தமிழக மக்கள் கேள்வியே இல்லாமல் எதையாவது ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் பாரம்பரியம், மரபு, முன்னோர்களின் வாழ்வியல் முறைகள் என ஆரம்பிக்கவேண்டும். அது ஜல்லிக்கட்டு விளையாட்டாகவும் இருக்கலாம், டெங்கு மரணங்களுக்கான தீர்வாகவும் இருக்கலாம்.
நிலவேம்பு (சிறியாநங்கை) கசாயம் பல்வேறு பரிசோதனைகளால் நிரூபிக்கப்பட்டது என்று சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை சித்த மருத்துவர்கள் முன்வைத்தனர். அதை என்ன ஏதென்றே பார்க்காமல் இதோ ஆதாரம் என எடுத்துக்கொண்டு ஒரு கும்பல் மனப்பான்மையில் சமூக ஊடகங்களில் பலர் இயங்கியதைப் பார்க்க முடிந்தது. எடுத்துக்காட்டாக பிரபல சித்த மருத்துவர் ஒருவரால் International Journal of Pharmaceutical Sciences and Research இல் நிலவேம்பு குறித்து வந்த ஆய்வுக்கட்டுரை ஒன்று மேற்கோள் காட்டப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் UGC வெளியிட்ட போலி அறிவியல் சஞ்சிகைகள் அதாவது Predatory Journals-இல் இந்த IJPSR 29-வது இடத்தில் இருக்கிறது. இதைப்போல பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் போலியான சஞ்சிகைகளில் பதிப்பிக்கப்பட்ட ஏமாற்றுக்கட்டுரைகள் என தெரியவந்துள்ளது.
சென்னையிலுள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் பலவகையான ஆய்வுகளை செய்ததாக மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால் நிலவேம்பு கசாயத்தில் கிளினிக்கல் ட்ரையல் செய்வதற்கு கிங்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியே கிடையாது என நடுவணரசின் இணையதளம் ஒன்று தெரிவிக்கிறது.
நிலவேம்பு குறித்த அறிவியல் வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். வணிக அறம் சார்ந்த நடைமுறை சாத்தியங்களைப் பார்த்தோமானால் சிறியாநங்கை என்பது எந்த ஊரிலும் வர்த்தக ரீதியாக பயிரிடப்படாத ஒன்று. எந்த ஊரிலும் ஒரு ஏக்கர் அளவுக்காவது சிறியாநங்கை சாகுபடி செய்த விவசாயி என யாரையும் இதுவரை வேளாண்மைத் துறை அடையாளம் காட்டவில்லை. காசரளி, காகிதப்பூ கூட ஏக்கர் கணக்கில் பயிரிட்டவர்கள் உண்டு.
மிக முக்கியமாக, காய வைக்கப்பட்ட நிலவேம்பு இலைகளின் ரெக்கவரி, தூய்மை, சுத்திகரிப்பு, காலாவதி, கலப்படம் போன்றவை பேசப்படவே இல்லை. நிலவேம்பு போன்ற சிறு செடிகளில் 10 கிலோ பச்சை செடியைக் காயவைத்தால் 0.75 கிலோ காய்ந்த இலைகள் அதிகபட்சமாக கிடைக்கலாம். தமிழக அரசு கொள்முதல் செய்யும் 15 டன் நிலவேம்பு பொடிக்கு நிச்சயமாக 200 டன் பச்சையான செடிகள் தேவை. தரிசு நிலங்களில் இந்த அளவுக்கு சேகரிக்கவும் வாய்ப்பு இல்லை. வனங்களில் சேகரிக்கவும் வாய்ப்பில்லை.
முறையாக சுத்திகரிக்கப்பட்டதா, foreign bodies அதாவது பணியாட்களின் முடி, வளையல், ஊசி, பேனா போன்றவற்றை தடுக்கும்வண்ணம் ஒட்டுமொத்த GMP (Good Manufacturing Practices) உள்ள நிறுவனமா, செத்த பல்லி, பூச்சி, பறவைகளின் எச்சங்கள் ஏதும் இல்லாதவண்ணம் கையாளத் தெரிந்த பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனமா எனவும் தெரியாது.
தினசரி தேவைக்கு நாம் உருளைக்கிழங்கு வாங்கும்போது அதன் விற்பனைச் சங்கிலியைப்பற்றி கவலைப் படுவதில்லை; அவசியமும் இல்லை. ஆனால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரித்து குறிப்பிட்ட பிராண்ட் பெயரில் விற்கும் நிறுவனம் தனிநபர்களைப்போல இயங்க முடியாது. போதுமான அளவுக்கு வெளிப்படைத்தன்மை கொண்டிருக்க வேண்டும். அதனால் இதன் பின்னணியில் உள்ள வியாபார சக்திகளை ஐயமுற வேண்டியிருக்கிறது.
சீனாவின் பாரம்பரிய மலேரியா எதிர்ப்பு மருந்துக்கு சமகால அறிவியல் ஆய்வுமுறைகளின்படி சோதித்து நிறுவியதற்காக நோபல் பரிசு கிடைத்ததைப் பார்த்து இங்குள்ள சிலர் பாரம்பரிய
சித்த மருத்துவ அறிவு மதிக்கப்படவில்லை என்கிறார்கள். ஏதாவது இலக்கிய, புராண, இதிகாச, சித்தர் ஒலைச்சுவடி ரெபரன்ஸ் காட்டப்பட்டால் ‘பார்த்தாயா தமிழனின் மதிநுட்பத்தை’ என புளகாங்கிதம் அடைவதும், கேள்வி கேட்பவர்களை கார்ப்பரேட் கையாள், பன்னாட்டு அடிவருடி, மிஷனரி என அடையாளப்படுத்துவதும் அல்லது பாரம்பரிய அறிவைச் சிறுமைப்படுத்துகிறார்கள் என பச்சாதாபத்தைத் தேடிக்கொள்வதுமாக இருக்கும் நமக்குப் போலி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காட்டப்பட்ட கண்டுபிடிப்புகளை வைத்து அண்டாவில் காய்ச்சி ஊற்றப்படும் கூழ்தான் கிடைக்கும்; நோபல் பரிசு அல்ல.
(ஆர்.எஸ்.பிரபு, வேளாண்அறிவியல் பட்டதாரி, செயல்பாட்டாளர்)
நவம்பர், 2017.