சிறப்புக்கட்டுரைகள்

அக்கம் பக்கம் பாருடா

எஸ்.எஸ். சிவசங்கர்

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் அந்த வீடியோ காட்சியைப் பார்த்து திகைத்துத்தான் போனேன். மது எதிர்ப்பு போராட்டத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற காட்சி தான் அது. மாணவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குகின்றனர்.

தாக்குதலில் காயம்பட்டு, ரத்தம் சொட்ட சொட்ட, ஒரு மாணவர் தொடர்ந்து தன் எதிர்ப்பைக் காட்டுகிறார். சமீப கால தமிழக வரலாற்றில்  கண்டிராத காட்சி. அடக்குமுறைக்கு எதிரான மாணவ எழுச்சி.

அடுத்த காட்சி தான் உச்சம். மாணவிகளும் போராட்டக் களத்தில். அதிலும் சக மாணவர்கள் தாக்கப்படும் போது, ஓடித் தடுக்கிறார்கள். ஒரு மாணவியை காவல்துறை அதிகாரி ஷு காலால் எட்டி உதைக்கிறார். பின்வாங்கவில்லை அந்தப் பெண்.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு போராட்ட குணம் இல்லை என்ற வாதம் தகர்ந்து போனது. அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தால் அது வெளிப்படுகிறது.

1960களில் இளைய சமுதாயம் இந்தி திணிப்பிற்கு எதிராக வெடித்து எழுந்தது தமிழகத்தில். அது ஒரு ஆட்சி மாற்றத்திற்கே அடி கோலியது.

1980களில் அசாமில் மாணவ சமுதாயம் திரண்டு போராட்டக் களத்தில் குதித்தது. ஆட்சியையே கைப்பற்றியது மாணவர் அமைப்பு.

தேவை ஏற்படுகிற இடங்களில் இளைய தலைமுறை  தனது அரசியல் பார்வையை வெளிப் படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அத்தோடு நடவடிக்கைகளிலும் இறங்குகிறது.

இந்தி எதிர்ப்பு போருக்கு பிறகு 80களில் மீண்டும் ஒரு முறை  மாணவ சமுதாயம்  களம் இறங்கியது தமிழகத்தில்.  அது தனி ஈழ ஆதரவு போராட்டம். அப்போது பொதுமக்களும் அதற்கு ஆதரவளித்தனர். அப்போது பள்ளி மாணவனாக அந்த ஊர்வலங்களில் பங்கேற்றிருக்கிறேன்.

1987ல் கல்லூரி மாணவனாக எனக்கு ஒரு அனுபவம் உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழக  பொறியியல் புல மாணவர் ஒருவரை வேற்று துறை மாணவர்கள் ராகிங் செய்ததை கண்டித்து, வகுப்பிலிருந்து வெளியேறி போராட்டம் செய்தோம். போராட்டம் வலுத்தது. காலவரையறையற்ற விடுமுறை கல்லூரிக்கு விடப்பட்டது.

30 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டோம். பிறகு விசாரணை என இழுத்தடிக்கப்பட்டோம். துறை வழங்கும் மதிப்பெண்ணில் கை வைக்கப்பட்டது. பட்டம் பெறுவதற்குள் ஒரு வழியாகி விட்டது. அவ்வளவுதான், அதிலிருந்து இதுவரை பொறியியல் புல மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதே இல்லை எனத் தகவல்.

பட்டம் பெறும் பயமே, மாணவர்களுக்கு  அரசியல் சிந்தனை வராமல் பார்த்துக் கொள்கிறது. அதிலும் இப்பொழுது பெற்றோர் வேலை வாய்ப்பை குறி வைத்தே தம் மக்களை கொண்டு செல்வதால் சமூகம் குறித்த சிந்தனையே இல்லாமல் தான் வளர்கிறார்கள்.

ஐ.ஐ.டி யில் இடம் பிடிக்க வேண்டும், மருத்துவம் படித்திட வேண்டும், அமெரிக்கா செல்ல வேண்டும், ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக வேண்டும் என்பது மாத்திரமே, மந்திரமாக அடித்து பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

இடையில் ஈழ ஆதரவு அலை ஒன்று மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இப்போது மதுவிலக்கு பிரச்சினையில் மீண்டும் ஒரு பொறி தெரிகிறது.

பெரிய பொதுப் பிரச்சினைக்காக மாநிலம் முழுதும் மாணவர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்பதில்லை. தங்களை சுற்றி உள்ள பிரச்சினைகளுக்கு, தங்களை பாதிக்கிற பிரச்னைகளுக்காவது குரல் எழுப்ப வேண்டும் இளைய சமுதாயம்.

சமூக வலைதளங்கள் ஓரளவு அதற்கு வழி வகுக்கிறது. கருத்துக்களை சொல்ல, விவாதிக்க இடம் அளிக்கிறது. ஆனால் அதிலும் ஒரு நிலைத்தகவலில் பொங்கி விட்டு, தன் கடமை முடிந்தது என சென்று விடுவோரும் உள்ளனர்.

சுற்றி நடப்பதை பார்த்தாலே அரசியல் புரியும்.

‘உன்னால் முடியும் தம்பி‘ திரைப்பட பாடல் போல ‘அக்கம் பக்கம் பாரடா சின்னராசா, ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா’.

இளைய பருவம் இனிமையானதாக இருக்க வேண்டும் தான், அதே நேரம் வலிமையானதாகவும் இருந்திடல் வேண்டும்.

 (கட்டுரையாளர் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

செப்டம்பர், 2015.