சிறப்புக்கட்டுரைகள்

இந்தியா சம்பூர் திட்டத்தை கைவிட்டால் நல்லது!

ஜெரா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். அவரிடம் அந்திமழைக்காகப் பேசினோம்.

வடக்கு கிழக்கு என தமிழ் தேசிய கூட்டமைப்பில்  முரண்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வடக்கு- கிழக்கு என்ற பாரபட்சம் இருப்பதாகச் சொல்ல முடியாது.   ஆனால், வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு பெருவெற்றிபெற்று ஆட்சியமைத்த பின்னர் அந்த மாகாணம் சகல தரப்பினராலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இலங்கை அரசும் சரி, கூட்டமைப்பினரும்சரி, ஏனைய கட்சிகளும் வடக்கை முதன்மைப்படுத்தியே பேசுகின்றனர். வடக்கில் மட்டுமே பிரச்சினையிருப்பதாக சர்வதேசத்துக்கு காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் அதைவிட அதிக பிரச்சினைகளை கிழக்கு மக்கள் எதிர் கொள்கின்றனர் என்பதை பற்றி பேசுவதற்கு யாருமில்லை.

கிழக்கு மாகாண மக்கள் இதுபோன்ற பாரபட்சம் இருப்பதாக உணர்கிறார்களா?

கிழக்கு மாகாண மக்கள் பாரபட்சம் இருப்பதை வெளிக்காட்டவில்லை. ஆனால் இறுதிப்போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வன்னிதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதே போர், 2006 தொடக்கம் 2008 வரை தீவிரமாக நடந்த இடம் கிழக்கு மாகாணம். வடக்கில் நடந்த உயிரழிவுகளுக்கும், சொத்தழிவுக்கும் குறைவானதாக இதை மதிப்பிட முடியாது. வடக்கைவிட கிழக்கு மக்கள் இன்னமும் சம்பூர், மூதூர் என அகதி முகாம்களில் மீளக்குடியமர்த்தப்படாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இன்னமும் செய்துதரப்படவில்லை. மேய்ச்சல் தரையிலிருந்து சுடுகாடு வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் நில அபகரிப்பு நடந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைகளையும் கூட்டமைப்பினர் முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களின் நிலைப்பாடு.

கிழக்கு மக்களின் வாழ்க்கை?

இலங்கையில் அதிக வறுமையில் வாழும் மக்கள் கிழக்கு மாகாணத்தில்தான் வாழ்கின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிலை இதில் இன்னும் மோசமாக உள்ளது. எப்போதும் இராணுவ புலனாய்வாளர்கள் அவர்களைப் பின் தொடர்கின்றனர். இந்தக் கெடுபிடிகளிலிருந்து தப்பிப்பதற்காக கிழக்கு மாகாண இளைஞர்கள் ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடல் வழியே தப்பிச் செல்லும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றது.

பெரிய வளர்ச்சிப்பணிகள் கிழக்கில் முன்னெடுக்கப்படுவதாக அரசு சொல்கிறதே?

உல்லாச விடுதிகளும், சுற்றுலா மையங்களுமே உருவாக்கப்படுகின்றன. பிரதான வீதிகள் மட்டுமே சீனாவின் நேரடிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. கிராம, உள்ளூர் வீதிகள் பயணம் செய்ய முடியாதளவுக்கு பழுதடைந்திருக்கின்றன. இந்தியா வழங்குவதாக உறுதியளித்திருந்த 50 ஆயிரம் வீடுகளில் 4 ஆயிரம் கிழக்குமாகாணத்துக்கு வழங்கப்பட்டது. அதிலும் ஊழல்தான் மிஞ்சியிருக்கிறது.

சம்பூர் மக்களின் நிலை?

இந்தியா சம்பூரில் அமைக்கவிருக்கின்ற அனல் மின்நிலையத்துக்காக சம்பூர் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். 7 வருடங்களாக அகதி முகாம்களில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எவ்வித வாழ்வாதார வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அந்த மக்கள் இதுவரை 7 இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். சம்பூரிலிருந்து வாகரை, மட்டக் களப்பு நகர், படுவான்கரை, திருகோணமலை நகர் மறுபடியும் சம்பூர்.  அம்மக்கள் தமது நிலம் தமக்கே வேண்டும் என போராடுகின்றனர். இந்தியா தனது திட்டத்தை கைவிட்டாலே அந்த மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும். அனல் மின் நிலையத்துக்கு இலங்கையில் வேறு இடங்களை தெரிவுசெய்யலாம். இதில் வேறு ஏதோ திட்டம் இருப்பதால்தான் மக்களின் அவலத்தையும் கருத்தில் கொள்ளாமல் இந்தியா சம்பூரை கைவசப்படுத்தியிருக்கின்றது.

ஜனவரி, 2014.