தமிழில் வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளில் இடம்பெற்ற கட்டுரைகளின் சுவாரசியமான அம்சங்கள் இடம் பெறும் பகுதி:
மாற்றுப் பண்பு!
அ.இ.அ.தி.மு.க.விற்கும் தி.மு.க,விற்கும் மாற்றாக அரசியல் களத்தில் வர வேண்டும் என்று விரும்புகின்ற மற்ற அரசியல் கட்சிகள், இவ்விரு கழகங்களின் தலைமைச் சர்வாதிகாரத்தை - போலித் தனங்களை - ஊழல்களை - பொய் புரட்டுகளை - டாம்பீகச் சொற்கட்டுகளை - பண்புச் சீரழிவுகளை மாற்றுவதற்கு என்ன மாற்றுப் பண்புகளை முன் வைக்கின்றன? தமிழினத்தைக் காக்க தி.மு.க - அ.இ.அ.தி.மு.கவுக்கு மாற்றாக என்னென்ன இலட்சியங்களை மாற்றுக் கட்சிகள் வைத்துள்ளன? மாற்றுப் பண்புகளையும் மாற்று இலட்சியங்களையும் முன் வைக்காமல் சிறு சிறு கட்சிகள் மாற்றுக் கூட்டணி அமைத்தால் குட்டி தி.மு.க.க்களும், குட்டி அ.தி.மு.க.க்களும் கூட்டணி அமைத்தது போல் ஆகிவிடும்! மாற்றுக் கூட்டணி பற்றி பேசுவோர் மாற்றுக் கொள்கைகளையும் பண்புகளையும் முன் வைத்து நடந்து காட்ட வேண்டும்!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாற்று கூட்டணிக்கு மாற்று இலட்சியமும் பண்பும் யாவை கட்டுரையிலிருந்து )
பொய்க்கால் குதிரை :
ஆடும் கலைஞரின் பாதத்திற்கு கீழே பொய்க்காலாக கட்டைகள் கட்டப்படும். இது ஆலம் விழுதாலோ, தேக்கு மரத்தாலோ ஆக்கப்படும். காலோடு இணையும் இடத்தில் டயர் துண்டு பொருத்துவதும் உண்டு. குதிரையின் எடை பெரும்பாலும் 25 கிலோ முதல் 30 கிலோ வரை இருக்கும். ஆட்டக்காரர் நுழையும் உட்கூட்டுப் பகுதிக்கு ‘ குதிரைப்பொக்கு ’ என்பது பெயர். இப்பகுதி வழி நுழையும் கலைஞர் பொக்குப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நீண்ட துணிக்கயிற்றினை தோளில் மாட்டிக் கொள்வார். ஆட்டக் கலைஞர் காலில் சலங்கை கட்டிக்கொள்வதும் உண்டு. இனி ஆட்டம் ஆரம்பம். இராஜா, இராணி வேடமணிந்த ஆட்டக் கலைஞர்களில் இக்குதிரைகள் உயிர் பெற்று எழும். தற்போதைய நிலையில் இவ்வகையிலான நேர்த்தியான இரண்டு (இராஜா, இராணி) பொய்க்கால் குதிரையை செய்ய சுமார் ரூபாய் 80 ஆயிரம் வரை ஆகலாம்.
( உடல் - பேரா.முனைவர் க.இரவீந்திரன் நாட்டுப்புற குதிரை ஆட்டக் கலைக்கான பொய்க்கூடு பற்றிய கட்டுரையிலிருந்து)
அண்ணாவின் சொல் :
அடுத்து எங்களை அனுமதித்தனர்.
நெடுஞ்சாண் கிடையாக என் முழுதுடலால் அண்ணா ஹசாரேஜி அவர்களை வணங்கினேன்.அண்ணாவை வணங்கியவன் என்பதே எனது தகுதி. கண்களில் நீர் நிரம்பியது. மகாத்மாவை நாங்கள் நேரில் பார்த்ததில்லை, உங்களுடைய ரூபத்தில் காண்கிறோம் என்றேன். எத்தனை பேர் இதனைச் சொல்லி அவர் கேட்டு சலித்திருப்பார். எவ்வளவு சலித்தாலும் எத்தனை பேர் திரும்ப திரும்ப சொன்னாலும் அது உண்மையல்லவா! எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்.அச்சிறு அறையில் திரு.கலாமும் அண்ணாஜியும் உரையாடும் ஒரே ஒரு புகைப்படம் இருந்தது. அப்புகைப்படத்தைச் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டிலிருந்து என்று சொன்னேன். கலாம் நினைவு எழுந்ததும் மிகவும் மகிழ்ந்தார்.ஷிருடி அருகில் உள்ளது அங்கே அவசியம் செல்லுங்கள் என்றார். வெளியில் பலர் காத்துக் கொண்டிருந்தனர். அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினோம். ஜீவாவின் தலையில் அண்ணாஜியின் கரம் பட்டது. ஜீவா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். மெல்ல அவரைத் தேற்றி அழைத்து வந்தேன். அன்று ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்டின் அலுவலகத்தில் தங்கிக் கொண்டோம். மறுநாள் மீடியா செண்டருக்கு சென்று அண்ணாஜியின் பணிகளைப் பற்றிய புகைப்பட கண்காட்சியைக் கண்டோம். அவர் தங்கியிருக்கும் யாதவ பாபா ஆலயம் சென்று வழிபட்டோம்.அண்ணாவின் சொல்படி ஷிருடிக்குப் பயணமானோம்.
(சொல்வனம் இணைய இதழில் பாரத் தர்ஷன் என்ற பயணக் கட்டுரையிலிருந்து. எழுதியவர் பிரபு மயிலாடுதுறை.)
ஆண்டாள் என் அக்கா :
கணையாழி : அடுத்தபடியாக, எதையேனும் ஆய்வு செய்து எழுதுகிறீர்களா? அல்லது புனைவாக எழுதுகிறீர்களா?
பூமணி : மகாபாரதம் முதற்கொண்டு கிட்டத்தட்ட 500 நூல்களைப் படித்தேன். திரௌபதி,குந்தி, ஆண்டாள் வரை பெண்கள் சந்ததி உற்பத்திக் கருவிகளாக எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்! அப்படி மட்டும் தான் பயன்படுத்தப்பட்டிருக் கிறார்கள். ஒரு அருந்ததி குழந்தை பெற வேண்டுமானால் அதற்கு ஒரு சட்டம். அந்த ஓலம் இருந்துள்ளது. கிருஷ்ணன் இறக்கும்போது 16,008 பெண்கள் தாலி அறுத்துள்ளனர். அது மாதிரி ஒவ்வொரு பாண்டவரும் கௌரவரும் சாகும் போது எத்தனை பெண்கள் தாலி அறுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்த ஓலம் ஆண்டாள் வரை கேட்கிறது. இப்படி ஒரு காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டு, ஆண்டாள் எனக்கு மிகவும் பிடிக்கும். சொல்லபோனால் ஆண்டாள் எனது அக்கா மாதிரி நினைத்துக்கொண்டிருப்பேன்.
(கணையாழி - எழுத்தாளர் பூமணி நேர்காணல்)
புண்படவில்லை :
காலச்சுவடு : ‘ மாதொருபாகன்’ நாவல் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நினைக்கிறீர்களா?
ஜி.ஆர்.சுவாமிநாதன் : நாவலை இரண்டுமுறை படித்தேன். என்னுடைய உணர்வுகள் புண்படவில்லை. ஆனால் என் அமைப்பு நண்பர்கள் கோபமுற்றனர். என் தந்தை மதுரைக்கு வந்தால் என் வீட்டில் சாப்பிடமாட்டார். அந்த அளவிற்கு ஆச்சாரமானவர். நாவலைப் படித்துப் பார்த்த அவர் தனக்கொன்றும் தப்பாகப்படவில்லை என்றுதான் சொன்னார். மகாபாரதத்திலெல்லாம் இல்லாததா அதிலிருக்கிறது என்று கேட்டார். ஆனால் என்னுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெருமாள்முருகனுக்காக ஆஜரானதற்காக என்னோடு சண்டையிட்டார்கள்.
( காலச்சுவடு - பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவல் பிரச்னையில் எழுத்தாளருக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் ஜி.ஆ.சுவாமிநாதன் நேர்காணலில் இருந்து)
சக்திசாலி:
தற்போது தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் லைஃபாய் சோப்பு விளம்பரத்தில் ‘இப்போதெல்லாம் கிருமிகள் சக்திசாலிகளாக மாறிவிட்டன’ எனச் சொல்லப்படுகிறது. இது பலருக்கும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம். தமிழில் ‘சக்திசாலி’ என்னும் வழக்கு இல்லை. ‘பலம்’, ‘புத்தி’ போன்ற வெகுசில பெயரடிகளோடு பெயரடையான சாலியைச் சேர்த்து ‘பலசாலி’, புத்திசாலி எனச் சொற்கள் எடுத்தாளப்படுகின்றன. அதிர்ஷ்டசாலி, திறமைசாலியும் இவற்றோடு சேர்த்தி. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி சாலி என்பதற்கு அருந்ததி, கவசம், கள், நாவி, நெல், நென்மணி, புழுகுசட்டம், மிக்கோன் எனப் பொருள் தருகிறது. பலசாலி, புத்திசாலி போன்ற சொற்களில் சாலிக்கு ‘மிக்கோன்(மிகுந்தவன்)’ என்னும் பொருளே பொருத்தும். சாலிக்கு நிகராக ‘மிக்க’ என்பதையும் கொள்ளலாம். ஆகவே விளம்பரத்தில் ‘ இப்போதெல்லம் கிருமிகள் சக்திமிக்கவையாக மாறிவிட்டன’ என்றிருக்க வேண்டும். சோப்பு விளம்பரத்தில் சத்திசாலி எப்படி வந்தது எனப் பார்க்கலாம். இந்தியாவின் வணிகத் தலைநகர் மும்பை. அதனால் விளம்பரப்படங்கள் அங்குதான் தயாரகினறன. வெளிப்புறப் படப்பிடிப்பு தேவைப்பட்டாலும், இறுதி வடிவம் பெறுவது மும்பையில். இவை முதலில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, அங்கேயே இந்தியாவின் வெவ்வேறு மொழிகளுக்கு பெயர்க்கப்படுகின்றன. விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுபவரின் இந்தி - இலக்கு மொழியறிவுகளுக்கேற்ப இந்த விளம்பரப்படங்கள் அந்தந்த மொழிகளுக்குச் செல்கின்றன.
மேற்சொன்ன விளம்பரத்தைத் தமிழாக்கியவர் இந்தியில் சாதாரணமாகப் புழங்கும் ‘சக்திசாலியை’ அப்படியே எடுத்துக்கொண்டாண்டுவிட்டார். கன்னடத்திலும் ‘சக்திசாலி’ உண்டு. ஆனால் தமிழில் ‘சக்திசாலி’ வழக்கல்ல. இது போன்ற தவறுகளைத் தவிர்க்க, விளம்பரப்படங்களை அந்தந்த மொழி வல்லுநர்களின் உதவியோடு செம்மைப்படுத்தவேண்டும்.
(உயிர் எழுத்து - நஞ்சுண்டன் ‘சக்திசாலியும் கழிப்பறையும்’ கட்டுரையிலிருந்து)
ஜூலை, 2015.