Image by Freepik 
சிறப்புக்கட்டுரைகள்

இந்திய இராணுவ வீரர்களை ‘மயக்கும்’ பாகிஸ்தானின் ஃபேக் ஐடிக்கள்; ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Staff Writer

சமூக ஊடகங்களில் பெண் பெயரில் ஃபேக் ஐடிக்களை வைத்துக்கொண்டு பணம் பறிப்பது, ஏமாற்றுவது குறித்து செய்திகள் அவ்வவ்போது வந்து, ‘உஷார்’படுத்தும்! இப்போது வெளியாகியிருக்கும் செய்தி, இந்த ஃபேக் ஐடிக்கள் அதாவது ஆண், பெண் பெயரில் ஒளிந்துகொண்டு ஏமாற்றி ரகசியங்களை பிடுங்குவதை பாகிஸ்தான் உளவு பார்ப்பதில் புதிய உத்தியாக கையாண்டுள்ளது.

இதுகுறித்து ஸ்க்ரால் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா காவல்துறை இந்திய அறிவியலாளர் பிரதீப் குருல்கருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போது, ஆன் லைன் ஹனி ட்ராப் மூலம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் உளவுத்துறையில் யுத்தி தெரியவந்துள்ளது.

ஹனி ட்ராப்பிங் என்பது காதல் அல்லது பாலியல் உறவுகள் மூலம் தகவல்கள் பெறுவதாகும். குருல்கரின் வழக்கு முதல் வழக்கு அல்ல. சமீப ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களால் ஹனி ட்ராக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹனி ட்ராப்பிங் என்பது உளவுத்துறை ஏஜென்சிகளால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான யுத்திதான் என்றாலும், இந்தியாவில் பதிவான வழக்குகள் உடல் தொடர்பு மூலம் அல்லாமல் ஆன் லைனில் நடத்தப்படுகின்றன !

மே 3 அன்று, மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனத்தின் (பொறியாளர்கள்) ஆய்வகத்தின் தலைவர் அறிவியலாளர் குருல்கர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் உளவுத்துறை முகவர் என்று கூறப்படும் ஜாரா தாஸ்குப்தா என்று தன்னை அடையாளப்படுத்திய ஒரு பெண்ணுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

அந்தப் பெண்ணால் கவரப்பட்ட குருல்கர், நிர்வாணப் படங்கள் மற்றும் செக்ஸ்டிங் பரிமாற்றத்தில் முக்கியமான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அக்னி ஏவுகணைகள் உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் திட்டங்களில் உறுப்பினராக உள்ள குருல்கர், பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபரும், பெண் பரிந்துரைத்த இரண்டு இணைய பயன்பாடுகளைப் பயன்படுத்தி மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் ஜூன் 2022 மற்றும் டிசம்பர் 2022 க்கு இடையில் தொடர்பு கொண்டிருந்தனர் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரியில், இந்தியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்த ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கசியவிட்டதாகக் கூறி ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள டிஆர்டிஓவின் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் மூத்த தொழில்நுட்ப அதிகாரி பாபுராம் டே கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேலாக டேயுடன் உரையாடியதாகக் கூறப்படும் பெண், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழை அறிவியல் மாணவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஜூன் 2022 இல், டிஆர்டிஓவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் ஒப்பந்த ஊழியரான டுக்கா மல்லிகார்ஜுன ரெட்டி, பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் சந்தேகத்திற்குரிய ஏஜெண்டுடன் பகிர்ந்துகொண்டதாகக் கூறி ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர்.

ரெட்டி சமூக ஊடகங்கள் மூலம் உளவு ஏஜெண்டிடம் தகவலைப் பகிர்ந்துள்ளார். நடாஷா ராவ் என்ற பேஸ்புக் கணக்கு, மார்ச் 2020 இல் ரெட்டியுடன் நட்பாக இருந்தது, அவர் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட டிஃபென்ஸ் ஜர்னலில் பணிபுரிந்ததாகவும், அவரது தந்தை முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்ததாகவும் கூறியுள்ளார். அந்தப் பெண் ரெட்டியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், டிசம்பர் 2021 வரை அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், அந்த சுயவிவரம் தன் பெயரை சிம்ரன் சோப்ரா என்று மாற்றி அவருடன் தொடர்புகொள்வதை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், இந்திய போர் விமானங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு பற்றிய விவரங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாகக் கூறி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேற்பார்வையாளரான தீபக் ஷிர்சாட்டை 2020 அக்டோபரில் மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரால் ஷிர்சாத் ஹனி டிராப்பில் சிக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் ஒரு பெண்ணாகக் காட்டி சமூக ஊடகங்களில் அவருடன் குறுஞ்செய்தி அனுப்பியதாக போலீஸார் தெரிவித்தனர். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ஒரு அரசாங்க பாதுகாப்புத்துறை நிறுவனம், இந்திய விமானப்படையின் சில விமானங்களை வடிவமைத்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அக்டோபர் 2018 இல், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் பணிபுரிந்த பொறியாளர் நிஷாந்த் அகர்வால் உளவு பார்த்ததாக உத்தரப் பிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் ராணுவ உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து "மிக முக்கியமான ஆவணங்கள்" மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், இந்தியா மற்றும் ரஷ்ய ஏவுகணை டெவலப்பர் NPO Mashinostroyeniya ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை தயாரிக்கிறது.

அகர்வால் ஹனி டிராப்பில் சிக்கியதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது. விசாரணையின் போது, அகர்வாலுடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களால் இயக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் - நேஹா ஷர்மா மற்றும் பூஜா ரஞ்சன் ஆகிய பெயர்களைக் கொண்ட பேஸ்புக் கணக்குகளை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இதேபோல், பணியில் இருக்கும் பல ராணுவ வீரர்களும் சமீபத்திய ஆண்டுகளில் ஹனி டிராப்பில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

ஜூலை 2022 இல், இந்திய இராணுவ வீரர் சாந்திமாய் ராணா, குர்னூர் கவுர், அங்கிதா மற்றும் நிஷா என்ற பெயர்களுடன் சமூக ஊடக கணக்குகள் மூலம் பெண்களைப் போல காட்டிக்கொண்டு பாகிஸ்தானிய முகவர்களால் ஹனி ட்ராப் செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானுக்கு இராணுவ தகவல்களை கசியவிட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

"மிக முக்கியமானதொரு படைப்பிரிவில்" பணியமர்த்தப்பட்ட மற்றொரு சிப்பாய் பிரதீப் குமார் பிரஜாபத், இதே அடிப்படையில் ராஜஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எனக் கூறி அந்த ஏஜென்ட், சமூக வலைதளங்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் அவரிடம் பேசியுள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததையடுத்து பிரஜாபத் தகவலை பகிர்ந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே மாதத்தில், டில்லி போலீஸ் இந்திய விமானப்படை சார்ஜென்ட் தேவேந்திர சர்மாவைக் கைது செய்தது, ஒரு பாகிஸ்தானிய ஏஜென்ட் பெண்ணாக நடித்து கணினியிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு நிறுவனங்கள் பற்றிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 2020 இல், பல கடற்படைத் தளங்களைச் சேர்ந்த 13 இந்திய கடற்படை வீரர்கள் பாகிஸ்தானிய செயல்பாட்டாளர்களால் ஹனி டிராப்பில் சிக்கிய பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டு கைதாகினர்.

பிப்ரவரி 2018 இல், ஒரு மாடலாக தன்னைக் காட்டிக் கொண்ட ஒரு பெண்ணுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அருண் மார்வாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். கிரண் ரந்தாவா மற்றும் மஹிமா படேல் ஆகிய இரண்டு கணக்குகளிலிருந்து நண்பர் கோரிக்கைகளை மர்வா ஏற்றுக்கொண்டார். இந்த சுயவிவரங்கள் போலியானவை என்றும், பாகிஸ்தான் உளவுப் பிரிவினரால் உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

மார்வாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான வெளிப்படையான வீடியோக்கள் மற்றும் அரட்டைகளை பாகிஸ்தானிய முகவர்கள் அவரை மிரட்டி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் அவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் அவர் தனது செயல்களை ஒப்புக்கொண்டார்.

2015 டிசம்பரில், இந்திய விமானப்படையின் ஜூனியர் வீரர் கே.கே.ரஞ்சீத், பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகளுடன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ரகசிய ஆவணங்களை பகிர்ந்துகொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். தாமினி மெக்நாட் என்ற போலி சமூக ஊடக சுயவிவரத்தால் ரஞ்சித் ஏமாற்றப்பட்டார்.

ஹனி ட்ராப்பிங் என்பது நீண்ட கால உளவு நடைமுறையாக இருந்தாலும், கடந்த காலத்தைப் போலல்லாமல், பாகிஸ்தானின் உளவுத்துறை முகவர்களுடன் இந்தியர்கள் பெண்களாகக் காட்டிக் கொள்வதும், காதல் - திருமணம் என்ற பெயரில் தகவல்களை கொடுப்பதும் முழுக்க முழுக்க டிஜிட்டல் வெளியில் நடந்துள்ளன.

இந்த போக்கு அதிகாரிகளை கவலையடைய செய்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய பாதுகாப்புப் படைகள் தங்கள் பணியாளர்களை தங்கள் துறை சார்ந்த உடையுடன் சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என்றும் அவர்களின் மற்ற விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். பணியாளர்கள் தங்கள் சாதனங்களில் முக்கியமான தரவை அனுப்பவோ அல்லது சேமிக்கவோ கூடாது என்றும், தெரியாத மின்னஞ்சல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய இணையதளங்களைத் திறக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாம் வழக்கமாக குற்றம் நடந்த பின்னர் அறிவிக்கப்படும் சில நடைமுறை வழிகாட்டிகள். எந்த அளவுக்கு பயன் தரும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியவரும். ஆனால், எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் ஆன் லைன் வழியாகவே தகவல்களை கறந்த பாக் உளவுத்துறை சமார்த்தியமானதுதான். இந்திய அதிகாரிகள் இவ்வளவு செக்ஸ் வறட்சியில் இருக்கிறார்கள் என்பதையும் சேர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.