ரஞ்சித் அரசியல்  
சிறப்புக்கட்டுரைகள்

சீறிய ரஞ்சித்: செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் சொல்வது என்ன?

இரா. தமிழ்க்கனல்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை முன்னிட்டு திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தன் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னையில் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது, பரவலாக கவனம் பெற்றது. அதில் அவர் பேசியதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்து இன்னும் அடங்கியபாடில்லை. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதைப் பற்றி சமூக ஊடகங்களில் ஏராளமான மீம்களும் பரவியபடி இருக்கின்றன.

இரஞ்சித் பேச்சின் அரசியல், அவர் எழுப்பிய கேள்விகளில் நியாயங்கள், அவரே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், அவர் வைத்த அரசியல் முழக்கம் அனைத்து தலித் மக்களுக்குமான ஆரோக்கியமான அரசியலா? இல்லையா? சீமான், விஜய்யைப் போல அவரும் அரசியலில் நுழைகிறாரா? வி.சி.க. தரப்பில் அவர் மீது பாய்கிறார்களா, எனில் அது சரியா தவறா என்று இரண்டு நாள்களாக விவாதம் சூடாக நடந்துவருகிறது.

இந்த நிலையில், தலித்திய அரசியல் தளத்தில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள், அரசியல் எழுத்தாளர்களிடம் பேசினோம். அவர்களின் கருத்துகள் இங்கே:

கௌதம சன்னா

எழுத்தாளர் கௌதம சன்னா, வி.சி.க. துணைப்பொதுச்செயலாளர்:

ஆம்ஸ்ட்ராங்குக்கும் இரஞ்சித்துக்கும் நல்ல உறவு இருந்தது. அவருடைய இழப்பை முன்னிட்டு இவர் ஓர் இரங்கல் நிகழ்ச்சி நடத்துகிறார். தன்னுடைய இயல்பான கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதில் அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அதிமுக அரசாக இருந்தால் கூட இதுதான் நடந்திருக்கும். அரசாங்கத்துக்கு எதிரான கோபம்.

அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் கொல்லப்பட்டது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்ம்ஸ்டாங் மறைவுக்காக தன்னிச்சையாக பல இடங்களில் எங்கள் கட்சி தோழர் கூட போராட்டம் நடத்துகிறார்கள். இந்தக் கொலையில் பி.எஸ்.பி.க்கு சந்தேகம் இருக்கிறது. இரஞ்சித்துக்கும் இதேதான்! அவர்களின் உணர்வுகளை தலைவர் திருமாவளவனும் ஊடகங்கள் மூலம் சொன்னார். இதற்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டிது அரசுதானே?

இழப்பிலிருந்து வரும் இந்தக் கோபத்தை பொறுப்புடன் அணுக வேண்டும். அதில் உண்மையா பொய்யா என்றா ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க முடியும்? இழப்பிலும் ஆதங்கத்திலும் இருப்பவர்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் பேசமுடியாது. மற்றபடி, இது இரஞ்சித்தின் அரசியல் வருகையா எனக் கேட்பவர்கள், அவருடைய சினிமா புகழை வைத்துக் கேட்கிறார்கள். அவர் அரசியலுக்கு வருவதாகச் சொல்லட்டும்; தன் அரசியலை முன்வைக்கட்டும்; பிறகு அதைப் பற்றிப் பேசலாம்.

புதிய மாதவி

எழுத்தாளர் புதியமாதவி :

வி.சி.க.வும் தோழர் திருமாவும் தேர்தல் அரசியல் களத்தில் நிற்கிறார்கள். நீலம் பா. ரஞ்சித் பண்பாட்டு அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். கருத்தியல் ரீதியாக ரஞ்சித்தின் ரெளத்திரம் நியாயமானது. அது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனக்குமுறல். ஓட்டு அரசியல்/ கூட்டணி அரசியல் / இந்தியத் தேர்தல் அரசியலில் தலித் அரசியலுக்கான இடம், இன்றுவரை பெரும்பான்மை கட்சிகளைச் சார்ந்துதான் இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர் திருமா அவர்கள்.

பண்பாட்டு அரசியல் களத்திலிருந்து உரத்து ஒலிக்கும் பா.ரஞ்சித்தின் குரல், தலித் தேர்தல் அரசியலுக்கு பலமே தவிர பிரச்சினை இல்லை. ஆனால் அதைப் பிரச்சினையாக்கிவிட்டால் நல்லது என்று ஆதிக்க சக்திகள் உள்ளூர ஆசைப்படுகின்றன. ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் இரஞ்சித்தின் வருத்தம் கோபமாக வெடித்திருக்கிறது. என்னவோ கட்டப்பஞ்சாயத்துதான் காரணம் என்று காவல்துறை கண்டுப்பிடிப்பதற்கு முன்னரே சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ம. மதிவண்ணன்

எழுத்தாளர் மதிவண்ணன், தலைவர், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்:

பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கேள்விப்பட்டதுமே பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். ஈரோட்டிலிருந்து அஞ்சலிசெலுத்த வந்து, மழையில் புதைவிடத்துக்குப் போயும் அஞ்சலி செலுத்தமுடியாமல், ஊருக்குத் திரும்பிவிட்டோம். அவருடைய இழப்பை முன்வைத்து செய்யப்படும் அரசியலில் எனக்கு உவப்பு இல்லை.

வகுப்புவாத- மதவாதக் கூட்டுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க., வி.சி.க. கட்சிகளைத் தனிமைப்படுத்த முயற்சி நடக்கிறது. திராவிட அரசியலை ஒரு காலத்தில் எதிர்த்த வி.சி.க., இன்று திராவிட அரசியலுக்கு பக்கபலமாக இருக்கும்நிலையில், ரஞ்சித் தரப்பும் அவரோடு நிற்கும் அமைப்புகளும், வகுப்புவாதத்தை எதிர்க்கும் அணியிலிருந்து வி.சி.க.வை விலக்கிவிடப் பார்க்கி ன்றன. இவர் சொல்கிற பிரதிநிதித்துவம் எனப் பார்த்தால், அருந்ததியர் சமூகம்தான் தன் பிரதிநிதித்துவத்தை இழந்துவருகிறது, தி.மு.க.வின் துணையுடன்.

தலித் தலித் என்கிற இவர்களெல்லாம் அருந்ததியரைப் பற்றி சீமான் கடந்த ஈரோடு இடைத்தேர்தலின்போது இழிவுபடுத்தியபோது ஏதாவது போராடினார்களா? கண்டித்தார்களா? வாக்கு அரசியலில் தலித்துகள் மட்டும் தனியே திரண்டு அதிகாரத்தைப் பெற்று விடமுடியாது. பிரதேசரீதியாக அளிக்கப்படும் வாக்குகள்தானே தீர்மானிக்கிறது. பலம் வாய்ந்ததாகக் கூறப்படும் பா.ம.க.வே எவ்வளவோ காலம் வேலைசெய்தும் இரண்டுமூன்று சதவீதம்தானே வாங்கமுடிகிறது!

மற்றபடி, அண்ணல் அம்பேத்கர் முன்வைத்த அரசியலும் இது இல்லை. தலித்துகள் மட்டும் ஒன்றுசேர்ந்து அரசியல் அதிகாரத்தைப் பிடியுங்கள் என்றா சொன்னார்? அவர் தொடங்கிய அமைப்புகளின் பெயர்களைப் பார்த்தாலே இது எளிதாகப் புரியும்!

சினிமா பிரபலத்தை வைத்து அரசியலுக்கு வரலாம் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. கமல்ஹாசனே ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டில் சுருண்டுவிட்டார். முன்னணி விஜய் போன்றவர்கள் வரும்போது இவர் எங்கு போய் நிற்கமுடியும்?

புனித பாண்டியன்

புனித பாண்டியன்: 'தலித் முரசு' இதழ் ஆசிரியர்

பண்பாட்டுரீதியாக 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' நிகழ்ச்சிகள் மூலம் ஒரு சமூகச் செயற்பாட்டாளராக இருந்துவருகிறார். ஆனால் அவரின் படங்களில் அப்படி வெளிப்படவில்லை; அதற்குள் போகவும் நான் விரும்பவில்லை. தலித் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்; தலித்துகள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இதைத் தடுக்க அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிறார், ரஞ்சித். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் நடத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. மாயாவதி மூன்று முறை ஆட்சியில் இருந்தார். கடந்த காங். கூட்டணி ஆட்சியில் மத்தியில் மகாராஷ்டிரத்தின் தலித் சமூகத்தவரான ஷிண்டேதான் உள்துறை அமைச்சர். ஆனால் வன்கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன. இந்தியாவில் நாளுக்கு 4 தலித்துகள் வன்கொடுமையில் கொல்லப்படுகின்றனர்; 2 வீடுகள் எரிக்கப்படுகின்றன; 4 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது வெறும் கட்சி, ஆட்சிப் பிரச்னையா? சமூக பண்பாட்டுப் பிரச்னை. இதைத் தடுப்பதற்கு இவர்கள் சொல்லும் தீர்வு என்ன? அதிகாரத்துக்கு வருவது? நாடு முழுவதும் 125 தொகுதிகளில் தலித் எம்.பி.கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 18 சதவீதம் அரசுப் பணிகளில் தலித் மக்கள் இருக்கிறார்கள். ஜனநாயகமே இல்லாத சமூகக் கட்டமைப்பில் சட்டத்தால் நிவாரணங்கள் தான் கொடுக்க முடியும். சட்டத்தால் தீண்டாமையை ஒழித்தும், சமூகம் கடைப்பிடிக்கிறதே? சாதியப் பிரச்னை தீர்க்கப்படாதவரை இதற்குத் தீர்வில்லை. திடீர் அரசியல்வாதிகளுக்கு தலித் மக்களின் உண்மையான பிரச்னையும் தெரிவதில்லை; அதற்கான தீர்வையும் அவர்கள் சொல்வதில்லை. வன்கொடுமைகளுக்குத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் என்ன சொன்னார்? அதை இவர்கள் சொல்கிறார்களா? இவர்கள் சொல்லும் தீர்வையா அம்பேத்கர் சொன்னார்?