சிறப்புக்கட்டுரைகள்

இது ஓர் அதிசயமான போராட்டம்

சி. மகேந்திரன்

முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்களின் போராட்டங்கள் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது 1968ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த மாணவர் போராட்டங்களும் இந்திய விடுதலையின் போது நடந்த மாணவர் போராட்டங்களும் நினைவுக்கு வருகின்றன.இவற்றைவிட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு போராட்டப் பாரம்பரியம் இருப்பதாகவே நான் சொல்லு வேன். இந்திய விடுதலைப்போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் அதிக அளவில் தமிழகமாணவர்கள் பங்கேற்றார்கள். அதன்பின்னர் 65- இல் நடந்த மொழிப்போராட்டம் நிறைய விளைவுகளைத் தமிழகத்தில் ஏற்படுத்தியதை நாம் பார்க்க முடிந்தது. 83 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி,ஜெகன் உட்பட ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டபோது பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இப்போது அவற்றையும் தாண்டிய அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் மாணவர்களுக்குக் கல்வி என்பது இவ்வளவு சுமையான விஷயம் கிடையாது.  இன்று இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதுபற்றிக் கவலைப்படாதே நீ வெளிநாட்டுக்குப் போய் வெற்றி பெறக்கூடியவன் என்றும் அவனுக்குச் சொல்லப்படுகிறது. சுயநிதிக்கல்லூரிகள் அவர்களை இயந்திரங்களாகவே மாற்றிவிட்டன என்றுகூடச் சொல்லலாம். இவ்வளவு தடுப்புச் சுவர்களைத் தாண்டி அவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பதும் அதற்காக உறுதியுடன் களத்தில் நிற்பதையும் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.  முன்பெல்லாம் மாணவர்கள் போராட்டம் என்றால் பத்துப் பேருந்துகள் தீக்கிரையாகியிருக்கும்; நூறு பேருந்துகள் சிதைக்கப் பட்டிருக்கும். ஆனால் இப்போது மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று தொடங்கியபோது வன்முறை என்று சொல்லி அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தவர்களை ஒடுக்கிவிட்டது. மாணவர்கள் அடர்த்தியான உள்ளடக்கத்தைக் கொண்ட அதேசமயம்  தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் போராட்டங்களை எடுத்துச் செல்கிறார்கள். இதற்கு ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் இணங்கி நிற்கிறது. தமிழுணர்வு அடிப்படையிலான இந்தப்போராட்டத்தின் நியாயங்கள் யாராலும் மறுத்துப் பேசமுடியாதபடி எல்லாத்தளங்களிலும் சரியான முறையில் எடுத்து வைக்கப்படுகின்றன. லயோலா கல்லூரியில் உண்ணாவிரம் இருந்த மாணவர்கள், தங்களுடைய பெயர்களையே பொதிகைச்செல்வன் என்றும் வெற்றிக்குமரன் என்றும் மாற்றிக்கொண்டதை நான் பார்த்தேன். அவர்களில் ஒரு மாணவரின் தந்தை, எனக்கு மூன்று பிள்ளைகள், அவர்களில் உன்னை இதற்காக அனுப்புகிறேன், நீ இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றுத் திரும்ப வேண்டும் என்று  சொன்னார். மாணவர்களின் முதல்தடுப்புச்சுவர் என்று கருதப்பட்ட பெற்றோர்களின் மனநிலையை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

மாணவர்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தே போராடுகிறார்கள். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் அதற்கான சுதந்திரமான சர்வதேசவிசாரணை வேண்டுமென்பதையும் வலியுறுத்திச் சொல்கிறார்கள். இவற்றை இந்தியஅரசு முன்னெ டுக்க வேண்டும் என்பதற்காக இந்தியஅரசை நோக்கிக் கோரிக்கைகள் வைக்கிறார்கள். ஐநா மன்றத்தின் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்தது இந்தியஅரசுதான் என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி கொலைகாரன் ராஜபக்சேவை காமன்வெல்த் நாடுகளின் தலைவராக ஆக்குவதற்கும் இந்தியஅரசு முயல்கிறது என்பதையும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுடைய கோரிக்கைகள் மத்தியஅரசை நோக்கியதாகவே இருக்கிறது. இன்னும் ஐந்துமாதங்களில் மறுபடி கூடவிருக்கிற ஐநா மன்றக் கூட்டத்தில் இந்தியா சரியான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதும், இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தை கனடா புறக்கணித் தது போல இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களின் தொலைநோக்குப் பார்வையுள்ள இந்தப்போராட்ட வழிமுறைகளும் மத்தியஅரசை நிச்சயம் அசைத்துப் பார்க்கும்.

மாணவர்கள் தேர்வு நேரம் வந்தால் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று அரசாங்கம் கணக்குப் போடுகிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு வரலாற்றில் நிலைபெறுகிற ஒரு நிகழ்வை மாணவர்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.  தமிழத்தில் ஈழஆதரவு அல்லது இலங்கைஅரசுக்கு ஆதரவு என்கிற இரண்டு நிலைகளில்தான் அரசியல்கட்சிகள் இருக்கின்றன. ஈழஆதரவு கட்சிகள் இந்தப்போராட்டங்களால் மேலும் அதை நோக்கி வேகமாகச் செயல்பட முனைந்திருக்கினறன. இலங்கையை ஆதரிப்பவர்கள் நாம் இந்த மாணவர்களால் மட்டுமல்ல மக்களாலும் நிராகரிக்கப்படுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.இம்மாதிரியான அழுத்தத்தை அந்தக்கட்சிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள் மாணவர்கள். மத்தியஅரசுக்குக் கோரிக்கை அரசியல்கட்சிகளுக்கு நியாயமான அழுத்தம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் இப்போராட்டங்கள் செய்துகொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிக்கு அரசுகள் அடிபணிவதை நாம் காண்கிறோம். எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் அண்மையில் இவற்றை நாம் கண்டோம். அதை விடுங்கள், இங்கே இதுவரை இந்தச் சிக்கல் பற்றி வாயே திறக்காத மத்தியஅமைச்சர் சிதம்பரம் மற்றும் காங்கிரஸ்காரர்களை வாய்திறக்க வைத்தது எது? திமுகவை அரசிலிருந்து வெளியேற வைத்தது எது? எனவே மாணவர்கள் போராட்டம் உடனடியாகச் சில வெற்றிகளையும் தொலைநோக்கில் இனத்துக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவும் துணைநிற்கும்.

(தொகுப்பு: அ.தமிழன்பன்)

ஏப்ரல், 2013.