ஓவியம் மணிவர்மா
சிறப்புக்கட்டுரைகள்

அறிவு, இந்த ஒரு மாத லீவு முடிஞ்சு போயிடுவியா? திரும்ப எப்ப வருவ?

வன்னி அரசு

அந்த ஊருக்குள் நுழைந்தாலே ஆங்காங்கே போலீசார் முகாமிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. வீட்டு முகவரியைக் கேட்க வேண்டியதில்லை.

காவல் துறையே வழிகாட்டியாக அந்த தெரு, அந்த வீடு வரை நின்று கொண்டிருந்தனர். உறவினர்களும் நண்பர்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்த வீடு புதிதாக வெள்ளையடிக்கப்பட்டது போல மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வீடு ‘பேரறிவாளன்’ என்று உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கும் வீடு. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தான் காவல்துறையின் வளையத்திற்குள் இருந்தார் பேரறிவாளன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 26ஆண்டுகாலமாக சிறைக் கொட்டடியிலிருந்த பேரறிவாளன், 26 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கிறார். தவழ்ந்து உருண்டு புரண்ட தான் பிறந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார். எப்படி இருக்கும் அவரது மனம்? 26 ஆண்டுகள் தன் இளமையை தொலைத்து சிறையிலேயே வாழ்வை கரைத்து மிச்ச சொச்சமாய் துப்பப்பட்டது போலத்தான் பார்க்கமுடிந்தது. செய்யாத குற்றத்திற்காக 26 ஆண்டுகள் என்பது கொடுமைதான். நெல்சன் மண்டேலாவுக்கு பிறகு சிறையிலேயே வாழ்க்கையை கழித்தவர் பேரறிவாளனாகத் தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ‘நம்பிக்கைப் போராளியை’ சந்தித்தேன்.

பலமுறை வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்ததற்கும் இப்போது வீட்டில் பார்ப்பதற்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை என்றுதான் தோன்றுகிறது. வேலூர் மத்திய சிறையில் மனுவில் முகவரியெல்லாம் எழுதி கொடுத்துவிட்டு தான் பார்க்கமுடியும். அப்படித்தான் பேரறிவாளனை பார்க்க முகவரி கொடுத்து, கையெழுத்து போட்டுவிட்டுத் தான் பார்க்க முடிந்தது. ஏறக்குறைய அது வீட்டுக்காவல் தான். உள்ளே அறிவைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து வரவேற்றார். உடல் நலமில்லாமல் இருந்த அவரது தந்தை குயில்தாசன் மகிழ்ச்சியோடு வந்திருக்கும் உறவுகளுடன் உரையாடுவதைப் பார்க்க முடிந்தது.

தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, நடையாய் நடந்து சட்டப் போராட்டங்களை தில்லி வரை நடத்திய அந்த தாய் அற்புதம்மாளை அன்று தான் மகிழ்ச்சியாகப் பார்க்க முடிந்தது. அப்படி ஒரு அலாதியான மகிழ்ச்சியுடன் இருந்தார். பக்கத்து வீட்டு உறவுகளோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தார். “வன்னி, அறிவு எப்படி இருக்கிறான் பார்த்தியா, அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றார்.

அறிவோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா சொன்னதைக் கேட்ட போது, “ அண்ணே நான் கஷ்டப்பட்டது போதாதா, அந்த பொண்ணும் கஷ்டப்படனுமா? இது தற்காலிக விடுப்பு தாண்ணே, நிரந்தர விடுதலைதான் இப்ப முக்கியம்” என்றார்.

பேரறிவாளனைப் பார்க்க அவரோடு உடன் படித்த உறவுகள், மனைவி மக்களோடு வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தார்கள். ஒவ்வொரு வரையும் அடையாளம் கண்டு கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டார். வந்தவர்களில் வயதான அம்மா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அழுதவாறே “ஒரு பாவமும் பண்ணாத இந்த புள்ளையை இவ்வளவு காலமும் அடச்சு அடச்சுட்டாங்களே நல்லா இருப்பாங்களா? என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே சொன்னது உண்மை கண்ணீரைப் போலவே வடிந்தது.

“வீட்டில் தண்ணீருக்காக மோட்டார் போட்டால் கூட ‘ஏதோ’ என்று தூங்கக்கூட முடியவில்லை என்று சொல்லும் பேரறிவாளனுக்கு சிறையில் இருந்தே பழகிவிட்டதால் இப்போது வீடு புதிதாக இருக்கிறது. கடந்த 26 ஆண்டு காலமாக பழகிய சிறை வாழ்க்கையைத் துண்டித்து புதிய வாழ்வுக்குள் அதுவும் இந்த ஒரு மாத காலம் இருப்பது சிரமம் என்பதுதான் அவரது உணர்வாக இருந்தது.

உணவிலிருந்து எல்லாமே பக்கத்து ஊர்களிலிருந்தும் அன்பாக எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறை அவற்றுக்கு அனுமதி மறுத்துவிட்டது. காரணம், பேரறிவாளனின் பாதுகாப்புக்காக என்று பதில் அளிக்கிறார்கள். அதனால், பக்கத்து கிராமத்து உறவுகள் நாட்டுக்கோழி, மீன் என்று அறிவுக்கு பிடித்த உணவுகளை வகை வகையாய் எடுத்து வீட்டுக்கே கொண்டு வந்து சமைத்துத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டுக்கு வந்த முதல் நாள் உணவு அக்கா அமைத்து வைத்த தோசையும் மறுநாள் உப்புக்கறியும் சாப்பிட்டதும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் குடும்பத்தோடு உண்டதைத்தான் நெகிழ்வோடு குறிப்பிட்டார்.

அறிவோடு உரையாடும் போது மிக முக்கியமாக, “சிறையில் இருக்கும் மற்ற ஆயுள் சிறைவாசிகள் 2008ஆம் ஆண்டுக்கு பிறகு யாரும் பொது மன்னிப்பிலோ அல்லது அண்ணா பிறந்த நாளிலோ விடுதலை செய்யப்படவில்லை. அதற்கு நாங்கள் தான் காரணம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. முழுக்க முழுக்க அரசியல்தான் காரணம். இனி என்னுடைய இந்தப் பரோலில் மற்ற கைதிகளின் விடுதலைக்குத் திறவு கோலாக அமையும்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.

26 ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல், சட்டரீதியாக உறுதியாகப் போராடுகிற அந்தப் போராளியின் விடுதலையை உலகத் தமிழர்களே எதிர் நோக்கிக் காத்துகிடக்கிறார்கள். ஆரத்தி எடுத்து, ஆரத்தழுவி அந்தக் கிராமத்து பெண்களும் இளைஞர்களும் வரவேற்றிருப்பது ஒட்டு மொத்தமாக தமிழினமே வரவேற்றது போலத்தான். குற்றம் செய்தவர்களை யாரும் வரவேற்று உபசரிக்க மாட்டார்கள். அது கிராமத்துப் பழக்கவழக்கங்களில் ஒன்று. ஆனால் பேரறிவாளனை உச்சி முகர்ந்து வரவேற்றதிலிருந்தே தெரிகிறது அவர் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி என்று.

ஊரிலிருந்து விடைபெறும் போது இந்த உணர்வைத்தான் பெற்று வெளியேறினோம். ஊர்மக்கள் எல்லோரும் வந்து கேட்டார்கள். “அறிவு இந்த ஒரு மாத லீவு முடிஞ்சு போயிடுவியா? எப்ப வருவ?” இந்த கேள்வி அந்த உறவுகள் மட்டுமல்ல உலகமே கேட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு துணிச்சலாக முடிவெடுத்து மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்.

இவர்களது விடுதலையில்தான் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் ஆயிரக்கனக்கான கைதிகளின் விடுதலையும் அடங்கி இருக்கிறது. அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையோடு ஜோலார்பேட்டையிலிருந்து வெளிவந்தோம். ஆனால் மனம் இன்னமும் அங்கேயேதான் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

செப்டெம்பர், 2017.