சிறப்புக்கட்டுரைகள்

ஃப்ரியா இரு தல

எஸ்.எஸ். சிவசங்கர்

ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்கு சென்ற முதல் நாளே அவர் கண்ணில் பட்டார். மெல்லிய தேகம், அழுக்காக பேண்ட், சர்ட். உடலுக்கும், தோற்றத்திற்கும் தொடர்பில்லாத அலட்டல் பார்வை.   வடக்கிலிருந்து தெற்காக அமைந்த சாலை அது. ஒரு புறம் சுனாமி அடுக்குமாடிக் குடியிருப்பு. மற்றொருபுறம் மாநகரப் போக்குரத்துத் துறை பணிமனை. சாலையின் வடக்கிலிருந்து ஒரு கொடி கட்டிய கார் வந்தது, ஹாரன் ஒலித்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒருவர் தயங்கினார். நம்ம ஒல்லி ஆள் சாலையின் மையத்திற்கு வந்தார்.

கார் ஹார்ன் ஓங்கி ஒலித்தது. நம்ம ஆள் கெத்தாக ஒரு பார்வை பார்த்தார். ‘ங்கோத்தா இன்னா அவ்சரம்?’. கார் நின்று விட்டது. தயங்கியவரைப் பார்த்து தலையசைத்தார் ஒல்லி. அவர் இப்போது சாலையை கடந்தார், நிதானமாக. கார் டிரைவர் ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ‘ ஆர் ரோட், நம்ம ரோட் ’ என்றார் ஒல்லி. காரைப் பார்த்து அநாயசமாக கையசைத்தார். இது நண்பகல் வேளையில் நடந்த சம்பவம்.

இரவு 8 மணிக்கு மீண்டும் கண்ணில் பட்டார். இப்போது மின் கம்பத்தின் அருகில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து, மின்கம்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்தார். மூன்றாவது நாள் மாலை 7 மணிக்கு வேறு காட்சி. கையில் ஒரு பீர் பாட்டிலோடு சலம்பிக் கொண்டிருந்தார். சுற்றிலும் பெரியவர்கள், பெண்கள் கூட்டம். பாட்டிலை ஆட்டி, ஆட்டி உடன் இருந்தவருக்கு கீதாபதேசம் வழங்கிக் கொண்டிருந்தார்.‘இன்னா அவன் சொல்றான். நம்ம கைல வச்சிக்கினா மட்டன்னு காட்லாம்’.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு. புன்முறுவலோடு கடந்தார். அவரோடு உரையாட ஆவல் ஏற்பட்டது. அடுத்த இரண்டாம் நாள் காலை 8 மணி. சுனாமி குடியிருப்பு உள்ளே இருந்த டீ கடைக்கு டீ குடிக்க சென்றேன். இவர் ஒரு குட்டி பெஞ்ச் மீது அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு இடம் மிச்சமிருந்தது. அதில் நான் அமர்ந்தேன்.  ‘டீ சாப்பிடலாமா?’ என்றுக் கேட்டேன் நம் ஆளை. ‘வேணாம் தல‘ என்றார். ‘ஏன்?’ என்றுக் கேட்டேன். ‘இல்லத் தல. காலியிலயே கட்டிங் உட்டேன்’. ‘ இன்னும் கடை திறக்கலியே?’. ‘இன்னா தல இப்புடி இருக்க. எஸ்ட்ரா காசு குட்த்தா எல்லாங் கெடைக்கும். பாபு கோட்டரு வச்சிக்கிட்டு வலிச்சான். சரின்னு கட்டிங் உட்டேன். டீ குட்ச்சா காஸ் வேஸ்ட்டாயிரும் தல’.

‘ காலையிலயே இப்படின்னா, எப்படி வேலைக்கு போறது?’,  கேள்வியை போட்டேன். ‘வேலயா? எங்கத் தல. அதெல்லாம் ஒடம்பு தாங்காது’. ‘ அப்ப வேலைக்கே போனதில்லையா?’. ‘என்னா தல இப்புடிக் கேட்ட ? நான் போட்டுக்கு போன காலத்துல எப்புடி சம்பாரிச்சன் தெரியுமா?’.

‘ அப்புறம் ஏன் வேலய உடனும்?’. ‘எங்கத் தல. பொட்டணம் பழக்கிட்டானுங்க. ஒரே ப்ளையிங் தான். அப்புறம் போட் போ முடில. பெயிண்டிங் போனேன். அதும் முடில. அப்றம் ரெஸ்ட் தான்’.

‘ அது என்னா பொட்டணம்?’. ‘ இன்னா தல இப்புடி இருக்க. பொட்டணம்னா கஞ்சா’. ‘கஞ்சா கெடைக்குதா?’. ‘ தல, நீ இங்க புத்ஸா? அது சகஜம்’. ‘இப்படியே வாழ்க்கை போயிடுமா?’. ‘ தல, இன்னா இப்டில்லாம் கேக்குற?’ , என்றுக் கேட்டவர் ‘தோ, வர்றன் தல’ என எஸ்கேப்பாகி விட்டார்.

மீண்டும் அடுத்த நாள். மாலை 7 மணி. பாண்டி வந்தார். குஷி மூட் போல. ‘தல, வணக்கம்’. ‘வணக்கம்’. ‘தல. நீ ஒரு நெயாயம் சொல்லு’. ‘ என்ன சொல்லனும்?’. ‘இன்னா தல. என் அம்மாவுக்கு, அக்காவுக்கு ஆளுக்கு நாலாயிரம் குடுத்துட்டாங்க. எனுக்கு வர்ல. கேட்டா, ஓட்டு எடம் மாறிடிச்சாம். நான் இங்க தான் சேத்தன். எவனோ வேற வார்டுக்கு மாத்திட்டானாம். எனுக்கு குடுக்கல தல. இது நெயாயமா?’. அப்போது அவர் நண்பர் வந்து விட்டார். அவர் சைகை காட்ட, இவர் எனக்கு சைகை காட்டினார். ‘ தல, ப்ரெண்ட் கூப்ட்றான். ஓஸி தல’, ஓட்டம் பிடித்தார். என் உடன் உட்கார்ந்திருந்தவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

மீண்டும் அடுத்த நாள் இரவு. வந்து நின்று போலீஸ் ஸ்டைலில் ஒரு சல்யூட் அடித்தார். ‘எங்க காலைல இருந்து காணோம்?’, என்றேன். ‘ தல, இன்னிக்கி கொஞ்சம் ஜாஸ்தி ஆய்ட்ச்சி. ப்ரெண்ட்டோட ரவுண்ட் போனேன். இன்னா தல வாய்க்க. பொறந்தவன் சாவ தான் போறான். இன்னாத்துக்கு பெர்ய பணம். அரமணையா கட்டப் போறோம். இருக்க வரைக்கும் ஜாலி தல. அவ்ளோ தான். எனுக்கு நாலாயிரம் குடுக்கல இன்னும். யார் ஜெய்ச்சி இன்னா தல. அப்றம் பணம் தரமாட்டாங்க. சரி வுடு தல, அந்தப் பணம் வராட்டியும் எதும் நிக்கப் போறதில்ல.  என்னய மாரி ஜாலி வர்மா? இதான்  தல வாய்க்க. ஃபிரியா இரு தல’.

ஞானோபதேசம் முடித்து டீக்கடை பெஞ்சின் மீதே புத்தர் கிறங்கிப் போனார்.

ஜூன், 2017.