சிறப்புக்கட்டுரைகள்

அதிக நாள் கடக்க முடியாது!

வன்னி அரசு

அவர் பெயர் சுப்ரமணி. அவரைப்பார்க்க வேண்டுமென்றால் ஓட்டேரி சுடுகாட்டில் தான் பார்க்க முடியும்.

வீடு, மனைவி, மக்களோடு வாழ்ந்தாலும் ஓட்டேரி சுடுகாட்டில்தான் அதிகமாக இருப்பார். பிணங்களை எரிப்பது, புதைப்பதுதான் வேலை. தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவிடம் ‘உரிமைக்களம்’ கட்ட முயற்சிக்கும் போது, தலைவர் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து அறிமுகமானார். இறுதிவரை அந்த உரிமைக்களத்தை பாதுகாத்து பராமரித்து வந்தார். சிறந்த மனிதநேயப் பண்புள்ளவர்.

சுடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு தனிவாரியம் அமைத்து அவர்களுக்கான நலத்திட்டங்களைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான் பெரியவர் சுப்ரமணியனின் கனவு. ஆதரவற்று தெருவில் கிடக்கும் பிணங்களைக் கூட தனி ஆளாகத் தூக்கி வந்து எரித்து ஈமச்

சடங்கை செய்தவர். அனாதைப் பிணங்களுக்கு மூத்த பிள்ளையாக அந்தக் கடமையைச் செய்வதாக சொல்லுவார். இப்படி எத்தனையோ கல்லறைகள் அய்யா சுப்ரமணியன் பெயரைச் சொல்லும்.

இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. “நான் இருக்கும் வரை இந்தச் சுடுகாட்டில் யாரும் அனாதைப் பிணங்கள் இல்லை என்று கடமையைச் செய்தவர். அவரது ஆசை சுடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தனிவாரியம் அமைப்பது தான். அதற்காக அவர் பல தலைவர்களைச் சந்தித்து முறையிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட மனிதநேயமுள்ள தொழில் செய்பவர்களைப் பற்றி ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் மிகவும் தவறான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். பிணங்களோடு இருப்பதாலேயே ‘மனித மனம்’ இல்லாமல் இருப்பதைப் போலவும் கொலை செய்ய அலைவதைப் போலவும்  மிக மோசமாக காட்சிப்படுத்தியிருப்பதன் புரிதல் என்ன? தமிழகத்தின் அனேக சிறைகளில் வசித்திருக்கிறேன். எந்த சிறையிலும் ஒரு ‘வெட்டியான்’ கூட விசாரணை சிறைவாசியாகக் கூட இல்லை. எங்காவது ஒரு கொலை வழக்கிலாவது சுடுகாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் (வெட்டியான்) கைது செய்யப்பட்டிருப்பார்களா? என்றால், அது அரிதினும் அரிது. ஆனால் பிணங்களை எரிக்கிறவர்கள் என்பதற்காகவே அவர்களைப் பொது சமூகத்தில் ‘அபாயகரமானவர்களாகக் காட்டுவது என்பது என்னவிதமான மனோநிலை. கொலைகளையும், கொள்ளைகளையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய் கிறார்கள் என்று பரப்புவதே அறிவு பலவீனம்தான். சமூக விரோதச் செயல்களை செய்பவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பொதுதளத்தில் கொச்சைப்படுத்துவது, ரவுடிகளாகக் காட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகக் காட்டுவது என்பது உள்நோக்கமாகவே கருத முடிகிறது.

பாலா பெரிய இயக்குநர் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் இயக்கத்தில் வந்த ‘அவன் இவன்’ திரைப்படத்தில் மிகக்கொடூரனாக, மாடுகளை வைத்து தொழில் செய்பவரைக் காட்டியிருப்பார்கள். இந்தியா முழுக்க மாட்டு கறி வியாபாரம் செய்பவர்கள் யார் என்று தெரியும். அப்படிப்பட்ட சமூகங்களை வலிமைமிக்க ஊடகங்களில் வில்லனாக, சமூக விரோதியாகக் காட்டுவது அத்தகைய இயக்குநர்களிடம் புதைந்து கிடக்கும் சமூகப்பார்வைதான்.

திரைப்படங்கள் அரசியலையே ஆட்டம் காணச் செய்கிற மிகச்சிறந்த - வலிமையான ஆயுதம். அப்படியான ஆயுதம் சமூக மாற்றத்திற்காகவும் பயன்படவேண்டும். இயக்குநர்கள் கொரியன்,

சைனீஸ், ஆங்கில படங்களில் காட்டும் தேடலை, நமது மண்ணில், நமது மக்களின் கலாச்சாரங்களை, வரலாற்றுகளை தேடுவதிலும்  காண்பிக்கவேண்டும். சுடுகாட்டில் எரியும் பிணங்களின் வாசனையை சுவாசிக்க எவ்வளவு சகிப்புத்தன்மை வேண்டும். ஸ்பைடர்களையும் சகித்துக்கொண்டு தான் கடக்கிறார்கள். ஆனால் அதிக நாள் கடக்க முடியாது.

நவம்பர், 2017.