முற்றிய தேக்குமரம் போல ஒரு நடிகரின் திறமை நாள்தோறும் வளர்வது மிகப்பெரிய பலம். கிடைப்பதற்கரிய வரம்.
திரைத்துறையில் இருப்பவர்களில் மிகச்சிலருக்கே அது வாய்த்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான ‘எட்டு தோட்டாக்கள்’ வழியாகத் தானும் அப்படியொரு வரம்பெற்ற கலைஞன்தான் என்று நிரூபித்திருக்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
நகைச்சுவை நடிகர்களுக்கும் குணசித்திர வேடங்களுக்குமான இடைவெளியைக் கனகச்சிதமாக நிரப்புபவர். தான் கடந்துவந்த பாதை பற்றி, ’அந்திமழை’ இதழுக்காக மனம் திறந்தார் எம்.எஸ்.பி.
“அப்பா முத்துப்பேட்டை ஆர்.எம்.சோமசுந்தரம், நாகப்பட்டினம் வட்டாரத்தில் புகழ்பெற்றவர். நிலக்கிழார். அரசியல் தலைவர்கள் பலருடன் தொடர்புடையவர். பேரறிஞர் அண்ணா முதல் அப்பா கலைஞர் வரை, அவரை ‘சோமண்ணே’ என்றுதான் அழைப்பார்கள். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு நெருங்கிய நண்பர்.
அப்பா, அம்மா இருவருக்கும் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை. நான் பிறந்த ஊர் நாகப்பட்டினத்திலுள்ள காடம்பாடி. ஆனால், வெளிப்பாளையம் என்ற ஊரில் தான் நான் வளர்ந்தேன். தேசிய உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வரை படித்தேன். அப்புறம் பத்தாவது படிக்கும்போது சென்னை வந்துவிட்டோம். கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.
இதற்குக் காரணம், எனது சகோதரி ஹேமமாலினி. ஒருமுறை யாரோ வராததால், டி.கே. பகவதியின் நாடகத்தில் அவர் நடித்தார். அதைப்பார்த்து வியந்த பகவதியும் சண்முகமும் அப்பாவைச் சந்தித்தார்கள். ‘அண்ணாச்சி, பாப்பாகிட்ட ரொம்ப நல்ல கலை இருக்கு. நீங்க ஏன் சென்னைக்கு வரக்கூடாது’ என்று கேட்டார்கள். உடனே, நாங்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்தோம்.
அப்பா, அம்மா, நான், எனது இன்னொரு சகோதரி மற்றும் ஒரு சகோதரருடன் இங்கு வந்தோம். பெரிய டப்பிங் ஆர்ட்டிஸ்டான ஹேமமாலினியின் மகன்கள், இன்று சினிமாவில் இருக்கின்றனர். இன்னொரு சகோதரி தாரா சந்துரு, தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசிக்கிறார். அரசாங்க வேலை பார்த்த எனது இளைய சகோதரர் கடந்த ஆண்டு காலமானார். நான் சினிமாவில் இருக்கிறேன்,” என்கிற பாஸ்கர் தொடர்கிறார்.
“டி.கே.பகவதியின் நாடகத்தில் நடித்துக்கொண்டே, திரைத்துறையில் நடிக்க முயற்சி செய்தார் என் சகோதரி. செந்தாமரை ஐயாவின் (யார் பெயரைக் குறிப்பிட்டாலும், அதனுடன் உறவுமுறையையோ அல்லது மரியாதையான சொற்களையோ சேர்த்துக்கொள்கிறார்) நாடகத்தில் நடிக்கும்போது, ‘சிட்டுக்குருவி’ படத்தில் நடிகை மீராவுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது அக்காவுக்குத் துணையாக, நானும் டப்பிங் தியேட்டர் போனேன். எனக்கும் டப்பிங் மீது ஆர்வம் வந்தது. அதே சிட்டுக்குருவி படத்தில், நானும் சின்னதா இரண்டு வரிகள் டப்பிங் கொடுத்தேன். அப்படித்தான் எனது கலைப்பயணம் ஆரம்பித்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்தபிறகு, அக்கா மாதிரியே நானும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகி விட்டேன்.
ஆனால் அது எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. அதற்கு முன்பு பல்வேறு வேலைகள் செய்திருக்கிறேன். நடிப்பு, தமிழ் இதன் மீதெல்லாம் எனக்கு காதல் அதிகம். நடிகனாக வேண்டுமென்ற கனவு சிறுவயதிலேயே இருந்தது. நான் பள்ளி நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் சிட்டுக்குருவி படத்திற்குப் பிறகு வாய்ப்பு ஏதும் வரவில்லை. அதனால் ஒரு பற்பசை நிறுவனத்தில் ஒரு விற்பனை பிரதிநிதியாக (சேல்ஸ் ரெப்ரசண் டேட்டிவ்) வேலை பார்த்தேன். அதன்பிறகு அந்த வேலையில் சிறு இடர்ப்பாடு ஏற்படவே, திரும்பவும் டப்பிங் பக்கம் வந்துவிட்டேன். அப்போது ஆரூர்தாஸ், மருதபரணி, தேவநாராயணன், எம்.ஏ.பிரகாஷ் என்று பல எழுத்தாளர்களுக்கும் டப்பிங் செய்தேன்.
இன்றுவரைக்கும் டப்பிங் தொழிலை விடாமல் செய்துவருகிறேன். லிங்காவில் கூட, பிரம்மானந்தத்துக்கு டப்பிங் கொடுத்தேன். ஷூட்டிங் அதிகமானதால், முன்புபோல இப்போது டப்பிங் பேச முடிவதில்லை. சிலர் பிரியப்பட்டு கூப்பிடும்போது, நான் வேலை பார்க்கிறேன்.
விற்பனைப் பிரதிநிதியாகப் பல கடைகளுக்குச் சென்றபோது, பல மொழிகளைக் கற்றுக்கொண்டேன். அப்போது அந்த ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனாலேயே வட்டார மொழிகளை ஓரளவுக்கு நன்றாகப் பேசுவேன். திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில் என்று வட்டாரத் தமிழ் எல்லா வற்றையும் பேசுவேன். யாராவது பேசினால் கூர்ந்து கவனிப்பேன். அதைத் திரும்பப் பேசி பிராக்டீஸ் செய்வேன்.
அதேமாதிரி தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, பண்டைய வரலாறு நிறைய படிப்பேன்.
சித்தர் பாடல்கள் போன்ற வற்றையும் படிப்பேன். அது, ஓரளவுக்கு மனதில் பதியுமாறு செய்வேன். நான் கற்றுக்கொண்ட தமிழ், வட்டார பாஷைதான், இப்போது நடிகனாக இருக்கப் பெரும் உதவியாக இருக்கிறது.
இதற்கிடையில் சின்னத்திரையில் சின்னபாப்பா பெரிய பாப்பா தொடரில் நடிப்பதற்கு முன்பே, சென்னை தொலைக்காட்சி மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் ஆடிஷன் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். டப்பிங் ஆர்ட்டிஸ்டா இருக்கும்போது, பலரிடம் சினிமா வாய்ப்பு கேட்டிருக்கிறேன். ‘சொல்றேன் சொல்றேன்’ என்று எல்லோரும் சொல்வார்கள். அதன் பிறகுதான் மாயாவி மாரீசன், மாஸ்டர் மாயாவி தொடர்களில் நடித்தேன். அந்த நேரத்தில் சின்ன பாப்பா பெரிய பாப்பா வாய்ப்பு வந்தது. அதைப் பார்த்த கலைஞர், இரண்டாவது வாரமே ராதிகாவிடம் பேசியிருக்கிறார். அவர் பாராட்டியபிறகு, எனது கேரக்டரை தொடர் முழுவதும் வருவதுபோல மாற்றிவிட்டார்கள்.
‘ஜனனி’, ‘என் பெயர் ரங்கநாயகி’ தொடர்களில் நடித்தபோது இயக்குநர் சுந்தர் கே.விஜயனுடன் அறிமுகம் உண்டானது. ராடான் நிறுவனத்துக்காக அவர் செல்வியை இயக்கியபோது, அதில் என்னை வில்லனாக நடிக்கவைத்தார். செல்விக்கு முன்னதாக, இயக்குநர் அழகம்பெருமாள் ’டும் டும் டும்’ படத்தில் டாக்டர் ரோல் தந்தார். அதைப்பார்த்துவிட்டு, ‘ரொம்ப இயல்பான நடிப்பு’ என்று நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அது இறைவன் கொடுத்த அருள்.
இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு சம்பளம் என்று பேசும்போது, ‘இதுவரை செய்யாத வேடமா? இதனைச் செய்தால் பெயர் கிடைக்குமா?’ என்று பார்ப்பேன். அந்தமாதிரி நான் பார்த்துப் பார்த்துப் பண்ணிய படங்கள்தான் அழகிய தீயே, மொழி போன்றவை. ராதாமோகன், பேரரசு மற்றும் பல இயக்குநர்களுக்கும் என்னுடன் நல்ல நட்பு உண்டு. அவர்கள் படத்தில் நான் இருக்க வேண்டுமென்று, தகுந்த கேரக்டர்கள் கொடுப்பார்கள். அதனால் அவர்கள் படங்களை ரசித்து செய்வேன்.
தற்போது களரி, பதுங்கிப்பாயணும் தல, உதயநிதியோடு ஒரு படம் என்று பல படங்களில் நடித்துவருகிறேன். பல படங்கள் ரிலீஸாகப் போகிறது. இன்று காலையில் கூட ஒரு கேரக்டர் ஒத்துகிட்டேன். சின்ன கேரக்டர் என்றாலும் அது கதையில் முக்கியமானது.
நல்ல கேரக்டர் என்று முடிவு பண்ணபிறகுதான் சம்பள விஷயத்தை பேசுவேன். அவர்களுடைய நிலையைப் பார்த்துவிட்டு, சம்பளம் கூடக்குறைய இருந்தாலும் ஒத்துக்கொள்வேன். மற்றபடி, ’யாரையும் தொந்தரவு கொடுத்தேன்’ என்ற பெயரை, இண்டஸ்ட்ரியில் இதுவரை எடுக்கவில்லை. அதுபோல ஒருநாள் கூட ஷூட்டிங்குக்கு லேட்டாக போகக்கூடாது என்பதில் ரொம்பவும் பிடிவாதமாக இருக்கிறேன்.
எட்டு தோட்டாக்கள் படம் ஒரு சாமான்யன் பற்றிய கதைதான். அந்த கேண்டீன் காட்சி ஒத்திகை எதுவும் பார்க்காமல், ஒரே ஷாட்டில் நடித்து முடித்தோம். இயக்குனர் பாரதிராஜா, ராதாமோகன், சேரன், பாக்யராஜ் என்று பல பிரபலங்கள் அந்தப் படம் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள்.
‘டயலாக் படிக்காதே, சீக்குவன்ஸ் படி. காட்சி என்னவென்று தெரிந்து கருத்தைப் புரிஞ்சுகிட்டா போதும். லேங்க்வேஜ் கமாண்ட் இருந்தா, சொந்தமாகக்கூட வார்த்தைகளைப் போட்டு பேசலாம்’ என்று சொல்வார் இயக்குநர் பிரியதர்ஷன். தனது மனைவியை நேசித்த ஒருவன், அவளைப் பறிகொடுத்துவிட்டு, இன்றைக்கு இருக்கும் நிலையை யாரிடமோ மனம் விட்டுப் பேசுகிறான். எட்டு தோட்டாக்கள் படத்தில் இதனை மனதுக்குள் உருவகப்படுத்திக்கொண்டு பேசினேன்.
அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, ’கிளிசரின் போடாம எப்படி நடிச்சீங்க’ன்னு கேட்டார் ஒருவர். நான் இதுவரை கிளிசரின் போட்டதில்லை. அந்தக்காட்சியில் கண்ணீர் மூக்கின் நுனியில் வந்து நிற்கும். அதைப் பார்த்துவிட்டுதான், ‘எவ்வளவு பெரிய ஷாட், எத்தனை ரியாக்ஷன், வாய்ஸ் மாடுலேஷன்’ என்று பாராட்டினார் பாரதிராஜா.
இருபது வயதில் இருந்த வேகம் இப்போது இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், உத்வேகம் என்று வரும்போது, வயதை மறந்து கேரக்டராக மாற வேண்டும். இப்போது நான் பலரை ஈர்க்கிறேன் என்றால் அந்த மாதிரி கேரக்டர்களைத் தரும் இயக்குனர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். என் வீட்டில் எந்தவிதப் பிரச்சனையும் எழாமல், எனக்கு உறுதுணையாக இருந்து குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்பவர் மனைவி ஷீலா பாஸ்கர். மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் விஷூவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு டப்பிங் துறையில் இருக்கிறார். நண்பர்களுக்காக விளம்பரப்படத்திலும் சில குறும்படங்களிலும் நடிக்கிறார். அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும் வேலை பார்க்கிறார். ஆனால் படம் நடிப்பாரா என்று தெரியவில்லை.
மகன் ஆதித்யா பாஸ்கர் தற்போது விஸ்காம் படித்துவருகிறார். இரண்டு படங்களில் நடிக்க ’கமிட்’ ஆகியிருக்கிறார். நாங்கள் எல்லோரும் திரைத்துறையில்தான் இருக்கிறோம். ஆண்டவன் அருள் பரிபூரணமாக எங்கள் குடும்பத்திற்கு இருக்கிறது.
அக்டோபர், 2017.