சிறப்புக்கட்டுரைகள்

அரசியல் மருத்துவம்

பாமரன்

இந்த மாற்று மருத்துவம்... மாறாத மருத்துவம்ன்னு ஏகப்பட்ட மருத்துவத்துக்கு மத்தீல மண்டை கொளம்பிப் போயிருது. ஆனா ஒவ்வொன்னையும் உத்துப் பாத்தா... அததுக்குப் பின்னாடி ஒரு அரசியல்பின்புலம் இருக்குறதுதான் சுவாரசியமான சமாச்சாரம்.

தொட்டால் பூ மலரும்...ன்னு தொடுசிகிச்சை அக்குபங்ச்சர் ஆளுங்க அலப்பரை பண்ணுனா..

தொடாமல் நான் மலர்ந்தேன்...ன்னு இயற்கை வைத்திய ஆளுங்க அணிவகுக்குறாங்க.

இதில் சித்த மருத்துவத்திற்குப் பின்னாடி இருக்குறவங்க யாருன்னு பார்த்தா பெரும்பாலும் “தமிழ்த்தேசிய” அரசியல் பேசறவங்களா இருக்காங்க...

ஆனா ஆயுர்வேதத்துக்குப் பின்புலமா இருக்குறவங்களோ பெரும்பாலும் “இந்துத்துவா” நம்பிகள்.

சரி... ஹோமியோபதிய யாரு அதிகமா சிலாகிக்கிறாங்கன்னு பார்த்தா “முன்னாள் மார்க்சிய லெனினிய” நண்பர்கள்தான்னு புள்ளிவிவரம் சொல்லுது.

இதெல்லாம் கிடக்கட்டும் இந்தத் தொடு சிகிச்சை ஹீலர்களோட டீலர்கள் யாருன்னு பார்த்தா சாட்சாத் மக்கள் நலக் கூட்டணிதான். அதுவாகப்பட்டது பெரும்பாலும் “மார்க்சிஸ்ட்”.

அப்ப அலோபதி என்கிற ஆங்கில மருத்துவம்? இதிலென்ன சந்தேகம்... வேற யாரு? நம்ம “தி.மு.க. / அ.தி.மு.க” பங்காளிகதான்.

இதுல எதுல Effect?

எதுல Side Effect? ன்னு நான் எதுவும் வாயத் தெறக்கமாட்டேன்.

அப்புறம் நான் எதையாவது சொல்லித் தொலைக்க...

“ஆமா... அதுல மொதல்ல Effect இருந்தாத்தானே Side Effect வர்றதுக்கு?”ன்னு நம்மளையே திருப்பி கேப்பீங்க...

நமக்கெதுக்கு ஊர் வம்பு...?

நவம்பர், 2017.