எஸ்.பாலசுப்ரமணியம் ஓவியம்: ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

இன்னமும் இருக்கிறீர்கள் ஆசிரியரே!

அவர்கள் அவர்களே -5

ப.திருமாவேலன்

இவர்கள் சந்தித்தால்...' என்பது ஆனந்த விகடனில் வெளியான முக்கியமான மிக சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்று. எதிரும் புதிருமான மனிதர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதை கற்பனையாக எழுதுவோம். விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதித் தருவோம். ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் அதனை வெட்டி, ஒட்டிச் சேர்ப்பார். அவரைப் போல் எடிட்டிங் செய்வோர் எவருண்டு?

மூன்றாம் பக்கத்தில் ம.கா.சி எழுதியதை முருகேஷ்பாபு ஆறாம் பக்கத்தில் சேர்ப்பார். எஸ்.பி. அண்ணாமலை கடைசி பக்கத்தில் எழுதியதை ரமேஷ் வைத்யாவின் நாலாம் பக்கத்தில் சேர்ப்பார். ஒருவரிடம் இருந்து ஒரு வரியை எடுத்திருப்பார். இன்னொருவரிடம் இருந்து ஒரு சொல்லை எடுத்திருப்பார். ஒருவர் முடித்திருப்பது, ஓப்பனிங் ஆக இருக்கலாம். இன்னொருவரின் ஓப்பனிங், மொத்தத்தின் கடைசியாக இருக்கும். பதினைந்து பேர் எழுதிக் கொடுத்ததையும் மொத்தமாக எடுத்து வந்து கொடுப்பார்.

வாசித்தால், ஒரே ஆள் எழுதியதைப் போல இருக்கும். பச்சையும் நீலமும் கலந்த மையால் எழுதப்பட்ட அவரது எழுத்தைப் பார்க்க ஆசைப்படுவோம். அப்படித்தான், இவர்கள் சந்தித்தால் பகுதியில் கலைஞரும் ஜெயலலிதாவும் சந்தித்தால் கட்டுரை வெளியானது. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் மட்டுமல்ல, விகடன் குழும இதழ்களில் பணியாற்றும் அனைவரையும் எழுதச் சொன்னார்.சுமார் நாற்பது பேர் எழுதிய கதைகளையும் படிக்கவே பொறுமை வேண்டும். அதில் சரியானதைத் தேர்ந்தெடுத்து சுவாரஸ்யமாக வெட்டி ஒட்டிக் கொண்டு வந்தார். அனைவரையும் அழைத்தார்.

கான்பரன்ஸ் ஹால் கொள்ளாத பெருங்கூட்டம். அப்போது ரா.கண்ணன், தலைமைப் பொறுப்பாசிரியர். அவரை வாசிக்கச் சொன்னார். பிரமாதமான ஓரங்க நாடகமாக அது இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் எழுதிய வரி உள்ளே வரும் போது பூரித்துக் கொண்டோம்.

இதில் கலைஞரைப் பற்றிய கிண்டலும் இருக்கும். ஜெயலலிதாவைப் பற்றிய கிண்டலும் இருக்கும். கூட்டமாகச் சிரித்துக் கொண்டோம். திடீரென்று என்னைப் பார்த்தார் ஆசிரியர். 'திருமாவேலன், கலைஞரைக் கிண்டல் பண்ணியிருக்கோம்னு வருத்தப்படாதீங்க!' என்றார். 'இல்லை சார்...' என்றேன். 'இது கற்பனையா... ஒரு சட்டயர் கட்டுரையா எடுத்துக்கோங்க' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
'சரி சார்' என்றேன். ஏனென்றால் விகடன் ஆசிரியர் குழுவில் நான் அப்போது கடைக்குட்டியாக இருந்தேன். அநேகமாக 2001 ஆக இருக்கலாம்.தனது ஆசிரியர் குழுவில் கடைசியாக இணைந்த ஒருவனையும் மதித்து விளக்கம் சொன்ன தத்துவாசிரியர் தான் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த, ஜூனியர் விகடனின் நிறுவனராக இருந்த எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள். ஞானத் தகப்பன் என்பார் ரா.கண்ணன். உண்மையில் ஞானத்தகப்பன் தான்.

மிகப் பெரும் குடும்பத்துக்காரர். அப்பா எஸ்.எஸ்.வாசன் பெரும் பணக்காரர். திரைத்துறையிலும் இதழியல் துறையிலும் முத்திரை பதித்தவர். அவரது நட்பு கிடைக்காதா, ஒரு தடவை அவரை சந்தித்துவிட மாட்டோமா என்று விவிஐபிக்கள் தவம் இருப்பார்கள். ஆனால் அவர் ஆனந்த விகடன் அலுவலகத்தில் சர்வசாதாரணமாக அந்த பிம்பம் எதுவும் இல்லாமல் உட்கார்ந்து இருப்பார். சந்தேகம் கேட்டுவிட்டால் சந்தோஷம் ஆகிவிடுவார். அவர்
சொல்லும் மொழி, சீடனுக்கு புத்தர்
சொல்லும் புரிதலோடு இருக்கும்.

நீதியரசர் ஜனார்த்தனம் அவர்கள் சந்தித்த வழக்குகள் குறித்து நான் ஒரு தொடர் எழுதினேன். எழுதப்பட்ட வரிகளில் ஏதோ ஒரு குழப்பம் ஆசிரியருக்கு. என்னை அழைத்து விட்டார். அவர் அதில் திருத்தம் போட்டு இருந்தார். என்னிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்தேன். சரி சார் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவரது அறைக்கதவைத் திறந்தேன். அப்பா... என்ன சத்தம்!

'நான் ஏதாவது திருத்திக் கொடுத்தா அப்படியே வாங்கிட்டு போயிடுவீங்களா? ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா?' என்றார். நடுங்கிவிட்டேன். அந்தக் கட்டுரையை அப்படியே அவரிடம் கொடுத்தேன். 'சாரி சார்' என்றேன். அப்படியே இறங்கிவிட்டார். மலர்ந்த முகத்தோடு எளிமையாக விளக்க ஆரம்பித்தார். அந்த கட்டுரையில் இருந்த தவறு மட்டுமல்ல, பொதுவாக எழுத்து நடைகுறித்தும் அவர் சொன்னார். ஒரு வார்த்தை
சொன்னாலும் நூறு வார்த்தை சொன்னதாக இருக்கும்.

பாலியல் பலாத்காரம் குறித்த ஒரு க்ரைம் கட்டுரை. வெளியூரில் இருந்து வந்திருந்தது. ஆசிரியர் அறைக்குள் கட்டுரை போனது. அரைமணிநேரத்தில் அழைப்பு வந்தது. பக்க வடிவமைப்பு நடக்கும் இடத்தில் நான் இருந்ததால் வாங்கி வரச் சென்றேன். 'சம்பவம் நடந்தபோது நிருபர் அங்கி இருந்தாரா?' என்று ஆசிரியர் எழுதி இருந்தார். எந்த செய்தியை விவரிக்க வேண்டும், எதை விவரிக்கக் கூடாது என்ற பாடம் அது.
வீரப்பன் பேட்டி தரத் தயாராக இருக்கிறார் என்று
சொல்லி அவரது அனுமதி கேட்கப்பட்டது. அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தேடப்படும் குற்றவாளியாக மட்டுமே பார்த்தார்.

எஸ்.பாலசுப்ரமணிம்

நான் எழுதிய ஒரு செய்தி நீதிமன்ற அவமதிப்புக்குள் ளானது. ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா வரிசையாக விடுவிக்கப்பட்டு இருந்தார். நீதிமன்றப் பயன்பாட்டுக்காக கார்களை அரசு கொடுத்துக் கொண்டு இருந்தது. இதற்கு மேல் அந்தச் செய்தியை விவரித்தால் மீண்டும் அவமதிப்பு ஆகிவிடும். ஆனந்த விகடன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றது அரசு. நீதிமன்றமும் அத்தகைய தீர்ப்பை அளித்தது. விவகாரம் பெரிதானதும் உண்மையில் நான் பயந்து போனேன். ஆசிரியர் அறைக்குள் போனேன். அவர் சொன்ன வார்த்தைகளை, வேறு எந்த ஆசிரியராவது இதுவரை சொல்லி இருப்பாரா என்பதை பத்திரிகையாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

'உங்க பேர்ல எந்தத் தப்பும் இல்லை. எப்ப ஒரு செய்தியை நான் ஓகே பண்ணினேனோ அப்ப அது உங்க செய்தி அல்ல, என்னோட செய்தி தான். அதுனால என் பேர்ல தான் தப்பு. நீங்க போகலாம்' என்றார். இப்போது இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகிறது. என்ன மனிதர்?

எழுத மட்டுமா சொல்லிக் கொடுத்தார். வாழச் சொல்லிக் கொடுத்தவர் அவர். எழுத்தாளனை, பத்திரிகையாளனை, படைப்பாளியை அவர் அளவுக்கு எவரும் மதிக்க முடியாது. திருத்தம் போடுவார். இந்தத் திருத்தம் போடலாமா என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார். நான்
சொல்வது சரியில்லை என்றால் என்னை கன்வின்ஸ் பண்ணுங்கள் என்பார். அவர் சொன்னதை நாம் ஏற்றுக் கொள்ளும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ அதே அளவு நாம் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளும் போது மகிழ்ச்சி அடைவார். 'ஓ அப்படிச் சொல்ல வர்றீங்களா?' என்பார். அப்போது காவிக் கறை படிந்த கடைவாய் பல் தெரிய அவர் சிரிக்கும் போது நமக்குப் பெரும் பட்டம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படும்.

திங்கள் கிழமை காலை என்றாலே காலையில் நான்கைந்து மணிநேரம் அவரோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவோடு அவர் கலந்துரையாடல் செய்வார். எத்தனை கதைகள், எத்தனை நிகழ்வுகள், படிப்பினைகள், தத்துவங்கள், லாஜிக்குகள்...
கொட்டிக் கொண்டு இருப்பார். அவரால் மனிதர்களைப் படித்தோம். அத்தனைக்கும் மேலாக அவரைப் படித்தோம். அந்தப் படிப்பு தான் இன்றுவரை பயன்படுகிறது. இறுதி வரை பயன்படப் போகிறது.

ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய அப்பழுக்கற்ற தன்மையை அவர் அடையாளம் காட்டினார். அப்படியே நடந்து கொண்டார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார். அது தன்னுடைய வேலை அல்ல என்பார். மக்கள் போராட்டங்களை ஆதரிப்பார். அதில் பங்கெடுப்பது பத்திரிகையாளர் வேலை அல்ல என்பார். அரசியல்வாதிகளைச் சந்திக்க மாட்டார். அவர்களிடம் ஏதாவது சலுகைக்காகச் கோர மாட்டார். மதம், சாதி உள்நோக்கத்துடன் செயல்பட மாட்டார். சாதியைக் காட்டி காக்கா பிடிக்க நினைத்தவர்களை கண்டித்திருக்கிறார். இறை பக்தி அதிகம் கொண்டவர். மூடநம்பிக்கைகள் இல்லாதவர்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்காதவர். சோதிடம் தனது பத்திரிகையில் தேவையில்லை என்பவர். அரசாங்கத்தை ஆதரிப்பது, ஆட்சியாளர்களை சந்திப்பது அவருக்குப் பிடிக்காது.

அவரது அறையில் இரண்டு ஐநூறு ரூபாய்
நோட்டுகளை சட்டகம் போட்டு வைத்து இருந்தார். 'மேடையில இருக்கிற இரண்டு பேர்ல யாரு எம்.எல்.ஏ.? யாரு மந்திரி?' என்று ஒருவர் கேட்பார். 'ஜேப்படி திருடன் மாதிரி இருக்கிறவர் தான் எம்.எல்.ஏ. முகமூடிக் கொள்ளைக்காரர் போல் இருக்கிறவர் தான் மந்திரி' என்பார் இன்னொருவர். இப்படி ஒரு அட்டைப்பட ஜோக் 05.04.1987 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியானது. ஆனந்த விகடன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தீர்ப்பளித்தார். 'என்னிடம் விளக்கம் கேட்காமல் தீர்ப்பு அளிப்பது மிரட்டல்' என்று சொன்னார் ஆசிரியர். 'வாழ்க இந்த ஜனநாயகம்' என்று தலையங்கம் எழுதினார்.கைது செய்யப்பட்டார் ஆசிரியர். நாடு முழுவதும் எதிர்ப்பு பலமானதும் மூன்றாவது நாளில் விடுதலை செய்யப்பட்டார். 'இந்த வடு என்றைக்கும் மாறாது அழியாது' என்று எழுதினார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.சீனிவாசன், ஆசிரியருக்கு சபாநாயகர் அளித்த சிறைத் தண்டனையை ரத்து செய்தார். சபாநாயகருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதமாக தரப்பட்ட ஆயிரம் ரூபாயைத்தான் (இரண்டு ஐநூறு ரூபாய்கள்) தனது அறையில்
 சட்டகம் போட்டு வைத்திருந்தார். அந்த ஆயிரம் ரூபாய் தான் ஆசிரியரின் அஞ்சாமைக்குச் சான்று.

சுஜாதா கதை வசனம் எழுதிய ஒரு படத்துக்கு ச்சீ என்று விமர்சனம் எழுதப்பட்டது. இனிமேல் ஆனந்த விகடனுக்கு எழுத மாட்டேன் என்று சுஜாதா மிரட்டினார். எழுதாவிட்டால் போகட்டும் என்றார் ஆசிரியர். சுஜாதா தான் பின்னர் இறங்கி வந்தார். சுஜாதா எழுத்தைக் கொண்டாடியவர் ஆசிரியர். அதற்காக அவரது எல்லாச் செய்கைகளையும் கொண்டாடுவதையோ தன்னிடமோ பத்திரிகையிடமோ அதீத உரிமை எடுத்துக் கொள்வதையோ ஆசிரியர் அனுமதிக்கமாட்டார். இதுதான் அவரது
தனித்தன்மை.

பத்திரிகை அதிபர் என்று அழைப்பதை விட பறவை அதிபர் என்று தன்னை அழைப்பதைத்தான் அவர் அதிகம் விரும்பியிருப்பார். படப்பையில் அவர் உருவாக்கி இருந்த பண்ணை தான் அவரது கோவில். விவசாயம் ஒரு பக்கம் நடக்கும். ஆள் உயரத்துக்கு முருங்கைக்காய், தேங்காய் அளவுக்கு கத்தரிக் காய் விளைவிப்பார். வித்தியாசமான காய்கறிகளைக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பார். திடீரென சமையல் செய்து கொண்டு வருவார். 'நாளைக்கு குழம்பு கொடுத்து அனுப்புறேன். நீங்கள் சோறு மட்டும் கொண்டு வந்துக்கோங்க' என்பார். மறுநாள் பெரிய பாத்திரத்தில் கொத்தமல்லி சிக்கன் வந்தது. சிக்கன் குழம்பு தான். ஆனால் கொத்தமல்லி செடி மூலமாக செய்யப்பட்ட குழம்பில் சிக்கன் கொதிக்க வந்து சேர்ந்தது. மறு நாள் அந்த குழம்பு வைக்கும் ரெசிபியை அதை விடச் சுவையாகச் சொல்லிக் கொடுத்தார். சில அதீதங்கள், அவரிடம் எழுதி வாங்கியும் சென்றார்கள்.

படப்பை பண்ணையில் பலவிதமான வண்ணங்களில் கிளிகள் இருக்கும். கிளிகளுக்கு உணவு ஊட்டும்போது அவர் முகத்தில் தாய்மை பொங்கும். ஒரு கிளி அவரை, ‘பாலு' என்று அழைக்கும். பாதாம் பருப்பை மென்று கிளிக்கு உணவாக ஊட்டுவார். இந்த பறவைகள் சரியாக சாப்பிடவில்லை என்று போனில் தகவல் வந்தால் அலுவகத்தில் அவர் மூட் மாறிவிடும். 'இப்ப மேட்டர் அனுப்பாதீங்க. எம்.டி.மூட் சரியில்லை' என்பார்கள். அந்தளவுக்கு ஆகிவிடுவார். வெள்ளை மயில்கள் வைத்திருந்தார். பறவை எப்போது முட்டையிடும், முட்டையிட்டது, உணவு என்ன தர வேண்டும் என்பதை எல்லாம் எழுதி வைத்திருப்பார். எங்களை ஒரு முறை குடும்பத்தோடு படப்பைக்கு வரவைத்தார். என் மூத்தமகள் அமிர்தா குழந்தையாக இருந்தாள். அப்போது அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு பறவைகளை வைத்து விளையாட்டுக் காட்டினார். அன்றைய சமையலும் சாப்பாடும் அமர்க்களம். இறுதியாகக் கிளம்பும்போது வெங்கடேஸ்வரன் கேட்டார், 'இவ்வளவு பரிவோட நீங்க பார்த்துக்கிறீங்க சார். உங்களுக்குப் பிறகு யாரு பார்த்துப்பா?' என்று கேட்டார். ஆசிரியர் அமைதியாக இருந்தார். கொஞ்ச நேரம் கழித்து சிரித்தார். 'யோசிக்கல' என்றார். இன்று இந்து ராம் அவர்களும் கெவின்கேர் ரங்கநாதன் அவர்களும் அந்த பறவைகளில் பாதியைப் பாதுகாக்கிறார்கள். பாதிப் பறவைகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தரப்பட்டு விட்டன. அவை அங்கு பாலுவைத் தேடிக் கொண்டு இருக்கலாம்.

உண்மையில் தேடிக் கொண்டு இருப்பவர்கள் அவரால் பத்திரிகையாளர்களாக உருவாக்கப்பட்ட இளம்படை தான். 'அவர் இல்லாவிட்டால் என்னவாக ஆகி இருப்போம் என்றே தெரியாது' என்பார் ரா.கண்ணன். ஆமாம், ஆசிரியரின்
எண்ணத்தில் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் உருவாகி இருக்காவிட்டால் தமிழ்ச்சமூகம் எத்தனையோ உன்னதமான, உண்மையான படைப்பாளிகளை இழந்திருக்கும். இதழியலும் எத்தனையோ படைப்புகளை இழந்திருக்கும். பறவைகளோடு சேர்ந்து நாங்களும் தேடுகிறோம். உங்கள் வெண்கலக் குரலும் வெடிச்சிரிப்பும், கொத்தமல்லி சிக்கனும், கசப்பான காப்பியும், எழுதிக்காட்டியதும், எழுத்தைப் பாராட்டியதுமாய் இன்னமும் இருக்கிறீர்கள் ஆசிரியரே!

பிப்ரவரி, 2019.