சிறப்புக்கட்டுரைகள்

ஆண்டுக்கு 4000 மருத்துவர்கள்

இரா. கௌதமன்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்திற்கு அருகில் ஆலங்குளம் என்ற சிறிய கிராமத்திலிருந்து 1973 ல் சென்னை கால் நடை மருத்துவக்கல்லூரிக்குள் மாணவராக நுழைந்தவர் இன்று தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின்  துணைவேந்தர். பணிபுரிந்த அத்தனை இடங்களிலும் தன்னுடைய நிர்வாக திறனுக்காக பெயரெடுத்தவர். துணை வேந்தர் டாக்டர் திலகர் அவர்களை சென்னை மாதவரத்திலுள்ள பல்கலைக் கழக அலுவலகத்தில் அந்திமழைக்காக சந்தித்தோம். கடந்த 2014 டிசம்பரில் துணைவேந்தராக பதவியேற்றுள்ளார்.குளிரூட்டப்பட்ட அறையில் சன்னமாக ஒலிக்கிறது அவர் குரல்.

1973 -ல் கால்நடை மருத்துவம் படிக்க வந்த போது உங்களுடைய நோக்கம் என்னவாக இருந்தது? அதிலிருந்து துணை வேந்தர் வரையிலான பயணம்?

பெரிய நோக்கத்தோட எல்லாம் கால் நடை மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை. எம்பிபிஎஸ் கிடைக்கவில்லை. இரண்டாவது தேர்வாக கால் நடை மருத்துவம் அமைந்தது. அன்றைய தேதியில் கால் நடை மருத்துவம் முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டால் உடனடியாக அரசு வேலை கிடைத்து விடும். அதுவும் ஒரு காரணம்.

படிக்கும் போது அறுவை சிகிச்சை துறையில் ஆர்வம் வந்தது. சென்னையிலேயே முதுகலை பட்ட படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் படித்து முடித்தேன். பிறகு உதவி பேராசிரியர்,பேராசிரியர், அறுவை சிகிச்சை துறை தலைவர், பிறகு ஐந்து வருடம் மலேசியா புத்ரா பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சை பேராசிரியர்.தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழக தேர்வுத்துறை தலைவர், பாண்டிச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் என்று பல்வேறு பொறுப்புகள். 2014 அக்டோபரில் பணி ஓய்வு பெற்று இரண்டு மாதத்தில் துணை வேந்தர் பதவி. (முப்பத்தி நான்கு ஆண்டுகளை சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார்).

நீங்கள் சிகிச்சைத் துறைக்கு வந்த போது இருந்த நிலையும் இன்று கால் நடை சிகிச்சை துறை அடைந்துள்ள வளர்ச்சியும் பற்றி..

1980 க்கு முன்னால் கால்நடை மருத்துவக் கல்லூரி சிகிச்சை துறை என்று தனியாக கிடையாது. மருந்தியல், அறுவை சிகிச்சை துறை என்று தனித்தனியாக சிகிச்சையை கவனித்து வந்தார்கள். அப்போதே சென்னை கால் நடை மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்கு பெயர் பெற்றதுதான். 80-களில் தான் சிகிச்சை துறை என்று தனியாக ஒன்று அமைக்கப்பட்டது. அன்று சிகிச்சைக்கு ஆடு, மாடுகள் அதிகமாக வரும். செல்லப் பிராணிகள் குறைவாக வரும். இன்றைக்கு செல்லப் பிராணிகள் அதிகமாக வருகின்றன. புற நோயாளிப் பிரிவு என்று அன்று இருந்தது, இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தோல் சிகிச்சை பிரிவு, மூட்டு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை, கதிரியக்கப் பிரிவு என்று தனித்தனியாக வளர்ந்துள்ளது. இதனால் அதி நவீன சிகிச்சை வழங்கப்படுவதால் பொதுமக்கள் பயனடைகிறார்கள்.

 இந்தியாவிலேயே சிறந்த கால்நடை சிகிச்சை பிரிவு என்ற பெருமையை சென்னை கல்லூரி பெற்றுள்ளது. வெளி நாட்டிற்கு சென்று நாம் உயர் தொழில் நுட்பங்களைப் படிப்பது போன்று, இன்றைக்கு பல நாடுகளிலிருந்து வருடத்திற்கு 120 மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வருகிறார்கள். மனித மருத்துவத்திற்கு ஈடாக கால்நடை மருத்துவம் வளர்ந்துள்ளது.

தனி பல்கலைக் கழகமாக மாறிய பிறகு அரசு ஆராய்ச்சி திட்டங்கள் முன்பை விட அதிகமாக கிடைக்கிறது. இந்திய விவசாயத்துறை மொத்த உற்பத்தியில்  26 சதவீதம் கால்நடைத்துறை பங்கு வகிப்பது முக்கியமானது.

தமிழ் நாட்டில் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளதா?

 இதை தமிழ்நாடு என்று பார்க்காமல், இந்திய அளவில் பார்ப்போமானால் வருடத்திற்கு 4000 கால்நடை மருத்துவர்கள் தேவை என்று ஏற்கெனவே இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 5000 மாடுகளுக்கு ஒரு மருத்துவர் என்ற கணக்கில். இந்தியாவிலுள்ள 44 கல்லூரிகளிலிருந்து 3200 மருத்துவர்கள் சராசரியாக வருடத்திற்கு வெளி வருகிறார்கள். வருடத்திற்கு 800 மருத்துவ படிப்பு இடங்களைக் கூட்டச் சொல்லி இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நான்கு கல்லூரிகளிலும் சேர்த்து 250 சீட்டுக்கள் உள்ளது. வருடத்திற்கு 20 சீட்டுக்களை உயர்த்துமாறு அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால் தான் கால் நடைகளின் வளம், நலம் பாதுகாக்கப்படும். உணவு உற்பத்தியை பெருக்கி இந்திய பொருளாதாரத்தை வலிமையாக்க முடியும்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள Poultry Production Technology படிப்பு பற்றி...

 கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் தமிழ் நாடு சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்ததே. கோழி உற்பத்தி மற்றும் நோய் தடுப்பில் கால் நடை மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கோழி பண்ணைக்கான கட்டிடம் அமைப்பதற்கும், கோழி தீவன ஆலை அமைப்பதற்கும் பொறியியல் வல்லுனர் தான் தேவைப்படுகிறார். அதனால் கோழி பற்றிய மருத்துவ அறிவும் அதற்கான பொறியியல் தொழில் நுட்பமும் ஒருங்கே அமைந்தால் என்ன என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது இந்த படிப்பு. முதல் செட் மாணவர்கள் அடுத்த ஆண்டு வெளி வருகிறார்கள். ஏற்கெனவே இறுதியாண்டு படிக்கும் 17 மாணவர்களும் கேம்பஸ் செலக்‌ஷனில் தேர்வாகி விட்டார்கள்.

 கால் நடை மருத்துவத் துறையில் நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள்?

முதலில் தரமான கல்வி. மக்களின் தேவைக்கான ஆராய்ச்சி பணிகள். நிதி மற்றும் பணி மேலாண்மை. கால் நடை மருத்துவத் துறையில் மருத்துவர்களுக்கு அடுத்த படிநிலையாக தொழில் படிப்பு தொடங்குவது. இன்றைக்கு கால் நடை மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இருப்பவர்கள் அனுபவம் மூலமே கற்றுக் கொள்கிறார்கள். அதை முறையான படிப்புடன் இணைக்கும் போது நம்முடைய துறை இன்னும் மேம்படும். மாணவர்களின் படிப்பு நிலையை ஆன் லைனில் கொண்டு வருவது. மூன்று வருடங்களில் இது அனைத்தும் செய்ய முடியும்.

ஜூலை, 2015.