சிறப்புக்கட்டுரைகள்

அம்மாவின் ஆசை

அ.தமிழன்பன்

பட்டப்படிப்புப் படித்தும் வேலை கிடைக்காமல் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பிறந்த இளம்பெண்களின் நல்வாய்ப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கிற நேரத்திலேயே யாராவது போய் எங்கள் படத்தில் நடிக்கவேண்டும் என்று கூட்டிவந்து இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்துவிடுகிறார்கள். இப்படித்தான் மாளவிகாமேனனுக்கும் வாய்ப்பு வந்தது.   மலையாளத்தில் பிருத்விராஜ் படம், இயக்குநர் கமல் படம் ஆகியனவற்றில் நடித்த அவருக்கு கோடம்பாக்கமும் சிவப்புக்கம்பளம் விரித்துவிட்டது. இவன்வேறமாதிரி படத்தில் நாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிகுமாரின் தங்கையாகவும் நடித்திருக்கும் அவர் ஏற்கெனவே வெளியான விழா படத்தின் நாயகி. இப்போது, புதுவம்சம் படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த பலநாட்களாக திருச்சியில் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசினோம்.

    “திருச்சியில் பிரம்மன் படத்தை தியேட்டருக்குப் போய்ப்பார்த்தேன், என்னாலயே நம்ப முடியல நிறையப்பேர் என்னை அடையாளம் கண்டுகொண்டு நலம்விசாரித்தார்கள். நான் நடிகையாவேன் என்று கனவுகூடக்கண்டதில்லை, எனக்கு நடிப்பதற்குக் கொஞ்சமும் விருப்பமுமில்லை. என் அம்மாவுக்கு நடிகையாகவேண்டும் என்று ஆசை. அவருடைய ஆசை நிறைவேறவில்லை என்பதால் என்னை நடிகையாக்கிவிட நினைத்தார். நான் குழந்தையாக இருந்தபோதே நிறையப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கக் கேட்டார்கள். அப்போதெல்லாம் நான் நடிக்கவேமுடியாது என்று சொல்லிவிட்டேன். அதன்பின்னர் நடனம் மற்றும் இசையின் மீதான ஆர்வத்தினால் நடனம் கற்றுக்கொள்ளப் போனேன், அப்போது ஒரு டிவோஷனல் வீடியோ ஆல்பத்தில் நடனமாடியிருந்தேன், அதைப்பார்த்துவிட்டு மறுபடி படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. அதைக் கறாராக நிராகரிக்காமல் நடிக்கஒப்புக்கொண்டேன். மலையாளப்படங்களில் என்னைப் பார்த்துவிட்டு தமிழில், சந்திரவதனா என்கிற படத்தில் நாயகியாக நடிக்கக்கேட்டார்கள். அந்தப்படம் முழுமையாக முடிவடைந்துவிட்டது. இன்னும் வெளியாகவில்லை. அடுத்தமாதம் அந்தப்படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்” என்று படபடவென ஒப்பித்தார். கதாநாயகியாக நடித்த பிறகு சகோதரி வேடங்களை ஒப்புக்கொள்வது எதனால்? என்று கேட்டோம்.

“எங்கேயும் எப்போதும் படஇயக்குநர் சரவணன்சார் படம். விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் அந்தப்படத்தில் நமக்கும் வாய்ப்புக்கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியாகவே ஒப்புக்கொண்டேன். சசிகுமார்சார் கேரளாவிலும் நன்குதெரிந்தவர் அவர் படத்தில் அதுவும் அவருக்கு சிஸ்டராக நடிக்கவேண்டும் என்று கேட்டபோதும் அதே காரணத்தினால்தான் ஒப்புக்கொண்டேன்.  இப்போது நடிக்கும் புதுவம்சம் படத்தில் ஹரீஷ் ஹீரோவாக நடிக்கிறார். மணிபாரதி எனும் புதுஇயக்குநர் இயக்குகிறார். எனக்கு இதில் மெச்சூர்டான கேரக்டர். ”

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எப்படி இருக்கும்?(இந்த கேள்வி இல்லாவிட்டால் பத்திரிகையில் பேட்டியைப் போடமாட்டார்களே..)

“ஒரு படத்தில் நடிக்கப்போகும்போது உடன் நடிப்பவர்களிடம் நல்லநட்பு உருவாகிவிடும் அவர்களோடு சேர்ந்து வேலைசெய்யும்போது அது ஒரு வேலையாகத்தான் தெரியும். அதோடு படப்பிடிப்புத்தளங்களில் பெரியகூட்டம் இருக்கும். அவர்களுக்கு மத்தியில் இயக்குநர் சொல்லிக்கொடுப்பதைச் சரியாகச் செய்துவிடவேண்டும் என்கிற எண்ணம்தான் நிறைந்திருக்கும். அதைச் சரியாகச் செய்துவிடுவோமா என்கிற பதட்டமும் இருக்கும். அதனால் அங்கு கூச்சத்துக்கு இடமிருக்காது“ என்று அழகாக விளக்கம் சொல்கிறார்.   

இப்போதுஇவரைத்தேடிநிறையப்படவாய்ப்புகள்வருகின்றனவாம். கதாநாயகியாகநடிக்கக்கேட்டுதினமும்ஒருவராவதுபேசிவிடுகிறார்களாம்!

மார்ச், 2014.