உச்சநீதிமன்றம் 
சிறப்புக்கட்டுரைகள்

சுயமரியாதைத் திருமணம் செல்லுமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆகும்?

தமிழ்க்கனல்

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு பல தரப்புகளிலும் விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தோலி இராணி எதிர் மணிஷ்குமார் சஞ்சால் என்கிற வழக்கில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா- அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புதான், இப்போதைய சூடான விவாதத்துக்குக் காரணம்!

எத்தனையோ பேரைப் போல, இந்த வழக்கிலும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விமானிகளான ஒரு தம்பதியர் மண முறிவுக்காக வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில், அவர்கள் இருவருமே சேர்ந்து ஒன்றுபோல ஒரு வாக்குமூலம் தருகிறார்கள். அதாவது, தாங்கள் செய்துகொண்டது திருமணமே அல்ல; திருமணத்துக்கான சடங்குகளே நடைபெறாமல், அரசு விதிமுறைக்காகப் பதிவு மட்டுமே செய்துகொண்டோம் என்கிறார்கள்.

உச்சநீதிமன்றமும் ஆமாம், நீங்கள் செய்தது திருமணமே அல்ல; அதாவது, இந்து முறைத் திருமணமே அல்ல; அதனால் உங்களின் மணமுறிவைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது; திருமணமே செல்லாதது என்று மணமுறிவை வழங்கிவிட்டது.

அதுதான் வழக்கே முடிந்துவிட்டதே, இதில் என்ன விவாதம் என்று கேட்கத் தோன்றும்!

தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வாசகங்களே இவ்வளவுக்கும் காரணம்!

”இந்துத் திருமணம் என்பது மிகவும் புனிதமானது. அது ஏதோ ஆடிப்பாடவும் குடித்து விருந்து தின்பதற்குமான ஒரு வெற்று நிகழ்ச்சி அல்ல. திருமணம் செய்துகொள்ளும் இளம் வயதினர் அதற்கு முன்னர் திருமணத்தின் புனிதத் தன்மையைப் பற்றி எண்ணவேண்டும். இந்திய சமூகத்தில் இந்துத் திருமணம் என்பது பெரிய மதிப்புவாய்ந்ததாகப் பேணப்பட வேண்டும். வரதட்சணையையோ, பரிசுப்பொருட்களையோ பெறுவதற்கானதாக இதைக் கருதக்கூடாது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படப்போகும் புனிதமான நெடுங்கால பந்தம் இது. இந்திய சமூகத்தின் அடிப்படை அம்சமான குடும்பத்துக்கு அடித்தளமாக அமையவேண்டிய நிகழ்வு, இது.

திருமணம் என்பது ஒரு வர்த்தக ஒப்பந்தம் அல்ல. புதிய ஒரு குடும்பத்துக்கு அடித்தளமிடும் புனிதமான நிகழ்வு என்பது மட்டுமின்றி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் கணவன், மனைவி என்கிற அந்தஸ்தை ஏற்படுத்தித் தருவதும்கூட. அண்மைக்காலமாக, விசா பெறுவது போன்ற நடைமுறைப் பயன்பாடுகளுக்காக எனக் கூறி, திருமணத்தைப் பதிவுசெய்வது இந்து திருமணச் சட்டத்தின் 8ஆவது பிரிவைப் பயன்படுத்தி அதிகரித்துவருகிறது. ஆனால், இப்படியான திருமணங்கள் செல்லத்தக்கவை அல்ல.

இந்தச் சட்டத்தின்படி, பதிவாளர் பதிவுசெய்துவிட்டாலே இப்படியான திருமணங்கள் செல்லுபடியாகிவிடாது. இந்துத் திருமணத்தின் சடங்குகளைப் புறக்கணித்துவிட்டு செய்யும்போது அது திருமணம் என்கிற அந்தஸ்த்தைப் பெறமுடியாமல் போய்விடுகிறது. இந்து திருமணச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்படி செய்யப்பட்டால் மட்டுமே இந்துத் திருமணமாக இருக்கமுடியும். அப்படியல்லாமல் வெறும் பதிவை மட்டும் செய்துவிட்டால் அது இந்துத் திருமணமாக இருக்கமுடியாது. தீக்குண்டம் வளர்த்து திருமணம் செய்துகொள்ளும் இருவரும் ஏழு அடி நடக்கவேண்டும் என ரிக் வேதம் கூறுகிறது. இப்படி பல சடங்குகளை இந்துத் திருமணச் சட்டத்தில் செய்யப்பட வேண்டும்.” என அடித்துச் சொன்னது, பி.வி.நாகரத்னா- மசி அமர்வு.

இந்தத் தீர்ப்பையொட்டி தமிழ்நாட்டுக்கு அப்பால் பல்வேறு தரப்பினரும் விவாதங்களைக் கிளப்பினர். எத்தனை எத்தனையோ சமூகப் பிரிவுகள் இருக்கும் இந்து மதத்தில் இப்படி குறிப்பிட்ட சடங்குகளை மட்டும் கட்டாயம் எனச் சொல்லமுடியுமா என்பது அவர்களின் கேள்விகளில் இருக்கும் பொது அம்சம்.

அண்மைக்காலமாக, கடந்த காலத் தீர்ப்புகள், மரபுகளை மீறி பல நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு முழுமையாகப் பொருந்துமா?

” திருமணம் என்ற சடங்கில் ஈடுபடாமல் – சேர்ந்து வாழ்வது உள்பட, உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி உள்ள சமத்துவம், அடிப்படை கடமைகள் – 51-ஏ(எச்)) பிரிவுப்படி – அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்பது, சீர்திருத்தம் செய்தல் என்பதற்கும் முற்றிலும் எதிரானது அல்லவா! பழைய ‘ஹிந்து லாவை’ உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புபோல இது உள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டப் பிரிவுகள் 7-ஏ சட்டத் திருத்தப்படி, சுயமரியாதைத் திருமணம் உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ள நிலையில், இது ஏற்கத்தக்கதல்ல. இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம்.” என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான துரை. இரவிக்குமாரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, ”தமிழ்நாட்டில் இந்தத் தீர்ப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏற்கெனவே சட்டத்தில இருப்பதை நீதிமன்றம் எடுத்துச்சொல்லும். நீதிமன்றம் இதில் தவறு செய்ததாகச் சொல்லமுடியாது. சட்டங்களை மாற்றவேண்டிய தேவை இருக்கிறது என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் அண்ணா காலத்தில் செய்த வேலையை இன்றைக்கு இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதற்கான முன்முயற்சியைச் செய்யும். புதிய நாடாளுமன்றத்தில் எந்த ஆட்சி வந்தாலும் இதை வலியுறுத்துவோம்.” என்று கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி பரந்தாமனிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, “ நாடளவில் இருக்கும் இந்துத் திருமண சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின்படி திருமணங்கள் செல்லுபடியாகின்றன. இ.தி. சட்டத்தில் வைதீக முறைப்படி நடக்கவேண்டியவற்றை நாகரத்னா- மசி அமர்வுத் தீர்ப்பு கூறுகிறது. இதுவல்லாமல் இந்துக்களிலேயே தங்கள் சமூகப் பிரிவு வழக்கப்படி திருமணம் செய்துகொள்ளவும் சட்டத்தில் இடமுண்டு. அதை குடும்ப வழக்கத் திருமணம் என்பார்கள். எந்த மதத்தவராக இருந்தாலும் பதிவுத்துறையில் முன்னறிவிப்பு அளித்துவிட்டு சிறப்புத் திருமணம் செய்துகொள்ளலாம். ஏற்கெனவே திருமணமான ஆள் அதை மறைத்து திருமணம் செய்துவிடக்கூடாது என்பதற்காக ஓர் ஏற்பாடு. ஆனால், அப்படி முன்னறிவிப்பு கொடுப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, அண்மைக் காலமாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம்செய்யும்போது, அவர்களைத் தேடிப்போய் பிரச்னை செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என நடக்கிறது. எனவே, இந்த முன்னறிவிப்பை நீக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.” என்றவர், தொடர்ந்து சில சுவையான தீர்ப்புகளை விவரித்தார்.

” மனைவியை இழந்த சிதம்பரம் செட்டியார் என்பவர் வழக்கு 1950-களில் பிரபலம். அவர், பகுத்தறிவாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பிறந்த மகனும் இறந்துவிட, கணவனை இழந்த வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சொத்து போன்ற காரணங்களுக்காக, சிதம்பரத்தின் மறுமணம் செல்லாது என அவரின் மருமகள் வழக்கு தொடுத்தார். ஏனென்றால், அது சுயமரியாதைத் திருமணம். இந்துத் திருமணச் சட்டப்படி அது நடைபெறாததால் அந்தத் திருமணம் செல்லாது என தீர்ப்பு கூறப்பட்டது. 1967இல் அண்ணா முதலமைச்சரான பிறகுதான் சுயமரியாதைத் திருமண முறை, இந்துத் திருமணச் சட்டத்தின் 7 ஏ எனும் பிரிவாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது.

அந்தச் சட்டம் வந்தபிறகு நிகழ்ந்த இரண்டு தீர்ப்புகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து ஒருவர், இரண்டாவது திருமணத்தை சுயமரியாதைத் திருமணமாகச் செய்துகொண்டார். அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் கே.ஜி. பாலகிருஷ்ணன் அமர்வுக்குச் சென்றது. மேற்படி நபர், பல மாநிலங்களை உதாரணம் காட்டி, இந்துத் திருமண சடங்குகளின்படி தன் இரண்டாவது திருமணம் நடக்கவே இல்லை; எனவே அது திருமணமே அல்ல என்று வாதிட்டார். ஆனால், நீதிபதியோ சுயமரியாதைத் திருமண முறைப்படி அவரின் திருமணம் நடைபெற்றுள்ளது; தமிழ்நாட்டில் அவரின் திருமணம் சட்டபூர்வமானதுதான்; மற்ற மாநிலத்துக் கதையெல்லாம் தமிழ்நாட்டில் வேகாது; எனவே அந்த நபர் மீது இரண்டாவது திருமணத்துக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு கூறினார்.

கடந்த ஆண்டில் வந்த தீர்ப்பு ஒன்று. வழக்கின் சாரம், வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பதிவுசெய்யப் போனபோது, பப்ளிக் டெக்லரேசன் எனும் பொது அறிவித்தலாக நடக்காத திருமணத்தைப் பதிவுசெய்ய முடியாது என மறுத்துவிட்டார்கள்; அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வழக்கறிஞர் அலுவலகம் திருமணம் செய்துவைக்கும் இடம் அல்ல; மேலும் சுயமரியாதை/ சீர்திருத்தத் திருமணம் என்றாலும் அதை ரகசியமாகச் செய்யமுடியாது; தந்தை பெரியாரே வெளிப்படையாக அதைச் செய்தால்தான் உலகம் முழுவதும் பரவும் என்று வலியுறுத்தினார் என்றும் குறிப்பிட்டது. உச்சநீதிமன்றம்வரை வழக்கு போனது. அங்கு நீதிபதிகள் இரவீந்திரபட்- அரவிந்த் குமார் அமர்வு, வழக்கறிஞர் அலுவலகத்தில் நண்பர்கள் புடைசூழ நடந்தாலும் அது பொது நிகழ்வாக இருக்கையில் அந்தத் திருமணம் இந்துத் திருமணச் சட்டம் 7 ஏ பிரிவின்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயம், வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகத்தை திருமணம் செய்துவைக்கும் இடமாக மாற்றிவிடக் கூடாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் வழக்கறிஞர்கள் கணக்கிலெடுத்துக்கொள்ள அறிவுறுத்தியது.

எப்படியோ, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பது மட்டும் உறுதி. அதற்காகத்தான், அந்தச் சட்டத்திலேயே சுயமரியாதை/ சீர்திருத்தத் திருமண முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காரர்கள் ஆணும் பெண்ணும் உற்றார் நண்பர் சூழ மாலையை மாற்றிக்கொண்டோ மோதிரம் அணிவித்துக்கொண்டோ திருமணம் செய்துகொள்கிறோம் என அறிவித்துக்கொண்டோ தங்களின் திருமணத்தை உறுதிசெய்யலாம்.” என்று நீதிபதி அரி பரந்தாமன் விரிவாகக் கூறினார்.