தி.மு.க அரசை விமர்சனம் செய்து ‘ஆனந்த விகடனில்' அந்த வாரம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். வாரத்தில் ஒருநாள் சின்னக்குத்தூசியை அவரது அறைக்குச் சென்று சந்திக்கும் நான், அந்த வாரம் அவரைப் பார்க்கக் கூச்சப்பட்டுச் செல்லவில்லை. மறு வாரமும் செல்லவில்லை. மறந்திருப்பார் என்று மூன்றாவது வாரம் சென்றதுமே, முதல் கேள்வியே குத்தூசி அய்யா அவர்கள் அதை பற்றித் தான் தொடங்கினார்.
‘‘ஏன் சார் ரெண்டு வாரமா இங்க வரல?'' என்றார். ‘‘வேலை அதிகமா இருந்தது சார் '' என்று சமாளித்தேன். ‘‘ வாரா வாரம் இங்க வந்து என்னை பார்க்கிறதும் ஒரு வேலைதான் சார். வராம இருந்துராதீங்க சார். அதாவது என்னையே திட்டி எழுதினாக் கூட தைரியமா இங்க வரலாம் சார்,'' என்றார். கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘‘நான் பாவம் இல்லையா சார்'' என்றார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. பத்து ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு பதில் தோன்றுகிறது. சின்னக்குத்தூசி ‘பாவம்' அல்ல. ‘புண்ணியம்'. கலைஞர் செய்த புண்ணியம் தான் அவருக்கு இப்படி ஓர் எழுத்து ஊன்றுகோல் கிடைத்தது. சின்னக்குத்தூசி செய்த புண்ணியம்தான் அவருக்கு ‘நக்கீரன்' கோபால் போன்ற தெய்வமகன் கிடைத்தது. சின்னக்குத்தூசியின் அக வாழ்க்கையை இயக்கியவர் கலைஞர் புற வாழ்க்கையை இயக்கியவர் கோபால். இருவரும் இல்லாவிட்டால் குத்தூசி இல்லை! அவர் எழுத்துக்கள் இல்லை.!
எழுதுவதற்கு என்ன வேண்டும்? ‘மூட்' வேண்டும், ‘ஆள் அரவமற்ற அறை' வேண்டும். ‘வசதி' வேண்டும் , ‘மன இயல்பு' வேண்டும் . ‘அமைதி வேண்டும்' , ‘உடல் நலம்' வேண்டும், இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்வார்கள். இது எதுவும் வேண்டாம் சின்னகுத்தூசிக்கு. எழுதுகோலும், எழுத தாளும் வேண்டும். அவ்வளவுதான். எதிரிகளை செதுக்கித் தள்ளிவிடுவார். தீராத வயிற்று வலி, மெல்லிய துண்டை ஈரத்தில் முக்கிப் பிழிந்து வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு எழுதினார். தீராத தலைவலி, சணலை வாங்கி தலையில் இறுக்கக் கட்டிக்கொண்டு எழுதினார். ஒரு நாளல்ல, ஒரு வாரமல்ல, பல வாரங்கள் இப்படி எழுதியிருக்கிறார். மூல வியாதி, உட்கார முடியாது, எழுதினால் தான் காசு, அது வந்தால் தான் சோறு, நாளிதழ்களை தனது வயிறு வரை அடுக்கி வைத்துக் கொண்டு, நின்று கொண்டே எழுதினார். பதிப்பகங்களுக்கு மெய்ப்பு பார்த்து கொடுத்தார். வலது கை சரியாக இருந்தால் போதும், வேறு எந்த வசதியும் அந்த மனிதருக்கு தேவையில்லை.
குயில் தோப்பு பாலு, கொக்கிரக்குளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், ஆர்.ஓ.மஜாட்டோ, தெரிந்தார்க்கினியன், திட்டகுடி அனிப், தர்மபுரி வெங்கடேஷ், வில்லேந்தி ஆருர் அன்புதம்பி, திரு ஆரூரான், கொலம்பஸ் தாத்தா என்று பல பெயர்களில் எழுதிய சின்னக்குத்தூசியின் சொந்தப் பெயர் இரா. தியாகராஜன். எவ்வளவு விநோதமான பெயர்கள்? இப்படி வினோதமான பல்வேறு பெயர்களில் எழுதியது பெரியாருக்கு பிறகு சின்னக்குத்தூசிதான். நேரில் கண்டவன், ஒரு நிருபர், கவனித்தவன், எவனெழுதினாலென்ன, அணுகுண்டு, ஈட்டி, ஊர் சுற்றி, யார் கூறினாலென்ன, ஸ்குரு லூஸ், புளுகு மூட்டை, தேசத்துரோகி, ஒரு சந்தேகி , இப்படி பல பெயர்களில் பெரியார் எழுதினார். பின்னர் சின்னக்குத்தூசி எழுதினார்.‘‘ எதனால் இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். ‘‘நம்மோட கொள்கையை யாராவது லேசா உரசிட்டாங்கன்னு தெரிஞ்சதும் உடனே பேப்பரை எடுத்து எழுத ஆரம்பிச்சிடுறேன்'' என்றார். சதத் ஹாசன் மண்டோ சொன்னார் : ‘‘ஒரு எழுத்தாளன் தனது உணர்வின் மீது கேள்வி எழுப்பப்படும் போது தான் பேனாவை கையில் எடுக்கிறான். மற்றபடி அவன் அநாவசியமாக எழுதுவதில்லை.'' அநாவசியமாய் எழுதியவர் அல்ல சின்னக்குத்தூசி .
அவர் எழுதிக் குவித்தவை இன்னும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. தொகுக்க முடியுமா என்றும் தெரியவில்லை. பெருந்தலைவர் காமராசரின் உத்தரவால் ‘நவசக்தியில்' அவர் எழுதிய தலையங்கங்கள் , பழ.நெடுமாறனால் ‘நாத்திகம்' இதழில் எழுதியவை, வேலூர் நாராயணனால் ‘அலை ஓசை'யிலும், ஆற்காடு வீராசாமியால் ‘எதிரொலி'யிலும் எழுதிக் குவித்தவை, பின்னர் கலைஞரோடு கை கோர்த்து முரசொலியில் (1980 முதல் 96 வரையும், பின்னர் 2001 முதல் 2011வரையும்)கொட்டித்தீர்த்தவை. நான் கேட்டுக்கொண்டதால் விகடன் இணையத்திலும் பின்னர் ஜூனியர் விகடனிலும் எழுதியவை, 1996 முதல் 2011 வரை கோபால் அவர்களுக்கு தந்தையாய் ஆசிரியராய் இருந்து நக்கீரனில் வடித் தவை எனத்தொகுத்தால் எத்தனை ஆயிரம் பக்கம், தேறும்? இவை போக சிறு பத்திரிகைகள், பெரும் பத்திரிகைகளின் தனிக் கட்டுரைகள், 1960 முதல் 2010 வரையிலான ஐம்பதாண்டு காலம்
சின்னக்குத்தூசிதான் தமிழ் பத்திரிகையுலகில் அரசாட்சி நடத்தி வந்த பெரும் பேனாக்காரர்! சலிப்பே தட்டாமல் இத்தனை ஆண்டுகள் எப்படி எழுத முடிந்தது? மை விட்டு எழுதினால் தீர்ந்து போயிருக்கும்; இரத்தத்தால் எழுதினார். ஊறிக்கொண்டே இருந்தது.
சென்னை திருவல்லிக்கேணி, ஸ்டார் திரையரங்கம் எதிரில் உள்ள வல்லப அக்ரஹாரம் தெருவில் ஒரு மேன்சனில் நிற்க கொஞ்ச இடமும் படுக்க கொஞ்ச இடமும் விட்டு, அறை முழுக்க புத்தகங்கள், பத்திரிகைகள், குறிப்புகள், தாள்கள். ஒரே ஒரு தண்ணீர்க் குடுவை, நூற்றுக்கணக்கான மாத்திரைகள், நாலைந்து கதர் வேட்டி சட்டைகள், ஒரு கண்ணாடியும் , சீப்பும், முகம் மழிக்க ஒரு செட், ஒரு ஜோடி செருப்பு, & இவைதான் அந்த அறைக்குள் இருந்த சொத்து, புத்தகங்கள் இதழ்கள், சேர்ந்து,
சேர்ந்து தூசிபடிந்து அதுவே அவரைச் சிறுக சிறுக சிதைத்து வந்தது. ‘‘எதுக்கு சார் இவ்வளவு சேர்த்து வைக்கிறீங்க? உங்க உடம்புக்கே இது கெடுதலே'', என்று ஒருவர் கேட்டார் . ‘‘ முடி வெட்டுபவர் கடையில் போய் ஏன் முடியா இருக்கு என்று கேட்பீர்களா?'' என்று திருப்பிக் கேட்டார் சின்னக்குத்தூசி. அந்த மனிதர் வாய் திறக்கவே இல்லை, இவர்தான் வாயைத் தைத்து விட்டாரே !
அறை என்பது புத்தகங்களை வைப்பதற்கானதாகவும் அதில் தானும் தங்க இடம் இருக்கிறது என்பது போலவே அவர் எண்ணம் இருக்கும். ஒரு அறையில் இருந்தார், அதில் இவரே உள்ளே போக முடியாத அளவுக்கு புத்தகம் சேர்ந்தது. பக்கத்து அறையை பிடித்து அதில் இருந்தார், அதுவும் அப்படியே ஆக தொடங்கியது. பக்கத்து மேன்சனுக்கு போய் ஒரு அறையை பிடித்தார் , அதுவும் அப்படியே மாறத் தொடங்கியது. அது நிறைவதற்கு முன்பே இவரது வாழ்க்கை நிறைவு பெற்றது(பிறப்பு : 15.7.1934, இறப்பு: 22.5.2011)
புத்தக அறைக்கு தனது தாய் ‘கமலம்‘ பெயரைச் சூட்டி இருந்தார். அப்பா பெயர் இராமநாதன், திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் இருந்த தினகர விலாஸ் என்ற உணவகத்தின் சரக்கு மாஸ்டர். அம்மா கமலம் வீடு வீடாகச் சென்று சமையல் வேலை செய்து வந்தவர். திருவாரூர் கமலாலயம் மேலக்கரையில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் கமலம் வேலை பார்த்தார். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஜம்பும்மா மூலமாகத் தான் பள்ளி மாணவனான தியாகராஜனுக்கு ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் அறிமுகம். ஜம்பும்மா சொல்லும் கதைகளை இவர் சத்தம் போட்டு படித்து காண்பிப்பார். அதேபோல் தினகர விலாஸ் உணவகத்தின் உரிமையாளரான ஆர்.டி.ராஜன் வீட்டில் ‘ஆனந்த விகடன்' தொகுப்புகள் வரிசையாக இருந்ததும் இவருக்கு படிக்க கிடைத்தது. சனி , ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வந்து படித்து செல்லலாம் என்று ஆர்.டி.ராஜன் அனுமதி தந்ததாக குத்தூசி
சொல்லி இருக்கிறார். முதலில் சிரிப்புகள், பின்னர் கதைகள், அடுத்து கட்டுரைகள், என வாசிக்க தொடங்கி எழுதவும் தொடங்கினார்.
சிறுவர் இதழ்களில் எழுதினார். பள்ளிப்படிப்பு முடிந்ததும் கவியரசு கண்ணதாசனின் ‘தென்றல்' இதழில் ஆரூர் அன்புத்தம்பி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதினார். தோழர் ஜீவா நடத்திய ‘தாமரை‘யிலும் இவரது கதைகள் வெளியாகியுள்ளது. நாரண துரைக்கண்ணனின் ‘பிரசண்ட விகடனில்' தொடர்கதையே எழுதியுள்ளார்.
பள்ளிப்படிப்பை முடிக்கும் கட்டத்தில் திருவாரூர் திராவிடர் கழகத் தோழர்களுடன் தொடர்பு ஏற்பட, அவர்கள் மூலமாக திருச்சி சென்று தந்தை பெரியாரை சந்திக்கிறார். அவரது ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்கிறார். மணியம்மைதான் இவருக்கு பணம் கட்டுகிறார். படிப்பு முடிந்ததும் நிரந்தர பள்ளி ஆசிரியப்பணி இல்லாமல் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றுகிறார். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், ஈ.வே.கி சம்பத்தின் தமிழ் தேசிய கட்சி ஆகிய அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. சம்பத் காட்டிய அன்பில் தமிழ் தேசிய கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளராகவும் ஆகிறார். அது அப்படியே காமராசர், கண்ணதாசன், பக்தவத்சலம், பழ.நெடுமாறன், எம்.கே.டி. சுப்ரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, ஆகியோருடைய நட்பாக மலர்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அந்த காலகட்டத்தில் செயல்பட்டு வந்த வீராங்கனை மணலூர் மணியம்மாவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் வீரமணி, மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர்களுடன் நெருக்கமாக இருந்தார். கலைஞரோடு கலைஞராகவே இருந்தார். கலைஞருக்குக் கூட தான் எடுத்த நிலைப்பாட்டில் ஏதாவது விமர்சனம் இருக்கும், ஆனால் இவருக்கு இருக்காது. ‘‘எங்கே இருந்து எழுதினாலும் திராவிடர் இயக்கச் செயல்பாடுகளை ஆதரித்தே எழுதுவேன். தி.மு.க அனுதாபி என்ற முத்திரையோடுதான் எழுதுவேன்.
சமூக நீதிக்கண்ணோட்டத்துடன் தான் எழுதுவேன்,'' என்பார். நான் விமர்சித்து எழுதும்போதெல்லாம் ‘‘உங்களுக்கு எப்ப சார் பூணூல் கல்யாணம்?'' என்று கேட்பார். ‘‘உங்களுக்கு தெரியாமல் நடத்தமாட்டேன் சார்'' என்பேன். ‘‘பத்திரிக்கை அச்சடித்து நானே நடத்துவேன்'' என்பார். அந்த இளகிய உடல் எவ்வளவு வன்மையான விமர்சனத்தையும் தாங்கும், அழகாய் பதில் விமர்சனங்களை அடுக்குவார். அவரது பதில்கள் குழப்பம் இல்லாமல் இருக்கும்; வரிசையாக கோர்வையாக இருக்கும். ஒரு முடிவைச்சொல்லி தனது வாதத்தை நிறைவு செய்வார். ஒரு கட்டுரை படித்தது போல இருக்கும். அந்த உடம்புக்குள் எத்தனை லட்சம் செல்களோ, அதைவிட பலகோடித் தகவல்கள் உறைந்து கிடந்தன, அவரது இரண்டு பக்க கட்டுரையை படித்தால் நாம் 20 பக்கம் எழுதிவிடலாம், அவ்வளவு தகவல்களாக இருக்கும்.
அவருக்கு முன்னால் போய் உக்கார்ந்ததும் இரண்டு கேள்விகளை என்னிடம் கேட்பார். இந்த வாரம் என்ன படிச்சீங்க என்பது ஒன்று. அடுத்த வாரத்துக்கு என்ன எழுதியிருக்கீங்க என்பது இரண்டு. இதிலிருந்துதான் அன்றைய உரையாடல் தொடங்கும். அந்த இரண்டு கேள்விக்கான பதிலோடுதான் நான் செல்வேன். திருவல்லிக்கேணி கஸ்தூரி சீனிவாசன் நூலகத்துக்கு என்னை அழைத்து சென்று ‘‘உங்களுக்கு இங்கு நல்ல தீனி கிடைக்கும்'' என்று சொல்லி உறுப்பினர் ஆக்கி விட்டவர் அய்யாதான். இந்திய விடுதலைபோராட்ட காலகட்டத்து நூல்களை அங்கிருந்துதான் பெற்றேன். வாரம் தோறும் அங்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். அறிவாலயம் ‘பேராசிரியர் ஆய்வு நூலகம்' நூலகர் சுந்தரராசனை அறிமுகம் செய்தவரும் அவர்தான்.
புத்தகங்களை படிப்பதன் மூலம் அரைகுறை வரலாறுகளைத்தான் அறியமுடியும், பத்திரிகைகளை படித்தால்தான் முழுமையான வரலாறு அறிய முடியும் என்று சொல்வார். அதிலிருந்தான் பழைய இதழ்களை தேடித் தேடி படிக்க தொடங்கினேன். படித்ததை அவரோடு பகிர்வதும், அதற்கு அவரிடம் இருந்து பதில் பெறுவதும் குருகுல காலமாகவே போனது.
தந்தை பெரியார், குன்றக்குடி அடிகளார், கலைஞர், கண்ணதாசன், ஜெயகாந்தன் என்று ஒவ்வொரு ஆளுமை குறித்தும் அவர் சொன்ன நிகழ்வுகள் அரியவை. எங்கும் வாசிக்க கிடைக்காதவை, இந்த நிகழ்வுகளை எழுதச் சொன்னேன். ‘‘அதெல்லாம் வேண்டாம் சார், யாரும் நம்ப மாட்டாங்க. இவங்களோட நான் இருக்குற மாதிரி ஒரு போட்டோ கூட இல்லையே'' என்று சிரிப்பார்! கலைஞருடனான நினைவுகளையாவது எழுதுங்கள் என்றேன். ‘‘கதவுக்குப் பக்கத்தில் வேலைக்காரன் உட்கார்ந்திருக்கிறான் என்பதற்காக அவன் முதலாளிக்கு சொந்தக்காரன் ஆகிவிட மாட்டான். நான் முரசொலி ஊழியன், அவ்வளவுதான் '' என்ற வார்த்தைகள் படார் என அடிப்பது மாதிரி இருந்தது.
கலைஞர் உடல் நலம் பாதிக்கபட்டு (2009 காலகட்டத்தில் ) ஒன்றரை மாத காலம் முரசொலி அலுவலகம் வராமல் இருந்தார், அப்போது தான் இவரே கோபாலபுரம் வீட்டுக்குப் போனதாய்ச் சொன்னார். கலைஞரின் வேலைக்காரராக சின்னக்குத்தூசி நினைத்து கொண்டாலும் , கலைஞர் இவரை மூளைக்காரராகத்தான் மதித்தார். எப்போது சந்தேகம் வந்தாலும் முதல் அழைப்பு குத்தூசிக் குத்தான் வரும்.
பெரியாருக்கு குத்தூசி குருசாமி, அண்ணாவுக்கு கலைஞர், இராஜாஜிக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி, காமராசருக்கு டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோர் எழுத்தரண் கட்டி நின்றார்கள் என்றால் கலைஞருக்காக நின்றவர் சின்னக்குத்தூசி. கலைஞரை அந்த ஊசி காக்கும், அல்லது அவரது எதிரிகளைக் கிழிக்கும். இதற்கு மேல் அவருக்கு எந்தப் பற்றும் இல்லை. கொஞ்சம் திருவாரூர் பற்று இருக்கும். அதுவும் நண்பர்கள் பற்றே தவிர குடும்பப் பற்று இல்லை. ‘‘ஏன் சார் திருமணம் செய்து கொள்ளவில்லை?'' என்று கேட்டால் சிரிப்பார். பள்ளி ஆசிரியை ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்வார் என்று அவரது அம்மா நினைத்ததாகச் சொன்னாரே தவிர , அப்படி இவர் நினைத்ததாகச் சொல்லவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட இறுதிக்காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் போனதால் படும் துன்பம் குறித்து வருத்தம் அவருக்கு இருந்தது.‘அத இப்ப ஏன் சார் பேசிக்கிட்டு?' என்பதே அந்த வருத்தத்தின் பதிவு. அவர் எழுத்தைத் திருமணம் செய்து கொண்டவர், எழுத்தே அவரை கடைசி வரை கவனித்துக்கொண்டது. பில்ரோத் மருத்துவமனையில் இருந்த போதும் எழுதினார். வல்லப அக்ரஹார ஜமா, பில்ரோத்திலும் தொடர்ந்தது. ‘‘இருங்க சார் போகலாம், என்ன அவசரம்'' என்பார். ‘‘இது மருத்துவமனை ரொம்ப நேரம் இருக்க கூடாது'' என்பேன் .‘‘மேன்ஷனும் மருத்துவமனையும் ஒன்றுதான், வாடகை தரோம்ல சார்,'' என்பார். எப்போதும் எழுதிக்கொண்டும் எழுத்தைப் பற்றி பேசிக்கொண்டும் இருந்தால் போதும், 77 வயது வரை வாழ வைத்தது மாத்திரைகள் அல்ல; எழுத்துக்கள்.
‘இவ்வளவு உழைத்திருக்கிறேனே எனக்காக இந்த இயக்கம் என்ன செய்தது?' என்று தனிமையில் கூட நெருக்கமானவர்களிடத்தில் கூட பேசி இருக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் உள்ளத்தால் கூட அப்படி நினைத்திருக்க மாட்டார் ‘ உள்ளத்தால் உள்ளலும் தீதே ! என்று நினைக்க வாழ்ந்த எழுத்து வள்ளுவன்.
‘இந்த தேசம் அங்கீகரித்த தியாகிகள் எல்லாம், அறிவிக்கப்படாத துரோகிகள்' என்று எனது பள்ளிப் பருவக்காலத்தில் இளவேனில் எழுதினார். இதை ஒருமுறை சின்னகுத்தூசியிடம் சொன்னேன். ‘‘இதே போல் நான் எழுதியதையும் சொல்வீங்களா சார்!'' என்று கேட்டார். நீங்கள் எழுதிக்குவித்ததை வைத்துதான் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கிறோம் சார்!
அக்டோபர், 2018.