சிறப்புக்கட்டுரைகள்

அறிஞர் அண்ணாவைக் கவர்ந்த அமெரிக்க இயக்குநர்!

சரோ லாமா

பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வழுதூரைச் சேர்ந்தவர். புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக்கல்வியைப் பயிற்றுவிக்கும் இணைப்பேராசிரியராகத் தற்போது பணியாற்றிவருகிறார். ஆவணப் படங்களின்பால் தனது கவனத்தைச் செலுத்திய சொர்ணவேல், தங்கம் (1995), ஐ.என்.ஏ. (1997), வில்லு (1997), போன்ற முக்கியமான ஆவணப் படங்களின் இயக்குநர். அவரது சமீபத்திய படங்களில் முக்கியமானது Unfinished Journey: A City in Transition (2012).. இது சொர்ணவேல் தனது நண்பர் பேராசிரியர் மார்க் ஹூல்ஸ்பெக்குடன் இணையாகத் தயாரித்து இயக்கிய படம். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் முதல் நகரமெனக் கருதப்படும் செயிண்ட் ஆகஸ்டினில் 1960களில் நடந்த இதுவரை அதிகம் அறியப்படாத இன/நிற வெறுப்புச் சம்பவங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை ஆவணப்படுத்தியிருக்கும் படம் இது.

“டாகுமெண்டரி திரைப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை எனக்கு ஓரளவாவது வழங்கின. மேலும் டாகுமெண்டரி படங்கள் என்பது ஒரு சிவில் சமூகத்தின் கட்டாயத் தேவை என்பது என் தரப்பு” என்கிற சொர்ணவேலிடம் உலக அளவில் ஆவணப்படங்களின் இடம் என்ன? என்று கேட்டோம்.

“சினிமா தோன்றியதே ஆவணப்படங்களில் இருந்துதான் என நாம் சொல்லமுடியும். ஏனெனில் சினிமா கருவிகளை வைத்து அதிகமும் காட்சிகளின் நகர்வுகளை லூமியர் சகோதரர்கள் படம் பிடித்தார்கள். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தொழிலாளர்கள், ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் ரயில் என லூமியர் சகோதரர்கள் அதிகமும் படம் பிடித்தது நகரும் காட்சிகளையும் அதன் மூலம் சமூக அமைப்பின் அவதானிப்புகளையுமதான். லூமியர் சகோதரர்களுக்கு முன்பே வோர்ட்ஸ்வொர்த் டேனிஷ்த்ரோப்,  எடிசன் ஆகியோர் சினிமா காமெரா கண்டுபிடிப்பில் பங்காற்றியிருந்தாலும், லூமியர் சகோதரர்கள்தான் காட்சியைப் பதிவு செய்தல், மற்றும் ப்ராஸெஸ் செய்து திரையிடுதல் ஆகியவற்றை ஒன்றிணைத்தவர்கள் ஆவர். எனவே லூமியர் சகோதரர்களின பங்கு முக்கியமான ஒன்று.  அவர்களின் ஆரம்பகால ஆவணப்படங்கள், ராபர்ட் ப்ளஹர்டி எடுத்த Nanook of the North (1922), ரஷ்ய இயக்குநர்  ஷிகா வெர்தோவ் எடுத்த Man with a Movie Camera (1929), ஜோரிஸ் ஐவென்ஸின்  Regen/ Rain (1929) ஆகிய ஆவணப்படங்கள் வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முக்கியமான ஆவணப்படங்கள். சினிமாவின் இன்றைய கலை அழகியலுக்கு வழி வகுத்ததில் மேலே குறிப்பிட்ட ஆவணப்படங்களுக்கும், இயக்குநர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.  

ஆவணப்படங்களுக்கான சந்தை எப்படி இருக்கிறது?

இணையம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்த இணையப் பயன்பாடு ஆவணப்படங்கள் மற்றும் சுயாதீனப் படங்களுக்கு ஒரு பெரிய சந்தையாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் உங்களின் ஆவணப்படத்தை நீங்கள் திரையிடலாம். ரோட்டர்டாம் போன்ற திரைப்பட விழாக்களில்  திரைப்பட விநியோகிப்பாளர்களுக்கு நீங்கள் திரையிட்டுக்காட்டி உங்கள் திரைப்படத்தை விற்கலாம். அல்லது அமெஸான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்களில் உங்கள் படங்களைக் கட்டணம் செலுத்திப் பார்க்கும்விதமாகச் சந்தைப்படுத்தலாம். மேலும் யூட்யூப் போன்ற வீடியோ தளங்களில் நேரிடையாகவே ரிலீஸ் செய்யலாம். ஆவணப்படங்களை மக்கள் பார்க்கப் பார்க்கத்தான் அதன் மீதான ரசனை வளரும். அந்த வகையில் அலக்ஸாண்டர் அஸ்றுச் 1948ல் கேமரா ஸ்டைலோ என்று ஒரு காகிதத்தில் எழுதுவதைப்போல சுலபமான ஒன்றாக திரைப்பட ஆவணப்பட உருவாக்கம் இருக்க வேண்டும் என்று விரும்பியது இன்றைய டிஜிடல் யுகத்தில் ஓரளவு சாத்தியமாகியுள்ளது. இணையம் திரைப்பட வினியோகத்தை சுலபமாக்கியுள்ளது எனலாம். 

அமெரிக்க அரசியலில் ஆவணப்படங்களின் பங்கு..  

முதல் உலகப் போரைப்பற்றிய ஆவணப்படங்கள்  சேமிப்பில் உண்டு. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லர் நேரடியாக அமெரிக்காவைத் தாக்கவில்லை எனினும் அவர்களின் பங்கு அந்த உலகளாவிய இரண்டாம் உலகப்போரில் இருக்க வேண்டுமென்று அமெரிக்க அரசாங்கம் நினைத்தது. அதை மக்களுக்குப் புரியவைக்க அவர்கள் ஆவணப்படங்களைத்தான் உபயோகித்தார்கள். இதற்காக அமெரிக்க அரசுக்கு இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆவணப்படங்களை எடுத்தவர் ஃப்ராங்க் காப்ரா. ஃப்ராங்க் காப்ரா இயக்கிய நாம் ஏன் போரிடுகிறோம் (Why We Fight, Series of seven documentaries/propaganda films, 1943) என்ற ஆவணப்படங்கள் இரண்டாம் உலகப்போர் சமயங்களில் அமெரிக்காவிலும், மொழி மாற்றம் செய்யப்பட்டு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆவணப் படங்களின் பிரச்சார

சாத்தியங்களுக்கு அவை ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்க இயக்குநர்களில் சாப்ளினுக்கு அடுத்து இந்திய இயக்குநர்களை அதிகம் பாதித்தது ஃப்ராங்க் காப்ராதான். தமிழ்நாட்டிலும் என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, இந்தியில் ராஜ் கபூர், ஜாவேத் அக்தர் என பாதிப்புகள் அதிகம் உண்டு. ஃப்ராங்க் காப்ராவின் பாதிப்பு அதிகம் உள்ள படம் என்று

பராசக்தியைச் சொல்ல முடியும். ஃப்ராங்க் காப்ராவின் கதாபாத்திரங்களும்,கிளைமாக்ஸில் நேரிடையாக பார்வையாளர்களை நோக்கிப் பேசுவார்கள். பராசக்தியின் கிளைமாக்ஸில் படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான குணசேகரன் (சிவாஜி கணேசன்) காமெராவை நோக்கிப் பேசுவது என்பது ஃப்ராங்க் காப்ராவின் பாதிப்பு என்று கூறலாம்.

இந்திய அளவில் டாக்குமெண்டரி படங்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்து..

ஆனந்த் பட்வர்த்தன் குறித்து இங்கு நாம் பேச வேண்டும். நம் சமகாலத்தின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநர் அவர்.​​​

​ In the Name of God,  A Narmada Diary, War and Peace, Jai Bhim Comrade போன்ற ஆவணப்படங்களின் வழியே இந்தியர்களின் கூட்டு மனச்சாட்சியை நோக்கிக் கேள்விகள் எழுப்பியவர் ஆனந்த் பட்வர்த்தன். அரசின் ஒடுக்குமுறையை மீறி தளராமல் ஆவணப்படங்களை ஒரு இயக்கமாக மாற்றியவர் ஆனந்த் பட்வர்த்தன். அடுத்து அழகியல் நோக்கில் மணி கௌல், குமார் சகானி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், சஞ்சய் காக், சௌதாமினி, அருண் கோப்கர் போன்றவர்களை நாம் முக்கியமானவர்களாகச் சொல்ல முடியும். தீபா தன்ராஜ், ராகேஷ் சர்மா, நகுல் சஹானி, மைனாக் திரிவேதி, ரஞ்சன் பலித், வினோதா ராஜா, ரீனா மோஹன், சமீரா ஜெயின்  ஆகியோர் தற்போது இயங்கிவரும் ஆவணப்பட இயக்குநர்களில் முக்கியமானவர்கள். தமிழக அளவில் அம்ஷன் குமார்,  அருண்மொழி, ஹரிஹரன், ரவி சுப்பிரமணியன்,  லீனா மணிமேகலை,  ஆர். ஆர், சீனிவாசன், ஆர்.பி.அமுதன், ப்ரசன்னா ராமசாமி, சஷிகாந்த்,  பாண்டியராஜன், விஜய ஆனந்த், தயாளன், ராணி கார்த்திக் ஆகியோரை ஒரு சிறிய உதாரணமாகச் சொல்லலாம். இவர்கள் மட்டுமில்லாமல் இளைய தலைமுறையில் நிறைய பேர் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஆவணப்படத்துறையில் இயங்கி வருகிறார்கள். டிஜிடல் யுகம் ஆவணப்படத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளதை இந்த நல்ல மாற்றத்திற்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.   

நவம்பர், 2017.