கால்நடை மருத்துவர் அனுபவங்கள் 
சிறப்புக்கட்டுரைகள்

வெறிநாய்க்கடியும் நாராங்காயும்!

மரு.சரவணன்

இரவுகளில் தூக்கம் வரவில்லை எனக்கு. வெளியே பொங்கல் கொண்டாட்டங்களில் ஊரே மகிழ்ச்சியாக ஈடுபட்டிருக்கிறது. கேரளத்தில் இருந்து சொந்த ஊருக்கு பொங்கலுக்கு குடும்பத்துடன் வந்திருக்கும் என் முகத்தில் சோகக்களை. ஏன் டல்லாக இருக்கிறாய்.. எல்லோரும் கேட்கிறார்கள். ஒன்றுமில்லை என ஒதுக்கினாலும் மனசுக்குள் ஏதோ செய்துகொண்டே இருந்தது.என்ன காரணம்?

ஊருக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக கன்றுக்குட்டிகள் இரண்டுக்கு சிகிச்சை அளித்திருந்தேன். நான் பணிக்கு சேர்ந்த புதிது என்பதால் வாய்க்குள் கைவிட்டுபரிசோதித்து, அவற்றுடன் கட்டிப்புரண்டு ஊசி போட்டு ஆர்வமாக சிகிச்சை செய்திருந்தேன். அவற்றுக்கு நரம்பு மண்டலக் கோளாறு போன்று அறிகுறிகள் இருந்திருந்தன. இரண்டு நாட்கள்சிகிச்சை. அப்புறம் அவற்றைப் பார்க்கவில்லை. ஒருவாரம் கழித்து வந்த தகவல் என்னைஅதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு கன்றுகளும் ‘பேவிஷம்‘ தாக்குதலால் செத்துவிட்டன. அதாவது வெறிநோய்.. ரேபீஸ் என ஆங்கிலத்தில்! மலையாளத்தில் பே விஷம் என சொல்வது வழக்கம்!

வெறிநோய் வந்த விலங்குகளைத் தொடமாட்டார்கள். நானோ மிக நெருக்கமாக வாய்க்குள் கைவிட்டு வைத்தியம் பார்த்திருக்கிறேன். வெறிநோய் வந்த விலங்குடன் தொடர்பு ஏற்பட்டால் உடனே தடுப்பூசி போடவேண்டும். எனக்கோ இந்த செய்தியோ ஒரு வாரம் கழித்துத்தான் தெரிகிறது!

நண்பர்கள் சக மருத்துவர்களிடம் பேசினேன். ‘ஒண்ணும் ஆகாது.. விடு!' என்று தைரியம் சொன்னவர்கள்..‘பத்து நாளுக்கு மேல் ஆயிடுச்சு.. உனக்கும் இதுவரை எதுவும் ஆகல... விடு பாத்துக்கலாம்,' என்றவர்கள் ‘இருந்தாலும் தொண்ணூறு நாள் காத்திருக்கணும்' என்று ஒரு பொடி வைத்தார்கள்.

அந்த தொண்ணூறு நாள் கெடுவில்தான் பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கிறேன். உள்ளுக்குள் என்னவாகுமோ என்ற நடுக்கம் தீராமல் காலண்டரைப் பார்த்துக்கொண்டே நாட்களை ஓட்டினேன். தொண்ணூறாவது நாளைக் கிழித்து எறிந்த அன்று நிம்மதியாக உறங்கினேன்.இது நடந்து ஓராண்டு இருக்கும். பசு மாடு ஒன்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது. மெக்னீசியம் குறைபாட்டால் வரும் நடுக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தன. வழக்கம்போல் ரத்தக்குழாய் வழியாக மருந்துகள் செலுத்தினேன்.பிறகு சிகிச்சை முடிந்தபின் சக மருத்துவர்களிடம் அந்த நோய்க்குறிகளைப் பகிர்ந்துகொண்டபோது,‘ வெறிநோய் மாதிரி இருக்குதே... என்று கலவரப்படுத்தினார்கள்.அடுத்த இரு நாட்களில் வெறிநோய்க்கு உரிய அறிகுறிகள் அதிகமாகி, மாடு இறந்து விட்டது. நடுநடுங்கிவிட்டேன்.

உடனே போய் மருத்துவமனையை அணுகி, முறைப்படி தடுப்பு மருந்துகள் எடுக்க ஆரம்பித்தேன்.

அந்த மாட்டின் உரிமையாளரும் பாவம் தானே... அவர்தான் மாட்டுக்கு வாய்வழியாக மருந்துகளைக் கொடுத்தவர். அவருக்கும் இத்தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதால், அவரிடம், ‘நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்‘ என்றேன்.

‘அதுக்கு பே விஷம் இல்ல டாக்டரே.. நீங்க தப்பாச் சொல்றீங்க.. நான் சோதித்துப் பாத்த்தாச்சு...' என்றார்.

இங்கே எங்கடா லேப் இருக்கு எனக் குழம்பி ‘எப்படி?' என்றேன்.

“பே விஷம் என்றால் நாரங்காயைக் காண்பிச்சால் உடனே செத்துடும். நான் மாட்டுக்கு காண்பிச்சேன். ஒண்ணும் ஆகல.. அதனால் அதுக்கு பேவிஷம் இல்ல சாரே...' என்று சொல்லிவிட்டார்.வெறிநோய் பிடித்த விலங்குக்கு எலுமிச்சம் பழம் பிடிக்காதாம். அதைக் காண்பித்தால் அது செத்துவிடுமாம். இப்படி ஒரு நம்பிக்கை!

நான் முழுமையாக வெறிநோய் தடுப்பு மருந்து எடுத்து முடிக்க ஒரு மாதம் ஆனது. அந்த நாரங்காய் விவசாயி தடுப்பூசி போட்டுக்கொள்ளவே இல்லை! இது நடந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மாட்டுக்காரர் இன்னமும் ஜாம் ஜாமென்று என் முன்னால் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்!இன்னொரு முறை நாய் ஒன்றுக்குச் சிகிச்சை அளித்து வந்தேன். சில நாட்கள் கழித்து அதற்கு வெறிநோய் எனத் தெரிந்தது. அது இறந்துவிட்டது. அதன் உரிமையாளர், குடும்பத்தினர் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நானும் வேறு வழியே இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் போய் முறைப்படி தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டேன். ஐந்தாவது ஊசி, 28வது நாள் போடுவார்கள். அதை செலுத்தியதும் அங்கிருந்த மருத்துவர்,‘ டாக்டரே.. இனி உங்களுக்குக் கவலையில்லை. இனி ரெண்டு வருஷத்துக்கு எந்த நாய் கடிச்சாலும் அஞ்சு ஊசி வேண்டாம். ஒண்ணு போட்டா போதும்!' என்றார். போதுமான நோய் எதிர்ப்புத் திறன் உடலில் இருக்கும் என்பதால் இதைத்தான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு அடுத்த நாள் எனக்கு மணநாள். குடும்பத்துடன் குருவாயூர் போகத் திட்டமிட்டிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் இருந்து மாட்டுக்கு சிகிச்சை அளிக்க அழைப்பு வந்தது. புறப்பட்டுப்போனேன்.

அந்த தோட்டத்துடன் கூடிய வீட்டுக்கு முன்னால் இருந்த வேலிக்கு வெளியே வண்டியை நிறுத்தினேன். உள்ளே இருந்து அந்த வீட்டு நாய் வேகமாக ஓடிவந்தது. உன்னை விடமாட்டேன் கடித்தே தீருவேன் என பாய்ந்த நாயை வீட்டுக்காரர்கள் பிடித்துக்கொண்டனர். வண்டியை சரிவில் இறக்கி உள்ளே கொண்டுபோய் நிறுத்தி இறங்கினேன். இதற்கு சில நிமிடங்கள் ஆன நிலையில் நாய் குரைப்பதை நிறுத்தி இருந்தது. வீட்டு உறுப்பினர்களும் வந்து என்னிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நாயைப் பிடித்திருந்தவர், சரி டாக்டரைத் தான் பார்த்துவிட்டதே.. இனி கடிக்காது என்று நினைத்து பிடியை விட்டார்.

நாய் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டாக என்னை நோக்கிப் பாய்ந்தது. சட்டென கால்சட்டையில் நக்கியது போல் தான் இருந்தது. நாயை அவர்கள் மீண்டும் இழுத்துச் செல்ல, நான் என் காலைப் பார்த்தேன். ரத்தம்! ஆழமாகக் கடியை பரிசளித்துவிட்டு சென்றிருந்தது.

‘என்னய்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க..' எனக்கு வந்த கோபத்தில் கடிபட்ட மனிதனாக கத்தினேன். ‘மன்னிச்சுக்கோங்க சார்.. எங்க செல்லம் யாரையும் இதுவரை கடிச்சதே இல்ல.. ஒங்களத்தான்..' என்றார்கள்.

மருத்துவர் சொ. சரவணன்

என் சர்வீசில் பல நாய்களைப் பார்த்துள்ளேன். என்னை கடித்த முதல் நாய் இதுதான்! அதுவும் ஏமாற்றி கடித்துவிட்டது! நேராக அரசு மருத்துவமனைக்கு வண்டியை விட்டேன்.

என்னைப் பார்த்ததும் மருத்துவர் பதற்றமானார். நேற்றுதானே முழுமையான தடுப்பூசிகளைப் போட்டு முடித்தோம். மறுநாளே கடி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாரே இந்த ஆள்? என்ன செய்வது? திரும்பவும் ஐந்து ஊசிகள் போடுவதா? வேண்டாமா? அவர் பிற மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களுடன் ஆலோசித்தார். இது எல்லோருக்கும் புது சம்பவமாக இருந்தது.கடைசியில் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின் குருவாயூரப்பன் மேல் பாரத்தைப் போட்டு ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்டேன்.

ஆனால் அப்படியே விடமுடியாதே... அந்த நாய் உயிரோடுதான் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணித்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அதன் பிறகு வாழ்ந்து, தனக்கு வெறிநோய் இல்லை என நிரூபித்து, அது இயற்கையான காரணங்களால் உயிரை விட்டது! நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அந்த தோட்டக்காரர் அதன் பிறகும் என்னை சிகிச்சைக்கு அழைப்பார்! Dog bite owner என்றே அவர் பெயர் போனில் மின்னும்!.

(மரு.சரவணன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கடம்பழிபுரத்தில் பணிபுரியும் அரசு கால்நடை மருத்துவர்)

ஜனவரி,2022