சிறப்புக்கட்டுரைகள்

இதுவும் கடந்து போகும்

ராம்பாபு

துன்பம் இல்லாத மனிதர்கள் யாரும் உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் இதற்குப் பதில். அது எதனால் வருகிறது? அதை எப்படித்தாங்கிக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. இன்ப துன்பம் என்பது இரவு பகல் போல் மாறிமாறி வரும். இதை உணர்ந்து துன்பங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்பவர்களே வெல்கிறார்கள். சிலர் சின்ன துன்பத்தைப் பெரிதாக எண்ணுவர். வேறு சிலர் பெரிய துன்பத்தையும் மிகச்சிறியதாக எண்ணுவர். கடவுளிடம் போய் தேங்காய் உடைத்து சாமி கஷ்டமே எனக்குக் கொடுக்காதே என்று வேண்டிக்கொள்கிறோம். ஆனாலும் உலகில் கஷ்டப்படாதவர்கள் யாருமே இல்லை. ஆகவே கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்போது கஷ்டமே வேண்டாம் என்று கேட்பதில் பிரயோசனமில்லை. எந்த கஷ்டமாக இருந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் வல்லமையைத் தருக என வேண்டிக்கொள்வதே நல்லது. அதுவே எதார்த்தமும் கூட. உயரத்திலிருந்து விழுவதை கடவுள் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் பறப்பதற்காக இறக்கைகளை அவர் தரலாம்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்கேற்ப துன்பங்கள் உண்டு. சிலருக்கு சாப்பாட்டு கஷ்டம். சிலருக்கும் குடும்பக் கஷ்டம். சிலருக்கு பணத்தை எங்கே சேமிப்பது என்று கஷ்டம். ஆனால் பலருடைய துன்பங்களைப் பார்க்கையில் நம்முடைய துன்பம் என்பது மிகச்சாதாரணமாக இருக்கும். இதை உணர்ந்துகொள்ளவேண்டும். நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்ற திரைப்பாடல் நினைவுக்கு வருகிறதா?

செருப்பே இல்லை என்று துன்பப்படாதே; காலே இல்லாமல் நடக்கமுடியாமல் துன்பப்படுபவனைப் பார்த்து ஆறுதலடை என்கிறார் புத்தர்.

சுவாமி சின்மயானந்தாவின் உரை ஒன்றில் நான் கேட்டது இது. ஒரு குருவிடம் சீடர் கேட்டார். நான் கடும் துன்பத்தில் இருக்கும்போது எனக்கு ஆறுதல் தரக்கூடிய வார்த்தை ஒன்று சொல்லித்தாருங்கள்.

குரு கண்ணை மூடி அமர்ந்து மெல்ல சொன்னார்: Even this will pass away.  இதுவும் கடந்துபோகும். அதாவது இதுவும் நிரந்தரமில்லை. இக்கணமும் கடந்து சென்றுவிடும். எனவே வருத்தப்படுவதில் பொருளில்லை.

மகிழ்ச்சியில் இருக்கும்போதும் துன்பத்தில் இருக்கும் போதும் இந்த வாசகத்தை நினைத்துக்கொள்வது சமநிலை அடைய உதவும்.

உலகில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பொருளிலும் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நடக்கின்றன. ஒருகணம் முன்பு பார்த்த பொருளில்லை; மறுகணம் காண்பது என்பது பௌத்தம். எந்த அழகான விஷயம் நிலைத்து இருக்கிறது? பூக்கள் வாடிவிடுகின்றன. அழகிய பெண் அல்லது ஆண் வயதேறிவிடுகிறார்கள்.

ஒரு மாதம் முன்பு ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. திருமண நாள் நெருங்கியது. பத்திரிக்கைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். தந்தையார் மட்டும்தான். தாய் இல்லை. திருமணத்துக்கு நான்கு நாள் முன்பாக  தந்தையாருக்கு திடீரென மாரடைப்பு. எங்கள் மருத்துவமனையில் சேர்ததனர். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். மணமகனோ எப்படியவது நான்கு நாட்கள் திருமணம் முடியும் வரை உயிருடன் இருந்தால் போதுமே என்று வேண்டினார். தந்தையாருக்கு 54 வயதுதான். அவர் மூன்றுநாள் போராடி, திருமணத்துக்கு முதல்நாள் இறந்துவிட்டார். என்னென்ன அலர் பேசியிருப்பார்கள் நினைத்துப்பாருங்கள். அந்த இளைஞனுக்கு இதைவிட என்ன துன்பம் வேண்டும்?

அந்த இளைஞர் துணிச்சலாக முடிவெடுத்தார். ஒரு நாள் தந்தையின் உடலை மார்ச்சுவரியில் வையுங்கள் என்று சொல்லிவிட்டு திருமணம் செய்துகொண்டு, அந்த மஞ்சள் காயாமல் தந்தைக்கு கிரியைகளைச் செய்ய திரும்பிவந்தார். அப்போதுதான் அவரைக் கண்டேன். தேனிலவுக்குச் செல்லவேண்டியவர் தந்தைக்கு ஈமக்கிரியைகளைச் செய்யவேண்டியிருக்கிறதே என்று வருந்தினேன்.

 எல்லோரும் தங்கள் துன்பமே உலகில் பெரிது என்று நினைப்பார்கள். ஆனால் உலகில் பிறரின் துன்பங்களைப் பார்த்தால்தான் தங்கள் துன்பம் எவ்வளவு சிறியது என்று உணருவார்கள்.

ஜூலை, 2016.