சிறப்புக்கட்டுரைகள்

ஆளுக்கொரு கண்ணாடி!

இரா. கௌதமன்

அறமென்பது எப்போதும் நிலையானதல்ல. அது காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, மனிதர்களுக்கேற்ப மாறிக்கொண்டிருப்பது என்பதைச் சொல்லும் விதமாக அத்தம் (கண்ணாடி) என்ற தெலுங்கு வெப் சீரிஸ்  ‘ஆஹா' இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதில் வெவ்வேறு கதைக்களன்களைக் கொண்ட மூன்று எபிசோடுகள் உள்ளன. மூன்று இயக்குநர்கள். ஒவ்வொரு எபிசோடும் இருபது நிமிடம் தான். அதனால் உணர்வுகளை விரிவாக சொல்லவோ, முழுமையான சித்திரத்தை தரவோ இடமில்லை. மின்னல்வெட்டு போல ஒரு சம்பவமும் அதனால் நிகழும் மாற்றங்களும் மனித உறவுகளில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று சில நொடிகளில் சொல்லி, மற்றவற்றை பார்வையாளர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறார்கள்.

 சர்ஜூன் இயக்கியிருக்கும் முதல் பகுதி சிறப்பாக வந்துள்ளது. வீட்டை விட்டு ஓடிவரும் பதின்ம வயதுப் பையன் லாரியில் லிப்ட் கேட்கிறான். குடிகாரரான லாரி டிரைவர் ஜெயபிரகாஷ் அவன் கதையை கேட்டுக்கொண்டே செல்ல, லாரி விபத்துக் குள்ளாகிறது. அதனைத் தொடர்ந்து வரும் பதட்டமான சூழலும் அதில் மனித மனங்கள் எவ்வளவு விசித்திரமாக செயல்படுகின்றன என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். ரோகிணி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பும் படமாக்கலும் பலம்சேர்த்துள்ளன.

அடுத்த எபிசோடில் மனோதத்துவ மருத்துவர் வரலட்சுமி சரத்குமார். குற்ற உணர்ச்சி காரணமாக சில ஆண்டுகளாக தூக்கம் வராமல் தவிக்கும் கிஷோர், கவுன்சலிங்குக்காக வருகிறார். முதல் பார்வையில் திமிர்பிடித்த பணக்காரரின் அலட்சியத்துடன் தோன்றும் கிஷோர் தன்னுடைய கதையை கூறுமிடத்தில் முற்றிலுமாக வேறு பார்வையைத் தருகிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கையின் பிரச்னைகளோடு தொடர்புடைய இந்த நிகழ்வை வரலட்சுமி எப்படி அணுகுகிறார் என்பதை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா ஆனந்த்.

மூன்றாவது எபிசோடில் கணவன் மனைவிக்குள்ளே ஏற்படும் பிரச்னைகளும் அதனால் திருமணத்திற்கு வெளியே தனக்கான ஆறுதலைத் தேடும் கணவனாக

பிரசன்னா. மனைவியாக அபிராமி. பிரச்னைகளில் உதிர்க்கும் சில வார்த்தைகள் எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதைச் சொல்கிறது. பரத் நீலகண்டன் இயக்கியிருக்கும் இந்த பகுதியில் அவர் பெரும்பாலும் வசனங்களைக் கொண்டே கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

மூன்றுக்குமே சிவா ஆனந்த் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.

செல்வக்குமார்,ஷெல்லியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது.

கதாசிரியர் சிவா ஆனந்த் ‘‘தயாரிப்பாளர் சுஜாதா வெப் தொடருக்காக கதைகளை கேட்ட பொழுது வெவ்வேறு கதைகளாக இருந்தாலும் அதன் மையம் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தோம். அறம் தொடர்பான சில கதைகளைச் சொன்னேன். பேசிய பல கதைகளில் மூன்றை முடிவு செய்து அதற்கு அத்தம்(கண்ணாடி) என்று பெயர் வைத்தோம். பார்வையாளர்கள் இந்த சூழ்நிலையில் தங்களை பொருத்திக் கொண்டு கண்ணாடியில் தங்களைப் பார்க்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். இந்த இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன், என்பது தான் கேள்வி. இதில் எல்லாவற்றையும் சொல்லாமல் பார்வையாளர்கள் ஊகத்திற்கும், அவர்கள் சில இடங்களை இணைத்துப் புரிந்து கொள்வதற்கும் இடைவெளியை வேண்டுமென்றேதான் வைத்தோம். இணையம், பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் பரவலான பாராட்டுகள் நம்பிக்கையை அளிக்கிறது‘‘ என்கிறார்.

தங்களுடைய முதல் வெப் சீரிஸை மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட கொரோனா சமயத்தில் தயாரித்து வெளியிட்டிருக்கிறது, ட்ரீம் கேட்ச்சர்ஸ் (Dream Catchers) நிறுவனம். இதன் தயாரிப்பாளர் சுஜாதா நாராயணன், ‘‘ஜூலை, ஆகஸ்டில் ஷூட்டிங் கட்டுப்பாடுகள் அதிகமிருந்த சமயத்தில் தான் நாங்கள் இதைத் தொடங்கினோம்.

50 சதவீத ஆட்களைக் கொண்டே படத்தை இயக்க வேண்டும். காலை ஒன்பது மணிக்கு முன்னால் ஷூட்டிங்கை தொடங்க முடியாது. மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்ய முடியாது. குறைவான நாட்களுக்குள் முடித்தாக வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் தனி மனித இடைவெளி, சேனிடைசேஷனை முறையாக பராமரிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு சின்ன மருத்துவக் குழுவை உடன் வைத்துக்

 கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தினோம்,'' என்று முதல் தயாரிப்பு அனுபவத்தை விவரிக்கிறார்.

‘‘ ஆரம்பத்தில் குறும்படங்கள், நிறுவனங்களுக்கான விளம்பரப்படங்கள் இவற்றை செய்து கொண்டிருந்தோம்.

சினிமாவுக்கான எங்களுடைய முயற்சியை தொடர்ந்து கொண்டிருந்தோம். இந்த சமயத்தில் தான் அல்லு அரவிந்தின் ஆஹா இணைய தளத்திற்காக வெப் சீரிஸ்களை செய்யும் வாய்ப்பு அவர்களின் துணைத்தலைவர் சூரிய நாராயணன் மூலமாகக் கிடைத்தது. இவர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். தெலுங்கில் முதல் வாய்ப்பு என்று யோசிக்க வில்லை. ரேடியோ மிர்ச்சியை ஹைதராபாத்தில் தொடங்கி வைத்தது முதல் சில விளம்பர படங்களை அங்கு

செய்துள்ளோம். கலைக்கு மொழி ஏது? உடனடியாக வேலையைத் தொடங்கி விட்டோம். மிர்ச்சியில் சந்தித்த தேவசேனாவும் நானும் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனிதான் இது. வழக்கமான காதல், சென்டிமென்ட் என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தோம். நடிகர்கள், இயக்குநர்கள் என்று படக்குழுவில் யாரால் பங்கேற்க முடியும், பயணம் செய்ய முடியும் என்று கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் தினமும் திட்டமிட்டு இந்த வெப் தொடரை எடுத்தது மிக சவாலானதாக இருந்தது.

ரசனையோடு எடுக்கிற நல்ல முடிவுகளின் கோர்வைதான் நல்ல சினிமா என்பது என்னுடைய நம்பிக்கை.. அப்படியான படைப்புகளைத் தொடர்ந்து தருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,'' என்கிறார் சுஜாதா.

நவம்பர், 2020.