பவித்ரா கவுடா 
சிறப்புக்கட்டுரைகள்

ரசிகரைக் கொன்று கால்வாயில் வீசி... கதாநாயகன் கொடூர வில்லனான கதை!

Staff Writer

கர்நாடகத்தில் யாருமே எதிர்பார்த்திராத நட்சத்திர சம்பவம், அண்மையில் அரங்கேறியிருக்கிறது!

வேறென்ன, சாண்டல் வுட்டான கர்நாடகத் திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் தர்சன் தூகுதீபா, கொலை வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அவருடைய தீவிர ரசிகர் என்பது இதில் இன்னுமொரு சோகம்!

தர்சனுடன் பவித்ரா

என்னதான் நடந்தது... கால வரிசைப்படி நடந்த நிகழ்வுகளை ஒரு சுற்று பார்க்கலாம்.

பெங்களூர் நகரின் சுமனஹல்லி பாலம் பகுதியிலிருந்து கடந்த வாரம் 9ஆம் தேதி மாநகர காவல்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், அங்குள்ள கால்வாயில் ஒருவரின் சடலம் இருப்பதைப் பார்த்து நாய்கள் குரைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி அங்கு சென்ற போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்தது. காணாமல்போன சித்திரதுர்கா மாவட்டத்து இளைஞர் ரேணுகாசாமியின் உடல்தான் அது எனத் தெரியவந்தது. அந்த இளைஞரின் குடும்பத்தினர் கொடுத்த காணவில்லை புகாரை விசாரித்துவந்த அந்த மாவட்டத்து காவல்துறை, காணாமல்போனவர் கொல்லப்பட்டதை உறுதிசெய்தது. வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டது.

கடந்த ஞாயிறு ஜூன் 9ஆம் தேதி இந்த தகவல்கள் செய்திகளாக வெளியாகின. அதற்கு மறுநாளே நான்கு பேர் பெங்களூர் காமாட்சிபாளையம் காவல்நிலையத்தில் தாங்களாகவே போய் சரண் அடைந்தனர். கொடுக்கல் வாங்கல் தகராறில் தாங்கள்தான் ரேணுகாசாமியைக் கொலைசெய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தார்கள். அதன்படி விசாரணை நகர்த்தப்பட்டபோது, அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் எடுக்கப்பட்டன. அதில்தான் அவர்களின் குட்டு உடைந்துபோனது.

கன்னட நடிகர் தர்சனுடன் அவர்கள் தரப்பில் அடிக்கடி பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தர்சனுக்கும் இந்த சாமானியர்களுக்கும் என்ன தொடர்பு என விசாரித்ததில், தர்சன் சொல்லித்தான் இந்தக் கொலையே அரங்கேறியிருக்கிறது என்கிற தகவலும் கிடைத்தது.

சான்று ஆதாரங்களுடன் அதற்கான முகாந்திரத்தை உறுதிசெய்த பெங்களூர் காவல்துறையினர், மைசூர் நட்சத்திர ஒட்டலில் படப்பிடிப்புக்காகத் தங்கியிருந்த தர்சனை ஜூன் 11ஆம் தேதி செவ்வாயன்று கைதுசெய்தனர்.

பெங்களூர் கொண்டுவரப்பட்ட அவருடன் அவருடைய காதலியும் முன்னாள் நடிகையுமான பவித்ரா கவுடாவும் கைதுசெய்யப்பட்டார். பவித்ராவுக்காகத்தான் இந்தக் கொலையே நிகழ்த்தப்பட்டது என்பது மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் உறுதியானது.

இதில் ஒரு குட்டிக் கதையைப் பார்த்துவிட்டால், விவரம் தெளிவாகும்.

நடிகர் தர்சனுக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் 2003ஆம் ஆண்டிலேயே திருமணமாகி, அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதைப் போல பவித்ரா கவுடாவுக்கும் திருமணமாகி மகள் ஒருவர் இருக்கிறார். பவித்ரா அந்தத் திருமண உறவை முறித்துக்கொண்டார். அதன்பிறகு தனியாக வாழ்ந்துவருகிறார் என்றே கருதப்பட்டது. ஆனால், எல்லா திரைப் புள்ளிகளைப் போல இன்ஸ்டாகிராமில் மும்முரமாக இருக்கும் முன்னாள் நடிகை பவித்ரா, கடந்த ஏப்ரலில் வெளியிட்ட ஒரு பதிவு, பிரச்னையைத் தோற்றுவித்தது.

தன் மகள், தர்சன் இருவருடனும் இருக்கும் ஒரு படத்தைப் பதிவிட்ட பவித்ரா, தர்சனுடன் 10 ஆண்டு சேர்ந்து வாழ்வதாகவும் குறிப்பிடவே, பற்றிக்கொண்டது விவகாரம்.

ஏற்கெனவே இலைமறைகாயாக அடிபட்ட திருமணத்தை மீறிய இந்த உறவு விவகாரம், ஒரு பக்கம் தர்சனின் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. பலரும் பவித்ராவின் இன்ஸ்டா பக்கத்தில் கடுமையாகத் திட்டித் தீர்த்தனர். பலர் எல்லைமீறி அசிங்கமாகப் பேசவும் செய்தனர். பலர் தர்சனைவிட்டு விலகிவிடுமாறும் அவருடைய மனைவியுடன் தர்சன் சேர்ந்துவாழ் வழிவிடுமாறும் அறிவுரையாகவும் சொன்னார்கள்.

சிலர் பவித்ராவுக்கு இன்ஸ்டாவில் தனிச்செய்தியாகவும் வேண்டுகோள், மிரட்டல், திட்டல் எனத் தொடர்தனர். அப்படி தனிச்செய்தி அனுப்பியவர்களில் ஒருவர்தான், ரேணுகாசாமி.

அவரின் தொடர் செய்திகளால் கடுப்பான பவித்ரா கவுடா, தர்சனிடம் சொல்லியிருக்கிறார்.

திரைப்படத்தில் நாயகிக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறும் நாயகனாக, தர்சனும் உடனே களத்தில் இறங்கியிருக்கிறார்.

நாயகனாக இல்லாமல் வில்லனாக என்பதுதான் ரசிக்கமுடியாத கசப்பு; ஒரு மனித உயிர் அற்பமாகக் கொல்லப்பட்ட துயரமும்கூட!

சித்திரதுர்கா மாவட்ட தர்சன் ரசிகர் குழு ஒருங்கிணைப்பாளரான ராகவேந்திராவின் உதவியை நாடினார், தர்சன்.

எந்த இன்ஸ்டாகிராம் மூலம் ரேணுகாசாமி பவித்ராவுக்குத் தொல்லை கொடுத்தாரோ, அதே இன்ஸ்டா மூலம் பெண் எனப் போலியாக நடித்து அவரிடம் பேசினார்கள், தர்சன் ஆள்கள். அதை நம்பிய ரேணுகாசாமி அவர்கள் கூறியபடி ஓர் இடத்துக்கு வர, அங்கிருந்து காரில் பெங்களூருக்குக் கடத்தியது தர்சனின் கையாள் கும்பல்.

பெங்களூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்துக்கு ரேணுகாசாமியைக் கொண்டுசென்றது, தர்சன் கும்பல். அங்கு வைத்து ரூனி கடுமையாகத் தாக்கிய அந்த கும்பலில் தர்சனும் இருந்ததாகவும் அவர் ரேணுகாசாமியை தன்னுடைய பெல்ட்டால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. மேற்கொண்டும் அந்தக் கடத்தல் கும்பல் தாக்கியதில் 33 வயதான அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தர்சனின் கையாள் கும்பல், தர்சனுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது.

நிஜ உலகில் வில்லத்தனம் செய்ததில் சிக்கலாகிப்போனதால், அதிர்ச்சியில் உறைந்துபோன நாயக நடிகர் தர்சன், எப்படியாவது தன் மீது கொலைப்பழி விழுந்துவிடக்கூடாது என பதற்றம் அடைந்தார்.

தனக்கு வேண்டப்பட்ட அரசியல் புள்ளிகளின் உதவியை நாடினார். உடனடியாக ஒன்றும் கதைக்கு ஆகாமல்போகவே, ராகவேந்திரா மூலம் போலி குற்றவாளிகளைச் சரண் அடையவைத்திருக்கிறார்கள். முதல் தவணையாக தர்சன் தரப்பிலிருந்து 30 இலட்ச ரூபாய் இதற்காகக் கொடுக்கப்பட்டது என்றும் ஆளுக்கு 5 இலட்ச ரூபாய் என 20 இலட்ச ரூபாய் தரப்பட்டுவிட்டது என்றும் மீதமுள்ள தொகை அவர்கள் சிறையிலிருக்கும் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கான செலவுக்குத் தரப்படும் என்றும் பேரம் பேசப்பட்டுள்ளது.

பணமும் புகழும் கொழுப்பெடுத்த மூளைகளில் உருவான கொலைவெறி இப்படி, அடுத்தடுத்து சதித் திட்டங்களில் இறங்க...

எவ்வளவு பெரிய குற்றவாளியும் சிறு துப்பை போலீசுக்கு விட்டுச் செல்வான் என்பார்களே, ஒருவகையில் அப்படி தர்சன் கும்பலும் வகையாக மாட்டிக்கொண்டது.

ரேணுகாசாமியின் சடலத்தை இவர்கள் வீசியெறிந்த சுமனஹல்லி பகுதியில், குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு கார்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதில் சிவப்பு நிறம் கொண்ட ஒரு ரூபிகான் கார், பட்டனகரே பகுதியைச் சேர்ந்த வினய்க்குச் சொந்தமானது என்பது உறுதிசெய்யப்பட்டது. தர்சனுக்கு நெருக்கமான காரின் உரிமையாளரான அவரைவிட, தர்சன்தான் கூடுதலாக அந்தக் காரைப் பயன்படுத்துவார் என்பதையும் காவல்துறையினர் உறுதிசெய்தனர்.

இன்னொரு ஸ்கார்ப்பியோ காரும் வினய்யின் உறவினரான ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் அவருடைய இடம்தான் ரேணுகாசாமி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வாகன நிறுத்துமிடம் என்பதும் காவல்துறைக்கு தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது.

எல்லாவற்றையும் உறுதிசெய்துகொண்ட பிறகே, மைசூருக்குச் சென்று தர்சனைக் கைதுசெய்தது உதவி ஆணையர் தலைமையிலான பெங்களூர் காவல்துறை தனிப்படை.

தன் ரசிகர் என்றும் பார்க்காமல், குடும்பஸ்தரான ஓர் இளைஞரைத் தாக்கிப் படுகொலை செய்யவைத்திருக்கிறார், நிஜவுலக வில்லனான திரை நாயகன் தரசன்.

அற்ப காரணத்துக்காகக் கொல்லப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!