அந்தக் கால தி.மு.க தலைவர்கள் படங்களில் இருக்கிற முகங்களில் ஒன்று எஸ்.எஸ்.ஆர் என்கிற சேடப்பட்டி சூர்ய நாராயண ராஜேந்திரனுடையது.
லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்ட ராஜேந்திரனின் குரல் வளமும், உச்சரிப்பும் கம்பீரமானது. சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டிலும், சேடப்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிலும் பலமுறை சந்தித்தபோது, இயல்பாகவும், புன்சிரிப்பு இழையோடவும் தன்னுடைய அனுபவங்களை விவரிக்கும் போது தனி வசீகரத்துடன் ஒலிக்கும் அவருடைய கரகரத்த குரல்.
பாய்ஸ் கம்பெனியில் தான் வளர்ந்த காலத்தைச் சொல்லும்போது அவருடைய முகத்தில் பரவசம் கூடும்.
'' பாய்ஸ் கம்பெனியை எங்களோட இன்னொரு தாய்வீடுன்னு தான் சொல்லணும். ஒருத்தன் கிட்டே திறமை இருக்குன்னு தெரிஞ்சிட்டா போதும், தனிக்கவனிப்பு தான். அவனுடைய திறமையை வளர்த்துக்கப் பலவற்றைச் சொல்லிக் கொடுப்பாங்க. அதைவிட முக்கியமானது தமிழை ஒழுங்காப் பேசவும், பாடவும் சொல்லிக் கொடுப்பாங்க. உச்சரிப்பு கொஞ்சம் மாறினாலும் திருத்துவாங்க. அப்படித்தான் என்னைப் போன்றவங்க வளர்ந்தோம். அது தான் பிறகு திரைப்படத்திலே உதவுச்சு. உண்மையில் தமிழ் மண்ணிலே நாடகத்தில் நடந்த இந்த குருகுலத்திற்கு இணையான படிப்பு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலேயும் நடந்த மாதிரித் தெரியலை. அதெல்லாம் எங்களுக்குக் கிடைச்ச பெரிய வாய்ப்புப்பா..''
தலைச்சாயம் அடிக்கப்பட்ட சுருண்டமுடி, சற்றுத் தடித்த கோடு மீசை, பளிச்சென்ற வெள்ளை உடை சகிதமாக ஏதோ படப்பிடிப்புக்குப் புறப்பட்டுப் போகிற மாதிரியான தோற்றத்துடன் பேசிக் கொண்டிருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
திருச்சியில் நாடகங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தபோது
சிவாஜியுடன் அறிமுகம். பிறகு பராசக்தி படத்தில் சிவாஜியுடன் நடித்தாலும், அதற்கு முன்பே திரைப்படங்களில் இவர் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்போது திராவிட இயக்கத்தின் மீது உருவான ஈர்ப்பு வாழ்வின் திசையையே மாற்றியது. '' அப்போது கே.ஆர்.ராமசாமி, அண்ணன் எம்.ஜி.ஆர், நான் என்று மூவருமே தி.மு.கழகத்தை மக்களிடம் கொண்டு போவதற்குக் காரணமாக இருந்தோம். கழகத்திற்கு அப்போது நிதி தேவைப்பட்டது. அதற்காக நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள்,
சிறப்புக்கூட்டங்கள் நடத்துவோம். கலைஞர் எல்லாம் அப்போது எங்களுக்கு நெருக்கமாக இருந்தார்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அண்ணாவைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவயப்பட்டார்.
''அறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் இருந்த உறவு ஒரு குடும்ப உறவு மாதிரி. அப்படித்தான் இருந்தோம். ஒரு பிள்ளையைப் போலத் தான் என்னை நடத்தினார் அண்ணா. ஏதாவது கூட்டம் நடந்ததும்போது உரிமையோடு எங்க வீட்டுக்கு வந்து தங்குவார்.
நாம் இப்போ பேசிக்கிட்டிருக்கிற இந்த எல்டாம்ஸ் ரோட்டு வீட்டை அப்போ தான் கட்டி முடிச்சிருக்கேன். சினிமாவில் அப்போ நல்ல உயரத்தில் நான் இருந்த நேரம். வீட்டுக்கு ''அண்ணா இல்லம்'' என்று பெயர் சூட்டியிருந்தேன்.
புதுமனை புகுவிழாவை அமர்க்களமா நடத்தினேன். எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன் எல்லோரும் வந்திருந்தார்கள். சிறப்பு அழைப்பாளராக வந்தவர் அண்ணா. தலைமை வகித்தவர் பி.டி.ராஜன்.
என் வீட்டுக்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னு அண்ணா வந்ததும் ஒரு தட்டில் ஐம்பது பவுன் தங்கத்தை வைத்து அவருக்குக் கொடுத்தேன். அண்ணா சிறிதும் எதிர்பார்க்கலை. சந்தோஷப் பட்டார். அதை ராஜாராமிடம் கொடுத்தார் அண்ணா. அந்தத் தங்கத்தை விற்று அண்ணாவுக்குச் சென்னையில் சொந்த வீட்டை வாங்கினார் ராஜாராம். அவருடைய உறவுக்கு என்னால் முடிந்த சிறு காணிக்கை அது.
இந்த வீட்டில் தான் தி.மு.க.வின் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் தி.மு.க. அமைச்சரவையின் பட்டியலே இங்கு தான் தயாரானது. அதற்கு முன்பு 1962 &ல் தேனி
சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டேன். காங்கிரஸ் தரப்பில் பெரும் எதிர்ப்பு. அதை மீறி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனேன். இந்தியாவிலேயே தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன முதல் நடிகன் நான் தான்.
எனக்கு எல்லாமாக இருந்த அண்ணா முதல்வரானதும் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? அதைக் கொண்டாடினேன். ஆனால் அவர் அவ்வளவு விரைவில் உயிரிழந்து விடுவார் என்பதை எதிர்பார்க்கலை. அண்ணா இறந்தபோது லாரியில் எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் எல்லாரும் போனோம். அவருடைய இழப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் அவஸ்தைப்பட்டேன். நிறையக் குடித்து அதிலிருந்து மீண்டது தனிக்கதை''& கண் கலங்கச் சொல்லிக் கொண்டிருந்தவர் அண்ணாவுடன் எடுத்த கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை ஆர்வத்துடன் எடுத்து வந்து காண்பித்தார்.தி.மு.க.வில் அதற்குப் பிறகு நிகழ்ந்த சில மாற்றங்களையும் குரல் கமற விவரித்துக் கொண்டு போனார்.
'' தி.மு.க.வுக்கும், கலைஞருக்கும் பலவிதங்களில் உதவியிருக்கிற எம்.ஜி.ஆரை தி.மு.க.வை விட்டு நீக்குகிற சூழ்நிலையை அன்றைக்கு ஏற்படுத்தினார்கள். ''அவரை விலக்கக் கூடாது'' என்று வாதாடிப் பார்த்தேன். முடியவில்லை. அவரை வெளியேற்றியது மாதிரியே நானும் வெளியேற்றப்பட்டேன்.
தி.மு.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கண் கொத்திப் பாம்பாக இருந்த நேரம். 1958&ல் நான் எடுத்த ''தங்கரத்தினம்'' படத்தில் தி.மு.க. மாநாட்டுக் காட்சிகளை எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையில் காட்டியிருந்தேன். திராவிடக் கொள்கைக்கு மாறான வேடங்களில் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த என்னால் அதே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட விதத்தைத் தாங்கி முடியவில்லை'' என்றவர் பிறகு அ.தி.மு.க.வில்
சேர்ந்து 1980 - ல் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைப் பெருமையுடன் சொன்னார்.
பிறகு அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்டு ''எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர் கழகம்' என்று தனிக் கட்சியைத் துவக்கி சேடப்பட்டித் தொகுதியில்
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார். அவருடைய சேடப்பட்டி வீட்டில் பார்த்தபோது ''சொந்தத் தொகுதி மக்களை நம்பிப் போட்டியிடுகிறேன். கைவிட மாட்டார்கள் பாருங்க'' என்றவர் வெற்றி பெறமுடியாமல் போனது.
அரசியலில் இருந்து ஒதுங்கிய மனோபாவத்தில் இருந்தவரைத் திரும்பவும் சென்னையில் சந்தித்தபோது '' அரசியலைப் பற்றி வேண்டாம்'' என்றவர் திரை வாழ்வு அனுபவங்களைப் படு
சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டு போனார். '' எழுத முடிஞ்சா.. எழுதுங்க.. இல்லைன்னா விட்டுருங்க'' என்றவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சில படங்களில் நடித்தபோது அவர் காட்டிய நெருக்கத்தைச் சொல்லிச் சிலாகித்தார்.
பராசக்தி துவங்கி, கைகொடுத்த தெய்வம், ஆலயமணி படங்களில் சிவாஜியுடன் பழகிய கணங்களை மிமிக்ரி செய்த பாவனையில் நடித்துக் காண்பித்தார். கவிஞர் கண்ணதாசனின் ''வானம்பாடி' படப் பாடல் வரிகளைப் பாராட்டினார். சிவகங்கைச் சீமைக்கு உரிய கவனிப்பு கிடைக்கவில்லை என்றவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்தபோது தன்னால் இயன்றதைச் செய்த திருப்தி என்றார். பூம்புகாரில் நடித்ததை மறக்க முடியாத அனுபவம் என்று எஸ்.எஸ்.ஆர் சொல்லிக் கொண்டிருந்த போது வீட்டின் வெளியே வெளிச்சம் கீழிறங்கிக் கொண்டிருந்தது.
அவருடைய கரகரப்பான குரலையும், அவ்வளவு தெளிவாக உச்சரிக்கப்பட்டு வெளிவந்த தமிழையும் லேசில் மறக்க முடியவில்லை.
அக்டோபர், 2019.