அரசு நிர்வாகத்துக்கு ஆன்லைன் எப்படியெல்லாம் உதவி செய்கிறது? திறந்த ஒளிவுமறைவில்லாத நிர்வாகத்தை கணினிமயமாக்கலின் மூலம் சாத்தியப் படுத்தலாம் என்பதுதான் இம்மாதம் நாம் விவாதிக்கப்போகும் விஷயம்.
அமெரிக்காவில் ஒபாமா முதல்முதலாக அதிபர் ஆனதும் சொன்னது இதுதான்:
“என் நிர்வாகம் இதற்கு முன்பு இருந்த நிர்வாக அமைப்புகளை யெல்லாம் விட வெளிப்படையானதாக இருக்கும். இந்த வெளிப்படைத்தன்மை ஜனநாயகத்தை வலுப்படுத்தி அரசின் திறனையும் செயல்பாட்டையும் மேம்படுத்தும்”. சொன்ன தோடு மட்டுமல்லாமல் பதவியேற்ற அன்றே இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடனான நிர்வாகத்தைக் கொண்டுவந்துள்ளார்.
recovery.gov, USASpending.gov, IT.usaspending.gov ஆகிய இணையதளங்கள் மூலம் அமெரிக்க மக்கள் பணத்தை எப்படி அரசு செலவழிக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். வெளிப்படையாக இருக்கும் அரசுதான் பொறுப்புடன் இருக்கமுடியும். data.gov என்ற இணையதளம் மூலமாக அரசு துறைகளும் நிறுவனங்களும் திரட்டியிருக்கும் தகவல்களை பொதுமக்களும் காணமுடியும். உதாரணத்துக்கு அமெரிக்காவின் எண்ணெய்வயல்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய மாதாந்திர தகவல்களைப் பொதுஜனமும் பார்க்கலாம். we the people என்ற தளமும் வெள்ளைமாளிகையால் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பற்றிய பல்வேறு பிரச்னைகளுக்கான கோரிக்கை மனுக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கி கையெழுத்திட்டு ஆன்லைனிலேயே அனுப்பலாம். முக்கியமான கொள்கை விஷயங்களில் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு இதற்காக இருக்கும் நிபுணர்களின் கருத்துக்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நியூவார்க் மேயர் கோரி புக்கர் அமெரிக்காவில் வளர்ந்துவரும் அரசியல்வாதி. ட்விட்டர் என்கிற சமூக வலைத்தளத்தில் தன் நகரின் பிரச்னைகளை விவாதிக்கிறார். கருத்துக்களைப் பெறுகிறார், குறைகளுக்குப் பதில் சொல்கிறார். இது மிகவும் வெளிப்படையாக நடக்கிறது.
அங்குள்ள கனெக்டிகட் மாகாணத்தில் www.connect.ci.gov என்கிற இணையதளம் வைத்துள்ளனர். அது உணவு மற்றும் மருத்துவ உதவிகளுக்கானது. பிலடெல்பியா மாகாண போலீஸ் துறை பிண்டெரெஸ்ட் இணையதளத்தில் கிரிமினல்களின் படங்களை, தகவல்களை வெளியிட்டுள்ளது. நம்மூரில் போஸ்டர்களில் பிக்பாக்கெட் படங்களைப் போடுவார்களே அதுபோல. அத்துடன் பிலடெல்பியா நகரத்தில் நடக்கும் குற்றங்கள் பற்றியும் முழு தகவல்களும் ஆன்லைனில் உள்ளன.
சரி அமெரிக்கா புராணம் போதும். நம்மிடம் தகவலறியும் உரிமைச் சட்டம் உள்ளது அல்லவா? ஆஸ்திரேலியாவில் ரைட் டு நோ என்ற இணையதளமே உள்ளது. பொதுமக்கள் எந்த தகவலாக இருந்தாலும் நிமிடங்களில் அறிந்துகொள்ளும் வசதி இது.
கனடாவில் உள்ள எட்மாண்டன் நகர நிர்வாகத்தினர் data.edmonton.ca/dashboard என்ற இணைய தளத்தை வைத்துள்ளனர்.
அரசின் சேவையை வெளிப்படையாக அறிய இது உதவுகிறது. பொதுமக்கள் நிதி எப்படி செலவாகிறது என்பது பற்றிய தகவல்கள், எப்படி ஒவ்வொரு துறையும் தன் இலக்குகளை நோக்கிச் செயல்படுகிறது என பல விவரங்களும் பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல உள்ளூர்ப் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் தரும் தீர்வுகளைத் தாண்டி அந்த இடத்தில் வாழும் மக்கள் தரும் தீர்வுகள் சரியானதாக இருக்கும். இதற்கு அந்த மக்களின் கருத்துகளை எளிதாகப் பெற ஆன்லைனில் வழி உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு crowdsourcing என்று பெயர்.
வெளிநாடுகளையே பற்றிப் பேசினால் எப்படி உள்நாட்டு விவகாரத்தைப் பேச வேண்டுமல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இங்கேயும் மத்திய மாநில அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் ஆகிக் கொண்டிருக்கின்றன. வலிமையான நிர்வாகத்தையும் வெளிப்படையான தன்மையையும் உருவாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. இதற்கு முதல் உதாரணமாக நரேந்திரமோடியின் நிர்வாகத்தைச் சொல்லவேண்டும். அவரது ஸ்வாகத் ஆன்லைன் தளத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வியாழக்கிழமை சாமானிய மனிதனின் குறைகள் கேட்கப்பட்டு உடனே தீர்க்கப்படுகின்றன. முதல்வரே நேரடியாக ஆன்லைனில் மனுக்களைப் பெறுகிறார். அடுத்த சில மணி நேரத்துக்குள் அதற்கான அதிகாரிகளின் பதில்கள் பெறப்பட்டு தீர்க்கப்படுகின்றன. இதற்கான கால அட்டவணையையும் அந்த தளத்தில் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் சிஎம் செல் மூலமாக நேரடியாக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்.
http://cmcell.tn.gov.in/ இதுதான் அந்த தளம். ஆன்லைனிலேயே மனு அனுப்பி அதன் நிலை என்ன என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
இந்திய அரசு, அமெரிக்கக் கூட்டுறவுடன் வெளிப்படையான நிர்வாகத்துக்கான ஆன்லைன் முயற்சிகளை எடுத்துவருகிறது. india.gov.in, data.gov.in ஆகிய தளங்களில் இதற்கான வழிவகைகள் உள்ளன. இவற்றில் ஆன்லைனில் பெட்டிஷன்களை பதிவு செய்து அதற்கு வாக்களிக்கும் வழிகளும் உள்ளன. இப்போது நடக்கும் மாணவர்களின் போராட்டத்திலும் கூட ஒரு பகுதியாக இந்த தளங்களில் மனுக்களைப் பதிவுசெய்து அதற்கு ஆதரவாக வாக்களிப்பதையும் ஒரு பிரச்சாரமாகச் செய்யவேண்டும் என்பது என் கருத்து. data.gov.in இணைய தளம் ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவதற்கான முதல்படி. இது முக்கியமாக நாட்டைப் பற்றிய, துறைகளைப் பற்றிய, மக்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எவ்வளவு நிலம் இருக்கிறது? எவ்வளவு பேர் ஒட்டுப் போடும் தகுதியுடன் உள்ளார்கள்?, வேலைவாய்ப்பு எவ்வளவு பேருக்கு இருக்கிறது? ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது? அது எப்படியெல்லாம் செலவாகிறது? இபோதைய நிலை என்ன? இதெல்லாம் தெரிந்தால்தான் கேள்வி கேட்க முடியும். கேட்டால்தான் அரசு நிர்வாகம் ஊழலற்றதாக நடக்கும்.
இந்த தளங்களில் உங்கள் குறைகளை சொல்வதற்கான தனிப்பகுதியும் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொதுமக்கள் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதையெல்லாம் பெரிய அளவில் பொதுமக்கள் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவில் மட்டும் 60 கோடிப்பேர் ஆன்லைன் வசதிகளுடன் உள்ளனர். அதில் 60-70 மில்லியன் பேர் ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்தில் உறுப்பினராக உள்ளனர். ஆகவே இப்போதைக்குத் தேவை விழிப்புணர்வும் அரசின் ஒத்துழைப்பும்தான். ஆன்லைன் என்பது திறந்த, வெளிப்படையான ஊழலற்ற அரசை உருவாக்கும் மந்திரச்சாவி.
ஏப்ரல், 2013.