சிறப்புக்கட்டுரைகள்

ஆகாவென்றெழுந்தது பார் மாணவப் புரட்சி

பழநிபாரதி

போலீஸ்காரர்கள் அங்கங்கே கல்லெறிந்து தடியடி நடத்தி, ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் பெண்களையும் பொதுமக்களையும் துரத்தியடித்து, வாகனங்களை நொறுக்கி முடிந்தவரை வாகனங்களுக்கும் வீடுகளுக்கும்  தீவைத்துத் திரும்பிய காணொளிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு காலைப் பத்திரிகையைப் புரட்டினால் ‘சென்னையில் அமைதி திரும்பியது’ என்று எழுதியிருக்கிறார்கள்..

இந்த மக்கள் எவ்வளவு பாவம்... சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதன் அடையாளம்தான் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு எழுச்சி. சாதி, மதம் என்கிற பிரிவினைகளைத் துறந்து  ‘தமிழன்’என்கிற ஒரே முகத்தோடு அனைவரும் கூடியிருந்தார்கள்.

‘கடலே நிகர் படை சேர்’ என்று எப்போதோ பாரதிதாசன் எழுதிய கவிவரி கண்முன்னே மெரினா கடற்கரையில் காட்சியாகி நிற்பதைப் பார்க்க முடிந்தது. இது ஜல்லிக்கட்டுக்கான களமாக மட்டும் இல்லை; விவசாயிகளுக்கான -  காவேரி நீர்ப் பங்கீட்டுக்கான உரிமைக்குரலையும் கேட்க முடிந்தது. ‘பீட்டா’ வுக்கான எதிர்ப்பு பன்னாட்டுக் குளிர்பானங்களைத் தெருவில் கொட்டி ஓடவிட்டது. இந்தத் தெளிவு ஆளுவோர்களையும் அதிகாரிகளையும் நிச்சயமாக அச்சப்படுத்தியிருக்கும்.

ஒரு லிட்டர் 125 ரூபாய் என்று கொக்கக் கோலா நிறுவனம் தயாரிக்கும் அமெரிக்காவின் VIO பால் விற்பனைக்கு இந்தியாவின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கும் பிரதமர் மோடி நமது நாட்டுமாடுகளை எப்படிக் காப்பாற்ற நினைப்பார்?

இந்த உள்நாட்டு பன்னாட்டு அரசியலைக் கடந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நான் கண்ட, கேட்ட நமது பண்பாட்டுச் சிறப்புகளை மட்டுமே இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

மெரினா கடற்கரையில் மாணவர்கள் கூடிய முதல்நாள்... பின்னிரவுப் பொழுதில் காவல்துறை விளக்குகளை எல்லாம் அணைத்து அந்த மாணவர்கள் கூடியிருந்த மணற்பரப்பை இருளில் மூழ்கடிக்க நினைத்தது. மாணவர்கள் தங்கள் கை பேசிகளைத் தூக்கிப் பிடித்துக் கடற்கரையை ஒளிவீசச் செய்தார்கள். இரவில் மெரினா கடற்கரையை இதற்கு முன் இவ்வளவு அழகாக நான் பார்த்ததே இல்லை.

மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது அங்கிருந்த பெண்களின் மீது எந்த இளைஞனின் கைகளும் அத்துமீறவில்லை. NDTV யின் செய்தித் தொகுப்பு இயக்குநர் சோனியா சிங் இதைத் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு, டெல்லி இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

சாப்பிட்டீர்களா... சாப்பிட்டீர்களா என்று கேட்டு ஒவ்வொருவருக்கும் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தார்கள்; தண்ணீர் போத்தல்களைக் கொடுத்தார்கள். நள்ளிரவில் அங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை எல்லாம் அவர்களே பொறுக்கி ஓரமாக ஒதுக்கிவைத்தார்கள். தமிழர்களைத் தொடர்ந்து ‘பொறுக்கி’ என்றே தனது டுவிட்டரில் பதிவு செய்யும் சுப்ரமணியசாமி அப்போது அங்கே வந்திருந்தால் அவருக்கும் கூட பசியாற ஏதாவது தந்திருப்பார்கள்.

போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கடற்கரை சாலையை அவர்களே ஒழுங்குபடுத்தினார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அவசரம் குறையாமல் அந்தச் சாலையைக் கடக்க முடிந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும் பெண்களும் இது போல பல நிகழ்வுகளைத் தங்கள் அனுபவங்களாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.

ஒரு பெண் தூங்கி விழித்தபோது அருகில் இரண்டு இளைஞர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு நீங்கள் தூங்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். இல்லை பெண்களுக்குப்  பாதுகாப்பாக நாங்கள் கொஞ்சம்பேர் விடிய விடிய விழித்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  இந்த இடத்தில் ‘ஃபிரீ  செக்சுக்குக் கூட பெருங்கூட்டம் கூடும்’ என்று போராட்டத்தைக் கிண்டலடித்த பீட்டாவைச் சேர்ந்த இராதாராஜன் கூட பயமில்லாமல் வந்து படுத்து எழுந்து போயிருக்க முடியும். ஏனென்றால் இது தனி உறவுக்காகக் கூடிய கூட்டமல்ல; தமிழ் உறவுக்காகக் கூடிய கூட்டம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

எந்த ஊர் என்று நினைவில் இல்லை... சில இஸ்லாமிய இளைஞர்கள் தொழுகை நடத்த வேண்டிய நேரத்தில் மழை பொழிந்து கொண்டிருந்தது. அவர்கள் தொழுவதற்காக அங்கிருந்த இளைஞர்கள் ஒரு நீல நிறப் பிளாஸ்டிக் தாளைப் பந்தல் போல பிடித்திருந்ததையும் பார்க்க முடிந்தது. மனிதாபிமானத்திற்கு முன்னால் மதமாச்சரியம் மரணித்த தருணம் அது.

“அகிம்சை என்றால் யாரையும் இம்சை செய்யாமலிருப்பது என்கிற சாதாரண எதிர்மறை நிலை ஆகாது. அது அன்பின் நேரிடையான நிலையாகும். தீங்கு செய்தவருக்கும்கூட நன்மை செய்யும் உன்னத நிலையாகும்” என்கிறார் மகாத்மா காந்தி.

கடைசி நாளில் மாணவர்களை போலீஸ்காரர்கள் ஓடஓட விரட்டியபோது ஒரு போலீஸ்காரர் தடுக்கி விழ, ஒரு மாணவர் அவரைத் தாங்கிப்  பிடிக்கும் காட்சி ஒன்றைப் பார்த்தேன். இந்த மகாத்மியம் அந்த மாணவருக்குள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒன்றை மட்டும் நம்மால் உணர முடிகிறது - இது ஜல்லிக்கட்டு எழுச்சி மட்டுமல்ல; ஓர் அரசியல் புரட்சிக்கான பண்பாட்டுப்  புரட்சி.

தமிழகமெங்கும் சில உணவகங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் அல்லாமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தாய்மார்கள் தங்கள்  சக்திக்கு ஏற்ப ஐம்பது பேருக்கோ நூறு பேருக்கோ  சமைத்துக்கொண்டு போய் கொடுத்தது- மாணவர்களை எல்லாம் தங்கள் பிள்ளைகளாக உணர்ந்தது இந்தப் போராட்டத்தின் பேரழகு.

மெரினாவில் விடியற்காலம் நாலரை மணிக்கு போலீஸ் தாக்கத் தொடங்கியபோது அருகிலிருந்த மீனவக் குப்பங்களின் தாய்மார்கள் மாணவர்களை காப்பாற்ற ஓடி வந்தார்கள். மீனவர்கள் மீது போலீஸ் அத்துமீறியதற்கு அதுதான் காரணம்.

இப்போது நூறு மாணவர்களுக்கு முன்னால் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’  நாவலின் பக்கங்களைப் படித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது.

இதைப் பதிவிடுகிற இந்த நாளில் (25.01.17) தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியமும் பீட்டாவும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன.

பாஜககாரர்களும் சில முகப்பூச்சுக்காரர்களும் போராட்டத்தில் சமூக விரோதிகள்  நுழைந்துவிட்டார்கள் என்று அலறுகிறார்கள். யார்  சமூக  விரோதிகள் என்பதை இவர்களை விடவும் மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

“சண்டை முடிந்துவிட்டது
என நீ சொல்கிறாய்
சண்டை போட நாம் இன்னும்
தொடங்கவே இல்லை என்னும் போதிலும்”

-  ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ்

பிப்ரவரி, 2017.