ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

அன்புடன் திருப்பித் தருக

அவர்கள் அவர்களே

ப.திருமாவேலன்

இ ருப்பாய் தமிழா நெருப்பாய்' பாடிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயத்துக்கு' நூல் வெளியீட்டு விழா, சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில்.

அப்போது நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தாலும், ‘எழுச்சி இயக்குநர்' வி.சி. குகநாதனின் போர்ப்படையில் ஒருவனாக இயங்கிக் கொண்டிருந்தேன். எங்களின் மேற்பார்வையில் தான் அந்நூல் வெளியீட்டு விழா நடந்தது. அரங்கத்துக்குள் வராமல், வாசலில் நின்று கொண்டு, ‘அதைச் செய்', ‘இதைச் செய்' என்று உத்தரவு போட்டுக் கொண்டிருந்தது ஒரு உருவம்.

அது ஒரு கட்டத்தில் எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த, ‘யாருய்யா இவரு?' என்று கேட்டோம். ‘இவரு தான் ஓவியர்' என்று கண்ணைக் காட்டினார் விடுதலை. அந்தக் காலகட்டத்தில் கண்ணைக் காட்டினால் புலிகளுக்கு வேண்டியவர், பிரபாகரனுக்குத் தெரிந்தவர் என்று பொருள். அந்த ஓவிய அண்ணன் வீர. சந்தானம். அவரே எங்களுக்குப் புலி. துப்பாக்கி இல்லாத பிரபா!

‘த்ருமா'  என்றே என்னை அழைப்பார். அந்தக் கம்பீரக் குரலுக்குள் ஒரு இசை லயம் இருக்கும். ‘த்ருமா' எனும்போது, ‘இன்னொரு முறை உச்சரிக்கமாட்டாரா?' என்று இருக்கும்.

சாளரங்களில் திரைச் சீலையாகப் போடப்படும் துணியில் ஜிப்பா, பைஜாமா பேண்ட், மார்க்ஸ் தாடி, மாவோ தலைமுடி (பின்னர் பாகவதர் மாதிரி ஆனது!) வெடிச் சிரிப்பில் வெளிப்படும் முரட்டுப் பற்கள், சிகரெட்டிலும், கோபத்திலும் சிவந்த உதடுகள், தூரிகை இல்லாவிட்டாலும் காற்றில் வண்ணம் பூசும் இரண்டு கைகள், தமிழ்த் தவிப்போடு மூடப்படாத விழிகள், எப்போதும் புலிப் பேச்சே கேட்டுக் கொண்டிருக்கும் காதுகள் என வீர. சந்தானம் தமிழ் மனம்... தமிழ் மணம்.

எப்போதும் அவரை மொய்த்தபடியே இருப்போம். ஏனென்றால் அது புலிப்பால். மொந்தை மொந்தையாக எடுத்து பருகக் கொடுத்தபடியே இருப்பார். ஒருநாள் பெரியார் தொடங்கி பிரபாகரனில் கொண்டு வந்து நிறுத்துவார். மறுநாள் பிரபாகரனில் தொடங்கி பெரியாரில் போய் நிற்பார். ஈரோட்டுக் கிழவனும் ஈழத்து இளைஞனும் இரு கண்கள். தடியும் துப்பாக்கியும் சந்தானத்தின் உயிர்கள். அறிவுப்போரும், ஆயுதப்போரும் ஒன்றாய் நடக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரே விஷயத்தை ஒரே மாதிரி அரைக்கும் வெட் கிரைண்டர் அல்ல அவர். முன்னே உட்கார்ந்திருப்பவருக்கு எது ஆசைப்பட்டதோ அதை நோக்கி சந்தானத்தின் நா இருக்கும். அறிவுமதியா, சினிமா. பழனிபாரதியா, கவிதை. பதி அரசுவா, மார்க்சியம். நானா, திராவிடம். சௌந்தர் அண்ணனா, தத்துவம். விடுதலையா, கலைஞர். அருள்மொழியா, பெரியார் திடல் என்று எந்த மாட்டை எங்கு கட்டவேண்டும் என்று அறிந்தவர் அண்ணன். ஏனென்றால் அவரே நல் மேய்ப்பர். சுற்றிலும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய, ஓவிய, கூத்து மந்தைகளோடு தான் அவர் இருப்பார்.

சந்தானத்தை தனித்துப் பார்ப்பது சிரமம். கூட்டத்தோடு தான் இருப்பார். அவருக்கு கனவு வருமானால் அதுவும் கும்பல் கனவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறை வீட்டுக்குப் போகும்போதும் புதிய புதிய முகங்கள் இருக்கும். பார்க்கலாம். போனதுமே புதியவரை அறிமுகம் செய்து வைப்பார். அவர் அறிமுகம் செய்து வைக்கவில்லை என்றால், நாமாகத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான், நமக்கு முன்னால் இருப்பவர் ‘கடல் கடந்தவர்' என்று.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ‘பேபி'யான சுப்ரமணியம் எனப்படும், தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப்பாளராக பிற்காலத்தில் ஆன இளங்குமாரனை, அண்ணன் வீட்டில் ஒரு முறையும், காசி ஆனந்தன் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்த அன்று பெரியார் திடலிலும் பார்த்தேன். வீட்டில் வைத்துப் பார்த்தபோது, அவர் யாரென்று நான் கேட்கவில்லை. நாங்கள் இயங்கி வந்த காலம் என்பதால், ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ளமாட்டோம். பெரியார் திடலில் வைத்து, நான் யாரென்று ‘பேபி'க்கு அண்ணன் சொன்னார். பேபி சிரித்தார். ஆனால் அவர் யாரென்று அண்ணன் எனக்குச் சொல்லவில்லை. மறுநாள் அண்ணனின் வீட்டுக்கு போயிருந்தேன். அவர் யாரென்று சொன்னார். ‘நேற்று இரவே கவிஞரோட புத்தகத்தோட படகுல போயிட்டாரு. இந்நேரம் தம்பி கையில கவிஞர் புத்தகம் இருக்கும்' என்று சிரித்தார் சந்தானம். எனக்கு சிலிர்த்துவிட்டது. அவரே புலி என்று சொன்னது இதனால் தான்.

விடுதலைக் குயில்கள், இனி, நீதியின் போர்வாள் & ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்ததால் ஓவியரோடு அதிக நெருக்கம் ஏற்பட்டது எனக்கு. மாதம் தோறும் இதழ்களுக்கான அட்டை மற்றும் உள் ஓவியங்களுக்காக அவரைப் பார்க்க வேண்டியிருக்கும். தேனாம்பேட்டை சிக்னலில் தான் அவரது அலுவலகம் இருந்தது. மத்திய நெசவாளர் சேவை மையத்தில் வடிவமைப்பு பணியில் இருந்தார். அலுவலகத்துக்குச் சென்று அவரைப் பார்த்து அழைத்துக் கொண்டு, எஸ்.ஐ.வி.டி கல்லூரி வழியாக நடந்து பாரதிதாசன் சாலைக்கு வந்தால் அவரது வீடு. அப்படி நடந்து செல்வதே சுகமானது. அங்கு தான் ஓவிய அண்ணன் மருதுவும் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் தான் 90 - களின் தொடக்கத்தில் சிறு பத்திரிகைகளை, சிறு இயக்கங்களைக் காப்பாற்றியவர்கள். இதழுக்காகவும், புத்தகங்களுக்காகவும் அட்டைப் படங்கள் வாங்க இவர்களது வீடுகளை முற்றுகையிடுவோம். அவர்களிடம் ஓவியம் பெற்றுச் செல்வோமே தவிர ஒரு தடவை கூட பணம் கொடுத்ததாய் நினைவில் இல்லை. அவர்களும் கேட்க மாட்டார்கள்.

கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பும் எங்களுக்கு இருக்காது. ஓவியத்தையும் கொடுத்து சோறும் போட்டு அனுப்பி வைப்பார்கள். இனச் சோறு!

பாரதிதாசன் சாலையில் இருந்து அருகில் இருந்த திருவள்ளுவர் சாலையில் ஒரு இடத்தை வாங்கி சந்தானம் வீடு கட்டினார். அது எங்களுக்கு இன்னும் வசதியானது. போனால், ஐந்தாறு மணிநேரம் பேசிக்கழிக்க வசதியாக இருந்தது. அந்த வீட்டின் திறப்பு விழா அன்று வைகோ வந்திருந்தார். தோழர் எஸ்.வி.ராஜதுரையும் இருந்தார். வைகோ அப்போது தி.மு.க.வில் இருக்கிறார். வைகோவிடம் எஸ்.வி.ஆர், ‘இந்த சுப்பிரமணியசுவாமி புலிகளை கொச்சைப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இதை எப்படி சும்மா விடுவது?' என்றார். சந்தானமும் தூண்டினார். வைகோவுக்கு சுர்ர்ரென்றது. ‘நாளைக்கு டெல்லி போறேன்... பார்த்துக்கிறேன்.' என்று சால்வையை இழுத்தார் வைகோ. மறுநாள் மதியமே, நாடாளுமன்றத்தில் விவகாரம் வெடித்தது. 'என்னை வைகோ மிரட்டினார்' என்று. நேருக்கு நேராகவே சுப்பிரமணியசுவாமியை வை. கோபால்சாமி மிரட்ட சந்தானம் வீடு காரணமானது.

ஒருநாள் அண்ணன் வீட்டு மொட்டை மாடியில் அறிவுமதி, பழனிபாரதி, அரசு, ஆசு, எஸ். சண்முகம், சௌந்தர் அண்ணன் ஆகியோர் உட்கார்ந்திருக்கிறோம். ‘பாரதி' என்று அழைத்தார் சந்தானம். ‘என்ன அண்ணே!' என்று கேட்டார் பழனிபாரதி. நிலாவைக் காட்டி, ‘நிலா... பார்த்துக்க!' என்றார். 'ஏன்... பாரதி நிலாவைப் பார்த்ததில்லையா?' என்றார் எஸ். சண்முகம்.

‘சினிமாவுக்கு பாட்டு எழுதப் போறாம்பா... அவனுக்கு நிலா தேவைப்படும்றதுக்காக காட்டினேன்' என்றார் ஓவியர். இந்த மாதிரியான சுவைஞரும் தான் அவர்.

அவரும் நிலா ரசித்துக் கிடந்த காலம் ஒன்றுண்டு.

‘சாந்தி' என்று அழைக்கும் போது அந்த நிலா, ஓவியரின் முகத்தில் தோன்றி மறையும். நமக்கு முன்னாள் அழைக்கும்போது தான்

‘சாந்தி'. காதல் நேரத்தில், ‘டாலி'. அண்ணனை ‘டாலி' என்று தான் அழைப்பார் அண்ணி. காதல் திருமணம் அவர்களுடையது. ஒருநாள் அண்ணி ரொம்ப கோபமாக இருந்தார். அப்போது அண்ணனே அந்தக் கதையைச்சொன்னார்.

‘'சாந்தியோட தாத்தா வெள்ளையர் காலத்துல செங்கல்பட்டு சப் -கலெக்டர். அப்பா, பைலட். வட இந்தியாவுல இருந்து வந்தவங்க. நான் வேலை பார்த்த சென்னை சேமியர்ஸ் சாலை அலுவலகத்தின் ஜன்னலோரம் ஒரு முகத்தை பார்த்தேன். பார்த்ததும் ரொம்ப அழகா இருந்தது. ஜன்னலோரம் வந்து வந்து மறைந்தது. ஆனா என் இதயத்துல நிரந்தரமாயிருந்துச்சு. அப்பா, அம்மா ரெண்டுபேரும் சாந்திக்கு இல்ல. வீட்டுல இவங்தான் கடைசிப் பிள்ளை. ரெண்டுபேரும் கல்யாணம் செய்துகிட்டோம்'' என்றார் அண்ணன். ‘கதை சட்டுன்னு முடிஞ்சிடுச்சே' என்றோம். ‘யதார்த்தம் அப்படித்தான் சட்டுன்னு முடிஞ்சிடும்' என்றார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இசை, கவிதை என்று. அண்ணன் அழைக்கும் போது, ‘இச', ‘கவித'.

அண்ணியை சில ஆண்டுகளுக்கு முன்பு அருள் எழிலன் பார்த்துவிட்டு வந்தான். அண்ணன்

சொன்னதாகச் சொன்னான்;

‘சுடுமண்ணில் செய்த ஒரு யானைச் சிற்பத்தை வாங்கி தன் கூடவே வெச்சிருக்கா சாந்தி. எப்பவும் அதைத் தூக்கிட்டே நடக்கிறா. திரியுறா. கொஞ்சுறா. தூங்குறா. யாராவது, ‘அந்த யானையைக் கொஞ்சமாவது கீழே வையேன்'னு சொன்னா... ‘ம்... இது என் டாலி'னு சொல்றா'', என்றாராம். ‘இருக்கின்றார் என்பதொன்றே இன்பம்' என்ற பாரதிதாசன் வரிகளாகவே வாழ்ந்தார்கள்.

கும்பகோணம் பக்கம் உப்பிலியப்பன் கோவிலில் தான் சந்தானம் அண்ணன் வளர்ந்தார். '18 வருசம் கோயில் சோறு சாப்பிட்டு வளர்ந்தவன்' என்பார். கும்பகோணமே கோயில் நகரம். கோயில்,

சிற்பம், சிலைகள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பார்த்து வளர்ந்தவர். அதனால் தான் அவரது நவீன ஓவியங்களில் தமிழ் அடையாளம் மறையவே இல்லை. செழுமை பெற்றது என்றும் சொல்லலாம்.

அவரது ஓவியம், சேலை வடிவமைப்புகளில் தமிழ் மரபோடு தூக்கலாகத் தெரியும். கோயிலில் வளர்ந்ததால் தான் அவருக்குள் ஓவியன் ஒருவன் முளைத்தான். கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தார். தனபால் மாஸ்டர் தான் அவருக்கு எல்லாமுமாக இருந்தார். மத்திய நெசவாளர்

சேவை மையத்தின் வேலை கிடைத்த பிறகுதான் ஓரளவு நிதிநெருக்கடியில் இருந்து தப்பினார். இவரது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக தூக்கியடித்தார்கள். வைகோ முயற்சியால் மீண்டும் சென்னை அழைத்து வரப்பட்டார். பணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர் பணியில் அவரிடம் தொய்வு இல்லை. இருந்தது இல்லை.

தமிழ்க் கலையையும் தமிழர் இன அரசியலையும் ஒன்று சேர்த்தார் சந்தானம். சகட யாழ், மரக யாழ் போன்ற தமிழர் அடையாளங்களை மீட்டெடுத்தார். தோல் பாவைக்கூத்து பற்றி, ஆழமான அறிவும், பற்றும் அவருக்கு உண்டு. அதனால் தான் தோல்பாவை கூத்து அவரது ஓவியங்களில் அதிகம் இடம்பெறும். திருவாரூர் கோயிலில் இருக்கும் தோல் கருவியான பஞ்சமுக வாத்தியம் இவரது ஓவியத்தில் இருக்கு. இவை அனைத்தும் தாண்டியதாக ஈழ ஓவியங்கள் இருக்கும். ஈழத்தில் நடந்த பச்சைப் படுகொலைகளை தனது ஓவியத்தில் இவர் கொண்டுவந்து பரப்பியபோது தான் பலரையும் உறைய வைத்தது. 1985ஆம் ஆண்டிலேயே ‘Genocide of Lanka Tamils' என்ற ஓவியக் கண்காட்சியை நடத்தியவர் அவர். 1985 - லேயே ‘Genocide' என்ற வார்த்தையை பயன்படுத்தியவர் அவர். அதைத்தான் உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இறப்புக்கு சில வாரங்களுக்கு முன், அண்ணனிடமிருந்து செல்பேசி. ‘த்ருமா' என்றார். ‘அண்ணே!' என்றேன். ‘செத்து பிழைச்சிட்டேன் த்ருமா' என்றார். உடனே வீட்டுக்குப் போனேன். அவருடைய கம்பீர உருவம் கட்டிலில் படுத்திருந்தது. குரல் வளம் மட்டும் அப்படியே இருந்தது. ஆவேசம் குறையவில்லை. பழசைப் பற்றியே அதிகம் பேசினேன். பழைய ஆட்களையே அதிகம் நினைவு கூர்ந்தோம். ‘உடம்பை பார்த்துக்கோங்கண்ணே' என்றேன் காலைத் தொட்டு. ‘அவ்வளவு லேசிலே என் உயிர் போகாது. தனி ஈழத்தைப் பார்த்துட்டுத் தான் இந்த உயிர் பிரியும்' என்றார். எங்கள் அண்ணனுக்கு மரணம் ஏது? அவரது ஓவியம் போலவே மரணமில்லை.

‘சிங்கள இன பேரினவாதம்' என்ற புத்தகத்தை அவரிடம் இருந்து படிப்பதற்காக வாங்கினேன். ‘அன்புடன் திருப்பித் தருக' என்று எழுதி கையெழுத்திட்டுத் தந்தார். அண்ணனிடம் பெற்ற புத்தகத்தை திருப்பித் தரலாம். உணர்ச்சியை?