வெண்மைப்புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குஜராத்தின் கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கத்தில் பணிக்குச்சேர்ந்ததும் அதன் பின்னால் நிகழ்ந்ததும் மிகப்பெரிய வரலாறு.
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குஜராத்தின் கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கத்தில் பணிக்குச் சேர்ந்ததும் அதன் பின்னால் நிகழ்ந்ததும் மிகப்பெரிய வரலாறு. அவர் அங்கே பணிக்கு சேர்ந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் 1955-ல் சின்ன அளவில் கோவை அருகே உள்ள துடியலூரில் கூட்டுறவு கிராம வங்கி ஒன்று தொடங்கப்பட்டது. இன்று துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்(டியூகாஸ்) என்று அழைக்கப்படும் இந்நிறுவனம் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அமுல் போல அகில இந்திய வெற்றிக்கதையாக இது உருவாகாவிட்டாலும் தமிழக அளவில் ஒரு மிகச்சிறந்த வெற்றிக்கதையாகவே உருவெடுத்துள்ளது.
கோவை துடியலூரிலுள்ள இதன் தலைமையகத்துக்கு அந்திமழை சார்பாக சென்றிருந்தபோது வளாகத்தில் இருந்த பல்வேறு பணிப்பிரிவுகளைப் பார்க்க முடிந்தது. அச்சகம், கலப்பு உரத் தயாரிப்பு பிரிவு, பூச்சிமருந்து உற்பத்தி ஆலை, விதைகள் பதப்படுத்தும் பிரிவு, வேளாண் கருவிகள் தயாரிக்கும் பிரிவு, கடன் பிரிவு, வாடகைக்கு ட்ராக்டர்கள், பெட்ரோல் பங்க் என்று பல்துறை சார்ந்த வேளாண் இடுபொருட்களை ஒரே குடையின் கீழ் தரும் கூட்டுறவு நிறுவனமாக இது இருப்பது ஆச்சரியமூட்டுகிறது.
முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட இதை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்டவர் டி.என்.பழனிச்சாமி கவுண்டர். தொடங்கியபோது அதன் தலைவராக வி.சி.சுப்பையா கவுண்டர் என்பவரும் பொருளாளராக மாரப்ப கவுண்டர் என்பவரும் இருந்தனர். மாரப்ப கவுண்டர் வீட்டில்தான் முதலில் இந்நிறுவனம் செயல்பட்டது. பின்னர் டி.என்.பழனிசாமி கவுண்டர் தலைவர் ஆனார். விசி சுப்பையா, 30 செண்ட் இடத்தை இந்நிறுவனத்துக்குத் தானமாகக் கொடுத்தார். அதுதான் இப்போது இருக்கும் இடம். அங்கு சின்ன கட்டடம் கட்டி நிறுவனம் நடந்தது. அதன் பின்னர் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வாங்கப்பட்டது. 21 ஆண்டுகள் டி.என். பழனிச்சாமி தொடர்ந்து இதன் தலைவராக இருந்தார். 1980-ல் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. வெள்ளிவிழாவில் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி வந்து சிறப்பித்தார். டி.என்.பழனிச்சாமி அமெரிக்காவில் இண்டர்நேஷன்ல் கோஆபரேஷன் படிப்பும் படித்தார். அங்கு இருந்தபோது கேர் நிறுவனம் சார்பாக 5 ட்ராக்டர், கதிர் அடிக்கும் எந்திரம் போன்றவற்றை இலவசமாகப் பெற்றுத்தந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் வீ.கே.லட்சுமணன் தலைவராக இருந்தார். பின்னர் பத்து ஆண்டுகள் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் இல்லை. அரசின் தனி அதிகாரிகள் பணியாற்றினர். 1996-க்குப் பின்னால் என். துரைசாமி தலைமையிலான நிர்வாகக்குழு பொறுப்பேற்றது. இவருடைய காலத்தில் இந்நிறுவனம் கடன்பிரிவை விரிவாக்கத் தொடங்கியது.
“அந்த காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் மங்கத் தொடங்கியது. ஆட்பற்றாக்குறையும் நிலவியது. இந்நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேறு வழிகளைத் தேடவேண்டியிருந்தது. எனவே தலைமையகத்தில் மட்டும் இயங்கிய கடன்பிரிவுக் கிளைகளைச் சுற்றிலும் ஏழு இடங்களில் தொடங்கினோம். நல்ல வரவேற்பு. விவசாயிகளுக்கு இந்நிறுவனத்தின் மேல் இருந்த நம்பிக்கை அப்பட்டமாகத் தெரிந்தது. டெபாசிட்டுகள் பெருகின. 2001ல் எங்கள் பதவிக்காலம் முடிந்தபோது சில கோடி அளவில் டெபாசிட் இருந்தது. இன்று நூறுகோடிக்கும் மேல் அது பெருகி உள்ளது” என்று பெருமையுடன் சொல்கிறார் அந்திமழையிடம் பேசிய துரைசாமி.
“இப்போது சிறப்பாக இயங்கும் கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கான ஆரம்பகட்ட முதலீடு எங்கள் நிறுவனத்தால் அளிக்கப்பட்டதே. இரண்டு ஆண்டுகளுக்கான எங்கள் உறுப்பினர்களின் ஈவுத்தொகையை டெபாசிட் செய்து அதில் வரும் நிதியைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்குவித்துவருகிறோம்” என்கிறார்.
1998-ல் இருந்து இன்றுவரை இது தமிழ்நாட்டின் சிறந்த கூட்டுறவு நிறுவனமாகப் பரிசு பெற்று வருகிறது. 10 லட்சத்துக்கும் மேல் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் 14 சதவீதம் ஈவுத்தொகை வழங்கலாம். ஆனால் இங்கோ 20 சதவீதம் ஈவுத்தொகை அரசு அனுமதியுடன் வழங்கப்படுகிறது. அதில் 14 சதவீதம் பணமாகவும் 6 சதவீதம் பங்குகளாகவும் அளிக்கப்படுகிறது. (இது வியப்பான தகவல். ஏனெனில் கடனுக்கு வட்டி 12-14%. ஆனால் அக்கடன் வாங்கியவர்களுக்கு அளிக்கப்படும் பங்குகளுக்கான ஈவுத்தொகை 20%) என்று செய்திகளைச் சொன்ன துரைசாமி, சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியப்படுத்தியது: “எமது நிறுவனத்தின் சார்பில் ஒரு மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கவும் திட்டமிட்டோம். அதற்கான நிதி வலுவும் இடமும் இருந்தது. ஆனால் அதற்கான ஆட்களை நியமிப்பதற்கு அரசு ஒப்புதல் கிட்டவில்லை. எனவே அந்த கனவு நனவாகவில்லை.”
மினரல்வாட்டர் ஆலை ஒன்றை நிறுவவேண்டும் என்ற திட்டமும் இவர்களுக்கு இருந்திருக்கிறது. அதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டுப்பாளையத்தில் ஒரு இடத்தையும் தயார் செய்தார்கள். அதை சந்தைப்படுத்தும் திட்டங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அரசு அனுமதி கிட்டவில்லை. மிகவும் சிக்கலான பூச்சி மருந்து உரிமங்களையே வாங்கி அதற்கான ஆலைகளைக் கட்டமுடிந்த டியூகாஸுக்கு மினரல் வாட்டர் ஆலை தொடங்க முடியாத தடைக்கல் உருவானது ஆச்சர்யமே.
“நிறுவனத்துக்குள் ஒரு பருத்தி பஞ்சு பிரித்தெடுக்கும் ஆலையும் இருக்கிறது. அதை வாடகைக்கு எடுத்த ஒருவர் விவசாயிகளிடம் ட்யூகாஸுக்கு பருத்தி வாங்குகிறேன் என்று சொல்லி கடனுக்கு வாங்கினார். எங்களிடமும் கீலோனும் வாங்கியிருந்தார். கடைசியில் விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கவில்லை. பெரும் போராட்டத்துக்குப் பின் பிரச்னையை வெற்றிகரமாக சமாளித்தோம்” என்று தன் காலகட்டத்தில் எதிர்கொண்ட ஒரு பிரச்னையையும் விளக்குகிறார் துரைசாமி.
ட்யூகாஸின் விரிவாக்கத் திட்டங்களில் வேப்ப எண்ணெய் தயாரிக்கும் ஆலை ஒன்று உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இன்று வேப்பம்புண்ணாக்குக்கு விவசாயிகளிடம் தேவை இருப்பதால் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டுறவு இயக்கம் பெரும் வெற்றிகளைப் பெறவில்லை. அதற்குப் பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இந்நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது உறுப்பினர்களின் பங்களிப்புதான். நிர்வாகக்குழு கூட்டங்களில் பங்கெடுத்து இயக்குநர்களையும் அதிகாரிகளையும் கேள்விகளால் துளைத்துவிடுவார்கள் என்று தெரிவிக்கிறார் ட்யூகாஸின் அதிகாரி ஒருவர்.
அத்துடன் இந்நிறுவனத்தை உருவாக்கியவர்களின் தன்னலமற்ற பணியும், தொலைநோக்கும் இன்றும் வழிகாட்டுவதால் புதிதாகப் பொறுப்பேற்பவர்கள் இந்நிறுவனத்தை வளர்த்தெடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் முக்கியக் காரணம்.
எம். சுப்பையன், தலைவர், டியூகாஸ்
“ஆரம்பத்திலேயே விவசாயிகளுக்காக சேவை நோக்கில் தொடங்கப்பட்டதுதான் இந்நிறுவனம். அவர்களுக்குத் தேவையான பருத்தி, நெல் விதைகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு அளிப்பது நோக்கம். பின்னர் உரங்களும் பூச்சி மருந்துகளும் தயாரித்து விற்கப்பட்டன. இவற்றுக்கு விவசாயிகளிடம் பெரும் தேவை உருவானது. அதனால் அந்த தேவையைப்பூர்த்திசெய்ய இந்நிறுவனம் நன்றாகப்பணியாற்ற முடிந்தது. எழுபதுகளில் பருத்தி இங்கே நிறைய விளைவிக்கப்பட்டது. அதற்காக பூச்சிக்கொல்லிகள் தயாரித்து விற்றோம். உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் எல்லோருடைய கூட்டுமுயற்சிதான் இதன் வெற்றிக்குக் காரணம். நான் தலைவர் பொறுப்பேற்ற பின் இதே நோக்கில் செயல்படுகிறோம். இந்த ஆண்டு எப்படியும் 10 கோடி ரூபாய் லாபம் ஈட்டிவிடுவோம். 1998-ல் ஏழு கடன் பிரிவுக்கிளைகளை உருவாக்கியது முக்கியமான வளர்ச்சி. இப்போதைய நிலைமையில் 111 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 56 பேர்தான் உள்ளனர். புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் இன்னும் இரண்டு கடன்பிரிவுக் கிளைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அறுபதாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க உள்ளோம். நவீன வகை உழும் எந்திரங்கள், தென்னை மட்டைகளை உரமாக மாற்றும் எந்திரம் போன்றவற்றை வாங்கி விவசாயிகள் பயன்பாட்டுக்காக இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.”
ஏப்ரல், 2015.