர். அப்போதே இசையமைப்பாளர் டி. இமான் போனில் அழைத்து உங்களது குரல் நன்றாக இருக்கிறது, சிறப்பாக பாடுகிறீர்கள் என கூறினார். அவரது பாராட்டும், எளிமையான அணுகுமுறையும் எனக்கு உற்சாகமளித்தது. அதுதான் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்!

தற்போது, முன்பே சொல்லியபடி ரத்தினசிவா இயக்கத்தில்  உருவாகும் சீறு படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை டி. இமான் எனக்கு வழங்கியுள்ளார்.   கவிஞர் பார்வதியின் வரியில் பெண்களின் மாண்புகளை பேசும் ஒரு பாடலை இப்போது பாடியிருக்கிறேன். இதன்மூலம் சினிமாவில் பாடும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்குமென நம்புகிறேன். தற்போது ஏழாம் வகுப்பு படிக்கும் தங்கை இசைமொழியை படிக்கவைக்க வேண்டும், எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்ய வேண்டும்'' இனிய குரல் தழுதழுக்க நெகிழ்வாகப் பேசுகிறார் திருமூர்த்தி.

நவம்பர், 2019.