சிறப்புக்கட்டுரைகள்

அன்று 5000 ரூபாயில் தொடங்கினார் இன்று 300 கோடி ரூபாய் குழுமத்தின் தலைவர்!

காவேரி குழும தலைவரின் வெற்றிக்கதை!

அசோகன்

தொழிலில் இறங்கவேண்டும் என்று முடிவு செய்தவுடன்  அந்த இளைஞர் தன் அப்பாவிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்குகிறார்.

சென்னை பாரிமுனையில் ஒரு கடையை  வாடகைக்குப் பிடித்து எஃகு வர்த்தகம் தொடங்குகிறார். முதல் மாதம் இரு டன்கள்கூட விற்க முடியாமல் சிரமப்பட்டார். இன்று பல ஆண்டுகள் கழிந்த நிலையில் 320 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய மின் உற்பத்திக் குழுமத்தை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவர் காவேரி பவர் என்கிற மின் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். இளங்கோவன். தற்போது காவேரி நியூஸ் என்கிற 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியையும் அவர் தொடங்கி இருக்கிறார். சென்னை அண்ணா நகரில் மின்சார சேமிப்புக்காக சென்ஸார்கள் பொருத்தப்பட்ட அழகான அலுவலகத்தில் இளங்கோவனைச் சந்தித்தோம்.

இளங்கோவனின் தந்தை சண்முகத்தின் பூர்வீகம் மதுரை அருகே மேலூர். எளிய குடும்பம். பள்ளிப்படிப்பைச் சிறப்பாகப் படித்ததால் அப்பகுதியின் செல்வந்தர் ஒருவர் அவரை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து படிக்க நிதி உதவி செய்தார். பி.ஏ. படிப்பில் தேறி ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்த அவருக்குத் தன் மகள் சீதா லட்சுமியை மணமுடித்துவைக்கிறார். இதெல்லாம் 1940களில் நடக்கிறது. அதன் பின் சென்னைக்கு வரும் சண்முகத்துக்கும் ஏழு குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான் இளங்கோவன். அவரது நான்கு சகோதரர்களில் மூவர் பொறியாளர்கள். ஒருவர் மருத்துவர்.  இளங்கோவன் மட்டும் பிகாம் படிக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகலாம் என ஆசைப்பட்டு தேர்வு எழுதுகிறார். நேர்முகத் தேர்வுக்கும் தேர்வாகிறார். இடையில் அப்பாவின் நண்பர் ஒருவரது எஃகு வர்த்தகக் கடையில் சில மாதங்கள் வேலை பார்த்து விலகுகிறார். 1985 மே 24ந்தேதி அவர் ஐ.ஏ.எஸ் தேர்வாகவில்லை என்று முடிவு தெரிகிறது. அன்று இரவே அவர்

சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று முடிவு செய்து அப்பாவிடம் 5000 ரூபாய் பெற்று மறுநாள் பாரிமுனையில் ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு எடுத்து தனக்குச் சின்னதாக அனுபவம் இருந்த எஃகு கம்பிகள் வர்த்தகத்தையே செய்ய ஆரம்பிக்கிறார். “உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்ன தெரியும் என்று இவ்வளவு சின்ன வயதிலேயே தொழில் ஆரம்பிக்கிறாய்?” என்று பலர் கேட்டார்கள்.

“உண்மையில் எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் தொழில் செய்யவேண்டும் என்று வெறி மட்டும் உருவாகி இருந்தது. யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: என்ற புறநானூற்றுப்பாடலை என் தந்தை  அடிக்கடிச் சொல்வார். அது என் அடிமனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது. பெரிதாக சாதிக்கவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவ்வளவு எளிது அல்ல என்பது போகப்போகத் தெரிந்தது. முதல் மாதம் நான் விற்க முடிந்தது 5 டன்கள் எஃகுக் கம்பி மட்டுமே. இரண்டாம் ஆண்டில் 3 லட்சரூபாய்க்கு விற்பனை செய்தேன். இப்படிச் சில ஆண்டுகள் கழிந்த பின்னர் பாண்டிச்சேரி அரசு அம்மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு குறைந்த மின்கட்டணம் மற்றும் சில சலுகைகளுடன் வசதி கள் செய்துதருவதாக நண்பர் ஒருவர் கூறினார். காரைக்காலில் எஃகுத் தொழிற்சாலை ஒன்று தொடங்கத் திட்டமிட்டேன். அதற்குத் தேவைப்பட்ட முதலீடு ஒரு கோடி ரூபாய்! அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தடுமாறிய நான் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.”

கடன் அவ்வளவு எளிதாகப் பெறக்கூடியதாக இல்லை. எல்லோரும் உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? எப்படித் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றே இவரைக் கேட்டிருக்கிறார்கள். இளங்கோவனும் விடுவதாக இல்லை. அப்போதைய தமிழக முதல்வருக்கு மனு கொடுத்தார். பல அதிகாரிகளையும் சந்தித்து மீண்டும் மீண்டும் கோரிக்க வைத்தார். அவர் சந்திக்காத ஒரு அதிகாரி சிப்காட் தலைவர் மட்டுமே. அவர் கடன் வழங்கும் குழுவில் ஒரு உறுப்பினர். அவர் இவரது விண்ணப்பத்தைப் பார்த்திருக்கிறார். பாண்டிச்சேரியில் மின்சாரக் கட்டணம் குறைவு என்பதன் அடிப்படையில் இந்த தொழில்திட்டம் வெற்றிபெற முடியும் என்று அவர் உணர்ந்தார். கடன் கிடைத்தே விட்டது!

குடும்ப உறுப்பினர்களுடன் இளங்கோவன்(நடுவில்)

“காரைக்காலில் தொழிற்சாலை கட்டினோம். கட்டிக்கொண்டிருக்கும்போதே பெரும் புயல் ஒன்று தாக்கியது அப்புயல் எங்கள் கட்டடம் வழியாகக் கடந்து சென்றது. கட்டுமானங்களைத் துடைத்து எறிந்துவிட்டது. நல்லவேளையாக காப்பீடு இருந்ததால் மீண்டும் கட்டுமானத்தைத் தொடங்கினோம். புதுச்சேரி மாநில அரசின் மானியம், தமிழக அரசின் கடன் ஆகியவற்றுடன் தொடங்கிய தொழிற்சாலை சில ஆண்டுகளிலேயே சிறப்பாக நடை போட்டது. 1990-ல் தொடங்கிய இத்தொழிலில் சில ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு 40 கோடி வரை வர்த்தகம் செய்ய முடிந்தது. ஆனாலும் லாபம் என்று பார்த்தால் மிகக்குறைவுதான். 1996-ல்  மத்திய நிதி அமைச்சகம் கொண்டுவந்த வரி சீர்திருத்தத்தின் பின்னரே எங்களுக்கு வருவாய் உயர்ந்தது. தொழிலில் எந்தக் குளறுபடியும் செய்யக்கூடாது. ஒழுங்காக வரிகட்டவேண்டும் ஆகிய அடிப்படை விஷயங்களை தொழில் செய்ய ஆரம்பித்த ஓராண்டிலேயே நான் மிகவும் உறுதியாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.” என்கிறார் இளங்கோவன்.

எஃகுத் தொழிலை கைவிட்டு மின்சாரத் துறையில் நுழைந்தது எப்படி?

“ எங்கள் தொழில்சாலையின் தேவைக்கு மின்சாரத்தை நாங்களே உற்பத்தி செய்யலாம் என்றுதான் ஆரம்பித்தோம். அங்கே காவிரிப்படுகையில் கிடைத்த இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின் ஆலை அமைக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்தோம். தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரே விண்ணப்பம் அதுதான். அப்போது மத்திய பெட்ரோலிய அமைச்சகச் செயலாளராக இருந்த சங்கர், அதற்கு அனுமதி தந்தார். நாங்கள் அவரைச் சென்றுகூடப் பார்க்கவில்லை. 2000-ல் அனுமதி கிடைத்தது... இந்நிலையில் மின்சார உற்பத்திதான் இனி மிகுந்த தேவை உள்ள தொழிலாக மாறும் என்று உணர்ந்தேன். எனவே எங்கள் எஃகுத் தொழிற்சாலையை விற்றுவிட்டு மின்சார உற்பத்தித் தொழிலுக்கு மாறும் முடிவை  எடுத்தேன்...”

ஆனால் யாரும் அவருக்கு ரத்தினக்கம்பளம் விரிக்கத் தயாராக இல்லை. தமிழக  அரசின் மின்வாரியம் அவருக்கு முட்டுக்கட்டை போட்டது. தனியார் மின் உற்பத்தி செய்வதை அனுமதிக்க அதன் செயலாளர் மறுத்துவிட்டார். நன்றாகப் போய்க்கொண்டிருந்த தொழிற்சாலையை விற்றுவிட்டு புதிய தொழில் ஆரம்பிக்க வந்து இப்படி அவர் தடைக்கல்லை எதிர்கொண்டிருப்பதைப் பார்த்து எல்லோரும் இப்படி ஆயிடுச்சே என்று முகம் சுருங்கினார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே புதிய மின்கொள்கை உருவாகி, மின்வாரிய அனுமதி ஏதும் தேவை இல்லை என்று ஆனது. 2005ல் ஜாம் ஜாமென்று மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றின் கரையோரமாக   ‘காவேரி கேஸ் பவர் லிமிடட்’ என்ற பெயரில் மின் உற்பத்தி தொடங்கியது. மணிக்கு 7 மெகாவாட் என்கிற அளவில் உற்பத்தி. மாதம் 45 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அது.

“அதன் பின்னர் தமிழ்நாடு பெரிய மின்சாரத் தட்டுப்பாட்டை சந்தித்தது உங்களுக்குத் தெரியும். அந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் 320 கோடியில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலை ஒன்று தொடங்கினோம். இதற்குத் தேவையான கடன் வாங்க வங்கிகளிடம் சென்றபோது அதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. ஒருவழியாக ஐந்தாறு வங்கிகளை ஆளுக்கு 35 கோடி என்ற அளவில் கடன் அளிக்க ஒப்புதல் பெற்றேன். அந்த ஆலை மிகச்சிறப்பாக மின் உற்பத்தி செய்தது. அங்கே மணிக்கு 63 மெகாவாட் என்ற அளவில் உற்பத்தி. மின்சா ரத்துக்கு நல்ல தேவை இருந்த காலகட்டம் அது. எனவே மிகவும் நல்ல லாபம் கிடைத்தது. ஒரு கட்டத்தில் மயிலாடுதுறை ஆலையில் ஆண்டுக்கு 40 கோடி வர்த்தகமும் கும்மிடிப்பூண்டி ஆலையில் 280 கோடி அளவுக்கும் வர்த்தகம் நடைபெற்றது,” என்கிறார் இளங்கோவன்.

காவேரி டிவி குழுவினருடன்

காவேரி பவர், காவேரி பவர் ட்ரேடிங்க்ஸ், காவேரி சோலார் என்று மின் உற்பத்தித்தொழிலில் மூன்று நிறுவனங்களுடன் வெற்றிகரமாகச் செயல்படும் இவர் ஏன்  ஊடகத்துறையில் இறங்கிக் காவேரி செய்தித்தொலைக்காட்சியைத் தொடங்கவேண்டும்?

 “இந்தியா சுதந்தரம் அடைந்த நாடு. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்தரம் இருக்கிறதா என்றால் இல்லை. அவன் தொழில் தொடங்கவும் செயல்படவும் கட்டுப்பாடுகள் உள்ளன. இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் அதன் மக்களில் 35 சதவீதம் பேர் தினமும் 25 ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிக்கிறார்கள். 60 - 70 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலை? வளர்ச்சிக்கான சுதந்தரம் இந்த நாட்டில் இல்லை. இதை மாதிரி பல விஷயங்களைப் பேசுவதற்காக உருப்படியான ஊடகங்கள் இல்லை என்பதால் நாங்கள் இந்தச் செய்தித் தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளோம். உலகிலேயே ஆண்டுமுழுக்க சூரிய மின்சக்தி கிடைக்கக்கூடிய இடமாக தமிழ்நாட்டைச் சொல்கிறது நாசா. ஆனால் இங்கு மின்சக்தி உற்பத்தியை தடுக்கிற விஷயங்களில்தான் அரசு ஈடுபடுகிறது. இந்த அலுவலகத்தையே எடுத்துக்கொண்டால் இங்கு மின் கட்டணம் மாதம் 10,000 ரூபாய் வரும். இப்போது 2500 ரூபாய்தான் நாங்கள் கட்டுகிறோம். ஏனெனில் சூரிய சக்தி மூலம் நாங்களே மாடியில் மின்னுற்பத்தி செய்துகொள்கிறோம். ஆனால் இதையும் செய்ய இப்போது அரசு ஊக்குவிப்பது இல்லை.” என்று சுட்டிக் காட்டும் இளங்கோவன்  இலவசக்கல்வி, மக்கள் தொகை, மாற்று விவசாயம், உள்ளிட்ட முக்கியமான விஷயங்களைப் பற்றி காவேரி டிவி தொடர்ந்து பேசும் என்கிறார்.

 “நான் தொழில்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகின்றன. தனிப்பட்ட முறையிலும் தொழிற்சாலை என்ற முறையிலும் நாட்டில் அதிக வரி கட்டுபவர்களில் நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். எனவே நாட்டின் செயல்பாட்டைக் கேள்வி கேட்பதிலும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் தொலைக்காட்சியை பிறவற்றில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டப்போவது எங்களில் தூய்மையான பின்னணிதான். எங்களுக்கு எந்தச் சார்பும் இல்லை” என்கிற இளங்கோவன்  தன் கொள்கை அடிப்படையில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். அவரது மனைவி ப்ரசீதா, மும்பையைச் சேர்ந்தவர். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மகன் நீரஜ் இளங்கோவன் டென்னிஸில் அகில இந்திய ஜூனியர் சாம்பியன். இப்போது படித்துக்கொண்டிருக்கிறார்.

தொழிலில் இவருக்குத் துணையாக இருப்பவர் பிரேம்குமார். 47 வயதாகும் இவர் இளங்கோவனின் சகோதரர் மகன். தன்னைப்போலவே கொள்கைகள் உடையவர் பிரேம்குமார் என்று இளங்கோவன் பெருமையுடன் சொல்கிறார். தன் சகோதர சகோதரிகள் அனைவருமே தான் தொழில் தொடங்கி நடத்தியபோது மிகவும் ஆதரவாக இருந்தவர்கள் என்பதை அன்புடன் நினைவுகூர்கிறார்.

இளங்கோவன் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.  அவரது மேசையில் Up the organisation என்ற Robert townsend எழுதிய நூலையும் ராபின் சர்மாவின் The Greatness guide  என்ற நூலையும் பார்க்க முடிந்தது. ஆங்கில அரசியல்பொருளாதார அறிஞரான் ஜான் ஸ்டூவர்ட் மில்லின் கருத்துகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்கிறார். over himself, over his own body and mind, the individual is sovereign என்கிற அவரது தனிமனிதன் மற்றும் சமூகம் தொடர்பான வாக்கியங்களை உரையாடலின் போது குறிப்பிடுகிறார். அவரது Greatest good for the greatest numbers என்கிற Utilitarianism தொடர்பான விளக்கங்களை ஜனநாயகத்தின் பின்னணியில் புரிந்துவைத்திருப்பதாக விளக்குகிறார்.

 “வெற்றி என்பது என்னைப்பொறுத்தவரைக்கு சொத்துக்களை வாங்கிப்போடுவது இல்லை. என் பெயரில் ஒரு துண்டு நிலம் கூட எங்கும் இல்லை. வெற்றி என்பது நம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்களை அதிக அளவு மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது என்றுதான் நான் கருதுகிறேன்,” என்று முடிக்கிறார் இளங்கோவன்.

அக்டோபர், 2017.