சிறப்புக்கட்டுரைகள்

ஆர்.சுதர்சனம் - தீராத விளையாட்டுப்பிள்ளை

பா. பாண்டியன்

ஏவிஎம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம். இதன் காரணமாகவோ அல்லது இயல்பாகவோ சுதர்சனம் மிக அற்புதமான ஒரு கொடையைத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்துள்ளார். அது பாரதிதாசன் பாடல்களுக்கும் பாரதிபாடல்களுக்கும் மிக அழகாக சாஸ்திரிய சங்கீதத்தில் இசை அமைத்ததே. முதலில் பாரதிதாசனுடைய பாடல்களில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

‘ஆலைச்சங்கே நீ ஊதாயோ’ இது ரத்தக்கண்ணீரில் இடம்பெற்ற பாரதி தாசனின் பாட்டு. ‘தலை வாரிப் பூச்சூட்டி உன்னை பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை...’ இந்தப் பாடலை மறக்கமுடியுமா?

அன்று மட்டுமல்ல.. இன்று மட்டுமல்ல... இசையை மனிதகுலம் ரசிக்கும் தன்மையோடு இருக்கும் வரைக்கும் சாகாவரம் பெற்ற பாட்டாக பாரதிதாசனின் ஒரு பாடலை மாற்றிவிட்டுப் போயிருக்கிறார் சுதர்சனம். அது,  ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற பாட்டு. தேஷ் என்கிற ஹிந்துஸ்தானி ராகத்தில் இப்பாடல் காற்றில் இழைந்து வருகையில் பறந்து செல்வது போன்ற உணர்ச்சி ஏற்படும். புரட்சிக்கவிஞரின் தாலாட்டுப் பாட்டு இது. இதை காதல் பாட்டாக மாற்றியிருப்பார் சுதர்சனம். படம் ஓரிரவு. இந்தப்பாடலின் இசை நயம், இலக்கியச் சுவை பற்றிப் பேசினால் அது பெரும் கட்டுரையாக விரியக்கூடியது. இந்த பாடலுக்கு முதல்முதலில் மெட்டமைத்தவர் தண்டபாணித் தேசிகர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அவ்வளவு மார்க்சிய அறிவு வராத காலம் அது. அப்போது பராசக்தியில் வரும் ஒரு பாவேந்தரின் பாட்டு எங்களைத் துள்ளிக் குதிக்கவைக்கும். ‘வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே,வளமார் திராவிட நாடு’ என்று தொடங்கும் மோகன ராகப் பாட்டு அது.

இனி சுதர்சனம் இசை அமைத்த பாரதியாரின் பாடல்களுக்கு வரலாம்.

 நாம் இருவர் படத்தில் ‘விடுதலை, விடுதலை’ என்ற டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் ஒலித்த பாடல், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற டிகே பட்டம்மாளின் குரலில் இசைத்த பாடல், அவர் குரலிலேயே, ‘வெற்றி எட்டுத்திக்கும் கொட்டு முரசே’ ஆகிய பாடல்கள்.

நாம் இருவரிலேயே பாரதியின் புகழ்பெற்ற ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யும் இருக்கிறது. டிகே பட்டம்மாள்தான். ராகமாலிகைப் பாடல் அது.

அந்தப் படத்தில் வரும் ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு’ என்ற பாடல் அதன் பின்னர் முற்போக்கு எண்ணம் கொண்டவர் நடத்திய அனைத்து தமிழிசை நிகழ்ச்சிகளிலும் மங்களப்பாடலாக இடம் பெற்றது. படத்தில் இது டி.எஸ்.பகவதி குழுவினரால் பாடப்பெற்றது.

வேதாள உலகம் சுதர்சனம் இசையில் இன்னொரு முக்கியமான படம். ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ சிந்துத் துள்ளலோசை தொனிக்கும் இப்பாடலை எல்லோரும் ஞாபகம் வைத்திருப்போம். டி.ஆர்.மகாலிங்கம் பாடியது. இதே படத்தில்தான் ‘ஓடி விளையாடு பாப்பா’வும் இடம்பெற்றது. டி.ஆர்.மகாலிங்கம் எம்.எஸ்.ராஜேஸ்வரி குரலில்.

‘பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே’ இது வாழ்க்கை படத்தில் டி.கே. பட்டம்மாள் பாட, சுதர்சனம் இசை அமைத்துத்தந்தார். டி.ஏ.மோத்தியின் குரலில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ பாடல் பெண் படத்தில் ஒலிக்கச் செய்தார்.

எத்தனை அருமையான பாரதி பாடல்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்? அடடா என்று உள்ளம் உருக வைத்திருக்கிறார் அவர்.

அண்ணா கதை வசனத்தில் வந்த ஓரிரவிலும் ஒரு பாரதி பாடல் உண்டு. அது கே.ஆர்.ராமசாமி பாடியது: ‘ கொட்டுமுரசே.. கொட்டு முரசே.. ஒன்றென்று கொட்டு முரசே’.

 ‘நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்..’ இது கலைஞர் கதைவசனத்தில் வந்த பராசக்தியில் சி.எஸ்.ஜெயராமன் பாடிய பாரதிபாடல்.

அட இந்த சி.எஸ்.ஜெயராமனுக்குத்தான் எவ்வளவு அருமையான பாடல்களைப் பாட சுதர்சனம் வாய்ப்பு தந்துள்ளார்! அதே பராசக்தியில் ‘தேசம்,ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் காசு முன் நில்லாதடி குதம்பாய்’ என்ற பாட்டு அவர் பாடியதுதான். அதில்தான் புகழ்பெற்ற ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே.. காரியத்தில் கை வையடா தாண்டவக்கோனே’ என்ற வரிகள் வருகின்றன.

தெய்வப்பிறவி படத்தில் ‘தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்’- இரண்டுமே சி.எஸ்.ஜெ. பாடியவை. சுதர்சனத்தின் காலத்தில் அழியாத இசை.

களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் தத்துவப்பாடலான ‘சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்’ என்ற பாடலும் புகழ்பெற்றது. ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது..’ என ஜெயராமன் ரத்தக்கண்ணீரில் உருகுகையில் சுதர்சனத்தின் மேதைமை புலப்படுகிறது.பூமாலை, மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த படம். இதில் ‘பெண்ணே உன் கதி இது தானே’ என்ற பாடலையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

சுதர்சனம் ஐம்பதுகளில் வந்த முக்கியமான திராவிட இயக்கத்தவர் படங்களுக்கெல்லாம் இசை அமைத்துள்ளது ஆச்சரியம். நாம் இருவர்,  ரத்தக் கண்ணீர்,  ஓரிரவு, பராசக்தி, பூம்புகார் இதெல்லாம் இவர் இசை ஓவியங்கள்தான்.

இவரது இசையில் வந்த படங்களிலேயே மிக முக்கியமாக நான் கருதுவது களத்தூர் கண்ணம்மா. அதில் வரும் அத்தனைப் பாடல்களும் மிக அழகானவை. ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ..’ ‘ஆடாத மனமும்’ ‘அருகில் வந்தாள்..” ’அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே’ போன்ற பாடல்கள் நெஞ்சில் ஆழப்பதிந்தவை.

நானும் ஒருபெண் படத்தில், சுசீலாம்மா பாடும் ‘கண்ணா கருமை நிறக் கண்ணா...’, அன்னை படத்தில் பானுமதி அம்மா பாடும்,‘பூவாகி காயாகி கனிந்த மரம் உண்டு’ ஆகிய பாடல்களைக் எக்காலத்திலும் மறக்கவே இயலாது. நிமாய்கோஷ், பீம்சிங், ஜெயகாந்தன், திருச்சி அருணாசலம், எம்.பி,சீனிவாசன் போன்றவர்கள் இடதுசாரி சிந்தனைகளை திரையுலகில் விதைத்தவர்கள் என்றால் அந்த வரிசையில் ஆர்.சுதர்சனத்துக்கும் பங்கு உண்டு.

பெங்களூர்வாசியான சுதர்சனம் இளமையில் பிடில் வித்வான் கேசவ மூர்த்தியிடம் சங்கீதம் கற்றார். தன் வீட்டருகே இருந்த சரஸ்வதி ஸ்டோர்ஸ் இசைத்தட்டுகளை விற்கும் ஒருவர் மூலமாக சென்னைக்கு இசை அமைக்க வந்தார். இங்கே சர்மா சகோதர்கள் குழுவில் சேர்ந்து இசை  அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தியாகராஜ பாகவதர் தன் திருநீலகண்டர் படத்துக்கு இசை அமைக்க தகுந்தவரைத் தேடுகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் சென்றார். அவருக்குப் பிடித்துபோய் அப்படத்தில் பணியாற்றினார். பின்னர் லேனா செட்டியாரின் கிருஷ்ணன் தூது படத்தில் வாய்ப்பு வந்தது. பின்னர் ஏவிஎம்மின் அறிமுகம் கிடைத்து திருவள்ளுவர், என் மனைவி, சபாபதி, ஹரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் நாம் இருவர் படத்தில் மகாகவி பாரதியின் பாடல்களை முதல்முதலாக திரையுலகுக்கு அறிமுகப் படுத்தும் வாய்ப்பு கிடைத்தது!

(இசை ஆர்வலரான பா.பாண்டியன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி.)

ஜனவரி, 2014.