சிறப்புக்கட்டுரைகள்

ஆயிரம் இருந்தாலும் கிராமத்தான்தானே?

எஸ்.எஸ். சிவசங்கர்

அப்போதெல்லாம் பொங்கல் வரப் போகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தயாராகி விடுவோம். அந்த வாரம் முழுதும் பள்ளி வகுப்பறையில் அது தான் பேச்சாக இருக்கும். தேவனூர் பயணம் குறித்தே நினைவுகள் இருக்கும். பத்து கிலோமீட்டரில் இருக்கும் கிராமம் தான். ஊருக்கு நாற்புறத்தில் இருந்து செல்லும் சாலைகளும் முந்திரித் தோப்புகளால் சூழப்பட்டிருக்கும். செம்மண் பூமி. ஊருக்குள் நுழையும் போதே சின்ன ஏரியும், ஏரிக்கரையில் இருக்கும் ஆலமரமும் வரவேற்கும்.

தேவனூர் சிறு கிராமம் தான். ஆனால், என் பிரியத்திற்குரிய ஊர். சொந்த ஊர் என்றால் யாருக்கும் பிரியம் தானே. ஜெயங்கொண்டத்தில் இருந்தும் 15 கி.மீ, ஆண்டிமடத்தில் இருந்தும் 15 கி.மீ. கிட்டத்தட்ட முக்கோணத்தின் உச்சிப் புள்ளி போல.

அது பள்ளிப் பருவம். பாட்டி இராசாம்பாள் எப்போது வந்தாலும் பணம் கொடுப்பார், பேரன்கள் மீது பிரியமாக, எனக்கும், தம்பிக்கும். பொங்கலுக்கு முன் என்றால் கூடுதலாக கிடைக்கும். காரணம், பொங்கலுக்கு ஊருக்கு வர வேண்டுமென்று.

அப்போது, போகியலுக்கே கிராமத்துக்கு போய் விடுவோம். அட்டா, அது தனி வாழ்க்கை. ஊரே கொண்டாடும்.  கூரை வீடுகளாக இருந்தாலும் புத்துணர்வு பெற பொங்கல் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஊரினுள் அப்போது ஓரிரு வீடுகள் தான் ஓட்டு வீடுகள். மற்றபடி பெரும்பாலும் கீற்றால் வேயப்பட்டு, கரும்புத் தோகை பரப்பப்பட்ட குடிசைகள் தான். மண் சுவராக இருந்தாலும் சுண்ணாம்பு அடித்து சுத்தப் படுத்தப்பட்டிருக்கும்.  ஒரு வாரமாக, முன்னேற்பாடாக இந்த வெள்ளை அடிக்கும் பணி நடந்திருக்கும். தரை சாணியால் மெழுகப்பட்டு, நீர் கோலம் போடப்பட்டிருக்கும்.

அன்று வீட்டுக்கு வீடு பழைய பொருட்களை எடுத்துப் போட்டு தீயிட்டுப் பொசுக்குவார்கள். வீடுகள் கழுவி விடப்பட்டு சுத்தம் செய்யப்படும். வீட்டு தெய்வத்துக்கு படைப்பார்கள். சுண்டலும், கொழுக்கட்டையும் செய்யப்பட்டு மாலை நேரத்தில் படையல் இடப்படும்.

மறுநாள் வாசப் பொங்கல், இப்படி தான் கிராமத்தில் அழைப்பார்கள். பழைய ஓட்டு வீடுகளில், வீட்டின் நடுவில் முற்றம் இருக்கும். அந்த முற்றத்தில்

செங்கல் கூட்டி அடுப்பு வைக்கப்படும். சுற்றிலும் அரிசி மாவுக் கோலம். கூரை வீடுகளில் வீட்டுக்கு வெளியே வாசலுக்கு அருகே தரையில் அடுப்புத் தோண்டுவார்கள். அதன் மீது புதுப்பானை வைத்து பொங்கலிடுவார்கள். எல்லோரும் உற்சாகமாக “பொங்கலோ பொங்க... வாசப் பொங்க” என்று முழங்க பொங்கல் கொண்டாட்டம். மாட்டுப் பொங்கல் அன்று ஊரே கோலாகலமாக இருக்கும். காலையிலேயே மாட்டையும், ஆட்டையும் பிடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள், ஏரியை நோக்கி. அப்போதெல்லாம் ஊரின் ஜனத் தொகையைத் தாண்டி, கால்நடைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். ஏரிக்கு சென்று கழுவப்பட்டு வரும் கால்நடைகள் ஊர்வலம் போல் வந்து சேரும்.

இதெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன். பிறகு மெல்ல கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. பாட்டி ராசாம்பாள் இருக்கும் வரை தான் எங்கள் வீட்டில் கால்நடை செல்வம் இருந்தது.

அப்போது 40-க்கும் குறையாத மாடுகள் இருக்கும், காளை, பசு, எருமை என. பாட்டியின் உடல் தளர ஆரம்பித்த போதே, மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. பாட்டி மறைவுக்கு பிறகு, தாத்தா சாமிதுரையால் சமாளிக்க முடியவில்லை.

மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் கட்ட ஜெயங்கொண்டம் சந்தையிலேயே சலங்கைக் கொத்து, நெட்டித்தக்கை மாலை வாங்கப்பட்டிருக்கும். இதல்லாமல் மாவிலை மாலை, பூ மாலையும்.

செல்வந்தர் வீட்டு மணப்பெண் போல், அன்று மாடுகளின் கழுத்து நிறைந்தே இருக்கும். பொங்கல் பொங்கிய பிறகு, மாட்டுவண்டிகள் பூட்டப்படும். ஊர்வலம் கிளம்பும். ஊரே அதகளமாகும். ஊரே ஒன்றுபட்டு கொண்டாடும் திருவிழா, மாட்டுப் பொங்கல் தான்.

கிராம சூழல் மெல்ல மெல்ல மாறத் துவங்கி விட்டது.இந்த ஆண்டு மாட்டுப்பொங்கல் அன்று தேவனூரை கடந்து சென்றேன். ஏரியில் ஓரிரு மாடுகளே குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஊரினுள் பெரிய ஆரவாரம் இல்லை. அடுத்தடுத்த கிராமங்களிலும் இதே நிலை. பொன்பரப்பியை கடக்கும் போது, ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவர் எப்போது, மேய்ச்சல் முடித்து வீடு திரும்பி எப்போது படைப்பது?. வழியில் மாட்டுவண்டி எதையும் கடக்கவில்லை, ஓரிரு டிராக்டர்களை தான் கடந்தேன். மாட்டுவண்டியில் ஏறி, கூவிச் சென்ற காலம் மனதில் நிழலாடியது. ஆனாலும் பொங்கல் என்றால் மனம் லேசாகிறது, ஆயிரம் இருந்தாலும் கிராமத்தான்தானே.

(கட்டுரையாளர் குன்னம் தொகுதி சட்டமன்ற உ றுப்பினர்)

பிப்ரவரி, 2016.