சிறப்புக்கட்டுரைகள்

இதழியல் ஆய்வாளர்

முத்துமாறன்

குரும்பூர் குப்புசாமி, வேலூர் அப்துல்லா போன்ற பெயர்களில் கதாசிரியராக தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பத்திரிகையாளர்  அருணாசலம் மாரிசாமி என்ற

அ.மா.சாமி.  சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு வயது 85.தினத்தந்தி  குழுமத்தில் பணிக்குச் சேர்ந்து ராணி இதழின் ஆசிரியராக 40 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அந்திமழையிடம்  சொல்கிறார்:

‘‘ 1953&இல் தினத்தந்தி திருச்சி பதிப்பு வெளியிடத் திட்டமிட்டப்பட்டது. அதற்காக துணை ஆசிரியர் தேவை என ஆங்கிலப் பத்திரிகையான இந்துவில் சி.பா. ஆதித்தனார் அவர்கள் விளம்பரம் வெளியிட்டார்கள். திருச்சியில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த நானும்  அதற்கு விண்ணப்பித்தேன். என் இதழியல் தாகத்தைப் பார்த்த ஆதித்தனார் பணிக்குச் சேர்த்துக்கொண்டார். திருச்சியில் நான் ஓராண்டு பணிபுரிந்த நிலையில் செய்தி ஆசிரியராக ஆனேன். அப்போது அங்கே ஸ்ரீனிவாச ராகவன் என்பவர் மட்டுமே நிருபராக இருந்தார். நீதிமன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று தகவல் சேகரிப்பதற்காக ஒரு நிருபர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் நேர்காணல் செய்து அ.மாரிசாமியைத் தேர்வு செய்தோம். அவர் மிகச் சிறப்பாக செய்தி சேகரிப்பார். மிக அழகாக எழுதுவார். மரபு இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். அலுவலகத்தில் நாங்கள் அதிகார முறைப்படி இருந்தாலும் வெளியே சென்றால் மிகுந்த நண்பர்களாகப் பழகுவோம். எனக்கு ஆத்ம நண்பராக அவர் இருந்தார். ஏராளமான திரைப்படங்களுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாகச் செல்வோம். அவரது திறமைகளைக் கண்டு நான் அவருக்கு பெரிதும் ஆதரவாக இருந்தேன். இதுபற்றி,'சண்முகநாதன் என் ஆசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். என் திறமைகளை தட்டிக் கொடுத்து வளர்த்துவிட்டவர்' என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

இந்நிலையில் சென்னை பத்திரிகை அலுவலகத்தில் சம்பள விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அதனால் ஆதித்தனாரே அமர்ந்து செய்திகளை மொழிபெயர்த்து அன்றைய செய்தித் தாளைக் கொணர நேரிட்டது. அப்போதெல்லாம் தந்தி நான்கு பக்கம்தான். இதைத் தொடர்ந்து வெளியூர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களை  சென்னைக்கு மாற்றுமாறு ஆதித்தனார்  சொல்ல, திருச்சியில் இருந்து மாரிசாமி சென்னைக்கு மாற்றப்பட்டார். அன்றைக்கு தினத்தந்தி அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி  சாலையில் இருந்தது. அங்கே இரவு பகலாகத் தங்கி அவர் செய்த பணி ஆதித்தனாருக்கு மிகவும் பிடித்துப்போனது. இதைத்தொடர்ந்து தன் உறவில்  மாரிசாமிக்கு மணமுடித்து வைத்தார் ஆதித்தனார். இவ்வாறாக தனக்குச் சொந்தக்காரராகவே ஆக்கிக்கொண்டார். இது உழைப்பால் கிடைத்த உயர்வு.

1962 - ல் இருந்து இன்றுவரை தந்தியில் கன்னித்தீவு படக்கதை வந்துகொண்டிருக்கிறது அல்லவா? இதை ஆரம்பித்து எழுதிக்கொண்டிருந்தவர் இவர்தான். தந்தி அலுவலகங்களில் ‘ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் ஃபைல்' என்று ஒன்று உண்டு. ஆதித்தனார் ஒவ்வொரு வாரமும் செய்திகள் எழுதுவது தொடர்பாக அனுப்பும் குறிப்புகளை அதில் உதவி ஆசிரியர்கள் எழுதி வைப்பர். வட்டார வழக்குகளை கொச்சை நீக்கி எழுதவேண்டும். முத்துராமலிங்க தேவர் என்ற பெயரை மு.ரா. தேவர் என்று எழுதக்கூடாது! போன்ற குறிப்புகள் அவை. இந்த குறிப்புகளை வைத்து மாரிசாமி உருவாக்கிய இதழாளர் கையேடு மிக முக்கியமான நூலாக இதழாளர்களுக்குப் பயன்படுகிறது. பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள இவர் அதுபற்றிப் பயணத்தொடர்களும் எழுதி உள்ளார்.

அவர் கதைகள் கட்டுரைகள் என பல எழுதி இருந்தாலும் தமிழ் இதழ்களின் வரலாறு பற்றி ஆழமாக ஆய்வு செய்து ஆதாரங்களுடன் தமிழ் இதழ்களின் தோற்றம், இஸ்லாமிய இதழ்கள், கிறித்துவ இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள் என்றெல்லாம் நூல்களை எழுதினார். இன்றும் ஆய்வுமாணவர்களுக்கு அவை வழிகாட்டியாக இருக்கின்றன. அவருடைய முக்கியமான பங்களிப்பு என்றால் இந்த நூல்களை முதன்மையாகக் குறிப்பிடலாம்.''

நவம்பர், 2020.