தமிழின் முதல் ஏ படம்!
விஜயகுமாரியின் தோல்வியை வட்டியும் முதலுமாக சரிகட்டியது ஜூபிடரின் 1951 ஆம் ஆண்டு வெளியீடான ‘மர்மயோகி’. படத்திற்கு இசை சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எஸ்.எம்.எஸ், இயக்கம் கே.ராம்நாத், படத்தின் கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். அவர் காதலி கலாவதியாக மாதுரிதேவி. வில்லன் பைசாச்சியாக எஸ்.ஏ.நடராஜனும் வில்லி ஊர்வசியாக அஞ்சலிதேவி. நல்லதம்பி - எம்.என்.நம்பியார், நல்லம்மா- பாக்கியம். படத்தின் முக்கிய பாத்திரம் மர்மயோகியாக செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். வெள்ளை சில்க் சல்லா துணியில் இரவில் பறந்து வரும் பேய் தந்த பயங்கரத்தால் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஏ சர்டிபிகேட் பெற்ற படமிது. ஆங்கில நடிகர் Erol Flyn பாணி மற்றும் மேனரிசம். அவரை போல் தோற்றத்தில் ஒத்திருந்த எம்.ஜி.ஆர்க்கு கரிகாலன் பாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தியிருந்தது. இப்பாத்திரத்தில் எம்.ஜி.ஆர் ஜொலித்தார். அரண்மனை மாடியில் இருந்து மேஜைக்கு டைவ் அடிக்கும் காட்சியில் அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. ஜூபிடர் இந்த படத்தை இந்தியிலும் ‘ஏக்தாராஜா’ என்ற பெயரில் எடுத்தது. ஏக்தாராஜாவிலும் பாக்கியம் நடித்தார். இப்படத்தில் நடிப்பதற்கென்றே பாக்கியம் இந்தி மொழியைக்கற்றார்.
(நிழல்- எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி திருநின்றவூர் டி.சந்தானகிருஷ்ணன் எழுதிய கட்டுரையிலிருந்து)
கேட்டால் கொடுப்பேன்: தமிழில் சமகாலத்தில் மிகப் பிரபலமான இலக்கிய / இதழ்களாக மற்றும் பதிப்பகங்களாகத் திகழும் காலச்சுவடு, உயிர்மை இரண்டிலும் மாறி மாறி எழுதினீர்கள். பொதுவாய் குழுக்களாகப் பிரிந்துநின்று எதிரெதிராய் இயங்கும் தமிழ் சிற்றிதழ்ச் சூழலில் இது அபூர்வம். எப்படி சாத்தியப்பட்டது?
அப்படி ஒருதோற்றத்தை உண்டாக்கி இருக்கிறேன் என்பது கேட்க நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் இப்போது அதிகம் பத்திரிகைகளில் எழுதுவதில்லை அல்லவா? இப்போதிருக்கும் மனநிலையில் கேட்டால் கொடுக்கலாம் என்றுதான் இருக்கிறேன். உயிர்மையில் என்னை அழைத்து கதைகொடு என்று கேட்டால் கொடுப்பேன். உயிர்மையில் மசிகூட உதறமாட்டேன் என்ற பிடிவாதமெல்லாம் ஏதுமில்லை.
தமிழில் முக்கியமாக எழுதும் எல்லா எழுத்தாளர்களும் ஒரே பத்திரிகையில் எழுதக்கூடாது என்று சொல்ல எந்தக் காரணமும் இல்லை. ஆளுமை உரசல்கள் தவிர அவர்கள் கோட்பாட்டு ரீதியாக ரொம்பவும் பிரிந்து கிடப்பதாக நான் நினைக்கவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரே பத்திரிகையில் எழுத முடியும். ஒரே மேடையில் பேசமுடியும். ஒரே விஷயம் சம்பந்தமாக இப்போது இருக்கும் தகராறுகள் இல்லாமல் விவாதிக்க முடியும். அப்படி எல்லாம் தமிழில் முன்பு இருந்தது.
ஒருவேளை அப்படி எல்லோரும் இணைந்து செயல்பட்டிருந்தால் தமிழில் இருக்கும் வணிகப் பத்திரிகைச் சூழலுக்கு எதிராக காத்திரமான ஓர் இயக்கம் இங்கே உருவாகி இருக்கும். அப்படி நடக்காமல் போனதற்குக் காரணம் இந்த விலகல்களும் விரிசல்களும்தான்.
என்னைப் பொறுத்தவரை நபர்களுடனான உறவும், எழுத்துடனான உறவும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பதாக நினைக்கவில்லை. இரண்டும் தனித்தனி. ஒருவேளை, முழுக்க இடதுசாரிச் சார்புள்ள ஒரு இதழில் என்னிடம் படைப்பு கேட்க மாட்டார்கள்.
(தமிழ் மின்னிதழில் வெளியான யுவன் சந்திரசேகரின் நேர்காணலில் இருந்து)
அம்பேத்கரின் போர்க்குணம்
விடியல் : அம்பேத்கர் குறித்த புரிந்துணர்வு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது?
மதிமாறன் : அம்பேத்கர் என்றவுடன் அரசியல் சாசன சட்டமும் அவர் பௌத்த மதத்திற்கு மாறியதும்தான் மக்களின் நினைவுக்கு வருகிறது. 1948 வரை இருந்த அம்பேத்கர் குறித்து யாரும் சொல்வதில்லை. அரசியல் சாசனம் குறித்தும் பௌத்த மதத்திற்கு மாறியது குறித்தும் நீங்கள் பேச வேண்டுமென்றால் அவரின் ஆரம்ப போர் குணத்தை அறிந்திருக்க வேண்டும். இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவைதான் அவரின் போர்க்குணம். இதைத்தான் தன் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக்கொண்டார்.
(புதிய விடியல்- வே மதிமாறன் பேட்டி)
யார் கேட்டார்கள்:கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு விற்கச் சொல்லி யார் கேட்டார்கள்? எங்கே, என்ன விலைக்கு நெல்லையும் அரிசியையும் கலைஞர் அரசு கொள்முதல் செய்தது என்று தமிழ்நாட்டு அரசியல் - பொருளாதார அறிஞர்கள் எவரும் கேட்கவில்லை. கலைஞர், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு விற்றார். அவரைப்போல் மலிவாக அரிசியை விற்பதைவிட, அரிசிக்கு விலையே தரவேண்டாம் - விலையில்லாமல் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி - இலவசமாகத் தருகிறோம் என்று அறிவித்தார் செயலலிதா.
எந்த அறிவாளிக் குடிமகனும் - எந்த உழைப்பாளிப்பெருமகனும் எனக்கு ஏன் இலவச அரிசி என்று கேட்கவே இல்லை. இது எப்படிப் பெரியார் வாழ்ந்த மானமுள்ள நாடு என்பது நமக்குப் புரியவில்லை. 1978 முதல் 2015க்குள், இருபத்தைந்து தடவைகள், பல வட மாநிலங்களுக்குப் போய் வந்தேன். எந்த ஒரு மாநிலத்திலும் கோதுமையையோ, அரிசையையோ “இலவசமாகக் கொடு!” என்று எந்தக் கட்சியும் அங்கெல்லாம் கேட்கவும் இல்லை: எந்த உழைப்பாளிக் குடிமகனும் அங்கெல்லாம் இதை எதிர்பார்க்கவும் இல்லை.
(சிந்தனையாளன் - வே.ஆனைமுத்து எழுதிய தலையங்கத்தில்)
என்ன சாப்பிடுகிறீர்கள்: சென்னையில் ஹோட்டலுக்கொரு உபசாரியைப் பார்க்கிறேன். பரணி மருத்துவமனைக்கு எதிரே உள்ள திருநவேலி ஹோட்டலில் செந்தமிழில் பேசும் ஓர் இளைஞனைப் பார்க்கலாம். ‘பதாகை’ மர்ம இலக்கிய இணைய இதழ் நடாத்தும் நண்பர் நட்பாஸும், நானும் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.
‘அமருங்கள் ஐயா. என்ன சாப்பிடுகிறீர்கள்?’ உதட்டோரம் மறைக்க முயலும் குறுஞ்சிரிப்புடன், சற்றே கேலியான தொனியில் கேட்கும் அந்த இளைஞன், சுறுசுறுப்பானவன். நான் தனியாகச் செல்லும் போது வழக்குத் தமிழில் பேசும் அவன், நண்பர் நட்பாஸைக் கண்டால் மட்டும் செந்தமிழில் பேசுவதற்கான காரணம், நட்பாஸின் எழுத்துக் களைப் போலவே புரியாத ஒன்று.
‘ஐயா! இங்கு இருப்பது தங்களின் தலைக்கவசம்தானே? அதை சற்றுத் தள்ளி வைக்க இயலுமா?’ என்று கேட்டு நட்பாஸை அதிர வைப்பான்.
‘பாஸ்கர்! அத்தனை ரகசியமா நீங்க இலக்கிய பத்திரிகை நடத்துறது அவனுக்கு எப்படி தெரியும்?
‘அதான் ஸார் எனக்கும் தெரியல. இன்னொரு எண்ணெ தோசய சொல்லிக்கட்டுமா?’
‘ஐயா! அதுதான் ஏற்கனவே எண்ணெய் தோசை சாப்பிட்டு விட்டீர்களே! இப்போது அடை கொண்டு வருகிறேன். பயப்படாதீர்கள். அளவில் சிறியதுதான்’. செந்தமிழ் இளைஞனின் அன்புக்குக் கட்டுப்பட்டு நட்பாஸ் சிலபல அடைகளைச் சாப்பிடுவார்.
சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்கும் போது செந்தமிழ் இளைஞன் மேலும் சொல்வான்.
‘அடுத்த முறை சற்று சீக்கிரம் வந்தீர்களானால், காரச்சட்னியும், வடையும் இருக்கும். சென்று வாருங்கள்’. கைகூப்பி வணக்கம் சொல்லி வழியனுப்பி வைப்பான்.
‘கோவி மணிசேகரனோட சரித்திர நாவல் கதாபாத்திரங்கள் கூட இப்படி தமிழ் பேசி நான் கேட்டதில்ல, ஸார்’. டூ வீலரின் ஸ்டாண்டை எடுக்கும் போது கண் கலங்க நட்பாஸ் சொல்வார்.
(சொல்வனம் இணைய இதழில் சுகா எழுதிய கட்டுரையில்)
ஜூன், 2015.