தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றை ஆய்வு செய்வதில் முதன்மையானவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. The province of the book என்று ஆங்கிலத்தில், தமிழ்ப் பதிப்புத் துறை வரலாறு பற்றிய ஆழமான நூலை எழுதியவர். அவரிடம் தமிழ்ப் பதிப்புத்துறையின் ஆரம்ப காலம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழில் நூல்கள் பதிப்பு என்பது எப்போது தொடங்குகியது? முதன் முதலில் எம்மாதிரியான நூல்கள் அச்சிடப்பட்டன? அந்தப்போக்கில் மாறுதல் எப்போது ஏற்பட்டது?
அச்சுத் தொழில்நுட்பத்துக்கு இரு மரபுகள் உண்டு. சீன மரபும் ஐரோப்பிய மரபும் தனித் தனியாகவே வளர்ந்தன. சீனாவுடன் இரண்டாயிரம் ஆண்டுப் பண்பாட்டு ஊடாட்டம் இருந்தபோதும் ஏனோ சீன அச்சுத் தொழில்நுட்பத்தை இந்தியா கைக்கொள்ளவில்லை. ஜப்பானும் கொரியாவுமே அதனைப் பின்பற்றின. 15ஆம் நூற்றாண்டின் நடுவில் குட்டன்பர்க் ஜெர்மனியில் கண்டுபிடித்த அச்சுக்கோப்பும், அழுத்து பொறியால் அதனைப் பல தாள் பிரதிகளாக்குவதும் ஒரு பெரிய அறிவுப் புரட்சியை அங்கு உருவாக்கின. ஐரோப்பிய மறுமலர்ச்சி, அறிவியல் புரட்சி, சீர்திருத்தக் கிறித்துவம் ஆகியவற்றுக்கு அச்சுத் தொழில்நுட்பம் அடித்தளமாக விளங்கியது.
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே இந்தத் தொழில்நுட்பம் தமிழுக்கு வந்துவிட்டதுதான் வியப்பு. 1554 இலேயே ஒரு கிறிஸ்தவ வினாவிடை நூல் தமிழில் வெளிவந்துவிட்டது. ஆனால் இது ரோம (ஆங்கில) எழுத்தில் அமைந்திருந்தது. போர்த்துகலில் அச்சிடப்பட்டது.
1577இல் முதல் தமிழ் நூல் & தம்பிரான் வணக்கம்& கோவாவில் அச்சிடப்பட்டது. இதன் ஒரே பிரதி அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது. 2010இல் அதனை நேரில் தொட்டுப் பார்த்து மெய்சிலிர்த்த அனுபவம் எனக்கு உண்டு. இதற்கு அடுத்த ஆண்டு (1578) இச்சிறுநூல் கொல்லத்தில் புதிய அச்சு வார்ப்பு கொண்டு அச்சிடப்பட்டது. ஐரோப்பிய மொழிகளுக்கு வெளியே அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமை தமிழுக்கு உண்டு.
அச்சுப்பொறி இந்தியாவுக்கு வந்தது ஒரு விபத்து. போர்த்துகல் மன்னர் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்த அச்சுப்பொறி தவறுதலாக கோவாவிற்கு வந்துவிட்டது. கொல்லத்தில்'தம்பிரான் வணக்கம்' மறு அச்சான பிறகு'கிறிஸ்தியானி வணக்கம்','அடியார் வரலாறு' முதலான சில நூல்கள் 1570கள், 1580களில் கொச்சியில் அச்சாயின. இவற்றின் பின்னணியில் இருந்தவர் அண்டிரிக் அடிகளார். இந்தியாவில் முதலில் அச்சான நூல்கள் தமிழ் நூல்கள்தான் என்றாலும் அவை தமிழகத்தில் அச்சாகவில்லை என்பதுதான் நகைமுரண்.
1556 முதல் 1800 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் அச்சான 1671 நூல்களில் 266 தமிழ் நூல்களாகும் என்று கிரஹாம் ஷா கணக்கிட்டுள்ளார். இந்திய மொழி நூல்களில் தமிழே அதிகம் & 40 விழுக்காடு. இந்தக் காலப்பகுதியில் ஒரே ஒரு சமஸ்கிருத நூல் மட்டுமே அச்சேறியது. 1750வரை இந்திய மொழிகளில் அச்சு வரலாறு என்பது
ஏறத்தாழத் தமிழ்ப் பதிப்பு வரலாறே என்றே
சொல்லிவிடலாம்.
தென் தமிழகக் கரையோரத்தில் புன்னைக்காயலில் பதினாறாம் நூற்றாண்டில் பல நூல்கள் அச்சாகி யுள்ளதாகச் சொல்கிறார்களே?
தனிநாயக அடிகளாரும் மறைத்திரு இராசமாணிக்கமும் இவ்வாறு கருதியிருக்கிறார்கள். ஆனால், புன்னைக்காயலில் அச்சகம் இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை என கிரஹாம் ஷா அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
அப்படியென்றால் தமிழகத்திற்கு அச்சுப் பொறிகள் எப்போதுதான் வந்தன?
16ஆம் நூற்றாண்டில் முளைத்த அச்சு மரபு ஓர் எரி நட்சத்திரம் என்றே சொல்ல வேண்டும். 16, 17ஆம் நூற்றாண்டுகளில் அச்சான நூல்கள் கிறிஸ்தவ சமயப் பணியாளர்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. இவை சாதாரண மக்களின் வாசிப்புக்கானவை அல்ல.
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்தபொழுதுதான் உண்மையிலேயே அச்சுத் தொழில்நுட்பம் தமிழில் கால்கொள்கிறது. தமிழ் அச்சின் பிறப்புக்கு கோவாவில் வந்தது பொய் வலி என்றால் தரங்கம்பாடியில்தான் உண்மைப் பிரசவ வலி வந்தது என்று சொல்லலாம்.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் தரங்கம்பாடியின் இடம் என்ன?
18ஆம் நூற்றாண்டில் மட்டும் ஏறத்தாழ 350 நூல்கள் தரங்கம்பாடியில் அச்சாகின என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஜெர்மன் நகரமான ஹால&யில் வார்த்த எழுத்துகள் பெரிதாக இருந்ததால் சிறிய வடிவில் தரங்கம்பாடியிலேயே அவற்றை சீகன்பால்கு வார்த்தார். காகிதம் தயாரிக்கும் ஆலையையும் அவர் நிறுவினார். விவிலியத்தின் முழு மொழிபெயர்ப்பு முதன்முதலில் வெளியான மொழி தமிழ் என்ற சிறப்பும் அவரால்
கிடைத்தது. 1725இல் ராஜநாய்க்கன் என்ற தலித் கிறிஸ்துவர் புத்தக வாசிப்பு அனுபவம் பெற்றது மிக சுவாரசியமான கதையாகும்.
இதே காலத்தில்தான் கத்தோலிக்கருக்கும் சீர்திருத்தச் சபைக்கும் இடையிலே கடுமையான விவாதங்கள் நடந்தன. இவை அச்சு மூலமாகவே நடந்தேறின. தரங்கம்பாடியிலிருந்து சீகன்பால்கு முதலான சீர்திருத்தச் சபையினரும் திருச்சிக்கு அருகே ஏலாக்குறிச்சியிலிருந்த வீரமாமுனிவர் போன்ற சேசு சபை மறைப் பணியாளர்களும் மிகக் கடுமையாக மோதிக்கொண்டார்கள்.'லுத்தேரினத்தியல்பு','பேதகமறுத்தல்','வேத விளக்கம்','வேதியர் ஒழுக்கம்' போன்ற கண்டன நூல்களை வீரமாமுனிவர் எழுதினார்.'பாப்பு மார்க்க விளக்கம்','பாப்புக் கண்ணாடி' என்று இவற்றுக்குத் தரங்கம்பாடியினர் பதிலடி கொடுத்தனர்.
எவ்வளவு பிரதிகள் அச்சிடப்பட்டன, யார் படித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அச்சு நூல்கள் மத விவாதங்களினால் பரவலாயின என்பதில் ஐயமில்லை.
பதிப்பு வரலாற்றில் சென்னைக்கு எந்த இடமும் இல்லையா?
புதுச்சேரியில் சேசு சபை நன்கு செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக்காரரும் போரிட்டுக்கொண்டபொழுது, 1761இல் புதுச்சேரி சூறையாடப்பட்டது. அதிலிருந்து கிடைத்த அச்சு இயந்திரத்தை பெப்ரிசியஸ் என்ற சீர்திருத்தத் திருச்சபையின் மறைப்பணியாளருக்கு சென்னை மாகாணத்தின் ஆளுநர் கொடுத்தார். இதுவே வேப்பேரி அச்சகம். இதுதான் பின்பு எஸ்.பி.சி.கே அச்சகமானது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொறுப்புக்கு இது வந்தது.
1988இல் என் குருநாதர் த. கோவேந்தன் ஜான் மிலிட்டனின்'மாமல்லன் சிம்சோன்' நூலைத் தமிழாக்கினார். அதற்கு ஒரு
நீண்ட முன்னுரையை நான் எழுதினேன். அந்த நூல் இந்த அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டது. மொத்த நூலுக்குமே ஒரே சமயத்தில் மெய்ப்புப் படிகள் கொடுத்துவிட்டார்கள் என்றால் எவ்வளவு பெரிய அச்சகம் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம். அச்சகத்திலேயே வார்ப்பகமும் இருந்ததால் அவ்வப்போது அச்செழுத்துக்களைக் கொட்டிவிட்டுப் புதிதாக வார்ப்பார்கள். எனவே உடைந்த எழுத்துகளே இருக்காது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அச்சகத்தை மூடிவிட்டார்கள். இயந்திரங்களைக் காயலான் கடைக்குப் போட்டிருப்பார்கள். தமிழ்ப் பதிப்பியலுக்கான ஓர் அருங்காட்சியகத்தை அமைக்கத் தவறிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். யாரை நொந்துகொள்ள? எங்குப் போய் அழ!
உண்மைதான். சொல்லவந்த கதைக்கு வாருங்களேன்.
எஸ்.பி.சி.கே. அச்சகத்தில்தான் பெப்ரிசியஸ் தயாரித்த'தமிழும் இங்கிலிசுமாயிருக்கிற அகராதி' (1779)
அச்சானது. அதில் தனித்தமிழல்லாத
சொற்களை உடுக்குறியிட்டு அவர் காட்டியிருப்பார். 1862இல் வின்ஸ்லோ அகராதி வரும்வரை இதுவே மிக முக்கியமான அகராதி. இப்போதும்கூட இது அச்சிலிருக்கிறது.
தமிழ்ப் பதிப்பியலுக்கு எல்லிஸ் துரையின் பங்களிப்பு என்ன ?
இதுவரை நான் குறிப்பிட்டவர்கள் எல்லாம் கிறிஸ்தவ சமயப் பணியாளர்கள். எல்லிஸ் இதிலிருந்து வேறுபட்டவர். அரசு அதிகாரி. திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் கர்த்தா இவர்தான். 1821இல் இவர் தொடங்கிய College of Fort St. George தமிழ்ப் பதிப்பியலில் ஒரு மைல்கல். இதனைச்'சென்னத் தமிழ் சங்கம்' என்று தமிழில் குறிப்பிட்டார் தாண்டவராய முதலியார். தமிழறிஞர்கள் முதன்முறையாக இந்தச்
சங்கத்தின் வாயிலாகவே அச்சுத் தொழில்நுட்பத்தோடு அறிமுகமாயினர். தாண்டவராய முதலியார் தவிர, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், கொற்றமங்கலம் இராமசாமி பிள்ளை, அ. முத்துசாமிப் பிள்ளை முதலான தமிழறிஞர்கள் இங்குப் பணியாற்றினர். திருக்குறள், இலக்கண வினாவிடை, பஞ்சதந்திரக் கதைகள், வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் முதலான பல நூல்கள் இச்சங்கத்தின் வாயிலாக வெளியாயின.
இந்தியர்கள் அச்சகம் வைத்துக்கொள்ளும் உரிமை பெற்றிருந்தனரா?
1835வரை அச்சகம் வைக்க உரிமம் வாங்க வேண்டியிருந்தது. அதன் பிறகே இந்த நடைமுறையில் நெகிழ்வு ஏற்பட்டது. அச்சுத் தொழில்நுட்பம் பற்றிய அச்சம் ஆங்கிலேயருக்கு இருந்தது. எனவே இதனைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. நெருக்கடி நிலைக் காலத்தில் இதன் கோர முகம் வெளிப்பட்டது. இன்றும்கூட
அரசாங்கத்திற்கு எதிரான வெளியீடுகள்,
சுவரொட்டிகளை அச்சிடுவது எளிதல்ல என்பது தெரிந்ததுதானே?
தொடக்க காலத்தில் எத்தனை பிரதிகள் அச்சாகும்? தமிழில் அதிக அளவில் அச்சிடப்பட்ட முதல் நூல்?
இயந்திரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் கூடத் தமிழகத்தில் அச்சகங்கள் குடிசைத் தொழில், கைத்தொழில் போலவே செயல்பட்டு வந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இந்த நிலைதான். உ.வே.சா. சீவக சிந்தாமணி பதிப்பை அச்சிட ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகியிருக்கிறது.
சராசரியாக 500 பிரதிகள் அடிப்பார்கள் என்று ஜான் மர்டாக் பதிவு செய்துள்ளார். பாரதியின் எந்த நூலும் ஆயிரம் பிரதிக்கு மேல் அச்சிடப் படவில்லை. ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்கள் பதினாயிரக்கணக்கில் விற்பனையாகியிருக்கின்றன.
20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில்'ஆரிய மத உபாக்கியானம்' என்ற நூல் ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்றதாகச் சொல்கிறார்கள். மு.வ. எழுதிய திருக்குறள் உரை பல லட்சம் விற்றிருக்கிறது. இவை எல்லாம் விதிவிலக்குகள் என்றே சொல்லவேண்டும்.
தமிழ்ப் பதிப்புலகில் மதம் சார்ந்த செயல்பாடுகளின் பங்களிப்பு?
19ஆம் நூற்றாண்டின் இறுதிவரைக்கும்கூடச் சமய நூல்களே கோலோச்சியிருக்கின்றன. கண்டன நூல்களைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். கிறித்துவர்களும் இந்துக்களும் கடுமையான துண்டறிக்கைளை வெளியிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு மதத்துக்குள்ளும்கூட விவாதங்கள் நடந்துள்ளன. அருட்பா & மருட்பா கண்டனப் போராட்டம் புகழ்பெற்றது. இதை ப. சரவணன் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார். சூளை சோமசுந்தர நாயகர் ஏராளமான கண்டன நூல்கள் எழுதிப் பேர் பெற்றதோடு, எதிராளியை'அவிசாரி மகன்' என்று வைததால் மானநஷ்ட வழக்குக்காக
நீதிமன்றப் படியும் ஏறியிருக்கிறார். ஆனால் கிறிஸ்துவம், வைதீக இந்து சமயம்,
சைவம் ஆகியன தொடர்பான நூல்கள் பற்றி அறிய முடிந்த அளவுக்குப் பிற சமயங்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. இஸ்லாமியர் தொடக்க காலத்தில் அச்சுத் தொழில்நுட்பத்தை சந்தேகத்தோடு பார்த்திருக்கின்றனர்.
சற்றுப் பிற்பட்டு 1870கள் முதல் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அரபுத் தமிழிலும் பல நூல்கள் வந்திருக்கின்றன. ஜெ.பி.பி மொரெ என்ற அறிஞர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.
வைணவ நூல்கள் பற்றியும் அதிக ஆய்வுகள் நடக்கவில்லை. வைணவர்களும் குறுங்குழுவாக தமக்குள் நூல்கள் அச்சிட்டுப் பரப்பிக்கொண்டிருந்துவிட்டனர்.
சைவமே தமிழ் அறிவுலகின் மைய நீரோட்டமாக அமைந்துவிட்டது! தமிழ்ப் பதிப்பு வரலாறு இனிமேல்தான் விரிவாக எழுதப்பட வேண்டும்!
ஜுன், 2019.